Vasavi Jayanthi: Invoke the Wish-Fulfilling Goddess of this Yuga For Protection, Divine Wisdom, Prosperity & Success JOIN NOW
Search

18 Siddhargal Life History in Tamil | 18 சித்தர்கள் வாழ்க்கை வரலாறு

March 26, 2020 | Total Views : 8,452
Zoom In Zoom Out Print

சித்தர்கள் யார்?

சித்தர்கள் என்றால் சித்தி பெற்றவர் என்று பொருள். அதாவது சிந்தை தெளிந்து இருப்பவன் சித்தன் என்று கூறுவார்கள். கடவுளைக் காண முயல்பவன் பக்தன் என்பது போல கடவுளைக் கண்டு தெளிந்தவர்கள் சித்தர்கள் என்று கூறலாம். கடந்த காலம், நிகழ் காலம், வருங்காலம் என முக்காலமும் உணர்ந்த அறிஞர்களே சித்தர்கள் ஆவார்.

உடலைக் கோவிலாகவும் உள்ளத்தை இறைவன் உறையும் ஆலயமாகவும் கருதி உலகப் பற்றற்று வாழ்பவர்கள் சித்தர்கள். இவர்கள் தங்களை உணர்ந்தவர்கள். இயற்கையை உணர்ந்தவர்கள். மனதை அடக்கி ஆளத் தெரிந்தவர்கள். தன்னுன் உறையும் இறைவனை கண்டு அதனுடன் ஒன்றி தன் சக்தியையும் ஆற்றலையும் உலக மக்களின் நன்மைக்கு பயன்படுத்தும் வல்லமை படைத்தவர்கள்.

சித்தர்கள் அழியாப் புகழுடன் வாழும் சிரஞ்சீவிகள். பிரபஞ்ச ரகசியத்தை அறிந்த பிரம்ம ஞானிகள். எதிலும் எந்த வித பேதமும் காணாதவர்கள். ஆசை, பாசம், மோகம், பந்தம் போன்ற உலகப் பற்றை அறுத்தவர்கள். பல சித்திகளை, குறிப்பாக அஷ்டமா சித்திகளை பெற்றவர்கள்.

தமிழ் பாரம்பரியத்தில் எத்தனையோ சித்தர்கள் இருந்தாலும் கூட 18 சித்தர்களை குறிப்பிட்டுச் சொல்கிறார்கள். அவர்கள், அகத்தியர், போகர், திருமூலர், வான்மீகர், தன்வந்த்ரி, இடைக்காடர், கமலமுனி, கருவூரார், கொங்கணர், கோரக்கர், குதம்பை சித்தர், மச்சமுனி, பாம்பாட்டி சித்தர், பதஞ்சலி, இராமத்தேவர், சட்டைமுனி, சிவவாக்கியர், சுந்தரானந்தர் ஆகியோர்கள். இவர்கள் யார்? எத்தனை காலம் வாழ்ந்தார்கள் என்பதைப் பற்றி இக்கட்டுரையில் நாம் காண்போம்.

அஷ்டமா சித்திகள்:

அஷ்ட என்றால் எட்டு என்று பொருள். அட்டாங்க யோகம் என்னும் எட்டு வகையான யோக நெறிகளை பற்றி வாழ்ந்தவர்கள் சித்தர்கள். அவை முறையே:

1. அணிமா 2. மகிமா 3. லகிமா 4. பிரார்த்தி 5. பிரகாமியம் 6. ஈசத்துவம், 7. வசித்துவம் 8. கரிமா

அணிமா: அணுவைக் காட்டிலும் மிகச் சிறிய உருவில் உலவும் ஆற்றல் இந்த சித்தியினால் ஏற்படும்

மகிமா : மலையினும் பெரிய உருவம் தாங்கி நிற்கும் ஆற்றல் இந்த சித்தியினால் ஏற்படும்.

லகிமா: உடலைப் பாரமில்லாமல் லேசாகச் செய்து நீர், சேறு முதலியவற்றில் அழுந்திவிடாமல் காற்றைப் போல விரைந்து செல்லும் வல்லமை இந்த சித்தியினால் ஏற்படும்.

