சித்தி என்றால் கை கூடுதல் என்று பொருள். இது கை கூடினால் பல அற்புதங்களை செய்யலாம். அட்டாங்க யோகக் கலையை சாதனமாக்கிப் பல கலைகளை நமது வசமாக்க முடியும். அவற்றுள் அட்டமா சித்தி எனப்படும். எட்டு வகையான சித்திகள் 1 அணிமா, 2 மகிமா, 3 கரிமா, 4 லகிமா, 5 பிராப்தி, 6 பிரகாமியம், 7 ஈசத்துவம், 8 வசித்துவம். அனுமன் இந்த அட்டமா சித்திகளைப் பெற்றிருந்தார்.
அணிமா
எட்டு சித்திகளுள் முதலாவது அணிமா. இந்த சித்தியால் அணுவைப்போல் சிறியதாக தேகத்தை ஆக்கிக்கொள்ள இயலும். அனுமன் சிம்ஹிகி எனும் அரக்கியின் வாயினுள் புகுந்து வெளிப்பட்டதை இதற்கு உதாரணமாகச் சொல்லலாம். அனுமன் சிறிய உருவெடுத்து இலங்கைக்குள் நுழைந்தான்.
மகிமா :
மகிமா என்பது மலையைப் போல பெரிதாகுதல். உருவத்தின் அளவை பெரியதாக மாற்றிக் கொள்ளும் தன்மை. தனது உடலின் அளவை மிகப் பெரியதாக்கி, அசாதாரண வேலைகளையும் சாதாரணமாக செய்வதாகும். அனுமன் பெரிய உருவெடுத்து இலங்கையில் அரக்கர்களுடன் மோதி அவர்களை வென்றார்.
லகிமா :
லகிமா என்பது காற்றைப் போல இலேசாக இருத்தல். உடலை எடை குறைந்ததாக மாற்றிக் கொள்ளும் சக்தி. உடலின் எடையை காற்றைப் போல் இலகுவானதாக மாற்றி, காற்றில் மிதக்கும், பறக்கும் தன்மையாகும். அனுமன் சஞ்சீவி மலையை தூக்கிக் கொண்டு காற்றைப் போல பறந்து வந்தான்.
கரிமா
கனமாவது. லேசான பொருளை மிகவும் எடையுள்ள பொருளாக மாற்றுவது. மலைகளாலும், வாயுவினாலும் அசைக்கவும் முடியாமல் பாரமாயிருத்தல். அனுமன் தனது கனமான தோள்களில் ராம இலட்சுமணரை அமர வைததுக் கொண்டார்.
பிராப்தி
எல்லாப் பொருட்களையும் தன்வயப் படுத்துதல், மனத்தினால் நினைத்தவை யாவையும் அடைதல், அவற்றைப் பெறுதல். எல்லாப் பொருட்களையும் தனது கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளும் கலையாகும். இதனால் நினைத்தது அனைத்தையும் செய்யக் கூடியதாகும். அசோக வனத்தில் சீதையை சந்திக்க செல்லும் நேரத்தில் அரக்கிகளை வயப்படுத்தி தூங்க வைத்தார் அனுமான். பின் சீதையை சந்தித்து கணையாழியைக் கொடுத்தார்.
பிராகாமியம்
தன் உடலை விட்டு பிற உடலில் உட்புகுதல். (கூடு விட்டுக் கூடு பாய்தல்) இராமபிரானை தனது நெஞ்சுக்குள் குடி புக வைத்து பக்தி செலுத்தினார் அனுமான்
ஈசத்துவம்
நான்முகன் முதலான தேவர்களிடத்தும் தன் ஆணையைச் செலுத்தல். ஈசத்துவம் என்பது பிரம்மா உள்ளிட்ட தேவர்கள் அனைவரையும் தனது ஆணைக்கு கட்டுபட வைத்தல் ஆகும். அதாவது படைத்தல், காத்தல் உள்ளிட்ட ஐந்து தொழில்களையும் செய்யும் வல்லமையையும் பெறக் கூடியதாகும்.சனி பகவானை தனது ஆதிக்கத்தின் கீழ் கொணர்ந்தார் அனுமான்.
வசித்துவம்
அனைத்தையும் வசப்படுத்தல். வசித்துவம் என்பது அனைத்தையும் தன் வசப்பட வைத்தலாகும். இதனால் நினைத்தது அனைத்தையும் செயலாக்க முடியும். ஏழு வகை தோற்றமாகிய தேவ, மானிட, நர, மிருக, பறப்பன, ஊர்வன, மரம் உள்ளிட்ட அனைத்தையும் தனது சொல்லுக்கு கட்டுப்பட வைத்தல்.அனுமன் தனது ராம பக்தி காரணமாக அனைவரையும் தன வசப்படுத்தினார்

Leave a Reply