விரித்தவன் நான்மறையை மிக்க விண்ணவர் வந்திறைஞ்ச
எரித்தவன் முப்புரங்கள் ளியலேமுல கில்லுயிரும்
பிரித்தவன் செஞ்சடைமேல் நிறை பேரொலி வெள்ளந்தன்னைத்
தரித்தவனூர் பனந்தாள் திருத்தாடனை யீச்சரமே.
-------- திருஞான சம்பந்தர்
இந்தப் பதிவில் நாம் காண இருப்பது அருள்மிகு அருணஜடேசுவரர் ஆலயத்தைப் பற்றித் தான். தேவாரப்பாடல் பெற்ற 276 சிவாலயங்களில் காவிரி வடகரைத்தலங்களில் இது 39வது தலம்.
சுவாமி : அருள்மிகு அருணஜடேஸ்வர சுவாமி (தாலவனேஸ்வரர், செஞ்சடையப்பர், ஜடாதரர்).
அம்பாள் : அருள்மிகு பெரிய நாயகி.
மூர்த்தி : சொக்கநாதர், நர்த்தன விநாயகர், முருகர், சப்த கன்னியர், அறுபத்து மூவர், பஞ்சபூத லிங்கங்கள், பைரவர், சூரியர், சந்திரர், சப்தகன்னியர், குங்கிலியக் கலயர்.
தீர்த்தம் : பிரம்ம தீர்த்தம், ஐராவத தீர்த்தம், தாடகை தீர்த்தம்.
தலவிருட்சம் : பனை.
தலச்சிறப்பு :
இவ்வாலயம் பனைமரத்தை தலவிருட்சமாக கொண்டு விளங்குவதால் திருப்பனந்தாள் ஆயிற்று.
இன்றும் ஆலய பிரகாரத்தில் இரு ஆண் பனை தெய்வீக தன்மையுடன் உள்ளது. தாலம் என்றால் பனை. பனை வனத்தில் வீற்றிருக்கும் ஈசன் தாலவனேஸ்வரர் ஆனார்.
ஒரு காலத்தில் தாடகை என்னும் ஒரு பெண் புத்திரப் பேற்றினை வேண்டி அனுதினமும் இந்தப் பெருமானை மாலை சாற்றி வழிபட்டு வந்தாள். அவ்வாறு இருக்கையில் ஒரு நாள் அவளது பக்தியை சோதிக்க எண்ணி இறைவன் அவளது மேலாடை நெகிழும் வண்ணம் செய்தார். செய்வதறியாது திகைத்த அவள் தனது இரு முழங்கைகளாலும் மேலாடையை பற்றிக் கொண்டு மாலை சார்த்த முயற்சித்தாள். ஈசனே நான் என் செய்வேன்? எவ்வாறாயினும் மாலையை ஏற்க வேண்டும் என்று மனமுருக வேண்டினாள். அவளது பக்தியை மெச்சி மனமிரங்கி பெருமான் திருமுடியைச் சாய்த்து மாலையை ஏற்றருளினார். அன்று முதல் லிங்கம் சாய்வாகவே இருந்தது. இந்த நிகழ்ச்சியை நினைவு கூறும் வண்ணம் தான் இத்தலத்துக்கு தாடகையீஸவரம் என்னும் பெயர் ஆயிற்று.
சோழ நாட்டு மன்னன் மணிமுடி சோழனுக்கு (நாயன்மார்களில் ஒருவரான மங்கையர்க்கரசியின் தந்தை) இத்தலத்து இறைவன் மீது பக்தி அதிகம். அந்த மன்னன் தாடகைக்காக சாய்ந்த தலையை நிமிர்த்த எண்ணினான் யானை, குதிரை கொண்டு கட்டி இழுத்து பார்த்தும்.பலன் தரவில்லை. இந்த விஷயம் திருக்கடையூர் குங்கிலிக்லய நாயனார் காதிற்கு எட்டியது. தான் முயற்சி செய்த பார்ப்பதாக அவர் மன்னரிடம் வேண்டினார். மன்னரும் இசைந்தார். அவர் ஈசனின் தலையை நிமிர்த்த எண்ணி ஒரு கயிற்றை தன் கழுத்தில் சுருக்கிட்டு மறுமுனையை ஈசன் கழுத்தில் கட்டி ஒன்று உன் தலை நிமிர வேண்டும் இல்லையேல் நான் இங்கேயே உயிர் விடல் வேண்டும் என இழுத்தார். மிக எளிதாக தலை நிமிர்ந்தது என்று திருவிளையாடல் புராணத்தில் கூறப்பட்டு உள்ளது. தடாகைக்காக தலை சாய்ந்ததும் குங்கிலியக்கலய நாயனாருக்காக தலை நிமிர்ந்ததும் இவ்வாலயத்தில் சிற்ப வடிவில் உள்ளது.