பிரார்த்தி: நாம் விரும்புவனவற்றையும் நினைப்பவற்றையும் உடனே அவ்வாறே அடையும் வல்லமையைத் தருவது இந்த சித்தி.

பிரகாமியம்: தம் நினைவின் வல்லமையால் எல்லாவற்றையும் நினைத்தவாறே படைக்கும் ஆற்றலைத் தருவது இந்த சித்தி.

ஈசத்துவம்: அனைவரும் தம்மை வணங்கும்படியான தெய்வத் தன்மையை எய்தும்படிச் செய்வது இந்த சித்தி.

வாசித்துவம்: உலகம் அனைத்தையும் தம் வயப்படுத்தி நடத்தும் ஆற்றலை பெற்றிருக்கச் செய்யும் இந்த சித்தி.

கரிமா: ஐம்புலன்களும் நுகரும் இன்ப துன்பங்களைப் பற்றிக் கவலைப்படாமலும் அவைகளுடன் சம்பந்தப் படாமலும் இருக்கும் வல்லமையை அளிக்கும் இந்த சித்தி.

18 சித்தர்கள் :

“சித்த மயம் சிவமயம்” என்பார்கள். சிவனே முதன்மை சித்தாராக கருதப்படுபவர். உலகில் சித்தர்கள் பல பேர் உள்ளனர் என்றாலும் நமது தமிழ் மரபின் படி பதினெண் சித்தர்கள் எனப்படும் 18 சித்தர்கள் தலையாய சித்தர்களாக கருதப்படுகின்றனர். அவர்கள் முறையே:

  1. திருமூலர்                                  10. கொங்கணர்            
  2. இராமதேவ சித்தர்                11. பதஞ்சலி
  3. அகத்தியர்                                12. நந்தி தேவர்
  4. இடைக்காடர்                          13. போத குரு
  5. தன்வந்திரி                               14. பாம்பாட்டி சித்தர்
  6. வால்மீகி                                    15. சட்டை முனி
  7. கமலமுனி                                16. சுந்தரானந்தர்
  8. போகர்                                       17. குதம்பை சித்தர்
  9. மச்சமுனி                                 18. கோரக்கர்

அகத்தியர்:

பதினெட்டு சித்தர்களில் முதன்மையானவராக கருதப்படுகிறார் அகத்தியர். இவரது குரு சிவபெருமான். சித்தர்களுக்கெல்லாம் தலைவர் என அறியப்படுகிறார். தமிழ் சித்த மருத்துவமுறைகளை இந்த உலகிற்கு அளித்த மகான். கடுமையான தவத்தின் வாயிலாக பல சித்திகளை பெற்றவர். தமிழ் இலக்கிய விதிமுறையான அகத்தியம் எனும் நூலை எழுதியவர். திருவனந்தபுரம் அனந்தசயன திருத்தலத்தில் சமாதியடைந்ததாக வரலாறுகள் கூறுகின்றன. இவரது ஆயுட் காலம் 4 யுகம், 48 நாட்கள்.

போகர்

போகர் என்றாலே பழனிமலை முருகப்பெருமானது திருவுருவ சிலையே நமக்கு முதலில் கண்முன் தோன்றும். நவபாஷாணங்களைக் கொண்டு முருகப்பெருமானின் திருவுருவ சிலையைச் செய்தவர் போகரே. இவரது குரு அகத்தியர். வைத்தியம் மற்றும் வேதியியலில் சிறந்து விளங்கியவர்.  போகர் 7000, போகர் 12000, சப்த காண்டம் 7000 போன்ற நூல்களை இயற்றி இவ்வுலகுக்கு அளித்தவர். இறுதியாக பழனி மலையில் சமாதியடைந்தார். 300 ஆண்டுகள், 18 நாட்கள் இவரது ஆயுட் காலமாக சொல்லப்படுகிறது.

