வீட்டில் குபேர பொம்மையை எந்த திசையில் வைக்க வேண்டும்?

குபேரன் நிதிகளின் அதிபதி ஆவார். திருமகள் என்று கூறப்படும் லக்ஷ்மி தேவியின் அனைத்து செல்வங்களையும் பாதுகாத்து அதனை விநியோகிக்கும் கடவுளாக குபேரன் திகழ்கிறார். இவரை வணங்குவதன் மூலம் நாம் வேண்டிய செல்வங்களைப் பெறலாம் என்ற நம்பிக்கை உள்ளது. குபேரன் இருக்கும் இடம் செல்வச் செழிப்பு நிறைந்து இருக்கும். நம் அனைவருக்கும் ஐஸ்வரியம் பெருக வேண்டும் செல்வச் செழிப்புடன் இருக்க வேண்டும். என்ற ஆசை கண்டிப்பாக இருக்கிறது. எனவே நம்மில் பலரும் குபேர பொம்மையை வீட்டில் வைத்துக் கொள்ள விரும்புகிறோம். குபேர பொம்மையை எந்த திசையில் வைப்பது சிறந்தது என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம்.
குபேரர் சிலை
நாம் கடைகளுக்கு சென்றால் பல வகையான குபேரர் சிலையைக் காணலாம். பித்தளை, வெண்கலம், களிமண், வெள்ளி, தங்கம் போன்ற பல்வேறு பொருட்களால் குபேரர் சிலைகள் செய்யப்படுகின்றன.குபேரர் சிலை அமர்ந்த நிலையில், நின்ற நிலையில், அல்லது வேறு பல வடிவமைப்புகளில் காணப்படுகிறது. சிறிய சிலைகள் முதல் பெரிய உருவங்கள் வரை பல அளவுகளில் குபேரர் சிலைகள் கிடைக்கின்றன.
சிலை வைக்கும் இடம்
ஒரு சிலர் வீட்டை அலங்கரிக்க வரவேற்பு அறையில் குபேரர் சிலையை வைத்திருப்பார்கள். அவ்வாறு வைக்கும் சிலை பெரிய அளவு கொண்டதாகக் கூட இருக்கும். என்றாலும் குபேரர் சிலை வைப்பதற்கு என்று சில நியமங்கள் உள்ளன.சிலை வைக்கும் இடத்தை சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.சிலை வைக்கும் இடத்தில் நேர்மறை ஆற்றல் நிலவ வேண்டும்.சிலை வைக்கும் திசை வாஸ்து சாஸ்திரத்தின்படி சரியாக இருக்க வேண்டும். குபேரர் சிலையை பூஜை அறையிலும் வைக்கலாம். குபேர பொம்மையை சிலர் அலங்காரத்திற்காக வைத்திருப்பர். சிலர் கடவுளாக குபேர பொம்மையினை பூஜை அறையில் வைத்து வழிபடுவர். வீட்டில் அதிர்ஷ்டத்தை ஈர்க்கவும், துரதிர்ஷ்டத்தைத் தவிர்க்கவும் குபேரன் பொம்மையை வைப்பதாகச் சொல்லப்படுகிறது. வீட்டில் பூஜையறையில் நாம் வணங்கும் குபேரனின் திருவுருவம் கட்டைவிரல் அளவு மட்டுமே இருக்க வேண்டும்.
குபேர வழிபாடு
நாம் பெரும்பாலும் குபேரரை தீபாவளி நாளில் தான் வணங்குகிறோம். ஆனால் குபேரன் சிலையை வீட்டில் வைத்து தினமும் கூட வழிபடலாம். குறிப்பாக வியாழக்கிழமை அவருக்கு உகந்த நாள் ஆகும் வெள்ளிக்கிழமை மற்றும் பூசம் நட்சத்திரத்திலும் குபேரரை வழிபடலாம். அதன் மூலம் மிகுந்த நற்பலன்களைப் பெறலாம். குபேரரை முறையாக வழிபடுவதன் மூலம் நாம் வாழ்வில் செல்வச் செழிப்பைப் பெறலாம்.
வேலை அல்லது தொழில் செய்யும் இடத்தில் குபேர பொம்மை
வேலை செய்யும் இடத்தில் குபேர பொம்மையை வைத்திருப்பது நேர்மறை ஆற்றலை கொண்டு சேர்க்கும். மேலதிகாரிகள் மற்றும் சக ஊழியர்களுடன் நல்லுறவைப் பராமரிக்க முடியும். தொழில் செய்பவர்கள் தங்கள் தொழில் செய்யும் இடத்தில் குபேர பொம்மையை வைத்துக் கொள்வதன் மூலம் தொழில் ரீதியாக நல்ல முன்னேற்றம் கிடைக்கும் என்று நம்பப்படுகிறது. தொழிலில் உள்ள சவால்களை எளிதில் சமாளிக்க முடியும். தொழில் தொடர்பான தடைகள் நீங்கும்.
மாணவர்கள் படிக்கும் இடத்தில் குபேர பொம்மை
மாணவர்கள் படிக்கும் இடத்தில் குபேர பொம்மையை வைப்பதன் மூலம் அவர்களின் கற்கும் திறன் மேம்படும். அது படிக்கும் ஆர்வத்தைத் தூண்டும். இது கற்றலை எளிதாக்கும். மேலும், மன அழுத்தத்தை குறைக்க உதவுகிறது. மன அழுத்தம் குறையும்போது, கவனச்சிதறல் குறைந்து கற்றலில் கவனம் செலுத்த முடியும்.
எந்த திசையில் குபேர சிலை வைத்தால் என்ன பலன்?
வாஸ்து சாஸ்திரப்படி பணப்பெட்டி மற்றும் நகைப் பெட்டியை வீட்டின் தெற்கு அல்லது தென்மேற்கு பகுதியில் வைக்க வேண்டும். குபேரனின் திசை வடக்கு என்பதால், அந்த திசையை நோக்கி பணப்பெட்டியைத் திறந்தால், அவருடைய ஆசியைப் பெற்று செல்வம் பெருகும். சிரிக்கும் குபேர பொம்மையை வீட்டில் வைத்தால் செல்வமும் செழிப்பும் உண்டாகும்.குடும்பத்தில் ஏற்படும் பிரச்சனைகள் தீர, வீட்டில் நேர்மறை ஆற்றல் நிலவ, சிரிக்கும் குபேர பொம்மையை வீட்டின் கிழக்கு திசையில் வைக்கலாம். குடும்பத்தில் சந்தோஷம் மற்றும் ஒற்றுமை நிலவ, குபேர பொம்மையை வடகிழக்கு திசையில் வைக்கலாம்.
குபேரன் சிலையைப் படுக்கும் அறை அல்லது உணவு உண்ணும் இடத்தின் தென்கிழக்கு திசையில் வைப்பதால், எதிர்பாராத அதிர்ஷ்டங்கள் கிடைக்கும். வீட்டின் வருமானம் அதிகரிக்கும்.
