சாளக்கிராமம் என்றால் என்ன?
சாளக்கிராமம் என்பது ஒரு வகை கல் ஆகும். இது கறுப்பு நிறத்தில் காணப்படும். இது விஷ்ணுவின் வடிவாக கருதப்படுகிறது. எப்படி சிவனுக்கு லிங்க வடிவமோ அவ்வாறு விஷ்ணுவிற்கான கல் வடிவம் சாளக்கிராமம் ஆகும். இது தெய்வீகத் தன்மை நிறைந்ததாக கருதப்படுகிறது. இதற்கு பூஜை அபிஷேகம் அர்ச்சனை செய்வது சிறப்பாக கருதப் படுகிறது. சாளக்கிராமத்தை வாங்கும் போது, அதன் தோற்றம், வடிவம் மற்றும் நிறம் ஆகியவற்றில் கவனம் செலுத்தப்பட வேண்டும். சில குறிப்பிட்ட வடிவங்கள் மற்றும் நிறங்கள் சிறப்பு வாய்ந்தவையாகக் கருதப்படுகின்றன.
சாளக்கிராம வடிவங்கள் மற்றும் வகைகள்
பல்வேறு வடிவங்களில் உள்ள சாளக்கிராமங்கள் அவற்றில் பொதிந்துள்ள உருவம், அமைப்பிற்கு ஏற்ப திருமாலின் பல அவதாரங்களாக பெயரிடப்பட்டுள்ளன. பண்டைய நூல்களின்படி, 68 வகையான சாளக்கிராமங்கள் உள்ளதாக தெரிவிக்கின்றன.
சாளக்கிராமம் மூன்று வகைப்படுகிறது. முதல் வகை: உடையாமல், துவாரம் இல்லாமல், கூழாங்கல் போல் இருக்கும். குளிர்ச்சியாக இருக்கும். 2-ம்வகை: சரிபாதி உடைந்து உள்ளே சக்கரம் போன்ற அமைப்புடன் கூடியது. 3-ம் வகை:துவாரம், சக்கரம் இவற்றுடன் ரேகைகளும் தென்படும்.
இந்த சாளக்கிராமத்தில் வடிவங்கள் எப்படி உருவானது? அதற்கு தெய்வீக சக்தி எப்படி வந்தது ?
மகாவிஷ்ணு தங்கமயமான ஒளியுடன் திகழும் வஜ்ர கிரீடம் என்னும் பூச்சியின் வடிவம்கொண்டு சாளக்கிராம கல்லை குடைந்து அதன் மையத்தை அடைந்து அங்கு உமிழ் நீரால் சங்கு சக்கர வடிவங்களையும் தனது அவதாரரூபங்களையும் பலவிதமாக வரைகிறார் இவைதான் சாளகிராமமூர்த்திகள். எதுவும் வரையப்படாமல் உருளை வடிவக் கற்களாகவும் இவை கிடைக்கும் அதற்கு ஹிரண்ய கற்ப கற்கள் என்று பெயர் இவையும் பூஜைக்கு உகந்தது. இந்த சாளகிராமம் சங்கு, நத்தைகூடு, பளிங்குபோன்று பலவித வடிவங்களில், கிடைக்கிறன.
சாளக்கிராமம் எங்கு உருவாகிறது?
இந்தப் புனிதக் கற்கள் நேபாளத்தின் முக்திநாத் பகுதியில் கண்டகி ஆற்றங்கரைகளில் காணப்படுகின்றன. இக்கற்களில் இயற்கையாகவே திருமாலின் சங்கு, சக்கரம், கதை, தாமரை போன்ற உருவங்கள் காணப்படுகின்றன. இவை நெடுங்காலமாக கோவில்கள், மடங்கள், வீடுகளில் வைக்கப்பட்டு வழிபடப்படுகிறது.
சாளக்கிராமத்தை வீட்டில் வைத்து வழிபடலாமா?
