Chitra Purnima: Invoke Chitragupta’s Birthday Blessings On Full Moon Day to Erase Karmic Records JOIN NOW
Search

பஞ்சாங்கம் என்றால் என்ன?

June 4, 2021 | Total Views : 2,017
Zoom In Zoom Out Print

பஞ்சாங்கம்:

பஞ்சாங்கம் என்பது கால அட்டவணையைக் குறிக்கும். எளிமையாகச் சொல்ல வேண்டும் என்றால், இது ஒரு பாரம்பரிய நாட்காட்டி ஆகும். பஞ்சாங்கம், அதாவது, பஞ்ச அங்கம் என்ற வடமொழிச் சொல், ஐந்து அம்சங்கள் என்று பொருள்படும். ஒவ்வொறு நாளிற்கும், வாரம், நட்சத்திரம், திதி, யோகம், மற்றும் கரணம் என்ற ஐந்து முக்கியத் தகவல்களை அளிப்பதால், இது பஞ்சாங்கம் எனப்படுகிறது. இவ்வாறு, வானவியல் தொடர்பான ஒரு தகவல் தொகுப்பாக விளங்கும் இது, பொதுவாக, ஒரு வருட காலத்திற்குக் கணிக்கப்படுகிறது. 

பஞ்சாங்கம் என்றால் என்ன என்று தெரிந்து கொண்ட நாம், அது உள்ளடக்கிய ஐந்து அம்சங்களை இப்பொழுது சுருக்கமாக அறிவோம். 

வாரம்

பஞ்சாங்கத்தின் முதல் அங்கமாகிய வாரம் என்பது, வார நாட்கள், அதாவது, ஞாயிறு முதல் சனி வரையிலுள்ள 7 கிழமைகளைக் குறிக்கிறது. இவற்றில் ஞாயிறு சூரியனையும், திங்கள் சந்திரனையும், செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, மற்றும் சனிக் கிழமைகள், முறையே செவ்வாய், புதன், வியாழன் (குரு), வெள்ளி, மற்றும் சனி கிரகங்களையும் குறிக்கின்றன. 

நட்சத்திரம்

நட்சத்திரம் என்பது, நமது புராதனமான வேத ஜோதிடத்தில் அங்கீகரிக்கப்பட்டுள்ள, அஸ்வினி முதல் ரேவதி வரையிலான 27 நட்சத்திரங்கள் எனப்படும் விண்மீன்களைக் குறிக்கிறது. சந்திரன் வான் வெளியில் மேற்கொள்ளும் தனது பயணத்தின் பொழுது, இந்த ஒவ்வொரு நட்சத்திரத்தின் வழியாகவும் நகர்ந்து செல்கிறார். எந்த நேரப் பொழுதில் சந்திரன் எந்த நட்சத்திரத்தின் மீது பயணம் செய்கிறாரோ, அந்த நேரத்திற்குறிய நட்சத்திரமாக அது கொள்ளப்படுகிறது.

இவ்வாறு, குழந்தை ஒன்று எந்த நட்சத்திரத்தில் பிறக்கிறதோ, அந்த நட்சத்திரத்தை, அந்தக் குழந்தையின் ஜன்ம நட்சத்திரமாக, ஜோதிட சாஸ்திரம் எடுத்துக் கொள்கிறது. 

திதி

ஆகாயத்தில், சூரியனுக்கும், சந்திரனுக்கும் இடையே உள்ள தொலைவு, திதி எனக் கணக்கிடப்படுகிறது. இவர்கள் இருவரும், எப்பொழுதும் நகர்ந்து கொண்டே இருப்பதால், இவற்றிற்கிடையே இருக்கும் தூரமும், அதாவது திதியும், மாறிக்கொண்டே இருக்கின்றன. அமாவாசை திதியில் சூரியனோடு நேர்க்கோட்டில் இருக்கும் சந்திரன், பின்னர் அங்கிருந்து பிரிந்து செல்லத் தொடங்குகிறது. இவ்வாறு சந்திரன் விலகிச் செல்லும் ஒவ்வொரு 12 பாகை (டிகிரி) யும், ஒவ்வொரு பிரிவாகக் கணக்கிடப்படுகிறது. இந்த ஒவ்வொரு பிரிவும் ஒரு திதியாகக் கொள்ளப்படுகிறது.

இவ்வாறு தினமும், சூரியனிலிருந்து சுமார் 12 டிகிரி விலகிச் செல்லும் சந்திரன், 15 ஆம் நாளன்று 180 டிகிரி தூரத்தில், சூரியனுக்கு நேர் எதிரே இருப்பார். அப்பொழுது சூரியனின் ஒளி முழுவதும் சந்திரன் மேல் விழ, அவர் பௌர்ணமி நிலவாகக் காட்சி அளிக்கிறார். பின்னர், மீண்டும் அதே போல, தனது வட்டப் பாதையில், சூரியனை நெருங்கிச் செல்லும் சந்திரன், 15 ஆம் நாள், அவருடன் நேர்க்கோட்டில் இணைந்து, ஒளியிழந்து, மீண்டும் அமாவாசை திதியை நமக்களிக்கிறார்.

