வைகுண்ட ஏகாதசி வரலாறு | Vaikunta Ekadasi Story In Tamil

வைகுண்ட ஏகாதசியன்று திறக்கப்படும் சொர்க்கவாசல்:
மார்கழி மாதம் என்றாலே காலையில் சீக்கிரம் எழுந்து குளித்து ஆண்டாள் பாசுரங்களை பலர் படிப்பது வழக்கம். இந்த சமயத்தில் ஓசோன் பூமிக்கு மிக அருகில் இருப்பதால், அது உடல் நலத்துக்கு உகந்தது என பலர் சீக்கிரம் எழுந்து நடைபயிற்சிகளை மேற்கொள்கிறார்கள். இது தவிர இந்த மாதத்தில் கடைபிடிக்கப்படும் ஏகாதசி விரதம் மிகவும் பிரபலமானது. பகவான் ஸ்ரீ கிருஷ்ணரும் மாதங்களில் நான் மார்கழியாக இருக்கிறேன் எனக் கூறியிருக்கிறார். அதனாலேயே இந்த மார்கழி மாதம் சிறப்பு பெறுகிறது.
பகவான் விஷ்ணுவின் 108 திவ்ய தேசங்களில் முதல் திவ்ய தேசமான ஸ்ரீரங்கம் தொடங்கி எல்லா பெருமாள் ஆலயங்களிலும் வைகுண்ட ஏகாதசியன்று சொர்க்கவாசல் திறப்பு விழா வெகு விமரிசையாக நடைபெறும். பெருமாளின் திருவடியை தரிசிக்க லட்சக்கணக்கான பக்தர்கள் சொர்க்கவாசல் வழியாக சென்று காத்திருக்கின்றனர். சொர்க்கவாசல் வழியாக எழுந்தருளும் இறைவன் தனது பக்தர்களையும் அந்த வாசல் வழியாக அழைத்துச் சென்று அருள்பாலிக்கிறார்.
மார்கழி மாதத்தில் வரும் வளர்பிறை 11ம் நாள் வைகுண்ட ஏகாதசியாக கொண்டாடப்படுகிறது. வைகுண்ட ஏகாதசியன்று பெருமாள் வைகுண்டத்தில் இருந்து அருள்பாலிப்பதாக நம்பப்படுவதால் இந்த விழா சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. விரதமிருந்து இரவு முழுவதும் கண் விழித்து, அதிகாலையில் இறைவனை தரிசிப்பதையும் மக்கள் முக்கியமானதாகக் கருதுகிறார்கள்.
பகல் பத்து இராப்பத்து:
பெருமாள் கோயில்களில் வைகுண்ட ஏகாதசி விழா, பகல் பத்து, இராப்பத்து உற்சவமாக சிறப்பாக நடைபெறுகின்றன. இராப்பத்தின் முதல் நாள் பரமபத வாசல் சந்நிதி திறப்பு விழா நடைபெறுகிறது. இந்த கலியுகத்தில் நம்மாழ்வாருக்கு முன்பு வைகுண்டத்திற்கு சென்றோர் யாரும் இல்லாததால் வைகுண்டத்தின் வாசல் மூடப்பட்டு இருந்தது. நம்மாழ்வார் முக்தி அடைந்த அன்று அது திறக்கப்பட்டது. இதனையறிந்த நம்மாழ்வார் பெருமாளிடம், “பகவானே எனக்கு மட்டும் வைகுண்ட வாசல் திறந்தால் போதாது. என்னைத் தொடர்ந்து தங்கள் மீது பக்தி செலுத்தும் பக்தர்களுக்காகவும் வைகுண்ட வாசல் திறக்கப்பட வேண்டும் என்று வேண்டினார்.
நம்மாழ்வாரின் வேண்டுகோளை ஏற்ற பெருமாள், மார்கழி மாத சுக்லபட்ச ஏகாதசியில் சொர்க்க வாசல் திறக்க வழி செய்தார். அந்த நாள் தான் வைகுண்ட ஏகாதசியாக, சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சியாக அனுசரிக்கப்படுகிறது.
மார்கழி மாத ஏகாதசி விரதம்:
வைகுண்ட ஏகாதசி விரதம் பக்தியிலும், புண்ணியத்திலும் சிறந்த ஒன்றாக விளங்குகிறது. விரதங்களிலேயே சிறந்ததாக கருதப்படுகிறது. அதனால் தான், “மார்கழி மாத ஏகாதசி விரதம் இருந்து என்னை வழிபடும் பக்தர்கள் அனைவருக்கும் யாம் வைகுண்ட பதவி அளித்து ஆட்கொள்வோம்” என பகவான் விஷ்ணு அருளியிருக்கிறார். எனவே தான் மார்கழி மாதத்தில் வரும் வைகுண்ட ஏகாதசி விரதத்தை லட்சக்கணக்கான பக்தர்கள் அனுஷ்டிக்கிறார்கள்.
வைகுண்ட ஏகாதசியன்று விஷ்ணுவின் அனைத்து ஆலயங்களிலும் சொர்க்க வாசல் திறப்பு விழா நடத்தப்படுகிறது. இறைவனை தொழும் ஜீவாத்மாவானது, வைகுண்ட வாசலின் வழியாக பரமாத்வைச் சேருகிறது என்பது ஐதீகம். இதனடிப்படையில் தான் சொர்க்க வாசல் திறப்பு நடைபெறுகிறது. இந்த விழாவானது அதிகாலை வேளையிலேயே நடைபெறுகிறது. இதில் மக்கள் கலந்து கொண்டு, இறைவனுக்கு நடைபெறும் வழிபாடுகளை கண்டு களித்து, சொர்க்க வாசலின் வழியாக வெளியே வருவார்கள்.
