Arupadai Veedu Muruga Program 2024: Invoke Muruga at His 6 Powerful Abodes During the 6th Moon Powertime Days JOIN NOW

சபரிமலை ஐயப்பன் வரலாறு | Swami Ayyappan History In Tamil

January 21, 2021 | Total Views : 3,365
Zoom In Zoom Out Print

சபரிமலை ஐயப்பன் வரலாறு:

சபரிமலை கேரளாவிலுள்ள மேற்கு மலைத்தொடர்களில் பத்தனம்திட்டா மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு புண்ணிய ஸ்தலமாகும். இங்கு தான் ஹரிஹரசுதனான சுவாமி ஐயப்பன் வீற்றிருந்து தனது பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். 18 மலைத்தொடர்களுக்கு நடுவே சுவாமி ஐயப்பன் கோவில் அமைந்துள்ளது. இயற்கை எழில் கொஞ்சும் இந்த மலை முழுவதிலும் கார்த்திகை மாதம் வந்துவிட்டால் சரண கோஷங்கள் எதிரொலித்துக் கொண்டே இருக்கும். ஜாதி, மதம், மொழி, இனம் என்ற பாகுபாடில்லாமல் அனைத்துவிதமான பக்தர்களும் ஐயப்பனை தரிசிக்கவும், அவரது அருளாசிகளைப் பெறுவதற்கும் விரதம் மேற்கொண்டு, கடினமான மலைப் பாதையில் பயணம் செய்து மலை உச்சியில் அமர்ந்திருக்கும் ஐயப்பனை காண வருகின்றனர். ஆன்மிகம் குறித்து மேலும் அறிய எங்கள் வலைத்தளம் வாருங்கள்.

ஐயப்பர் வரலாறு:

மகிஷாசுரனை வதம் செய்த அன்னை ஆதிபராசக்தியின் மீது கோபம் கொண்டு, அவனது தங்கையான மகிஷி பிரம்மாவை நோக்கி கடும் தவம் புரிந்து வரங்களைப் பெற்றாள். வரம் பெற்ற மகிஷி தேவர்களையும், முனிவர்களையும், ரிஷிகளையும் மிகவும் துன்புறுத்தி வந்தாள். இதைக் கண்ட சிவபெருமானும், விஷ்ணுவும் மகிஷியை அழிக்க வேண்டி, விஷ்ணு மோகினி அவதாரமெடுக்க, சிவபெருமானுக்கும், விஷ்ணுவான மோகினிக்கும் ஒரு குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு அனைத்து தெய்வாம்சங்களும் அமைந்திருந்தது. சிவனும், விஷ்ணுவும் காட்டில் ஒரு மரத்தடியில் குழந்தையை அதன் கழுத்தில் ஒரு மணி மாலையை அணிவித்து போட்டுவிட்டு சென்றுவிட்டனர். எல்லாம் இறைவனின் லீலை.

இதற்கிடையே கேரளாவில் பந்தள மகாராஜா ராஜசேகரனும், அவனது மனைவியும் குழந்தையில்லாமல் தவித்து வந்தனர். அவர்கள் இருவரும் இறைவனிடம் மனமுருக பிரார்த்தித்து வந்தனர். ஒரு நாள் பந்தள மகாராஜா காட்டிற்கு வேட்டைக்கு வந்தார். அப்போது காட்டிற்குள்ளிருந்து ஒரு குழந்தையின் அழுகை சத்தம் கேட்டது. மகாராஜாவுக்கோ சந்தேகம், காட்டிலிருந்து எப்படி குழந்தை சத்தம் வருகிறது என்று தேடினார். அப்போது மரத்தடியில் இருந்த குழந்தையைப் பார்த்து அருகில் சென்றார். அங்கே ஜொலித்துக் கொண்டிருந்தார் ஐயப்பர்.