திருமூலர்:

அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவராகத் திகழ்கிறார் திருமூலர். இவரது குரு நந்தி தேவர். மூலன் என்ற இடையனின் உடலினுள் புகுந்து ஆண்டுக்கு ஒரு பாடல் என்ற வீதத்தில் 3000 பாடல்களை பாடி திருமந்திரம் எனும் நூலை இயற்றினார். சிதம்பரம் நடராஜ பெருமான் கோவிலில் சமாதி கொண்டார். இவரது ஆயுட் காலம் 3000 ஆண்டுகள், 13 நாட்கள்.

வான்மீகர்:

வான்மீகர் நாரத முனிவரின் சீடராவார். இராமயாண இதிகாசம் எனும் பெரும் நூலை வழங்கியவர்.  திருவையாறு, எட்டுக்குடி எனும் ஊரில் சமாதியடைந்தார். 700 ஆண்டுகள் 32 நாட்கள் வாழ்ந்துள்ளார்.

தன்வந்த்ரி:

காக்கும் கடவுள் திருமாலின் அம்சமாக போற்றப்படுகிறார் தன்வந்த்ரி. ஆயுர்வேத மருத்துவ முறையை இவ்வுலகுக்கு அளித்தவர். வைத்தீஸ்வரன் கோயிலில் சமாதி அடைந்துள்ளார். இவர் வாழ்ந்த காலம் 800 ஆண்டுகள், 32 நாட்கள்.

இடைக்காடர்:

இடைக்காடு எனும் ஊரில் வாழ்ந்தவர். இவரது குரு போகர், கருவூரார். இவரது பாடல்கள் உலக இயல்புகளை, நிலையாமையை உணர்ந்து இறைவனை எப்படி அடைவது என்பதை சொல்கிறது. தாண்டவக்கோனே, கோனாரே, பசுவே, குயிலே என பாடிய பாடல்கள் நாட்டுப்பாடல் மரபினை காட்டுகின்றன. இவர் திருவண்ணாமலையில் சித்தியடைந்தார். இவரது ஆயுட் காலம் 600 ஆண்டுகள், 18 நாட்கள்.

கமலமுனி:

போகரிடம் சீடராய் இருந்து யோகம் பயின்று சித்தர்களில் ஒருவரானவர். இவரது குருக்கள் போகர், கருவூரார். ‘கமலமுனி முந்நூறு என்னும் மருத்துவ நூல், ரேகை சாஸ்திரம் ஆகிய நூல்களை எழுதியுள்ளதாக தெரிகின்றது. இவரது ஆயுட் காலம் 4000 ஆண்டுகள், 48 நாட்கள். ஆரூரில் சமாதியடைந்துள்ளார்.

கருவூரார்:

தஞ்சை பெரிய கோவில் உருவாக பெரிதும் காரணமாக இருந்தவர் கருவூரார். இவர் போகரின் சீடர். கருவூரார் பூசா விதி எனும் நூலை எழுதியுள்ளார். இவர் வாழ்ந்த காலம் 300 ஆண்டுகள்,  42 நாட்கள். கரூரில் சமாதியடைந்துள்ளார்.

கொங்கணர்:

போகரின் சீடர். பல மகான்களை சந்தித்து ஞானம் பெற்றவர். கொங்கணர் கடைக்காண்டம், ஞானம், குளிகை, திரிகாண்டம் என பல நூல்களை இவ்வுலகுக்கு வழங்கியுள்ளார். இவரது ஆயுட் காலம் 800 ஆண்டுகள், 16 நாட்கள். திருப்பதியில் சமாதியடைந்துள்ளார்.

கோரக்கர்:

கோரக்கரின் குருக்கள் தத்தாத்ரேயர், மச்சமுனி, அல்லமா பிரபு ஆகியோர். மச்சமுனி அருளால் கோசாலையில் இருந்து அவரித்தவர். அல்லமாத் தேவரிடம் போட்டியிட்டு தன்னைவிட மிஞ்சியவர் என்பதை உணர்ந்து அல்லாமாத் தேவரிடம் அருள் உபதேசம் பெற்றவர். போயூர் என்ற இடத்தில் சமாதி அடைந்தார். ஆயுட் காலம் 880 ஆண்டுகள், 32 நாட்கள்.

