முப்பெரும் தேவியர்களுள் ஒருவராக விளங்கும் சரஸ்வதி தேவி கல்விக்கு அதிபதியாக விளங்குகிறாள். சரஸ்வதி தேவிக்கு ஆலயம் என்றால் அது குறிப்பிட்ட சில இடங்களில் மட்டுமே உள்ளது எனலாம். பொதுவாக சரஸ்வதி தேவியை நாம் வீட்டில் நவராத்திரி நாட்களில் தான் வழிபடுவது வழக்கம். குழந்தைகள் கல்வி கற்பதற்கு முன் அட்சர அப்யாசம் அல்லது வித்யாரம்பம் என்னும் சடங்கை மேற்கொள்வார்கள். அன்று சரஸ்வதி ஆலயம் சென்று குழந்தைகளுக்கு எழுத்துப் பயிற்சியை தொடங்குவார்கள். சிறப்பு வாய்ந்த சரஸ்வதி தேவியின் முக்கியமான ஆலயங்களைப் பற்றி இந்தப் பதிவில் காண்போம்.
கூத்தனூர் சரஸ்வதி கோவில் :
தமிழகத்தின் திருவாரூர் மாவட்டத்தில் கூத்தனூரில் அமைந்துள்ளது கூத்தனூர் மகா சரஸ்வதி ஆலயம். ஒட்டக் கூத்தன் எனும் தமிழ் கவிஞனுக்கு சரசுவதிதேவியின் அருள் கிடைக்கப் பெற்று, வழிபட்டதால் கோயில் அமைந்துள்ள ஊர் கூத்தனூர் என பெயர் பெற்றது. இந்த ஆலயத்தில் சரசுவதி பூசை விழா ஒவ்வொரு வருடமும் மிகவும் சிறப்பாக கொண்டாடபடுவது வழக்கமாகும். பள்ளிக்குச் சேர்க்கும் முன்பாக குழந்தைகளை இங்கு அழைத்து வந்து ஆசி பெற்றுச் செல்வதை மக்கள் வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
சிருங்கேரி சாரதாம்பாள் கோவில் :
இந்தியாவில் உள்ள மிகவும் புகழ்பெற்ற கோவில்களில் சிருங்கேரி சாரதாம்பாள் கோவிலும் ஒன்று. கர்நாடகாவில் அமைந்துள்ள இக்கோவில் சரஸ்வதி தேவி கோவிலாகும். ஸ்ரீ சாரதாம்பா கோவில் கல்வி மற்றும் ஞானக் கடவுளான தேவி சாரதைக்காகக் கட்டபட்டுள்ளது. சரஸ்வதி தேவியே இங்கு சாரதா தேவியாக அருள்பாலிக்கிறாள். இந்த கோவில் ஆதி சங்கரர் காலத்தைச் சேர்ந்தது. ஆதி சங்கரர் ஸ்ரீ சக்கரத்தில் சாரதா தேவியை பிரதிஷ்டை செய்திருப்பதால் இவளே இங்கு பிரதான கடவுளாக கருதப்படுகிறாள். இங்குள்ள சாரதாம்பாளின் சந்தன மரத்தாலான மூல விக்ரகம் காஷ்மீரத்திலிருந்து கொண்டு வரப்பட்டது. இக்கோவிலில் சந்தனத்தால் ஆன திருமேனியாக நின்ற கோலத்தில் சாரதாம்பாள் காட்சி தருகிறாள். கல்வி கேள்விகளில் சிறந்து விளங்க இவளை வழிபாடு செய்வது சிறப்பு. இவளை வேண்டினால் சகல சௌபாக்கியங்களும் கிட்டும்.
ஞான சரஸ்வதி கோவில் :
ஞான சரஸ்வதி கோயில் இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்தில் உள்ள பாசர் என்ற இடத்தில் கோதாவரி ஆற்றின் கரையில் அமைந்துள்ளது இது இந்திய துணைக்கண்டத்தில் உள்ள இரண்டு புகழ்பெற்ற சரஸ்வதி கோவில்களில் ஒன்றாகும், மற்றொன்று சாரதா பீடம். சரஸ்வதி அறிவு மற்றும் கற்றலின் தெய்வம்.பள்ளிக் கல்வியைத் தொடங்குவதற்கு முன்பு குழந்தைகளுக்கு "அக்ஷர அபியாசம்" விழாவை இங்கு வந்து நடத்துகிறார்கள். குழந்தைகள் இங்கு எழுத்துப் பயிற்சியை செய்கிறார்கள், புத்தகங்கள், பேனாக்கள், பென்சில் மற்றும் நோட் புக் ஆகியவற்றை அர்ப்பணிக்கிறார்கள். கோயிலில் அதிகாலை 4 மணிக்கு அபிஷேகம் தொடங்கி ஒரு மணி நேரம் நடைபெறும். மாலை 5 மணிக்கு புதிய புடவைகள் அலங்காரம் செய்யப்பட்டு அம்மனுக்கு அலங்காரம் செய்யப்படுகிறது.