பந்தள மன்னனுக்கு ஒரே மகிழ்ச்சி. குழந்தையில்லையே என்ற இறைவனை பிரார்த்திர்த்தது வீண் போகவில்லை. அந்த பகவான் தான் நமக்கு இந்த குழந்தையை கொடுத்திருக்கிறார் என்று ஆசையோடும், அன்போடும் அரண்மனைக்கு எடுத்து வந்தார். மகாராணியும் குழந்தையைப் பார்த்து மகிழ்ச்சிக் கடலில் மூழ்கினாள். ஜோதிடர்கள் இந்த குழந்தை தெய்வாம்சம் நிறைந்த குழந்தை என்று கூறினார். கழுத்தில் மணி மாலையோடு இருந்ததால் மணிகண்டன் என்று பெயரிட்டு வளர்த்து வந்தார் பந்தள மகாராஜா. நாளடைவில் மகாராணியும் கர்ப்பமுற்று ஒரு குழந்தையைப் பெற்றெடுத்தாள்.  அவனுக்கு ராஜராஜன் என்று பெயரிட்டனர். மகாராஜவுக்கும், மகாராணிக்கும் மகிழ்ச்சி தாங்கவில்லை. மணிகண்டன் வந்த நேரம் தான் நமக்கு இன்னொரு குழந்தை கிடைத்திருக்கிறது என்று எண்ணினர்.

மந்திரியின் சதி:

அரண்மனையில் சிறப்பாக வளர்ந்து வந்த மணிகண்டனுக்கு பந்தள மகாராஜா பட்டாபிஷேகம் நடத்த முடிவு செய்தார். இதையறிந்த மந்திரி எங்கே மணிகண்டன் அரசரானால் தனக்கான முக்கியத்துவம் போய்விடுமோ என்று பயந்து சதி செய்தான். மகாராணியிடம் சென்று உங்களுக்கு பிறந்த குழந்தையிருக்க, மன்னர் மணிகண்டனுக்கு பட்டாபிஷேகம் செய்யவிருக்கிறார். அதனால் ராஜராஜனுக்குப் பதிலாக மணிகண்டன் அடுத்த அரசராகி விடுவான் போலிருக்கிறது என்று ராணியின் மனதில் விஷத்தை விதைத்தான்.

புலிப்பால் கொண்டு வரச்சென்ற ஐயப்பர்:

மந்திரியின் சூழ்ச்சியால் ராணி தனக்கு தீராத வயிற்று வலி வாட்டுகிறது என்றும், அரண்மனை வைத்தியரைக் கொண்டு இதற்கு புலிப்பால் கொண்டு வந்தால் குணமாக்க முடியும் என்று சொல்ல வைத்தாள். சூழ்ச்சியை அறிந்து கொண்ட 12 வயது பாலகனான ஐயப்பன் காட்டிற்கு சென்றார். காட்டிற்குள் வந்து கொண்டிருந்த ஐயப்பனை தடுத்து நிறுத்தினாள் மகிஷி. வில்லாளி வீரன் ஐயப்பன் மகிஷியுடன் சண்டையிட்டு இறுதியில் மகிஷியை அழித்தார்.
மகிஷியின் அழிவால் தேவர்களும், முனிவர்களும், ரிஷிகளும் மகிழ்ந்தனர். இந்திரன் புலியாக மாறினார். அவர் மீது அமர்ந்தார் ஐயப்பர். தேவர்களும் புலிப்படையாக மாறினர். ஐயப்பர் புலி மேல் அமர்ந்து அரண்மனையை நோக்கி வந்தார். ஊருக்குள் புலிகள் கூட்டமாக வருவதைக் கண்ட மக்களும், மகாராணியும் அஞ்சினர். மகாராணியும், மந்திரியும் தங்களது தவறை உணர்ந்து ஐயப்பனிடம் மன்னிப்புக் கோரினர்.