குதம்பை சித்தர்:

அழுகுணி சித்தரின் சீடர் இவர். இவரது பாடல்களில் குதம்பை அணிந்த பெண்ணை குதம்பாய்  என அழைத்து பாடல்களை பாடியுள்ளார். இவர் பாடிய பாடல்களி தமக்குத் தாமே உபதேசம்  போல் அமைந்த பாடல் சிறப்பு பெற்றது. மாயவரத்தில் சமாதியடைந்துள்ளார். ஆயுட் காலம் 1800 வருடம், 16 நாட்கள்.

மச்சமுனி:

மச்சமுனியின் குருக்கள் அகத்தியர், பிண்ணாக்கீசர், பசுண்டர் ஆவர். பிண்ணாக்கீசரிடம் சீடராக இருந்து உபதேசம் பெற்றவர். ஹத யோகம், தந்திர யோகம் குறித்த நூல்களை எழுதியுள்ளார். திருப்பரங்குன்றத்தில் சமாதியடைந்துள்ளார். ஆயுட்காலம் 300 ஆண்டுகள், 62 நாட்கள்.

பாம்பாட்டி சித்தர்:

இவரது குரு சட்டைமுனி. ‘ஆடு பாம்பே’ என பாம்பை முன்னிறுத்தி பாடல்கள் பாடியதால் பாம்பாட்டி சித்தர் என அழைக்கப்படுகிறார். பாம்பாட்டி சித்தர் பாடல்கள், சித்தராரூடம் போன்ற நூல்களை இயற்றியுள்ளார். மருதமலையில் சமாதியடைந்துள்ளார். ஆயுட் காலம் 123 ஆண்டுகள் 32 நாட்கள்.

பதஞ்சலி:

ஆதிசேஷனின் அம்சமாக அவதரித்தவர். குரு நந்தி. வியாக்ர பாதருடன் தில்லையில் இருந்து சிவதாண்டவம் கண்டார். பதஞ்சலி யோக சூத்திரம் எனும் அற்புதமான நூலை இயற்றியுள்ளார். ராமேஸ்வரத்தில் சமாதியடைந்துள்ளார். ஆயுட் காலம் 5 யுகம் 7 நாட்கள்.

இராமத்தேவர்:

புலஸ்தியர், கருவூரார் ஆகியோர்களின் சீடர் இவர். இஸ்லாமிய மதக்கோட்பாடுகளால் ஈர்க்கப்பட்டு கடைப்பிடிக்கலானார். அங்கு, யாக்கோபு என அழைக்கப்பட்டார். தமது ஞான சித்தியால் நபிகள் நாயகத்தின் ஆத்ம தரிசனம் கண்டார். அதன் பின் பல நூல்களை அரபு மொழியிலேயே எழுதியதாக கூறப்படுகிறது. ஒரு சமயம் அங்கு வந்த போகர் இவருக்கு தரிசனம் அளித்தார். போகரின் ஆணைப்படி மெக்காவை விட்டு நீங்கி நாகை வந்து சட்டநாதரை வணங்கி, தாம் அறிந்தவற்றை தமிழில் நூலாக இயற்றினார். அழகர் மலையில் சமாதியடைந்தார். ஆயுட் காலம் 700 வருடம் 6 நாட்கள்.

சட்டைமுனி:

இவர் போகரின் சீடராவார். சிங்கள நாட்டில் பிறந்ததாக கூறப்படுகிறது. வேதியியலில் சிறந்து விளங்கியவர். வேதியியல் தொடர்பான வாத காவியம் எனும் நூலை இயற்றியுள்ளார். ஸ்ரீரங்கத்தில் சமாதியடைந்துள்ளார். ஆயுட் காலம் 880 ஆண்டுகள், 14 நாட்கள்.

