விநாயகர் சதுர்த்தி வழிபடும் முறை
விநாயக சதுர்த்தி என்பது இந்துக்களின் முக்கியமான விழாவாகும். இவ்விழாவானது ஆண்டு தோறும் ஆவணி மாத வளர்பிறை சதுர்த்தி அன்று கொண்டாடப்படுகிறது. விநாயகர் வணங்குதற்கு மிகவும் எளியவர். என்றாலும் வருடம் ஒரு முறை வரும் விநாயக சதுர்த்தியை நாம் பெரும்பாலும் விமரிசையாக கொண்டாடுவது வழக்கம். இந்த விழாவை கொண்டாடும் முறை அதாவது அன்று விநாயகரை எவ்வாறு வழிபட வேண்டும் என்பதைப் பற்றி இந்த பதிவில் காண்போம்.
மண் பிள்ளையார்:
பொதுவாக அனைவரது வீட்டிலும் விநாயகர் திருவுருவப் படம் மற்றும் விநாயகர் சிலை இருக்கும். என்றாலும் விநாயக சதுர்த்தி அன்று களி மண்ணாலான பிள்ளையாரை வாங்குவது சிறப்பு. முடிந்தவர்கள் களிமண் வாங்கி வீட்டில் கூட பிள்ளையாரை செய்து கொள்ளலாம். விநாயகர் சதுர்த்தி அன்று காலை எழுந்து குளித்து தூய ஆடை அணிந்து கொள்ள வேண்டும். ஒரு மனை அல்லது ஒரு பித்தளை தட்டு எடுத்துக் கொள்ள வேண்டும். அதனை கோலம் போட்டு அலங்கரித்துக் கொள்ள வேண்டும். பிறகு அதனை கொண்டு சென்று கடையில் கிடைக்கும் களி மண் பிள்ளையாரை வாங்கிக் கொள்ள வேண்டும். கூடவே பிள்ளையாரை அலங்கரிக்க தேவைப்படும் குடை மற்றும் எருக்க மாலையை வாங்கிக் கொள்ள வேண்டும்.
பிள்ளையாரை அலங்கரித்தல்:
வீட்டிற்கு கொண்டு வந்த பிள்ளையாரை ஒரு உயர்ந்த மேடையில் அமர்த்த வேண்டும். மேடையை கோலம் போட்டு அலங்கரித்துக் கொள்வது நல்லது. பிள்ளையாரின் தொப்பையில் சந்தனம் வைத்து ஒரு ரூபாய் காயினை வைக்க வேண்டும். பிள்ளையாரின் பின்னால் குடையை வைக்க வேண்டும். பிள்ளையாருக்கு மாலை சார்த்தி அலங்கரிக்க வேண்டும். முக்கியமாக கண்டிப்பாக பிள்ளையாருக்கு எருக்க மாலையைப் போட வேண்டும்.
பிள்ளையாரை வழிபடும் முறை:
அலங்கரித்த பிள்ளையார் முன் ஒரு மனையை வைத்து அங்கு விளக்கு ஏற்றி வைக்க வேண்டும். பிறகு பிள்ளையாருக்கு மஞ்சள் குங்குமம் அட்சதை கொண்டு பூஜை செய்ய வேண்டும். மலர்களை சாற்ற வேண்டும். அன்று பிள்ளையாருக்கு உகந்த பத்திரி என்னும் இலைகளை விற்பார்கள். அதனை கொண்டு வந்து பிள்ளையாருக்கு சாற்ற வேண்டும். பிள்ளையாருக்கு அர்ச்சனை செய்ய வேண்டும். அருகம் புல் மாலை அன்று அவசியம் சார்த்த வேண்டும். வீட்டில் இருக்கும் பிள்ளையார் படம் மற்றும் விக்கிரகத்திற்கும் அவ்வாறே செய்ய வேண்டும். பழங்கள் மற்றும் தேங்காய் உடைத்து நைவேத்தியம் செய்ய வேண்டும். கொழுக்கட்டை மற்றும் சுண்டல் அவசியம் செய்து நைவேத்தியம் செய்ய வேண்டும். வீட்டில் உள்ள அனைவரும் இந்த பூஜையில் கலந்து கொள்ள வேண்டும். அனைவரும் பூ மற்றும் பத்திரிகளை சார்த்த வேண்டும். பிள்ளையாரை வணங்கி தோப்புக்கரணம் போட வேண்டும்.
விசர்ஜனம் செய்தல்:
விசர்ஜனம் என்பது புனர் பூஜை செய்து பிள்ளையாரை நீரில் கரைத்தல். ஒரு சிலர் பூஜை அன்றே செய்வார்கள். ஒரு சிலர் மறு நாள் செய்வார்கள். மற்றும் சிலர் மூன்று நாட்கள் பிள்ளையாரை வீட்டில் வைத்துக் கொண்டு மூன்றாவது நாளில் விசர்ஜனம் செய்வார்கள். அவரவர் குல வழக்கப்படி இதனை செய்யலாம். ஆனால் செவ்வாய் மற்றும் வெள்ளி அன்று விசர்ஜனம் செய்தல் கூடாது. பிள்ளையாரை தண்ணீரில் கரைக்கும் வரை வீட்டில் தினமும் பூஜை மற்றும் நைவேத்தியம் செய்ய வேண்டும். பிள்ளையாரை கரைக்கும் தினம் ஓமப்பொடி, முறுக்கு,புளிசாதம், தயிர் சாதம் போன்றவற்றில் ஏதாவது ஒன்றையோ அல்லது உங்களால் முடிந்தவற்றை நெய்வேத்தியம் செய்ய வேண்டும் பிள்ளையாரை மனதார வேண்டிக் கொள்ள வேண்டும். அடுத்த வருடமும் இதே மாதிரி வந்து எங்களின் பூஜையை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று மனதார வேண்டி நீரில் கரைத்து விட வேண்டும்.
வழிபடுவதன் பலன்கள்:
விநாயகர் விக்னங்களை நீக்குபவர். விநாயகரை வணங்குவதன் மூலம் நமது வாழ்வில் நாம் மேற்கொள்ளும் முயற்சிகளில் ஏற்படும் தடைகள் யாவும் நீங்கும். எடுத்த காரியங்களில் வெற்றி கிட்டும். காரியசித்தி ஏற்படும்.