ஐயப்பனும் தனது அவதாரத்தின் நோக்கம் நிறைவேறிவிட்டதாகவும், நான் பூமியில் எதற்காக பிறந்தேனோ அந்த வேலை முடிந்துவிட்டது. அதனால் நான் தேவலோகம் செல்கிறேன் என்றார். மகனைப் பிரியப் போகிறோமே என்று மனமுடைந்த பந்தள மன்னன் ஐயப்பனிடம் பகவானே தாங்கள் எங்களுடன் இருந்ததன் அடையாளமாக ஒரு கோயில் கட்ட விரும்புகிறோம். அதை எங்கு கட்ட வேண்டும் என்று கேட்டான். ஐயப்பர் ஒரு அம்பை எடுத்து  எய்தார். இந்த அம்பு எங்கு போய் விழுகிறதோ அங்கே கோயில் கட்டுங்கள் என்றார். அந்த அம்பு சபரி மலையில் போய் விழுந்தது. அங்கு 18 படிகளுடன், கிழக்கே நோக்கி தனக்கும், பக்கத்தில் மாளிகைபுறத்தம்மனுக்கும் கோயில் கட்டுங்கள் எனக் கூறிவிட்டு மணிகண்டனாகிய ஐயப்பன் தேவலோகம் சென்றார்.

மணிகண்டனின் கட்டளைப்படி, அகத்திய முனிவரின் ஆலோசனையின் பேரில் பந்தள மன்னர் ஊண் உறக்கம் இல்லாமல் தானே நேரடியாக மேற்பார்வை கொண்டு பதினெட்டு படியோடு கூடிய அழகிய கோயிலை கட்டினார். அங்கு ஆண்டுதோறும் லட்சோப லட்சம் பக்தர்கள் 48 நாட்கள் விரதம் மேற்கொண்டு சபரிமலை வந்து தரிசித்து ஐயப்பனின் அருளைப் பெறுகின்றனர்.

சபரிமலை கோயில்:

ஐயப்பனின் கருவறை ஒரு சதுரமான மாடியின் மையத்தில் நீண்ட சதுர வடிவில் நீளவாக்கில் அமைந்துள்ளது. அந்த நீண்ட சதுரத்தின் மீது கொட்டகை போட்டது போன்று தங்கத்தகடுகள் தட்டையாக இல்லாமல் இரண்டு புறமும் சாய்ப்புல் போல் இருக்கும். இந்தக் கருவறையைச் சுற்றியுள்ள திருச்சுற்றில் முன் பகுதியில் இடது, வலதாக அமைந்த ஓட்டு வீடு போன்ற நுழைவாயில் உள்ளது. அந்த ஓட்டு வீட்டின் முகப்பும் நீட்டிவிடப் பெற்றுச் சாய்ப்பான ஓட்டு வீடு போல்தான் இருக்கும். ஐயப்பனின் முன்னுள்ள ஓட்டுப் பகுதியில் நின்றால் மட்டுமே வெயில் மழை நம்மீது படாது.

உயரமான ஒரு பெரிய முதல் மாடியில் அமைந்துள்ள கோவிலாக அமைந்திருப்பதால் சரங்குத்தி வந்தவுடனேயே கோவில் நம் கண்ணில் தென்பட்டு, ‘கண்டேன், கண்டேன் உன் திருக்கோவில்’ என்று கூற வைக்கிறது. சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஒவ்வொரு தமிழ் மாதமும் நடை திறக்கப்பட்டு 5 நாட்கள் பூஜைகள் நடைபெறும்.

மஞ்சமாதா கோயில்:

மகிஷியை மணிகண்டன் காட்டில் வதம் செய்த உடனே அந்த மகிஷியின் உடலிலிருந்து லீலா என்ற தேவதை போன்ற பெண்ணொருத்தி வெளிவந்து ஐயப்பனை வணங்கி ‘நான் உங்கள் மூலம் சாப விமோசனம் அடைந்தேன். என் சாபம் நீங்குவதற்கு காரணமாக இருந்த நீங்களே என் கணவராக வரவேண்டும். என்னை ஏற்றுக்கொள்ளுங்கள்...’ என வேண்டினாள்.

