AstroVed Menu
AstroVed
search
search

வைகுண்ட ஏகாதசி விரதத்தின் பலன்கள் | Vaikunta Ekadasi Fasting Rules In Tamil

dateDecember 24, 2020

வைகுண்ட ஏகாதசி விரதத்தின் பலன்கள்:

விஷ்ணுவை வேண்டி வழிபடும் விரதங்களில் முதன்மையானதாக விளங்குவது ஏகாதசி விரதம்.  மார்கழி மாதத்தில் வரும் இந்த விரதத்தை கடைபிடிப்பவர்கள் அரசர்கள் செய்யும் அஸ்வமேத யாகம் செய்த பலனைப் பெறலாம் என்பது ஐதீகம். காயத்ரிக்கு ஈடான மந்திரம் இல்லை, தாய்க்கு சமமான தெய்வம் இல்லை, கங்கைக்கு ஈடான தீர்த்தம் இல்லை, ஏகாதசிக்கு சமமான விரதம் இல்லை என்று இந்த விரதத்தின் மகிமையை பற்றி அக்னி புராணம் எடுத்துரைக்கிறது.

ஏகாதச என்னும் வடமொழி சொல்லுக்கு 11 எனப் பொருள். அமாவாசை நாளையும், பௌர்ணமி நாளையும் அடுத்து வரும் 11வது திதியை ஏகாதசி என்கின்றனர். மாதத்திற்கு இரண்டு ஏகாதசி என்று வருடத்திற்கு 24 ஏகாதசிகள் உள்ளன. இவற்றில் மார்கழி வளர்பிறையில் வரும் ஏகாதசியான, வைகுண்ட ஏகாதசி மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. வைகுண்ட ஏகாதசியை ‘மோட்ச ஏகாதசி என்றும் அழைக்கிறார்கள். அதனால் தான் ஏகாதசியன்று பெருமாள் கோயில்களில் பரமபத வாசல் என்று கூறப்படுகிற சொர்க்க வாசல் திறக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

ஏகாதசி தோன்றிய கதை:

புராணத்தில், முரன் என்னும் அசுரன் தேவர்களுக்கும், முனிவர்களுக்கும், மனிதர்களுக்கும் மிகுந்த தொல்லை அளித்து வந்தான். இதன் காரணமாக அனைவரும் சிவபெருமானிடம் சென்று தங்களைக் காப்பாற்றுமாறு முறையிட்டனர். சிவபெருமான் அவர்களிடம் விஷ்ணுவிடம் சென்று முறையிடுமாறு கூறினார். அதன்படியே விஷ்ணுவை சரணடைந்தனர்.

தேவர்களையும், முனிவர்களையும், மனிதர்களையும் காப்பாற்றுகிறேன் எனக்கூறிய விஷ்ணு பகவான் அசுரன் முரனோடு போர்புரிய தொடங்கினார். இருவருக்கும் இடையே நடைபெற்ற கடுமையான போர் 1000 ஆண்டுகள் நீடித்தது.

விஷ்ணுவின் திருமேனியில் இருந்து தோன்றிய பெண்:

நீண்ட கால போரினால் மிகவும் களைப்புற்ற விஷ்ணு, பத்ரிகாஸ்ரமத்தில் உள்ள குகை ஒன்றில் படுத்து ஓய்வெடுத்துக் கொண்டிருந்தார். அந்த வேளையை தனக்கு சாதகமாக்கிக் கொள்ள முனைந்த முரன் மகா விஷ்ணுவை கொல்ல துணிந்தான். அப்போது விஷ்ணுவின் திருமேனியிலிருந்து ஒரு சக்தி பெண் வடிவில் ஆயுதங்களுடன் வெளிப்பட்டது. அந்தப் பெண்ணை அசுரன் முரன் நெருங்கியதும், அந்த பெண் சக்தி ஒரு ஓங்கார ஒலியை எழுப்பினாள். அவ்வளவு தான் அடுத்த கணமே அசுரன் எரிந்து சாம்பலாகினான்.

விஷ்ணு அளித்த வரம்:

நித்திரையில் இருந்து விழித்த விஷ்ணு, நடந்ததைக் கண்டு மகிழ்ச்சியடைந்தார். அந்த சக்திக்கு ஏகாதசி எனப் பெயரிட்டார். “உன்னை விரதம் இருந்து போற்றுவோருக்கு நான் சகல நன்மைகளையும் தருவேன்” என வரமளித்து தன்னுள் மீண்டும் சக்தியை ஏற்றுக் கொண்டார்.  ஏகாதசி எனும் சக்தி விழிப்புடன் இருந்து மகா விஷ்ணுவின் அருளும், வரமும் பெற்ற ஏகாதசி நாளில் நாமும் கண்விழித்து விரதம் கடைபிடித்தால் அவரின் அருள் பரிபூரணமாக கிடைத்து நலமாக வாழ்வோம் என்பது ஐதீகம்.

ஏகாதசி விரதத்தை எப்படி மேற்கொள்வது?

ஏகாதசி விரதத்தை மேற்கொள்ள விரும்புபவர்கள் ஏகாதசிக்கு முதல் நாளான தசமி அன்று ஒரு வேளை உணவு மட்டுமே உண்ண வேண்டும். அடுத்த நாள் ஏகாதசி அன்று முழு நாளும் விரதம் மேற்கொண்டு விஷ்ணுவை நினைத்து தியானிக்க வேண்டும். விரதத்தின் போது மகா விஷ்ணுவின் பிரபந்தப் பாடல்களை பாராயணம் செய்யலாம். ஏகாதசி அன்று இரவு முழுவதும் தூங்காமல் விழித்திருந்து பகவானை துதி செய்ய வேண்டும். பின்பு மறுநாள் காலை துவாதசி அன்று, மகா விஷ்ணு பெருமாளின் நாமத்தை சொல்லியபடி துளசி தீர்த்தத்தை அருந்தி விரதத்தை முடித்துக் கொள்ளலாம்.
ஏகாதசி விரதம் மேற்கொள்பவர்கள் சிந்தனையில் இறைவனின் நினைப்பு மட்டுமே இருக்க வேண்டும். அன்றைய தினம் பெருமாள் கோயில்களில் நடைபெறும் சிறப்பு பூஜைகளில் கலந்து கொண்டு இறைவனை வழிபாடு செய்ய வேண்டும். அல்லது வீட்டில் இருந்தபடியே பகவானின் படத்திற்கு மலர் அலங்காரம் செய்து வழிபாடு செய்யலாம்.

ஏகாதசி விரதத்தின் பலன்கள்:

ஏகாதசி விரதத்தை மேற்கொள்ளும் போது விஷ்ணு சகஸ்ரநாமத்தை பாராயணம் செய்வது மிகவும் விசேஷமானது. காரணம், மகா விஷ்ணுவை அதிதேவதையாக கொண்ட புதன் கிரகத்தால் ஏற்படும் தோஷங்களும், சனி பகவானால் ஏற்படும் தோஷங்களும் நீங்கி, நிலையான செல்வமும், நற்பலன்களும் கிடைக்கும். மேலும் திதி சூன்யம், பித்ரு தோஷங்களும் நீங்கும். தீராத நோய்கள் அகலும். சகல ஐஸ்வர்யங்களும் உண்டாகும். மேலும் முக்திக்கான வழியையும் அடையலாம். வைகுண்ட பதவியையும் அடையலாம். எனவே அன்பர்களே, ஏகாதசியன்று விரதம் மேற்கொண்டு பரம தயாளனான பகவான் விஷ்ணுவின் அருளைப் பெறுவோம்.


banner

Leave a Reply