யார் தங்களுடைய வீட்டில் சாளக்கிராம மூர்த்தியை வைத்து கொள்கிறரர்களோ அந்த வீட்டில் வைக்கப்பட்டு இருக்கும் சிறு இடத்தையே தன் கோவிலாகக் கொண்டு அங்கே எழுந்தருள்கிறேன் என்று மஹாவிஷ்ணு கூறினார். சாளக்கிராமம் உள்ள வீடுகள் வைகுண்டத்திற்கு சமமாகும் என்று பத்மபுராணம் கூறுகிறது. எனவே சாளக்கிராமத்தை வீட்டில் வைத்து வழிபடலாம். ஆனால் அதற்கு மிகுந்த நியம அனுஷ்டானங்களை பின்பற்ற வேண்டும் என்று கூறுவார்கள். சாளக்கிராமத்தை வைக்கும் இடம் மற்றும் சாளக்கிராமம் இரண்டையும் எப்போதும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். தினமும் காலை மற்றும் மாலையில், சாளக்கிராமத்தை சுத்தமான நீரால் கழுவி, சுத்தமான துணியால் துடைக்க வேண்டும். சாளக்கிராமத்திற்கு துளசி இலைகளும், மலர்களும் மிகவும் பிடித்தமானவை. எனவே, தினமும் துளசி இலைகளையும், மலர்களையும் அர்ச்சனை செய்ய வேண்டும்.சாளக்கிராம பூஜையில் தூபம், தீபம் மற்றும் நைவேத்யம் மிகவும் முக்கியமானது. தினமும் தூபம் காட்டி, தீபம் ஏற்றி, நைவேத்யமாக பழங்கள், இனிப்புகள் போன்றவற்றை படைக்க வேண்டும்.
மந்திரங்கள்
சாளக்கிராம பூஜை செய்யும்போது, மூல மந்திரம் மற்றும் காயத்ரி மந்திரம் போன்றவற்றை உச்சரித்து வழிபடலாம்.
மூல மந்திரம்:
ஓம் நமோ பகவதே விஷ்ணவே ஶ்ரீ சாளக்கிராம நிவாஸினே சர்வாபீஷ்ட பலப்ரதாய சகல துரித நிவாரினே சாளக்கிராமய ஸ்வாஹா!
காயத்ரி மந்திரம்:
ஓம் விஷமந் நாசாய வித்மஹே விஷ்ணு வாஸாய தீமஹி தந்நோ சிலா ப்ரசோதயாத்.
இவற்றைத் தவிர விஷ்ணு சஹஸ்ரநாமம் மற்றும் விஷ்ணுவிற்கான ஸ்லோகங்களைப் பாராயணம் செய்யலாம்.
சாளக்கிராம கல் மற்றும் பூஜை தரும் நன்மைகள்:
- அனைத்து தோஷங்களும் விலகும்.
- சாளக்கிராம பூஜை விஷ்ணு பகவானின் பரிபூரண அருளைப் பெற்றுத் தரும்.
- சாளக்கிராமம் உள்ள வீட்டில் நேர்மறை ஆற்றல் அதிகம் இருக்கும்.
- தீய சக்திகள் அண்டாது.
- நோயற்ற ஆரோக்கியமான வாழ்வை அளிக்கும்.
- பாவங்களை நீங்கும்.
- எமபயம்நீக்கும்.
- முறையாக வழிபட்டால் விஷ்ணு லோகத்தில் வாழும் பாக்கியம் கிடைக்கும்.
- 12 சாளக்கிராமகற்களைக் கொண்டு வழிபாடு செய்தால், 12 கோடி சிவலிங்கங்களை வைத்து, 12 கல்ப காலம் பூஜை செய்த பலன், ஒரே நாளில் கிடைக்கும்.
- முக்தி என்னும் வீடுபேற்றை அளிக்கும்.

Leave a Reply