ஐயப்பன் அவளிடம் ‘நான் இந்த ஜென்மம் முழுவதும் பிரம்மச்சாரியாய் இருப்பதாகச் சத்யப்பிரமாணம் செய்துள்ளேன்...’ என்று கூறி அந்த பெண்மணியை சபரிமலையில் பிரதிஷ்டை செய்து கோவிலின் இடப்புறம் மாளிகைபுறத்து அம்மன் என்ற பெயரில் அமர்ந்து இங்கே என்னைத் தரிசிக்க வரும் பக்தர்களுக்கு அருள்புரிந்திட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். ஐயப்பன் கேட்டுக்கொண்டபடி, அந்த பெண் சபரிமலையில் மஞ்சமாதா என்கிற மாளிகைபுறத்தம்மனாக அமர்ந்து இன்றளவும் அருள்பாலித்து வருகிறாள்.

பக்தர்கள் மஞ்சமாதாவிற்கு மஞ்சள் பொடி தூவியும், அவளது திருக்கோவில் பிரகாரத்தைச் சுற்றி தேங்காயை உருட்டியும் வழிபாடு செய்து அவளது அருளைப் பெற்று வருகிறார்கள்.

திருவாபரணப் பெட்டி:

சுத்தமான பசுந்தங்கத்தால் ஆன ஆபரணங்கள், பன்னெடுங்காலத்துக்கு முன்பு, பந்தள மன்னனால் சபரிமலை சாஸ்தாவுக்காக செய்யப்பட்டது. பலரும் நினைப்பது போல இது ஐயப்பன் அணிந்து கொண்டிருந்த ஆபரணங்கள் இல்லை. சபரிமலையில் கோவில் கொண்ட தர்ம சாஸ்தாவில் கலந்த ஐயப்பனுக்கு பந்தள மன்னரால் உருவாக்கப்பட்ட ஆபரணங்கள்.

திருவாபரணப் பெட்டியில் உள்ள ஆபரணங்கள்:

ஐயப்பன் சன்னிதியில் கொடுக்கப்படும் முக்கியமான திருவாபரணப் பெட்டியில் தர்ம சாஸ்தாவை அலங்கரிக்க கீழ்காணும் ஆபரணங்கள் உள்ளது.

திருமுகம் - (சாஸ்தாவின் முக கவசம்)
ப்ரபா மண்டலம் (ப்ரபாவளி)
வலிய சுரிகை (பெரிய கத்தி)
செறிய சுரிகை (சிறிய கத்தி)
யானை - யானை விக்ரஹம் 2
கடுவாய் - புலி விக்ரஹம் 1
வெள்ளி கட்டிய வலம்புரி சங்கு
பூர்ணா - புஷ்கலா தேவியர் உருவம்
பூத்தட்டம் (பூக்களை வைக்கும் தங்க தட்டு)
நவரத்தின மோதிரம்
சரப்பளி மாலை
வில்வ மாலை (தங்க இதழ்களால் ஆனது)
மணி மாலை (நவரத்னங்களால் ஆனது)
எருக்கம் பூ மாலை (தங்க எருக்கம்பூக்களால் ஆனது).

பம்பை நதி:

ஐயப்பனை தரிசிக்க வரும் பக்தர்கள் இந்த பம்பா நதியில் நீராடிய பின்பே சபரிமலை ஏறுகின்றனர். கங்கையை போன்ற புண்ணிய நதி பம்பா. இங்கிருந்து 7 கிலோ மீட்டர் தொலைவில் சபரிமலை உள்ளது. தர்மசாஸ்தா மணிகண்டனாக இம்மண்ணுலகில் அவதரித்த இடம் இதுதான்.  இந்த இடத்துக்கு பம்பா சக்தி என்ற இன்னொரு பெயரும் உண்டு. மேற்கு தொடர்ச்சி மலையின் புளிச்ச மலைப் பகுதியில் உற்பத்தியாகும் இந்த ஆறு ஆலப்புழா, பந்தனம்திட்டா, மாவட்டங்களின் வழியாக பாய்ந்தோடி வேம்நாட்டு ஏரியில் கலக்கிறது.

