வாராஹி அம்மனுக்கு இந்த தீபம் ஏற்றுவதன் மூலம் உங்கள் வாழ்வில் வளங்கள் யாவும் பெருகும். நீங்கள் நினைத்தது நிறைவேறும்.
வல்லமை என்ற சொலின் வடிவம் தான் வாராஹி சொல் வல்லமை செயல் வல்லமை இரண்டுக்குமே அதிகாரி இவள். அச்வரூபா, மகாவாராஹி லகு வாராஹி மந்திர வாராஹி, வார்த்தூளி என்று பல வடிவங்கள். நான்கு கரம் எட்டு கரம் பத்து கரம் என்று பலப்பல கோலங்கள் கொண்டவள். .
சப்த மாதர்களில் நடுநாயகமாகத் திகழ்கிறாள் வாராஹி. படைத் தளபதியாக திகழ்கிறாள் தேவி என்கிறது வாராஹி புராணம். பராசக்தியின் படைத் தளபதியாகி பண்டாசுரனை அழித்தவள்.இந்த தேவிக்கு பஞ்சமீ தண்டநாதா, சங்கேதா, சமயேச்வரி, சமய சங்கீதா, வாராஹி, சிவா, போத்ரிணி, வார்த்தாளி, மகாசேனா, அரிக்னி, ஆக்ஞா சக்ரேஸ்வரி ஆகிய பெயர்களும் உண்டு. இவளது திருமாம் ஜெபித்து வழிபட்டால் எந்த காரியத்திலும் வெற்றி கிட்டும். ஸ்ரீ நகரம் எனும் ஸ்ரீ சக்ர தேவதைகளுள் மிகவும் மேன்மையானவர். வேண்டுவோருக்கு வேண்டியவற்றை விரைவில் அருளுபவள். நமது உடலில் இருக்கும் ஆறு ஆதார சக்கரத்தில் நெற்றியில் விளங்கும் ஆக்ஞா சக்கரத்திற்கு உரிய தேவி.

வராகமூர்த்தியின் சக்தி வாராஹி என்றும் கருதப்படுகிறாள். பன்றியின் முகத்தினையும் பெரிய வயிற்றினையும் கொண்டிருப்பார். இவருக்கு ஆறு கரங்கள் காணப்படும். வலது கரங்களில் ஒன்று வரத முத்திரையிலிருக்கும். மற்றையனவற்றில் தண்டம், வாள் என்பன இடம் பெற்றிருக்கும். இடது கரங்களில் ஒன்று அபய முத்திரையினைக் காட்ட மற்றையன கேடயம், பாத்திரம் என்பனவற்றினை ஏந்தியவாறு காட்சி தருகிறாள் வாராஹி அன்னை.
இத்துனை அற்புதமான சக்தி வாய்ந்த வாராஹி அம்மனுக்கு தேய்பிறை பஞ்சமி அன்று விளக்கு ஏற்றி வழிபடுவதன் மூலம் உங்கள் வேண்டுதல்கள் யாவும் நிறைவேறும். அத்தகைய வழிபாட்டைப் பற்றி இந்தப் பதிவில் காண்போம்.
வாராஹி அம்மனுக்கு பஞ்சமி உகந்த திதியாக கருதப்படுகிறது. திதிகள் மொத்தம் 30 இவை வளர்பிறை திதிகள் மற்றும் தேய்பிறை திதிகள் ஆகும். எனவே பஞ்சமி திதி மாதம் இரு முறை வரும். இது வளர்பிறை திதி மற்றும் தேய்பிறை பஞ்சமி ஆகும். அமாவாசைக்கு பிறகு வரும் பஞ்சமி, வளர்பிறை பஞ்சமி என்றும் பௌர்ணமிக்கு பிறகு வரும் பஞ்சமி, தேய்பிறை பஞ்சமி என்றும் கூறப்படும். இந்த தீப வழிபாட்டை தேய்பிறை பஞ்சமி அன்று செய்ய வேண்டும்.
இந்த வழிபாட்டிற்கு தேவையான பொருட்கள்: தாம்பூலத்தட்டு,மருதாணி இலைகள், 5 கிராம்பு, 5 ஏலக்காய் ஒரு அகல்விளக்கு, எண்ணெய் அல்லது நெய் மற்றும் திரி
வாராஹி அம்மனுக்கு இந்த தீபம் ஏற்றி உங்கள் வேண்டுதலை வைத்தால் போதும்.உங்கள் கோரிக்கை நிறைவேறும். வாராஹி அம்மனுக்கு மருதாணி இலை மிகவும் உகந்ததாகும்.
இந்த பூஜைக்கு ஒரு தாம்பூல தட்டை எடுத்துக் கொள்ளுங்கள். அதற்கு மஞ்சள் குங்குமம் கொண்டு பொட்டு வையுங்கள். அதன் மீது ஒரு கைப்பிடி அளவு மருதாணி இலைகளை தூவிக் கொள்ள வேண்டும். பிறகு அதன் மீது ஐந்து கிராம்பு மற்றும் ஐந்து ஏலக்காய் போட வேண்டும். அகல் விளக்கை வைத்து நெய் அல்லது நல்லெண்ணய் ஊற்ற வேண்டும். அதில் திரி போட்டு தீபம் ஏற்றி வாராகி அம்மனிடம் மனதார வேண்டிக் கொள்ள வேண்டும். வாராஹி அம்மன் படம் இருந்தால் மஞ்சள் குங்குமம் அட்சதை மற்றும் செவ்வரளி பூக்கள் சாற்றி வாராஹி அன்னையே போற்றி என்று மனதார ஜெபியுங்கள். இல்லாவிடில் அந்த விளக்கையே அம்மனாக நினைத்து மஞ்சள் குங்குமம் மற்றும் பூக்கள் சாற்றுங்கள்.
தேய்பிறை பஞ்சமி திதி வாராஹி அன்னைக்கு மிகவும் உகந்த நாள் ஆகும். அன்று செய்யும் இந்த வழிபாடு உங்களுக்கு அற்புதமான பலன்களை பெற்றுத் தரும். வாராஹி அம்மன் பெரும்பாலும் தாந்திரீக வழிபாட்டு முறையில் வழிபடப்படுகிறாள். இதனால் இவளை பெரும்பாலும் இரவில் வழிபடுவார்கள். எனவே இந்த தீப வழிபாட்டை மாலை அல்லது இரவில் செய்வது சிறப்பு. இந்த ஒரு தீப வழிபாட்டின் மூலம் நீங்கள் வேண்டும் வரங்களைப் பெறலாம். உங்கள் வாழ்வை வளமாக்கிக் கொள்ளலாம்.











