திருமணஞ்சேரி கோவில் | Thirumanancheri Temple Details in Tamil

மனிதராகப் பிறந்த நம் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பருவத்தில் ஒவ்வொரு ஆசை பிறக்கின்றது. அந்த வகையில் பருவம் எய்திய ஒரு ஆணும் பெண்ணும் விரும்புவது இருமனம் இணையும் திருமண பந்தத்தை .ஒரு சிலருக்கு தக்க பருவ வயதில் திருமணம் நடந்தேறி விடுகிறது. ஒரு சிலருக்கோ தக்க வரன் அமைவது கடினமாக இருக்கிறது. இதற்கு காரணம் அவரவர் ஜாதகத்தில் காணப்படும் தோஷம் என்று கூறப்படுகிறது. இந்த தோஷத்தை நீக்கி திருமணம் நடக்க காரணமாக இருக்கும் கோவில்களில் ஒன்று தான் ஸ்ரீ கல்யாணசுந்தரமூர்த்தி” உறையும் “திருமணஞ்சேரி’ ஆகும். இந்த ஆலயத்தில் உள்ள சிவபெருமான் சுயம்பு மூர்த்தியாக அருள் பாலிக்கிறார். இது திருமணம் தொடர்பான தோஷங்களுக்கான பரிகார ஸ்தலம் ஆகும். இந்த ஆலயத்தின் மற்றொரு பெயர் உத்வகநாதர் ஆலயம் ஆகும். வாருங்கள் இந்த ஆலயத்தைப் பற்றிக் காண்போம்.
ஆலய அமைவிடம்:
இந்த ஆலயம் குற்றாலத்திற்கு அருகில் உள்ள மயிலாடுதுறை வட்டத்தில் உள்ளது. இது கும்பகோணம் மயிலாடுதுறை இணையும் நெடுஞ்சாலையில் உள்ளது.எனவே கும்பகோணம் மற்றும் மயிலாடுதுறையில் இருந்து இந்த ஆலயம் செல்ல வசதி உள்ளது.
திருமணஞ்சேரி ஸ்தல வரலாறு:
சிவன் பார்வதி திருமணம் நடந்த கிராமம் இந்த கிராமம் என்பதால் இதற்கு திருமணஞ்சேரி என்ற பெயர் வந்தது. இது தேவாரப் பாடல் பெற்ற திருத்தலங்களில் ஒன்றாகும். ஒரு தடவை பூமியில் பசுவாகப் பிறக்கும்படி பார்வதி தேவி சாபம் பெற்றாள். அப்படி பசுவான பார்வதிதேவி இங்கே வந்தபோது, அந்தப் பசுவை மேய்க்கும் இடையனாக விஷ்ணுவும் உடன் வந்தார். சாப விமோசனம் பெற்ற பின் பார்வதி சிவபெருமானை மணந்தார். அப்போது விஷ்ணுவே பார்வதியை சிவனுக்கு கன்யாதானம் செய்து வைத்தார் என்பது ஐதீகம். எனவே சிவன்-பார்வதி, விஷ்ணு லக்ஷ்மி இந்தக் கோவிலில் வசிப்பதாக ஐதீகம். இறைவன் திருநாமம் ஸ்ரீ மணவாள நாயக்கர், ஸ்ரீ கல்யாண சுந்தரேஸ்வரர், ஸ்ரீ அருள் வள்ளல் நாயக்கர் மற்றும் ஸ்ரீ உத்வகநாதர். அன்னை ஸ்ரீ கோகிலாம்பாள், ஸ்ரீ யாழ் மொழி அம்மை. ஸ்தல விருட்சம் வன்னி, தீர்த்தம் சப்த சாஹரம், குபேர கிணறு.
இங்கு நடக்கும் சிறப்பு வழிபாடு என்ன?.
எதோ ஒரு காரணத்தினால் திருமணம் தடை பட்டுக் கொண்டோ அல்லது தள்ளிப் போய்க்கொண்டோ இருக்கும் ஆண்களும் பெண்களும் இந்த தலத்திற்கு வந்து வழிபடலாம். அவ்வாறு வரும் போது இங்கு வீற்றிருக்கும் இறவன் மற்றும் இறைவிக்கு மாலை கொண்டு வந்து சார்த்த வேண்டும். அவ்வாறு இறைவனுக்கு சாற்றிய மாலையை திருமண வரம் வேண்டி வந்த ஆண்களுக்கும் பெண்களுக்கும் வழங்கப்படும். அவர்கள் அந்த மாலையை தகங்கள் கழுத்தில் அணிந்து கொண்டு ஆலயத்தின் பிரகாரத்தை வலம் வந்து வழிபட வேண்டும். பிறகு அந்த மாலைகளை இல்லத்திற்கு எடுத்துச் சென்று பத்திரப்படுத்தி வைக்க வேண்டும்.திருமணம் இனிதே நடந்து முடிந்த பிறகு அந்த மாலைகளுடன் தம்பதியாக வந்து இத்தலத்து இறைவனை வணங்கி மாலைகளை இங்கேயே விட்டு விட வேண்டும்.தினந்தோறும் திருமணம் நடக்க வேண்டி ஆயிரக்கணக்கான ஆண்கள் மற்றும் பெண்கள் இக்கோவிலிற்கு வருகின்றனர் என்பதில் இருந்து இந்த ஆலயத்தின் சிறப்பை நாம் அறிந்து கொள்ளலாம்.
கோவில் நடை திறந்திருக்கும் நேரம்
காலை 6.00 மணி முதல் 1.30 மணிவரை
பிற்பகல் 3.30 முதல் இரவு 8.00 மணிவரை
திருமணஞ்சேரி கோவில் முகவரி உத்வாகநாதர் திருக்கோவில், திருமணஞ்சேரி மயிலாடுதுறை வட்டம், நாகப்பட்டினம் மாவட்டம்,
தமிழ் நாடு 609 801
தொலைபேசி எண் 04364-235002
