சரபேஸ்வரர் யார் ?
சரபேஸ்வரர், அறுபத்து நான்கு சிவ உருவத் திருமேனிகளில் ஒன்றாக சைவர்களால் வணங்கப்படும் வடிவமாகும்.உத்திர காமிகாகமம் இந்த வடிவத்தினை ஆகாச பைரவர் என்று கூறுகிறது. தத்வநிதி சிற்பநூல் இவ்வடிவத்திற்கு 32 கைகள் இருப்பதாக கூறுகிறது. மனிதன், பறவை, மிருகம் மூன்றும் சேர்ந்த கலவை தான் சரபேஸ்வரர். சரபேசுவரர் எட்டு கால்களும், இரண்டு முகங்களும், நான்கு கைகளும், மிகக்கூரிய நகங்களும், உடலின் இருபுறங்களில் இறக்கைகளும் சிங்கத்தினைப் போல் நீண்ட வாலும், கருடனைப் போன்ற மூக்கும், யானையைப் போன்ற கண்களும், கோரப் பற்களும், யாளியைப் போன்ற உருவமும் உடையவராக நம்பப்படுகிறார்.
நரசிம்ம அவதாரம் :
இரண்யகசிபு என்ற கொடிய அசுரன் ஒருவன் இருந்தான். அவன் கடும் தவத்தின் பயனாக பரமனிடம் இருந்து, “தேவர், மனிதர், விலங்குகள் முதலிய யாவராலும், பகலிலோ அல்லது இரவிலோ, வீட்டின் உட்புறத்திலோ அல்லது வெளிப்புறத்திலோ, எவ்வித ஆயுதங்களாலோ தமக்கு மரணம் ஏற்படக் கூடாது” என்ற அரிய வரத்தினை பெற்றான். அந்த அகம்பாவத்தில் தானே கடவுள், தன்னைத் தான் வணங்க வேண்டும் என்று அனைவரையும் கட்டாயப்படுத்தினான். அனைவரும் பயத்தில் அவ்வாறே செய்தனர்.
அசுரனின் மகன் பிரகலாதன். இவன் தாயின் கருவறையில் இருக்கும்போதே, நாரதரால் நாராயண நாமம் போதிக்கப்பட்டவன். பிறப்பிலேயே பக்தியில் சிறந்து விளங்கியவன். சதாசர்வ காலமும் நாராயணனின் நாமத்தையே உச்சரிக்கும் பழக்கம் கொண்டவனாக பிரகலாதன் இருந்தான். இது அவனது தந்தையான இரண்யகசிபுவுக்கு பிடிக்கவில்லை. தன்னையே கடவுளாக வழிபட வேண்டும் என்று மகனையும் கட்டாயப்படுத்தினான்.
ஆனால் பிரகலாதனோ, ‘நாராயணன் ஒருவனே கடவுள்’ என்று தந்தைக்கே அறிவுரைக் கூறத் தொடங்கினான். இதனால் கோபம் அடைந்த இரண்ய கசிபு, மகன் என்றும் பாராமல், பிரகலாதனை கொன்றுவிட தன் பணியாளர்களுக்கு உத்தரவிட்டான். அவர்களும் பிரகலாதனை பல வழிகளில் கொல்ல முயன்றனர். ஆனால் ஒவ்வொரு முறையும், நாராயணனின் நாமம் அவனைக் காப்பாற்றிக்கொண்டே இருந்தது. இத்த்னால் ஆத்திரம் அடைந்த இரண்யகசிபு எங்கே உன் நாராயணன் எனக்கு காட்டு என்றான். எனது நாராயாணன் தூணிலும் இருப்பான், துரும்பிலும் இருப்பான் என்று பிரகலாதன் கூறினான். இரண்யகசிபு ஒரு தூணைக் காட்டி இதில் உன் நாராயணன் இருக்கிறானா? என்று கேட்க பிரகலாதனும் ஆம் என்று கூறுகிறான். உடனே தன் கதாயுதத்தால் அருகில் இருந்த தூணில் ஓங்கி அடித்தான். அப்போது அந்தத் தூணில் இருந்து சிங்க தலையும், மனித உடலும் கொண்ட மனித மிருக தோற்றத்துடன் நரசிம்ம மூர்த்தி தோன்றினார். அவர் இரண்யகசிபுவை வதம் செய்து, பக்த பிரகலாதனைக் காப்பாற்றினார்.