பணச்சிக்காடு சரஸ்வதி கோவில் :
பனச்சிக்காடு கோயில் இந்தியாவில் கேரளா மாவட்டத்தில் உள்ள சரஸ்வதி கோவில் ஆகும். இந்தக் கோவில் தட்சிண மூகாம்பிகா கோவில் என்று அழைக்கப்படுகிறது. இக்கோயில் கோட்டயம் நகருக்கு 18 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது. மகாவிஷ்ணு இத்தலத்தின் பிரதான தெய்வமாக உள்ளார். என்றாலும் இக்கோயில் சரஸ்வதியின் கோவில் என்றே கேரளத்தில் சிறப்பாக அறியப்படுகிறது. இந்தக் கோவிலிலே அக்டோபர்- நவம்பர் மாதங்கள் நடக்கும் சரசுவதி பூசை மிகப் புகழ்பெற்றது. அப்போது நடக்கும் வித்யாரம்பம் சடங்கில் குழந்தைகளுக்கு எழுத்தறவு கற்பிப்பது துவக்கப்படுகிறது.
வித்யா சரஸ்வதி கோவில் :
தெலுங்கானாவின் மேதக் மாவட்டத்தில் அமைந்தள்ளது வித்யா சரஸ்வதி கோவில். இந்த கோவில் காஞ்சி சங்கர மடத்தால் நிர்வகிக்கப்பட்டு வரும் கோவிலாகும். 1989 ம் ஆண்டு ஆண்டு இக்கோவில் கட்டப்பட்டது. நவராத்திாி மூலம் நக்ஷத்திரம் (“சரஸ்வதி தேவியின் நட்சத்திரம்”) சரஸ்வதி தேவியை வணங்குவதற்கான மிகச் சிறந்த நாள் ஆகும். இந்த நாளில், கோவிலில் சிறப்பு சடங்குகள் செய்யப்படுகின்றன. இந்த கோவிலில் பல மாணவா்கள் வேதங்களைக் கற்பதற்காக ஒரு வளாகத்தில் வேத பாடசாலை அமைக்கப்பட்டுள்ளது.
காலேஸ்வரம் கோவில் :
தெலுங்கானாவின் எல்லைப் பகுதியான காலேஸ்வரத்தில் அமைந்துள்ளது காலேஸ்வர முக்தீஸ்வர சுவாமி ஆலயம். தெலுங்கானாவில் உள்ள மூன்று முக்கியமான சிவாலயங்களில் இதுவும் ஒன்றாகும். முக்தீஸ்வரர் என்னும் திருநாமத்துடன் சிவன் அருள் செய்யும் இந்த தலத்தில் யம தர்மன் காலேஸ்வரரை வழிபட்டதால் இது காலேஸ்வர முக்தீஸ்வர சுவாமி ஆலயம் ஆயிற்று. இங்கு சரஸ்வதி தேவிக்கு தனி சன்னதி உள்ளது.
சரஸ்வதி சாரதா பீடம் :
ஸ்ரீ சாரதா பீடம், இந்திய – பாகிஸ்தான் நாடுகளின் எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டின் அருகில், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில், நீலம் ஆற்றின் கரையில், இந்து சமயக் கடவுளான சாரதாவிற்கு அர்பணிக்கப்பட்ட கோயில் ஆகும். 51 சக்தி பீடங்களில் இந்த கோவிலும் ஒன்றாகும். சதி தேவியின் வலது கை விழுந்த இடம் இது என கருதப்படுகிறது. இந்த சாரதா பீடமும் ஆதிசங்கரரால் நிறுவப்பட்டதாகும். சரஸ்வதிக்குரிய ஸ்லோகத்தில் ‘காஷ்மீர பூர வாசினி’ என்று போற்றப்படுகிறார். இந்த கோயிலுக்கு நான்கு திசைகளிலும் வாசல்கள் இருந்ததாகவும் வேதங்களை கற்று உணர்ந்தவர்கள் வந்தால் மட்டுமே
தெற்கு வாயிற் கதவுகள் திறக்கும் என்றும், ஜகத்குரு ஆதிசங்கரர் வருகை புரிந்த போது தானாக தெற்கு பக்கக் கதவு திறந்து
அவரை வரவேற்றது என்றும் சொல்லப்படுகிறது.

Leave a Reply