பதினெட்டாம் படி விளக்கம்:

முதல் படி - பிறப்பு நிலையற்றது
இரண்டாம் படி - சாங்கிய யோகம்
மூன்றாம் படி - கர்ம யோகம்
நான்காம் படி - ஞான யோகம்
ஐந்தாம் படி - சன்னியாசி யோகம்
ஆறாம் படி - தியான யோகம்
ஏழாம் படி - ஞான விஞ்ஞான யோகம்
எட்டாம் படி - அட்சர பிரம்ம யோகம்
ஒன்பதாம் படி - ராஜவித்யா ராஜகுஹ்ய யோகம்
பத்தாம் படி - விபூதி யோகம்
பதினொன்றாம் படி - விஸ்வரூப தரிசன யோகம்
பன்னிரெண்டாம் படி - பக்தி யோகம்
பதிமூன்றாம் படி - சேஷத்ர விபாக யோகம்
பதினான்காம் படி - குணத்ரய விபாக யோகம்
பதினைந்தாம் படி - புருஷோத்தம யோகம்
பதினாறாம் படி - தைவாசுரஸம்பத் விபாக யோகம்
பதினேழாம் படி - ச்ராத்தாதரய விபாக யோகம்
பதினெட்டாம் படி - மோட்ச சன்னியாச யோகம்
18 படிகளின் வாசம் செய்யும் தேவதாக்கள்
ஒன்றாம் திருப்படி - சூரிய பகவான்
இரண்டாம் திருப்படி - சிவன்
மூன்றாம் திருப்படி - சந்திர பகவான்
நான்காம் திருப்படி - பராசக்தி
ஐந்தாம் திருப்படி - அங்காரக பகவான்
ஆறாம் திருப்படி - முருகன்
ஏழாம் திருப்படி - புதன் பகவான்
எட்டாம் திருப்படி - விஷ்ணு பகவான்
ஒன்பதாம் திருப்படி - வியாழன் (குரு) பகவான்
பத்தாம் திருப்படி - பிரம்மா
பதினொராம் திருப்படி - சுக்கிர பகவான்
பனிரெண்டாம் திருப்படி - இலட்சுமி
பதிமூன்றாம் திருப்படி - சனி பகவான்
பதினான்காம் திருப்படி - எமதர்ம ராஜன்
பதினைந்தாம் திருப்படி - இராகு பகவான்
பதினாறாம் திருப்படி - சரஸ்வதி
பதினேழாம் திருப்படி - கேது பகவான்
பதினெட்டாம் திருப்படி - விநாயகப் பெருமான்

ஐயப்ப சுவாமி விரதம் மேற்கொள்ளும் முறை:

ஐயப்பனுக்கு மாலை அணிந்து மண்டல விரதம் இருப்பது, வார்த்தைகளுக்கு அப்பாற்பட்ட அற்புத ஆன்மிக அனுபவம்.  சுவாமி ஐயப்பனுக்கு மாலை அணியும் பலரும் அவரவர் போக்கில் மாலை அணிந்து, ஐயப்பனை தரிசிக்கச் செல்கிறார்கள். ஆனால் அப்படிச் செல்லக்கூடாது. ஐயப்பனுக்கு மாலை அணிந்து விரதம் இருக்கவேண்டுமென்றால், கன்னிசாமியாக இருந்தாலும் குருசாமியாக இருந்தாலும் கட்டாயம் 41 நாள்கள் விரதம் இருக்க வேண்டும். ஒரு மண்டலம் என்பது 48 நாள்கள். சிலர் 56 முதல் 60 நாள்கள் வரையிலும்கூட அதாவது கார்த்திகை முதல் நாளிலிருந்து ஜனவரி 15 -ம் தேதி மகர ஜோதி வரை விரதம் இருப்பது மிகவும் நல்லது. இதை விடுத்து, திடுதிப்பென நண்பர்கள் அழைக்கிறார்கள், அதிகாரி அழைக்கிறார் என மாலை அணிந்து ஒரு வாரத்தில், மூன்று நாள்கள் மட்டும் விரதம் இருந்து சுவாமி தரிசனம் செய்யக்கூடாது.

