விநாயகரை இப்படி வணங்கினால் வாழ்வில் வெற்றி நிச்சயம்

முழுமுதற் கடவுள் விநாயகர். இவரை வணங்க கடுமையான விரதம் அவசியம் இல்லை. எளிய வழிபாட்டிலேயே மனமகிழ்ந்து நாம் வேண்டுவனவற்றை நமக்கு அளிப்பார். தும்பிக்கையான் பாதம் தப்பாது வழிபட அவர் நமக்கு நம்பிக்கை அளிப்பார். நம்மைக் கை விடாது காத்து ரட்சிப்பார். எடுத்த காரியங்களில் தடைகளை நீக்குவார்.
ஒரு சிலருக்கு எந்த காரியத்தை மேற்கொண்டாலும் அதில் தடைகள் வந்து கொண்டிருக்கும். வேலையோ, தொழிலோ, திருமண முயற்சியோ – இதில் எடுக்கும் முயற்சிகளில் தடைகளை சந்திக்க நேரலாம். இவ்வாறு தடைகள் இல்லாமல் நாம் மேற்கொள்ளும் காரியங்களில் வெற்றி பெற எளிய பரிகாரம் ஒன்றைப் பார்ப்போம்.
நீங்கள் புதிதாக தொடங்க இருக்கும் எந்தவொரு செயலாக இருந்தாலும் அதனைத் தொடங்க இருக்கும் 21 நாட்களுக்கு முன் இந்த பரிகாரத்தை செய்ய வேண்டும். அது புதன் கிழமையாக அமைந்து விட்டால் மிகவும் சிறப்பு.
இந்த பரிகாரத்தை தொடர்ந்து 21 நாட்கள் செய்து வந்தால் உங்கள் காரியத்தில் வெற்றி கிட்டும். விநாயகருக்கு உகந்த எண் 21. முதலில் விநாயகர் ஆலயம் அல்லது சன்னதியில் விளக்கேற்றி வைக்க வேண்டும். பிள்ளையாருக்கு மிகவும் பிடித்த அருகம்புல் மாலை வாங்கி சாற்ற வேண்டும். பிள்ளையாருக்கு மூன்று கொட்டுக்கள் மற்றும் மூன்று தோப்புக்கரணம் தினமும் போட வேண்டும். பிறகு சன்னிதியை 21 முறை வலம் வர வேண்டும். பிறகு ஒரு சூரைத் தேங்காயை உடைக்க வேண்டும். இவ்வாறு 21 நாட்கள் தொடர்ந்து செய்து வர வேண்டும்.ஒரே ஆலயத்தில் தான் இதனை செய்ய வேண்டும் என்பதில்லை. நீங்கள் எங்கு இருந்தாலும் அந்த இடத்தில் இருக்கும் பிள்ளையாருக்கு செய்யலாம். கடைசி நாள் 21 கொழுக்கட்டை செய்து நைவேத்தியம் செய்ய வேண்டும். ஆலயம் செல்ல இயலாதவர்கள் வீட்டிலேயே இந்த பரிகார வழிபாட்டை மேற்கொள்ளலாம்.
இவ்வாறு 21 நாட்கள் விநாயகரை வழிபட்டு பின் உங்கள் காரியத்தைத் தொடங்கினால் வெற்றி நிச்சயம்.
