பூஜை அறை குறிப்புகள்
ஒவ்வொரு வீட்டிலும் ஒரு பூஜை அறை இருக்க வேண்டியது அவசியம். அவ்வாறு தனியாக பூஜை அறை இல்லாவிட்டாலும் சாமி படங்களை வைத்து பூஜை செய்வதற்கு என்று தனி அலமாரி அல்லது தனி ஷெல்ப் ஒன்று அமைத்துக் கொள்வது நல்லது. அப்போது தான் வீடு முழுவதும் இறை கடாட்சம் நிறைந்து காணப்படும். அது மட்டும் அன்று பூஜை அறை சுத்தமாகவும் நறுமணம் வீசக் கூடியதாகவும் இருக்க வேண்டும்.
தினமும் காலை மாலை இரண்டு வேளையும் பூஜை அறையில் விளக்கு ஏற்ற வேண்டும்.
விளக்கை கீழே வைக்காமல் ஓரு தட்டில் வைக்க வேண்டும். தட்டில் அரிசி அல்லது நெல் பரப்பி அதன் மேல் விளக்கு ஏற்றலாம்.
பொதுவாக நல்லெண்ணய் பயன்படுத்துவது நல்லது. சுவாமி விளக்கிற்கு தனி எண்ணெய் மற்றும் சமையலுக்கு தனி எண்ணெய் என்று வைத்துக் கொள்ளவும்.
விளக்கில் பாசி படிதல் கூடாது. விளக்கு பளிச்சென்று சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.
வாரத்திற்கு ஒரு முறையாவது பூஜை சாமான்களை சுத்தம் செய்து மஞ்சள் குங்குமம் பூசி வைக்க வேண்டும்.
மஞ்சள் மற்றும் குங்குமத்தை ஒரு கண்ணாடி டப்பா அல்லது மண் குடுவையில் வைத்துக் கொள்ளலாம். பிளாஸ்டிக் டப்பா பயன்படுத்துவதை தவிர்க்கவும்.

பூஜை அறையில் கெட்ட வாசனை வருவது கூடாது. பூஜை அறை நறுமணம் மிக்கதாக இருக்க வேண்டும்.
ஏலக்காய், கிராம்பு, சோம்பு, வெட்டிவேர், சந்தனம், மஞ்சள் தூள், பச்சை கற்பூரம் இவற்றை அரைத்து பொடி செய்து வைத்துக் கொள்ள வேண்டும். இந்த பொடியை தினமும் சிறிதளவு நீரில் சேர்த்து தெளித்து பூஜை அறையை துடைத்தால் பூஜை அறை வாசனையாக இருக்கும்.
வாசனை மிக்க மலர்களையே சுவாமிக்கு சூட்ட வேண்டும். வாசனை இல்லாத மலர்களை பயன்படுத்துவது கூடாது.
அன்னபூரணி விக்கிரகம் வைத்திருப்பவர்கள் அந்த விக்கிரகத்தை கீழே வைக்காமல் சிறு தட்டில் அரிசியை பரப்பி அதன் மேல் விக்கிரகம் வைப்பது நல்லது. இல்லாதவர்கள் அதனை வாங்கி பூஜை அறையில் வைப்பது நல்லது. அதனை வைத்திருந்தால் வீட்டில் உணவிற்கு பஞ்சம் வராது.
பூஜை அறையில் தினமும் சாம்பிராணி போட வேண்டும். வீட்டில் அன்றாடம் சாம்பிராணி வாசம் இருந்தால் தீய சக்திகள் வீட்டில் வராது. நல்ல சக்திகள் மேம்படும்.
தினமும் ஊதுபத்தி ஏற்ற வேண்டும்.
நாம் சமைக்கும் உணவை தினமும் சுவாமிக்கு நைவேத்தியம் செய்ய வேண்டும். இல்லாவிடில் குறைந்த பட்சம் கல்கண்டு, ட்ரை ப்ரூட்ஸ் நைவேத்தியம் செய்யுங்கள்.