சிவவாக்கியர்:

சிவசிவ என்று கூறியபடியே பிறந்ததால் சிவவாக்கியர் என அழைக்கப்படுகிறார். வைத்தியம், வாதம், யோகம், ஞானம் பற்றிய பாடல்களை எழுதியுள்ளார். இவரது பாடல்கள் சிவவாக்கியம் என அழைக்கப்படுகிறது. கும்பகோணத்தில் சமாதியடைந்துள்ளார். இவர் வாழ்ந்த காலம் தெளிவாய் தெரியவில்லை. இவரது காலம் கி.பி. 19ம் நூற்றாண்டாக இருக்கலாம் என கருதப்படுகிறது.

சுந்தரானந்தர்:

சுந்தரானந்தர் சட்டைமுனியின் சீடர். அகத்தியர் பூஜித்த சிவலிங்கத்தை சதுரகிரியில் பிரதிஷ்டை செய்து வழிபட்டவர். ஜோதிடம் மற்றும் வைத்தியத்தில் சிறந்து விளங்கியவர். அது தொடர்பான பல நூல்களை இயற்றியுள்ளார். மதுரையில் சமாதியடைந்துள்ளார். ஆயுட் காலம் 880 ஆண்டுகள், 14 நாட்கள்.

18 சித்தர்கள் மூல மந்திரம்:

சித்தர்கள் சமாதி சென்று வழிபடுவது மிகவும் சிறப்பு. அது மட்டுமன்றி ஒவ்வொரு சித்தருக்கும் ஒரு மூல மந்திரம் உள்ளது. சித்தர்களின் மந்திரத்தை ஜெபிப்பதன் மூலம் அவர் தம் பரிபூரண அருளை நாம் பெற இயலும்.

திருமூலர் மூல மந்திரம் :-
ஓம் ஸ்ரீம் கெம் ஸ்ரீ மூலநாத சித்த சுவாமியே போற்றி

இராமத்தேவர் மந்திரம் :-
ஓம் இராமத்தேவர் திருவடிகள் போற்றி

அகத்தியர் மூல மந்திரம் :-
ஓம் ஸ்ரீம் க்ரீம் ஸ்ரீ அகத்திய சித்த சுவாமியே போற்றி

இடைக்காடர் மூல மந்திரம் :-
ஓம் ஸ்ரீம் ருணம் ஸ்ரீ இடைக்காட்டு சித்த சுவாமியே போற்றி

தன்வந்த்ரி மந்திரம் :-
ஓம் தன்வந்த்ரி திருவடிகள் போற்றி.

வான்மீகர் மந்திரம் :-
ஓம் வான்மீகர் திருவடிகள் போற்றி

கமலமுனி மந்திரம் :-
ஓம் கமலமுனி திருவடிகள் போற்றி

போகர் மூல மந்திரம் :-
ஓம் ஆம் ஊம் ஸ்ரீ மகாபோகர் சித்த சுவாமியே போற்றி

மச்சமுனி மந்திரம் :-
ஓம் மச்சமுனி திருவடிகள் போற்றி

கொங்கணர் மூல மந்திரம் :-
ஓம் ஸ்ரீம் நசீம் ஸ்ரீ கொங்கண சித்த சுவாமியே போற்றி

பதஞ்சலி மந்திரம் :-
ஓம் பதஞ்சலி முனிவர் திருவடிகள் போற்றி

சிவவாக்கியர் மூல மந்திரம் ;-
ஓம் ஸ்ரீம் லம் ஸ்ரீ சிவவாக்கிய சித்த சுவாமியே போற்றி

கருவூரார் மூல மந்திரம் :-
ஓம் ஸ்ரீம் வம் லம் ஸ்ரீ கருவூர் சித்த சுவாமியே போற்றி

பாம்பாட்டி சித்தர் மூல மந்திரம் :-
ஓம் ஸ்ரீம் வசி ஸ்ரீ பாம்பாட்டி சித்த சுவாமியே போற்றி

சட்டைமுனி மூல மந்திரம் :-
ஓம் ஸ்ரீம் சம் வம் சட்டைமுனி சுவாமியே போற்றி

சுந்தரானந்தர் மூல மந்திரம் :-
ஓம் ஸ்ரீம் ஆம் ஊம் ஸ்ரீ சுந்தரானந்த சித்த சுவாமியே போற்றி

