எந்தெந்த ராசியினர் எந்தெந்த கடவுளை வணங்கினால் நல்ல பலன்கள் கிட்டும்
மேஷம்
மேஷ ராசியின் அதிபதி செவ்வாய். ராசி அதிபதிக்குரிய தெய்வம் முருகப்பெருமான். எனவே இந்த ராசிக்காரர்கள் செவ்வாய் பகவானையும் முருகப்பெருமானையும் வழிபடலாம். செய்வாயின் பலத்தை அதிகரிக்க, மேஷ ராசிக்காரர்கள் சிவனை வணங்கினால் சிறந்த பலன் உண்டு.
அசுவினி நட்சத்திரக்காரர்கள் ஒவ்வொரு சங்கடஹர சதுர்த்தி தினத்திலும் விநாயகரை வணங்குவது சிறப்பு
பரணி நட்சத்திரக்காரர்கள், வெள்ளிக்கிழமைகளில் ராகு காலத்தில் துர்காதேவியை வணங்க வேண்டும்.
கிருத்திகை நட்சத்திரக்காரர்கள், ஞாயிறன்று சூரிய பகவானை வணங்குவது சிறப்பு
ரிஷபம்
ரிஷப ராசிக்கு அதிபதி சுக்கிரன். ராசி அதிபதிக்குரிய தெய்வம் மகாலட்சுமி. எனவே, இந்த ராசிக்காரர்கள், சுக்கிரனின் பலத்தை அதிகரிக்க, லட்சுமி தேவியை வணங்கினால் அதிர்ஷ்டம் கொட்டுவதோடு, நேர்மறை ஆற்றலும் அதிகரிக்கும்.
கிருத்திகை நட்சத்திரத்தைச் சேர்ந்தவர்கள், கிருத்திகை நாட்களில் முருகனுக்கு அர்ச்சனை செய்து வழிபட சிறந்த பலன்களைக் காணலாம்.
ரோகிணி நட்சத்திரத்தைச் சேர்ந்தவர்கள் திங்கட்கிழமைகளில் சந்திரனை வழிபடுவது சிறப்பு.
மிருகசீரிஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் செவ்வாய் பகவானையும் நட்சத்திரத்துக்குரிய தெய்வமான சந்திரனையும் வழிபடுவதால் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
மிதுனம்
மிதுன ராசிக்கு அதிபதி புதன். உரிய தெய்வம் மகாவிஷ்ணு. எனவே அவர்கள் ஸ்ரீமன் நாராயணனை வணங்கினால் வாழ்வில் எப்போதும் வெற்றி கிட்டும்.ராசி அதிபதி புதனுக்கு புதன்கிழமைகளில் பச்சை வஸ்திரம், சாத்தி, பச்சைப்பயறு சுண்டல் நைவேத்தியம் செய்து வழிபடலாம்.
மிருகசீரிஷ நட்சத்திரக்காரர்கள் செவ்வாய் பகவானையும், சந்திரனையும் வணங்குவது சிறந்த பலன்களை அளிக்கும்.
திருவாதிரை நட்சத்திரக்காரர்கள், ராகு பகவானுக்கு கறுப்பு உளுந்தும் வெல்லமும் சேர்த்து செய்த பாயசத்தை நைவேத்தியம் செய்து வழிபடலாம். வெள்ளிக்கிழமை ராகு காலத்தில் துர்கையை வழிபடலாம்.
புனர்பூச நட்சத்திரக்காரர்கள், குரு பகவானையும் தட்சிணாமூர்த்தியையும் வணங்குவது சிறப்பு
கடகம்
கடக ராசியின் அதிபதி சந்திரன். கடக ராசியை ஆளும் கிரகமான சந்திரனின் பலத்தை அதிகரிக்க, கடக ராசிக்காரர்கள் கௌரி அம்மனை வணங்கினால் அனைத்து ஆசைகளும் நிறைவேறும்.திங்கட்கிழமைகளில் அம்பிகைக்குக் குங்குமார்ச்சனை செய்து, சர்க்கரைப் பொங்கல் நைவேத்தியம் செய்து வழிபடுவது விசேஷம்.
புனர்பூச நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், குருவை வணங்குவது சிறப்பு குரு பகவானுக்கு கொண்டைக்கடலை சுண்டல் நைவேத்தியம் செய்து வழிபடலாம்.
பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சனீஸ்வர பகவானை வணங்குவது சிறப்பு
ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புத பகவானை வணங்குவது சிறப்பு
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்கள் சூரியனை வழிபடுவது சிறப்பு. மேலும் சிவனை வழிபடுவதால் விசேஷ பலன்கள் உண்டாகும். அஷ்டமி அன்று கால பைரவரை வழிபடுவது மிகவும் விசேஷம்.
மகம் நட்சத்திரக்காரர்கள், சங்கடஹர சதுர்த்தி அன்று விரதம் இருந்து, விநாயகரை வணங்க வேண்டும்.
பூரம் நட்சத்திரக்காரர்கள், சுக்கிரனுக்கு மொச்சைப் பயறு சுண்டல் சமர்ப்பித்து வழிபட வேண்டும். வெள்ளிக்கிழமைகளில் அம்பிகையை வழிபட வேண்டும்.
உத்திரம் நட்சத்திரக்காரர்கள், சூரியனையும் ஞாயிறன்று ராகு காலத்தில் வீரபத்திரர் அல்லது சரபேஸ்வரரை வண்ணகி வழிபடலாம்.
கன்னி
கன்னி ராசியின் அதிபதி புதன். புதனுக்குரிய தெய்வம் மகாவிஷ்ணு. கன்னி ராசியில் பிறந்தவர்கள், ஸ்ரீமன் நாராயணனை வணங்கினால் அனைத்திலும் வெற்றிகள் மற்றும் வாழ்வில் அதிர்ஷ்டம் பெருகும்.
உத்திரம் நட்சத்திரக்காரர்கள், சூரியனையும் ஞாயிறன்று ராகு காலத்தில் வீரபத்திரர் அல்லது சரபேஸ்வரரை வண்ணகி வழிபடலாம்.
ஹஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் திங்கட்கிழமை தோறும் சந்திரனை வணங்குவது சிறப்பு.
சித்திரையில் பிறந்தவர்கள் செவ்வாய்க்கிழமைகளில் செவ்வாய் பகவானை வணங்க வேண்டும். சனிக்கிழமைகளில் சக்கரத்தாழ்வாரை வணங்குவது சிறந்த பலனை அளிக்கும்.
துலாம்
துலாம் ராசிக்காரர்கள், சுக்கிரனின் பலத்தை அதிகரிக்க, லட்சுமி தேவியை வணங்கினால் அதிர்ஷ்டம் மற்றும் செல்வம் பெருகும்.
சித்திரையில் பிறந்தவர்கள் செவ்வாய்க்கிழமைகளில் செவ்வாய் பகவானை வணங்க வேண்டும். சனிக்கிழமைகளில் சக்கரத்தாழ்வாரை வணங்குவது சிறந்த பலனை அளிக்கும்.
சுவாதியில் பிறந்தவர்கள், செவ்வாய்க்கிழமை ராகு கால வேளையில் துர்கை அல்லது காளிதேவிக்கு அரளிப்பூவால் அர்ச்சனை செய்து, சர்க்கரைப் பொங்கல் நைவேத்தியம் செய்து வழிபடவும்.
விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வியாழக்கிழமைகளில் குரு மற்றும் பிரம்மாவை வணங்குவது சிறப்பு. விசாக நட்சத்திர நாளில் முருகப்பெருமானுக்கு சிறப்பு வழிபாடு மேற்கொள்வதன் மூலம் நன்மைகள் வந்து சேரும்.
விருச்சிகம்
விருச்சிக ராசியில் பிறந்தவர்கள் செவ்வாய் பகவானை வழிபடுவதுடன், செவ்வாயின் பலத்தை அதிகரிக்க செவ்வாய்க்கிழமையும் சஷ்டியும் இணைந்து வரும் நாளில் சண்முகருக்குப் பாலாபிஷேகம் செய்து, பஞ்சாமிர்தம் சமர்ப்பித்து வழிபடுவது சிறப்பு.
விசாகத்தில் பிறந்தவர்கள் வியாழக்கிழமைகளில் தட்சிணாமூர்த்திக்கு, மஞ்சள் ஆடை சாத்தி, கொண்டைக்கடலை சுண்டல் நைவேத்தியம் செய்து வழிபட்டால் நன்மை உண்டாகும்.
அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சனிக்கிழமைகளில் ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை அணிவித்து வழிபடுவது சிறப்பு .
கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதன்கிழமைகளில் மகா விஷ்ணுவுக்குத் துளசி மாலை அணிவித்து வழிபடுவதன் மூலம் , வெற்றிகள் கிடைக்கும்.
தனுசு
தனுசு ராசியை ஆளும் கிரகமான குருவின் பலத்தை அதிகரிக்க, தனுசு ராசிக்காரர்கள் சிவனின் அவதாரமான தட்சிணாமூர்த்தியை வணங்கினால் வாழ்வில் செல்வம், மகிழ்ச்சி, அதிர்ஷ்டம் கிடைக்கும்.
மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சதுர்த்தி தினத்தில் விநாயகரையும் ஆஞ்சநேயரையும் வணங்குவதன் மூலம் சகல தோஷங்களும் விலகும்.
பூராடத்தில் பிறந்தவர்கள் வெள்ளிக்கிழமைகளில் லக்ஷ்மி தேவியை வழிபடுவது நற்பலன்களை அளிக்கும்.
உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், பிரம்மாவை வணங்குவது சிறப்பு. மேலும் விநாயகப் பெருமானுக்கு வெள்ளெருக்கு மாலையும் சுண்டலும் சமர்ப்பித்து வழிபடுவது நன்மை தரும்.
மகரம்
மகர ராசியை ஆளும் கிரகமான சனியின் பலத்தை அதிகரிக்க, மகர ராசிக்காரர்கள் சிவபெருமானை வணங்கினால் அனைத்து வளங்களையும் பெறலாம்.மேலும் சனிக்கிழமைகளில் மகா கணபதியை வழிபடுவது நல்லது.
உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சங்கடஹர சதுர்த்தி வரும் நாளில் விநாயகருக்கு அபிஷேகம் செய்து வழிபடலாம்.
திருவோணத்தில் பிறந்தவர்கள் திங்கட்கிழமைகளில் சந்திர பகவானை வழிபட நற்பலனகள் கிட்டும்.
அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் செவ்வாய் பகவானை வழிபடுவதுடன், புதன்கிழமைகளில் பெருமாளுக்குத் துளசி தளத்தால் அர்ச்சனை செய்து வழிபடுவது நல்லது.
கும்பம்
கும்ப ராசிக்கு அதிபதி சனி. கும்ப ராசியில் பிறந்தவர்கள் சனியின் பலத்தை அதிகரிக்க, கும்ப ராசிக்காரர்கள் சிவபெருமானை வணங்கினால் எதிலும் நன்மை கிட்டும்.மேலும் சனிக்கிழமைகளில் ஆஞ்சநேயருக்கு வெண்ணெய்க் காப்பு சாத்தி, வடை மாலை அணிவித்து, அர்ச்சனை செய்து வழிபடலாம்.
அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் செவ்வாய் பகவானை வழிபடுவதுடன், புதன்கிழமைகளில் பெருமாளுக்குத் துளசி தளத்தால் அர்ச்சனை செய்து வழிபடுவது நல்லது.
சதயத்தில் பிறந்தவர்கள் ஞாயிற்றுக்கிழமை ராகு கால வேளையில் காளிதேவியை வணங்க சிறந்த பலன்கள் கிட்டும்.
பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வியாழக்கிழமைகளில் தட்சிணாமூர்த்திக்கு மஞ்சள் வஸ்திரம் அணிவித்து, கொண்டைக்கடலை சுண்டல் நைவேத்தியம் செய்து வழிபட்டால் நன்மை உண்டாகும்.
மீனம்
மீன ராசியில் பிறந்தவர்கள், ராசியை ஆளும் கிரகமான குருவின் பலத்தை அதிகரிக்க, மீன ராசிக்காரர்கள் தட்சிணாமூர்த்தியை வணங்கினால் நல்ல பலன் கிடைக்கும்.
பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் நவகிரகங்களில் குரு பகவானை வழிபடுவதுடன், திங்கட்கிழமைகளில் பிரதோஷ காலத்தில் நந்தி தேவரை வணங்க வேண்டும்.
உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சனிக்கிழமைகளில் சனி பகவானுக்கு எள்ளெண்ணெய் தீபம் ஏற்றி, வழிபடுவது நன்மை அளிக்கும்.
ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதன்கிழமையன்று மகா விஷ்ணுவை வணங்க வேண்டும்.











