கண் திருஷ்டி தாக்காமல் காத்துக் கொள்ள முடியுமா?

திருஷ்டி என்பது உண்மையா எனில் ஆம் என்று தான் கூற வேண்டும். கல்லடி பட்டாலும் கண்ணாடி படக் கூடாது என்பார்கள். வாழ்க்கை சுமுகமாக சென்று கொண்டிருக்கும் போது திடீரென்று கஷ்டம் வந்தால் அதற்கு பிறரின் கண் திருஷ்டி காரணமாக இருக்கலாம். பிறரின் பொறாமைப் பார்வை நமக்கு கண் திருஷ்டியாக மாறும்.
பொதுவாக நாம் நமது வாழ்க்கைப் பாதையில் முன்னேற்றத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கும் போது அதைப் பார்க்கும் ஒருவரின் மனதில் எழும் பொறாமை அதாவது நம்மால் இவ்வாறு முன்னேற முடியவில்லையே என்று எழும் பெரும் ஏக்கம் நமக்கு கண் திருஷ்டியாக மாற வாய்ப்புள்ளது. அவர்களின் எண்ணத்தை நம்மால் கட்டுபடுத்த இயலாது என்றாலும் நமக்கு ஏற்படும் கண் திருஷ்டியை நாம் போக்கிக் கொள்ளலாம்.
அதே போல நம்மை எடுத்துக் கொண்டாலும் நமக்கு கிடைக்காத சொகுசான ஆடம்பர வாழ்க்கை, அடுத்தவர்களுக்கு கிடைத்தது என்று வைத்துக் கொள்வோம். அவர்களைப் பார்க்கும்போது நம்மை அறியாமல் நம் மனதிற்குள் ஒரு ஏக்கம் வரத் தான் செய்கிறது. அந்த ஏக்கம் தான் கண் திருஷ்டி. ஆகவே, எல்லா மனிதர்களும் நல்ல மனிதர்களாகவே இருந்தாலும், இந்த ஏக்கம் என்பது இயல்பாக வரக்கூடிய ஒரு விஷயம். அதுவே அதிகப்படியான ஏக்கம் ஒரு மனிதனுக்கு வந்துவிட்டால், கண் திருஷ்டியாக மாறி அது நம்மை தாக்கி விடும்.
இந்த கண் திருஷ்டி விலக நமது முன்னோர்கள் ஒரு சில பரிகாரங்களை கூறி இருக்கிறார்கள். உப்பு சுற்றிப் போடுதல், கற்பூரம் சுற்றிப் போடுதல் ஆலம் கரைத்தல் என அவரவர் வீட்டு வழக்கப்படி கண் திருஷ்டியை கழித்துக் கொள்ளலாம் இந்த கண் திருஷ்டி நீக்குதலை ஞாயிற்றுக்கிழமைகளில் செய்வது நல்லது. மேலும் அமாவாசை அன்று பூசணிக்காய் சுற்றிப் போடுவதும் நல்லது. இவை எல்லாம் பொதுவாக எல்லோராலும் பின்பற்றப்படும் முறை என்று கூறலாம்.
கண் திருஷ்டி தாக்காமல் நம்மை தற்காத்துக் கொள்ள ஒரு எளிய பரிகாரத்தைக் காணலாம். கண் திருஷ்டி வராமல் இருக்க வீட்டில் தினமும் சாம்பிராணி தூபம் போடலாம். இந்த தூபத்தில் ஒரு சில பொருட்களை சேர்ப்பதன் மூலம் கண் திருஷ்டி வந்தாலும் எளிதில் நீங்கிவிடும். சாம்பிராணி தூபம் போடும் போது மொட்டுடன் கூடிய 3 கிராம்பு, காய்ந்த சருகு போல் இருக்கும் பூண்டின் ஒன்றிரண்டு தோல்பகுதி என இரண்டையும் அதில் போட்டு தூபம் காட்டுவதன் மூலம் கண் திருஷ்டி தாக்காமல் காத்துக் கொள்ள இயலும்.
இந்த சாம்பிராணியை வீட்டின் ஒரு மூலை முடுக்கையும் விடாமல் காண்பித்து பிறகு வீட்டின் பின் பகுதியில் அல்லது வெளிவாசலில் சிறிது நேரம் வைத்து பின்பு உள்ளே எடுத்துச் செல்ல வேண்டும். இவ்வாறு தினமும் அல்லது வாரம் ஒரு முறை மாதம் ஒருமுறை கண் திருஷ்டி கழிக்க வேண்டும். வாரம் ஒருமுறை வரக்கூடிய ஞாயிற்றுக்கிழமையில் கண் திருஷ்டி கழிக்கவும். மாதம் ஒரு முறை வரக்கூடிய அமாவாசை தினத்தில் கண் திருஷ்டி கழிக்கவும்.
