காலையில் எழுந்ததும் அந்த நாள் மகிழ்சிகரமான நாளாக, இன்பம் தரும் நாளாக இருக்க வேண்டும் என்பது நமது அனைவரின் ஆசை. காலையில் எழுந்ததும் முதலில் நாம் எதை பார்க்கிறோமோ அதனுடைய ஞாபகமே நமக்கு இருக்கும் மற்றும் அதை பொறுத்தே அன்றைய நாள் அமையும் என்பார்கள். நாம் பார்த்த பொருளின் பிரதிபலிப்பு அன்றைய நாள் முழுவதும் இருந்து கொண்டே இருக்கும். இதனால் காலையில் எழும் போதே நேர்மறை ஆற்றல் கொண்ட விஷயங்களை காண வேண்டும்.இளம் காலைப் பொழுதில் அருமையான சுற்றுச் சூழலில் நாம் எழுந்திருக்க வேண்டும். காலையில் அவசரமாக பதற்றத்துடன் கண் விழிக்கக் கூடாது. இதனால் எதிர்மறை ஆற்றல்கள் அதிகரித்து, செய்யும் காரியங்களிலும் தடைகள் ஏற்படும். காலையில் எழும்போதே இன்றைய நாள் இனிய நாளாக இருக்க வேண்டும் என இறைவனை பிரார்த்தித்துக் கொள்ள வேண்டும்.
நமது முன்னோர்கள் நமது இன்பகரமான வாழ்விற்கு நாம் எதையெல்லாம் காலையில் எழுந்து பார்க்க வேண்டும் என்று கூறிச் சென்றிருக்கிறார்கள். இதற்காக நாம் கண்ணை மூடிக் கொண்டு எங்கும் தேடிச் செல்ல வேண்டிய அவசியம் இல்லை. காலையில் நாம் எழுந்ததும் முதலில் பார்க்கும் பொருளில் இருந்து கிடைக்கும் நேர்மறை ஆற்றல்கள் உதவுவதாக சொல்லப்படுகிறது. அவைகளைப் பற்றி இந்தப் பதிவில் காண்போம்.
உள்ளங்கை :
காலையில் எழுந்ததும் இரண்டு கைகளையும் தேய்த்துக் கொண்டு முதலில் உள்ளங்கையை பார்க்க வேண்டும். உள்ளங்கையில் மகாலட்சுமி, பார்வதி - சரஸ்வதி - ஆகிய மூவரும் வாசம் செய்வதாக ஐதீகம். இதனால் காலையில் எழுந்ததும் சரஸ்வதி, பார்வதி , மகாலட்சுமியை மனதில் நினைத்து வேண்டிக் கொண்டு உள்ளங்கையை பார்க்க வேண்டும். இதனால் அவர்களின் அருள் கிடைத்து, அன்றைய நாள் முழுவதும் அதிர்ஷ்டகரமானதாக இருக்கும்.
பூரண கும்பம் :
காலையில் எழுந்ததும் பூரண கும்ப கலசத்தை பார்த்தால் அன்றைய நாள் பரிபூரணமானதாக அமையும். அன்று செய்யும் எந்த காரியம் ஆனாலும் அதில் நமக்கு மன நிறைவும் வெற்றியும் கிட்டும். எடுத்த காரியங்கள் யாவும் இனிதே நிறைவேறும்.
இயற்கை காட்சி :
பசுமையான இயற்கை காட்சிகளைக் காணலாம். இயற்கைக் காட்சியைக் காண்பதன் மூலம் அன்றைய நாள் சுறுசுறுப்பாகச் செல்லும். உடல் ஆரோக்கியத்துடன் செயல்பட முடியும். மனம் லேசானது போல இருக்கும். தெளிவாக சிந்திக்க இயலும். நாம் செய்யும் செயல்கள் யாவும் இனிதே நடந்தேறும்.
பசுமாடு மற்றும் கன்று
பசுமாட்டில் முப்பத்து முக்கோடி தேவர்களும் வசிப்பதாக ஐதீகம். காலையில் எழுந்ததும் பசு மாட்டை பார்ப்பதன் மூலம் அன்றைய நாள் லட்சுமிகரமாக அமையும். வருமானம் பெருக வேண்டும் என நினைப்பவர்கள் காலையில் பசுமாடு மற்றும் கன்றை பார்ப்பது நல்லது.
சுவாமி படங்கள் :
காலையில் எழுந்ததும் தெய்வப் படங்களை குறிப்பாக குல தெய்வத்தின் படத்தை பார்த்து விட்டு அன்றைய நாளை துவங்கினால், வீட்டில் நிம்மதியும், மகிழ்ச்சியும் ஏற்படும். குடும்ப ஒற்றுமை ஓங்கும். எல்லாருடனும் நல்லிணக்க சுமூக உறவு ஏற்படும்.
மஞ்சள்- குங்குமம் :
காலையில் எழுந்ததும் மஞ்சள், குங்குமம், சந்தனம் போன்ற மங்களகரமான பொருட்களை பார்ப்பதன் மூலம் அன்றைய நாள் மங்களகரமாக இருக்கும். அன்று நமக்கு நடக்கும் எல்லாம் சுபமாக இருக்கும். எந்த தடையும் இல்லாமல் காரியங்கள் வெற்றிகரமாக நடக்கும்.
கண்ணாடி :
காலையில் எழுந்ததும் கண்ணாடியை பார்தது விட்டு அந்த நாளை துவங்கினால் எதிரிகளால் ஏற்படும் சூழ்ச்சிகள் எதுவும் உங்களை பாதிக்காது. கண் திருஷ்டியால் ஏற்படும் தடைகளும் நீங்கி விடும்.
தீபம் :
காலையில் எழுந்ததும் எரிந்து கொண்டிருக்கும் தீபத்தை பார்ப்பது நல்லது. இதனால் நீங்கள் சந்தித்து வரும் பிரச்சனைகள் விரைவில் முடிவுக்கு வரும். உங்கள் எதிர்காலம் ஒளிமயமாகும்.
யானை :
காலையில் எழுந்ததும் யானையின் படத்தை பார்த்து விட்டு எழுந்தால் தடைகள் அனைத்தும் விலகி நீங்கள் நினைத்தது நடக்கும். உங்களை யாராலும் வெல்ல முடியாது என்ற நிலை ஏற்படும். நினைத்து பார்க்க முடியாத நல்ல பலன்கள் கிடைக்கும்.
அருவிகள்:
நீர் கொட்டும் அருவிகள் படத்தை காலையில் எழுந்ததும் பார்ப்பது நல்லது. அன்றைய தினம் தெளிந்த நீரோடை போல இருக்கும். அன்று நாம் மேற்கொள்ளும் காரியங்கள் யாவும் தங்கு தடையின்றி நடக்கும்.

Leave a Reply