மாலையணிந்து விரதமிருந்து சபரிமலைக்குச் செல்ல முடிவுசெய்தால் தனது தாய், தந்தை மற்றும் குருவிடம் ஒரு வாரம் முன்பாகவே தகவல் தெரிவித்து, அனுமதி வாங்கிய பிறகே மாலை அணிய வேண்டும். குறிப்பாகக் கோயிலிலோ, தாயார் முன்னிலையிலோ மாலை அணிவது நல்லது.
மாலையைத் தேர்வு செய்யும்போது துளசி மணி மாலைதான் ஐயப்பனுக்கு உகந்தது. அவரவர் வசதிக்கேற்ப துளசி மணி மாலையை வாங்கி அணியலாம். செம்பிலோ வெள்ளியிலோ,  மணிகளைக் கட்டினால் நம் ஆயுள் முழுவதுக்கும் அந்த மாலையைப் பயன்படுத்தலாம். 

பொதுவாக ஒவ்வொரு முறை சபரிமலை செல்லும்போதும் ஒரே மாலையை அணிந்து செல்வது சிறப்பு.  அந்த மாலை தொடர்ந்து சபரிமலைக்குச் சென்று வரும்போது அது  ராஜ முத்திரையைப் போல மகத்துவம் பெறுகிறது.ஒவ்வொரு நாளும் அதிகாலையில் குளிர்ந்த நீரில் நீராடிவிட்டு, ஐயப்பனை மலர்களால் அலங்கரித்து தூப தீபங்களைக் காண்பிக்கவேண்டும். இதைத் தொடர்ந்து 108 முறை சுவாமி ஐயப்பனின் சரண கோஷத்தைச் சொல்லி பூஜை செய்யவேண்டும்.

விரதம் இருப்பதைப் பொறுத்த வரை சைவ உணவை அவரவரின் உடலுக்குத் தேவையான அளவு எடுத்துக்கொள்ளலாம். ஒரேயடியாக  சாப்பிடாமல் இருந்து உடலை வருத்திக் கொள்ளத்தேவையில்லை. இச்சையுடன் கிடைப்பதையெல்லாம் சாப்பிடவும் கூடாது. புலனடக்கத்தில் நாம் எப்படி இருக்கிறோம். நம் மனம் எந்த அளவு வலிமையுடன் இருக்கிறதென்பதை மாலை அணிந்திருக்கும்போது நாம் அறிந்து கொள்ளலாம்.  

தற்கால வாழ்க்கைமுறைச் சூழலில் பலரும் தன் சொந்த ஊரில் இருந்து புலம் பெயர்ந்து நகரம் சார்ந்த வாழ்க்கையை வாழ்கின்றோம். அலுவலகப் பணிகளின் காரணமாக மாலையில் சிலரால் உரிய நேரத்தில் வீடு திரும்பமுடியாது. அதனால் எப்போது வீட்டுக்கு வருகிறோமோ அப்போது நாம் குளித்து பூஜை செய்தால் போதுமானது.

கன்னிசாமிகள் கண்டிப்பாக கறுப்பு வண்ண உடையையே அணிய வேண்டும். காலில் காலணிகள் இல்லாமல் நடந்து பழக வேண்டும். எப்போதும் மனம், வாக்கு, செயல் மூன்றிலும் ஐயப்பனை நிலை நிறுத்திக் கொள்ளவேண்டும். எல்லோரிடமும் கனிவாக நடந்து கொள்ளவேண்டும் சுடு சொற்கள் சொல்லக்கூடாது. மனம், உடல் இரண்டையும் தூய்மையாக வைத்துக்கொண்டு வேண்டினால் நிச்சயம் நம் எண்ணம் பலிக்கும். ஏனென்றால் கலியுகத்தின் கண்கண்ட கடவுளாக ஐயப்பன் திகழ்கிறார்.