குதம்பை சித்தர் மூல மந்திரம் :-
ஓம் ஸ்ரீம் சம் ஸ்ரீ குதம்பைச் சித்த சுவாமியே போற்றி

கோரக்கர் மூல மந்திரம் :-
ஓம் ஸ்ரீம் க்லம் ஸ்ரீ கோரக்க சித்த சுவாமியே போற்றி

 

27 நட்சத்திரங்களும் அதற்குரிய சித்தர்களும்:

சித்தர்கள் வாக்கு சிவன் வாக்கு என்பார்கள். இறை ஆற்றல் மிக்க அவர்கள் இறைவனுடன் தொடர்பு கொண்டவர்கள். இறையாற்றல் மிக்கவர்கள். சக்தி மற்றும் ஆற்றலின் வடிவாகத் திகழ்பவர்கள். இந்த உலகத்தில் அவர்களின் பங்களிப்பு மிகவும் அசாத்தியமானது மற்றும் ஆச்சரியங்களை அளிக்க வல்லது. மனிதர்களுக்கு சாத்தியம் அல்லாதவற்றையும் செய்து அளிக்கும் சக்தி படைத்தவர்கள் சித்தர்கள். நாமும் அத்தகைய எத்தனையோ நிகழ்வுகளைப் பற்றி கேள்விப்பட்டுள்ளோம்.

ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் ஒவ்வொரு சித்தர்கள் இருக்கின்றனர். அந்த நட்சத்திரகாரர்கள் அந்த சித்தரை மனதார வணங்கி பிரார்த்தனை செய்தால் கட்டாயம் அந்த சித்தர்கள் தன்னுடைய நட்சத்திரகாரர்களுக்கு கேட்ட வரங்களை வாரி வழங்குவார் என்ற நம்பிக்கை நம்மிடையே பரவலாக உள்ளது. இதனைப் பலரும் அனுபவப் பூர்வமாக உணர்ந்துள்ளார்கள். ஒவ்வொரு நட்சத்திரக்காரர்களுக்கு எந்த சித்தரை வணங்கலாம் என்று நாம் காண்போம்.

அஸ்வினி காலங்கி நாதர் சித்தர் இவரது சமாதி மற்றும் சக்தி அலைகள் கஞ்சமலை மற்றும் திருக்கடையூர் ஆகிய தலங்களில் உள்ளது.  

பரணி -போகர் சித்தர். இவருக்கு பழனி முருகன் சன்னிதியில் சமாதி உள்ளது.

கார்த்திகை - ரோமரிஷி சித்தர். இவருக்கு ஜீவசமாதி இல்லை. (காற்றோடு காற்றாக கலந்து விட்டார் என்று கூறப்படுகிறது.)

ரோகிணி - மச்சமுனி சித்தர். இவர் ஜீவ சமாதி திருப்பரங்குன்றத்தில் உள்ளது.

மிருகசீரிடம் பாம்பாட்டி சித்தர் & சட்டமுனி சித்தர் பாம்பாட்டி சித்தரின் ஜீவ சமாதி சங்கரன்கோவிலில் உள்ளது. சட்டமுனி சித்தரின் சமாதி ஸ்ரீரங்கத்தில் இருக்கிறது.

திருவாதிரை -இடைக்காடர். இவரது ஜீவசமாதி, திருவண்ணாமலையில் அமைந்துள்ளது.

புனர்பூசம் - தன்வந்தரி சித்தர். இவர் வைத்தீஸ்வரன் கோவிலில் ஜீவ சமாதி ஆனவர்.

பூசம் -கமல முனி சித்தர்.  இவரது ஜீவசமாதி அடைந்த இடம் திருவாரூர்

ஆயில்யம் – அகத்தியர் சித்தர். இவரது ஒளிவட்டம் குற்றாலப் பொதிகை மலையில் உள்ளது.

மகம் நட்சத்திரம் - சிவ வாக்கிய சித்தர். இவரது ஜீவ சமாதி கும்பகோணத்தில் உள்ளது.