தல வரலாறு :
ஒரு சமயம் பிரம்மாவுக்கும், விஷ்ணுவுக்கும் இடையே தம்மில் யார் பெரியவர்? என்றப் போட்டி எழுந்தது. அதை அறிந்து கொள்ள அவர்கள் இருவரும் சிவனை நாடினார்கள். அப்போது சிவபெருமான், ‘எனது அடி முடியை யார் அறிகிறார்களோ, அவர்களே பெரியவர்’ என்று கூறினார். ஈசனின் அடியைத் தேடி விஷ்ணுவும் முடியைத் தேடி பிரம்மாவும் புறப்பட்டனர். இருவராலும் சிவபெருமானின் சிரசையோ, பாதத்தையோ காண முடியவில்லை. மகாவிஷ்ணு தனது தோல்வியை ஒப்புக்கொண்டார். ஆனால் பிரம்மதேவர், தாழம்பூவை பொய் சாட்சி கூறவைத்து பொய்யுரைத்தார். இதனால் கோபமுற்ற ஈசன், பொய் சொன்ன பிரம்மதேவனுக்குப் பூலோகத்தில் தனிக் கோவில்கள் இல்லாமல் போகட்டும் என்றும், தாழம்பூ சிவ பூஜைக்கு அருகதை இல்லாமல் போகட்டும் என்றும் சபித்தார். பிரம்மதேவர் தன் தவறை உணர்ந்து ஈசனிடம் சாப விமோசனம் கேட்டார். ‘பொய் சொன்ன பெரும் சாபம் தொலைய வேண்டும் என்றால் திருப்பனந்தாள் சென்று, அத்தல பொய்கை தீர்த்தத்தில் நீராடி வழிபட வேண்டும்’ என்று வழி கூறினார். பிரம்மாவும் அவ்வாறே செய்ய பொய் சொன்னதால் ஏற்பட்ட பாவமும், மற்றக் குற்றங்களும் அவரை விட்டு அகன்றன.
அகமகிழ்ந்த பிரம்மதேவர், இத்தல அருணஜடேஸ்வரருக்கு, சித்திரை மாதத்தில் பெருவிழா நடத்தி இன்புற்றார். இன்றும் ஒவ்வொரு வருடமும் இத்தலத்தில் நடைபெறும் சித்திரைப் பெருவிழாவை பிரம்ம தேவரே முன்னின்று நடத்துவதாக ஐதீகம். பிரம்மதேவர் நீராடி சாப விமோசனம் பெற்ற பொய்கை தீர்த்தம், தற்போது பிரம்ம தீர்த்தம் என்று அழைக்கப்படுகிறது. ஆவணி மாத அமாவாசையில் ‘பிரம்ம சாப நிவர்த்தி தீர்த்தவாரி’ பொய்கைக் குளத்தில் நடக்கிறது. தாழம்பூ பொய் சாட்சி சொன்னதால் அதற்கும் பாவம் உண்டானது. திருப்பனந்தாளில் ஈசன் தாழம்பூவுக்கும் சாப விமோசனம் கொடுத்தார்.
கோவில் அமைப்பு:
இந்த கோவிலில் இரண்டு பெரிய கோபுரங்கள் உள்ளன – மேற்கில் 7 அடுக்கு ராஜகோபுரம் மற்றும் கிழக்கில் 5 அடுக்கு கோபுரம். இராசகோபுரத்தையடுத்துள்ள பதினாறு கால் மண்டபமும், வடபால் உள்ள வாகன மண்டபமும், இரண்டாவது கோபுரத்தையடுத்துள்ள வெளவால் நெற்றி மண்டபமும், சிற்ப ஓவிய மேம்பாடு உடையனவாய்த் திகழ்கின்றன. சிவனும் பார்வதியும் கல்யாண கோலத்தில் உள்ளனர். சுவாமி சந்நிதியைச் சுற்றி உள் பிராகாரங்களும், அதனை அடுத்து வெளிப் பிராகாரங்களும் செம்மையுற அமைக்கப் பெற்றுப் பொலிவுடன் விளங்குகின்றன.இந்த கோவிலில் உள்ள துர்க்கை மிகவும் சக்தி வாய்ந்ததாக கருதப்படுகிறது.
கோவிலில் பாடியவர்கள்
நாயன்மார்களான அப்பர், ஆயடிகள் காடவர்கோன், நம்பியாண்டார் நம்பி உள்ளிட்டோர் இக்கோயிலில் பாடியுள்ளனர். அருணகிரிநாதர் தனது திருப்புகழ் நூலில் இக்கோயிலில் உள்ள முருகனைப் பற்றி பாடியுள்ளார்.
வழிபட்டோர் :
பிரம்மன், திருமால், இந்திரன், ஐராவதம், அகத்தியர், சூரியர், சந்திரர், ஆதிகேசன், நாககன்னி, தாடகை, குங்குலியக் கலயநாயனார்.
வேண்டுதல்:
இத்தலத்தில் ஈசனையும், அம்பாளையும் வழிபட்டு வந்தால் கல்வி, கேள்விகளில் மிகச் சிறந்து விளங்கலாம். இத்தலத்தில் சந்திர பகவான் ஈசனை வேண்டித் துதித்து தனது தோஷங்களைப் போக்கிக் கொண்டார். இங்கு வழிபட்டால் சந்திர தோஷங்கள் அகலும்.
பூஜை விவரம் : ஆறுகால பூஜை.
திருவிழாக்கள் : சித்திரை திருக்கல்யாணம், ஆடிப்பூரம், நவராத்திரி, சிவராத்திரி.
ஆலய நேரம் : காலை 5.30 மணி முதல் நண்பகல் 12.30 மணி வரை, மாலை 4.30 மணி முதல் இரவு 9.00 மணி வரை.

Leave a Reply