நெய் தேங்காய்:

ஐயப்பா சாமி புலிப்பால் கொண்டு வர சென்ற போது தேங்காய் எடுத்துச் சென்றதாக நம்பப்படுகிறது. மூன்று கண்களுடைய தேங்காய் முக்கண் உடைய சிவபெருமானைக் குறிக்கும். காட்டு வழியில் வனவிலங்குகளால் ஏற்படும் தீமைகளிலிருந்து இந்த நெய் நிரம்பிய தேங்காய் பக்தர்களைக் காப்பாற்றுவதாக நம்பப்படுகிறது. தேங்காயின் கண் பகுதி மனிதனின் ஆன்மீக அறிவையும், நெய்யானது ஆத்மாவையும், தேங்காய் மனித உடலையும் குறிக்கும்.
தேங்காய் பசு நெய் கொண்டு ஒரு கண் வழியாக நிரப்பப்பட்டு அதனை அடைப்பான் கொண்டு நன்கு மூடிவிடுவர். ஒருவர் கடுமையான விரதமிருந்து இருமுடிகட்டி நெய் நிரம்பிய தேங்காயை தலையில் சுமந்து சென்று ஐயப்பனுக்கு அபிஷேகம் செய்விக்கப்படுகிறது.

மகர ஜோதி தரிசனம்:

ஐயப்பன் தனது ராஜவம்சத்துப் பெற்றோருக்காக ஆண்டுதோறும் மகரசங்கராந்தி அன்று உத்திர நட்சத்திரத்தில் பொன்னம்பலமேடு என்ற இடத்தில் ஜோதி வடிவில் காட்சி தருவதாக ஐதீகம். இதற்காக இன்றைக்கும் ராஜவம்சத்து வாரிசுகள் தங்கம், வைரம் உள்ளிட்டபல்வேறு ஆபரணங்களை ஐயப்பனுக்கு சாத்தி ஜோதியை தரிசிப்பது வழக்கம்.

இதற்காக ஆபரணப் பெட்டி பந்தளம் அரண்மனையில் இருந்து எடுத்து வரப்படுகிறது. பாம்பாடிதலம் என்ற இடத்தில் ஓய்வு எடுத்து மீண்டும் பெரியவாரை வட்டம், நீலிமலை, அப்பாச்சிமேடு வழியாக சன்னிதானம் சென்றடைகிறது.

ஐயப்பனுக்கு ஆண்டு முழுவதும் மேல்சாந்திகள் வழிபாடுகளை மேற்கொண்டாலும் ஜன.15 மகர பூஜையில் இருந்து 20-ம் தேதி வரை ஐயப்பனுக்கு ராஜவம்சத்து வாரிசுகளே பூஜைசெய்வர். இதற்காக ராஜவம்சத்தைச் சேர்ந்த மூன்று பேர் ஆபரணப் பெட்டிகளுடன் வருகின்றனர்.

புல்மேடு பாதையில் இருந்து பார்த்தால் மகரஜோதி தெளிவாகத் தெரியும் என்பதால் ஏராளமான பக்தர்கள் அந்த வழியே செல்கின்றனர். இதற்காக வன அதிகாரிகள் குழுவாக செயல்பட்டு பக்தர்களுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்கிறார்கள்.மகர விளக்குப் பூஜை 20-ம்தேதி இரவு முடிந்ததும் மறுநாள் காலை ராஜவம்சத்து வாரிசுகள் ஐயப்பனிடம் சோழி உருட்டி உத்தரவுகளைக் கேட்பது வழக்கம். 21-ம் தேதி ஆபரணப் பெட்டிகளுடன் அவர்கள் மீண்டும் பந்தளத்துக்கு புறப்பட்டுச் செல்வர்.

banner

Leave a Reply

Submit Comment