AstroVed Menu
AstroVed
search
search

விரைவில் திருமணம் நடைபெற திருப்பைஞ்ஞீலி பரிகாரம்

dateMay 21, 2025

ஒவ்வொரு மனிதரின் வாழ்விலும் திருமணம் என்பது அவசியமான ஒன்றாக இருக்கிறது. திருமணமாகி குழந்தைகள் பிறந்த பிறகு தான் மனிதர்களின் வாழ்வு முழுமை அடைகிறது என்றும் கூறலாம்.ஆனால் இன்றைய காலக்கட்டத்தில் பெரும்பாலனவர்களின் திருமணம் தடைபடுகிறது அல்லது தாமதம் ஆகிறது. அதற்கு பல காரணங்கள் உள்ளன எனலாம். ஜோதிட ரீதியாகப் பார்த்தால் ஜாதகத்தில் காணப்படும் சர்ப்ப தோஷம், பித்ரு தோஷம், களத்திர தோஷம், செவ்வாய் தோஷம் போன்ற தோஷங்கள் காரணமாக அமைகின்றன. இந்த தோஷங்கள் ஜாதகத்தில் இருந்தால் திருமணம் தாமதமாகின்றது. இதற்கு என்ன செய்வது? பரிகாரம் உண்டா என்றெல்லாம் பெற்றோர்களின் மனம் பதை பதைப்பதுண்டு. நமது கவலையை போக்கும் வகையில் திருமண தோஷத்தை நீக்கும் பல கோவில்கள் நம்மிடையே உள்ளன. அந்த வகையில் திருமணத் தடை நீக்கும் திருப்பைஞ்சீலி கோவிலைப் பற்றித் தான் இந்தப் பதிவில் நாம் காணப் போகிறோம்.

ஞீலிவனேசுவரர் கோயில்

திருச்சி மாவட்டம் மண்ணச்ச நல்லூர் வட்டத்தில் அமைந்துள்ள திருப்பைஞ்ஞீலி ஞீலிவனேசுவரர் கோயில்  சம்பந்தர், சுந்தரர், அப்பர் ஆகியோரால் தேவாரம் பாடல்பெற்ற சிவத்தலமாகும்.காவிரி வடகரையில் பாடல் பெற்ற தலங்களுள் 61  வது தலமாக இந்த தலம் விளங்குகிறது.  இது சிவபெருமானின் பக்தர்களால் ' தெற்கு கைலாஷ் ' என்றும் ' மேலை சிதம்பரம் ' என்றும் அழைக்கப்படுகிறது. மூலவர் ஞீலிவனேஸ்வரர், நீலகண்டேஸ்வரர் என்றும், தாயார் விசாலாட்சி, நீல்நெடுங்கண்நாயகி என்றும் அழைக்கப்பெறுகிறார். ஞீலி என்பது ஒருவகை கல்வாழை. பைஞ்ஞீலி என்பது பசுமையான வாழையைக் குறிக்கும். இது இறைவனுக்கு மட்டுமே படைக்கப்படும் வாழை ஆகும்.  பசுமையான ஞீலி வாழை மரத்தை தலவிருட்சமாக பெற்றதால் திருப்பைஞ்ஞிலி என்று இத்தலம் பெயர் பெற்றது. இந்த கோவில் ஐந்து பிரகாரங்கள் கொண்டது. இந்தக் கோவில் செவ்வாய் தோஷம், புத்திர தோஷம் மற்றும் திருமண தடை நீக்கும் ஒரு பரிகார தலமாக விளங்கி வருகிறது.

சப்த கன்னிமார்கள்

சப்த கன்னிமார்களான பிராம்மி, மாகேஸ்வரி, கவுமாரி, வைஷ்ணவி, வாராகி, இந்திராணி, சாமுண்டி ஆகியோர் திருமண வரம் வேண்டி இவ்விடத்தில் பார்வதி தேவியை நோக்கி தவம் செய்ததாகவும், அப்போது, பார்வதி தேவி அவர்கள் முன் தோன்றி, அவர்களுக்கு திருமண  வரம் அளித்ததுடன், வாழை மர வடிவில் அத்தலத்திலேயே குடி கொண்டு பக்தர்களின் குறை தீர்க்க  வரம் அளித்ததாகவும் வரலாறு கூறுகிறது. பின்னர் அந்த வனத்தின் மத்தியில் சிவனும் லிங்க வடிவில் சுயம்புவாக எழுந்தருளினார் என்று கூறப்படுகிறது. எனவே திருமண தடை மற்றும் கால தாமதத்தை சந்திக்கும்  ஆண்கள் மற்றும் பெண்களுக்கு இந்த தெய்வீக வாழைமரங்களுக்கு செய்யப்படும் பூஜை சடங்குகளால், சப்த கன்னியர்கள் ஆசீர்வாதம் கிடைக்க பெற்று திருமண தோஷம் நீங்குகிறது.

திருமணம் ஆக வேண்டி பரிகாரம்

இக்கோவிலில் இரண்டு அம்மன் சந்நிதிகள் இருக்கின்றன. இரண்டு அம்மன்கள் பெயரும் விசாலாட்சி தான். பார்வதி தேவி ஒருமுறை சிவயோகத்திலிருக்க விரும்பி இத்தலத்திற்கு வந்து தவம் மேற்கொண்டாள். நிழல் தரும் மரங்கள் இல்லாததைக் கண்டு தனக்கு பணிவிடை செய்ய வந்த சப்த கன்னிகளை வாழை மரங்களாக அருகில் இருக்கக் கூறி அருள் செய்தாள் என்றும் ஒரு வரலாறு உண்டு. அத்தகைய பெருமை பெற்ற வாழைக்கு பரிகாரம் செய்ய விரைவில் திருமணம் கைகூடும். இத்தனை சிறப்பு வாய்ந்த இந்த கோவிலில், வாரத்தின் அனைத்து நாள்களிலும் பரிகார பூஜை செய்யப்படுகிறது.  வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வாழைக்குப் பரிகாரம் செய்வது மிகவும் சிறப்பாகும். எனவே அந்த நாட்களில் இங்கு கூட்டமானது அதிக அளவில் இருக்கும்.வாழைப் பரிகார பூஜை நேரம் காலை 8-30 மணி முதல் பகல் 12-30 மணி வரையிலும், மாலையில் 4-30 மணிமுதல் 5-30 மணி வரையிலும் நடத்தப்படுகிறது.

நிவர்த்தி பூஜை

எனவே, திருமணம் ஆகாமல் தடைபட்டுக் கொண்டிருக்கும் ஆண்களோ அல்லது பெண்களோ இந்த கோவிலுக்கு வந்து, அர்ச்சனை செய்து, அங்கு இருக்கும் கல்வாழை பரிகார பூஜையை நிறைவேற்றினால், அவர்களுக்கு விரைவில் திருமணம் நடக்கும் என்பது பல ஆண்டுகாலமாக ஒரு ஐதிகமாக இருந்து வருகின்றது. கல்வாழை மரத்தில் மாங்கல்யத்தை கட்டி பரிகாரத்தை நிறைவேற்றலாம்.  கல்யாண வரம் தந்தருளும் அற்புதமான தலத்துக்கு வந்து, வேண்டிக் கொண்டால் போதும்... சீக்கிரமே கல்யாண மாலை தோள் சேரும் திருமணம் முடிந்தவுடன்  தம்பதிகளாக வந்து நிவர்த்தி பூஜை செய்ய வேண்டும்.


banner

Leave a Reply