சரபேஸ்வரர் தோன்றக் காரணம்
அசுரனின் குருதி குடித்ததால் மதி மயங்கி ஆக்ரோஷமானார். அவர் அருகில் வர யாவரும் அஞ்சினர். அண்ட சராசரங்களும் நடுங்கின அவரின் கோபத்தில். செய்வதறியாது திகைத்த தேவாதி தேவர்கள் சம்ஹார மூர்த்தியான சிவபெருமானைச் சரணடைய அவர் ஒருவர் தான் இவரின் கோபத்தை சாந்திப்படுத்த வல்லவர் என்று கைலாயம் சென்றார்கள். பின்னர் சிவபெருமான் சரபரின் தோற்றத்தில் உருமாறி ஸ்ரீ நரஸிம்ஹரின் கோபம் தனித்தார் என்கிறது காளிகா புராணம். சரபரின் ஹுங்கார சப்தத்தில் நரஸிம்ஹரின் கோபாக்னி அடங்கியதாய்ச் புராணங்கள் கூறுகின்றன.
காஞ்சி புராணத்தில் நரசிம்மரின் உக்கிரத்தை அடக்கப் பரமசிவன் வீரபத்திரரை அனுப்பியதாகவும், நரசிம்மம் ஆனது வீரபத்திரரைக் கட்டிப் போட்டுவிட்டு வேடிக்கை பார்த்ததாகவும், அந்தச் சமயம் சிவன் ஒரு ஜோதி ரூபமாக வீரபத்திரர் உடலில் புகுந்ததாகவும், உடனே சரபேஸ்வரராக வீரபத்திரர் உருமாறி நரசிம்மத்தை அடக்கியதாகவும் கூறுகிறது.
இந்த சரபேசரின் தோற்றம் மிகவும் விசித்திரமானது. மனிதன், பறவை, மிருகம் மூன்றும் சேர்ந்த கலவை தான் சரபேஸ்வரர். இந்த அபூர்வப் பிறவி தோன்றியதும் போட்ட சப்தத்தில் நரசிம்மர் அடங்கியதாய்ச் சொல்வார்கள். சந்திரன், சூரியன், அக்னி ஆகியவை மூன்று கண்களாகவும், கூர்மையான நகங்களோடும், நாலு புறமும் சுழலும் நாக்கோடும், காளி, துர்க்கா ஆகியோரைத் தன் இறக்கைகளாகவும் கொண்டு வேகமாய்ப் பறந்து, பகைவர்களை அழிக்கும் இந்த சரபேஸ்வரரைப் “பட்சிகளின் அரசன்” என்றும் “சாலுவேஸ்வரன்” என்ற திருநாமத்துடனும் குறிப்பிடுகின்றனர். இவரின் சக்திகளாய் விளங்குபவர்கள் ப்ரத்யங்கிரா, மற்றும் சூலினி. இதில் தேவி பிரத்யங்கிரா சரபேஸ்வரரின் நெற்றிக்கண்ணில் இருந்து தோன்றியதாகவும், இவள் உதவியுடன் தான் நரசிம்மரின் உக்கிரத்தை அடக்கியதாகவும் சில குறிப்புக்கள் கூறுகின்றன.
சரபேஸ்வரரை வணங்குவதால் ஏற்படும் பலன்கள்:
ராகு காலத்தில் சரபேஸ்வரரை வழிபடுபவர்களின் நோய்கள் நீங்கும். ஆரோக்கியம் சிறக்கும். எதிரிகள் அழிவார்கள். அவர்களின் செயல்களில் வெற்றி பெறுவார்கள். பிரச்சினைனிகள் யாவும் தீரும். கண் திருஷ்டி நீங்கும்.

Leave a Reply