பூரம் நட்சத்திரம் - ராமதேவ சித்தர். இவரது ஜீவ சமாதி அரபு நாடான மெக்காவில் உள்ளது. இவர் ஒளிவந்து போகும் இடம் அழகர்மலை.

உத்திரம் நட்சத்திரம் - காகபுஜண்டர். இவர் ஜீவசமாதி அடைந்த இடம் திருச்சி உறையூரில் உள்ளது.

ஹஸ்தம் நட்சத்திரம் – கருவூரார் சித்தர். இவர் சமாதி கரூரில் உள்ளது. இவரது ஒளிவட்டம் வந்து செல்லும் இடம் தஞ்சாவூர் பெரிய கோவில் ஆகும்.

சித்திரை நட்சத்திரம் -  புண்ணாக்கீசர் சித்தர். நண்ணா சேர் என்ற இடத்தில் இவரது ஜீவ சமாதி உள்ளது.

சுவாதி நட்சத்திரம்  - புலிப்பாணி சித்தர். இவரது சமாதி பழனிக்கு அருகில் உள்ள வைகாவூர் என்ற இடத்தில் இருக்கிறது.

விசாகம் நட்சத்திரம் -  நந்தீசர் சித்தர் மற்றும் குதம்பை சித்தர் ஆவர். நந்தீசர் காசி நகரத்திலும் (பனாரஸ்), குதம்பை சித்தர் மாயவரத்திலும் ஜீவசமாதி அடைந்துள்ளனர்.

அனுஷம் நட்சத்திரம் - வால்மீகி சித்தர்.  இவருக்கு எட்டுக்குடியில் ஜீவசமாதி உள்ளது.

கேட்டை நட்சத்திரம் - பகவான் வியாசருக்கு உரியது. இவரை நினைத்தாலே போதும். அவ்விடம் வருவார்.

மூலம் நட்சத்திரம் - பதஞ்சலி சித்தர் ஆவார். இவர் சமாதி ராமேஸ்வரத்தில் உள்ளது.

பூராடம் நட்சத்திரம் -  ராமேதவர் சிசித்தர். இவரது ஜீவ ஒளியை அழகர்மலையில் தரிசிக்கலாம்.

உத்திராடம் நட்சத்திரம் - சித்தபிரான் கொங்கணர். இவர் ஜீவசமாதி திருப்பதி ஆகும்.

திருவோணம் நட்சத்திரம்- தட்சிணாமூர்த்தி சித்தர். இவர் சமாதி புதுச்சேரி அடுத்து உள்ள பள்ளித்தென்னல் என்ற இடத்தில் உள்ளது.

அவிட்டம் நட்சத்திரம் - சித்தர் திருமூலர் சித்தர்.. இவர் சிதம்பரத்தில் ஜீவசமாதி அடைந்திருக்கிறார்.

சதயம் நட்சத்திரம் – கவுபாலர் சித்தர். இவரை நினைத்தாலே தேடிவந்து அருள்புரிவார்.

பூரட்டாதி நட்சத்திரம் -  ஜோதிமுனி சித்தர். இவர் ஜோதி வடிவிலே ஜீவனாக உள்ளவர். அதனால் இவருக்கு தீபம் ஏற்றி வழிபட்டால் அங்கு அருள்பாலிப்பார்.

உத்திரட்டாதி இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர் டமரகர் சித்தர் ஆவார். இவரும் நேரிடையாக காற்றில் ஐக்கியமாகி கலந்துவிட்டார் என்று வரலாறு கூறுகிறது.. இவரை வீட்டிலேயே சிறு மணி ஓசையில் வரவழைத்து வணங்கலாம்.

ரேவதி நட்சத்திரம் -  சுந்தரானந்தர் சித்தர். இவர் ஜீவசமாதி கோவில் மதுரையில் உள்ளது.

18 சித்தர்கள்  பற்றி மேலும் அறிய இங்கே கிளிக் செய்யவும்.

banner

Leave a Reply

Submit Comment