இவ்வாறு, ஒரு அமாவாசையிலிருந்து, பௌர்ணமி வரை 15 திதிகளும், பின்னர் பௌர்ணமியிலிருந்து அமாவாசை வரை 15 திதிகளும் அமைகின்றன. சந்திரன் தினமும் வளர்ந்து கொண்டே போகும், அமாவாசையிலிருந்து பௌர்ணமி வரையிலான 15 திதிகள் கொண்ட காலம் வளர்பிறை என்றும், சந்திரன் தேய்ந்து கொண்டே போகும் பௌர்ணமி - அமாவாசை இடையே உள்ள 15 திதிகள் கொண்ட காலம் தேய்பிறை என்றும் அழைக்கப்படுகின்றன. வளர்பிறை மற்றும் தேய்பிறையில் உள்ள திதிகள், பிரதமை த்விதியை, திருதியை,. சதுர்த்தி, பஞ்சமி, சஷ்டி, சப்தமி, அஷ்டமி, நவமி, தசமி, ஏகாதசி, துவாதசி,  திரயோதசி, சதுர்தசி என, அதே பெயரில் அழைக்கப்படுகின்றன. ஒரு வளர்பிறை மற்றும் தேய்பிறை இரண்டையும் சேர்த்து, 30 திதிகள் கொண்ட காலம், ஒரு சந்திர மாதம் ஆகிறது.   

யோகம்

வான்வெளியில், ஒரு குறிப்பிட்ட இடத்திலிருந்து, சூரியனும், சந்திரனும் பயணிக்கின்ற மொத்த தொலைவு, யோகம் எனப்படுகிறது. 

பொதுவாக, பஞ்சாங்கத்தில், இருவகை யோகங்கள் குறிப்பிடப் படுகின்றன. சூரியன், சந்திரன் தொடர்பான ‘நாம யோகங்கள்’ 27 வகைப்படும்.   

மற்றொரு வகை யோகம் ‘சுபாசுப யோகம்’ எனப்படுகிறது. இவற்றில், சித்த யோகம், அமிர்த யோகம் என்பவை சுப நிகழ்ச்சிகள் நடத்தவும், மரண யோகம் போன்றவை சுப நிகழ்வுகளுக்கு விலக்காகவும் கருதப்படுகின்றன.

இவை, நட்சத்திரம், கிழமை ஆகியவற்றை வைத்துக் கணக்கிடப் படுகின்றன. இந்தக் கிழமைகளில், இந்த நட்சத்திரங்கள் வந்தால் இந்த யோகம் உண்டாகும் என, இந்த முறை வகுக்கிறது.          

கரணம்

கரணம் என்பது, திதியில் பாதியாகக் கொள்ளப்படுகிறது. திதி என்பது 12 டிகிரி ஆதலால், கரணம் 6 டிகிரி கொண்டதாக உள்ளது. கரணங்கள் 11 என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.   

தவிர, பஞ்சாங்கம் உபயோகிக்கும் பொழுது, அதில் கொடுக்கப்பட்டுள்ள விவரங்கள், கால அளவுகள் போன்றவை அனைத்தும், குறிப்பிட்ட அந்த நாளின் சூரிய உதயத்திலிருந்து கணக்கிடப்படுகின்றன என்பதை கவனத்தில் கொள்வது அவசியம். அன்றைய சூரிய உதயம் எத்தனை மணிக்கு நிகழ்கிறது என்பதையும், பஞ்சாங்கங்களில் நாம் காணலாம்.  

வாக்கிய மற்றும் திருக்கணித பஞ்சாங்கம்

வாக்கியப் பஞ்சாங்க முறை மற்றும் திருக்கணித பஞ்சாங்க முறை என்பவை, பஞ்சாங்கங்களில் இரு வகை ஆகும். நமது ரிஷி முனிகளால் அறிந்து சொல்லப்பட்டு, தொன்று தொட்டு வழக்கத்தில் உள்ள முறை வாக்கிய முறை ஆகும்.

காலப்போக்கில், இந்த முறையில் வெளிப்பட்ட சில பிழைகளைத் திருத்தியமைத்து, புதிதாகக் கணிக்கப்பட்ட முறை, அதாவது, திருத்திய கணிதமுறை, திருக்கணித பஞ்சாங்க முறை ஆனது.    

தமிழ் பஞ்சாங்கம்   

தமிழ் வருடம் என்பது ஏப்ரல் மாத மத்தியிலிருந்து, அடுத்த ஏப்ரல் மாத மத்திவரை உள்ள காலமாகும். தமிழ் பஞ்சாங்கம் என்பது இந்த தமிழ் வருடத்திற்கான வானியல் விவரங்களைத் தருவதாகும். இந்த எளிய பஞ்சாங்கத்தை உரிய முறையில் உபயோகித்து, வானவியல், ஜோதிடம் தொடர்பான சில அடிப்படைத் தகவல்களை நாம் அறிந்துப், பயன் பெறலாம்.

banner

Leave a Reply

Submit Comment