ஞாயிற்றுக்கிழமைகளில் செய்யக் கூடியவை மற்றும் செய்யக் கூடாதவை

பொதுவாகவே நம் எல்லோருக்கும் தினமும் ஏதாவது செயல் செய்ய வேண்டியது இருக்கும். என்றாலும் ஒவ்வொரு கிழமைக்கும் ஒவ்வொரு சிறப்பு இருக்கும். அதே போல ஒவ்வொரு நாளில் வெவ்வேறு செயல் செய்வது சிறப்பாக இருக்கும். ஞாயிற்றுக்கிழமை கிழமை பொதுவாக அனைவருக்கும் விடுமுறை நாள் ஆகும். அன்று என்ன செய்யலாம் என்ன செய்யக் கூடாது என்பதனைப் பற்றி தெரிந்து கொள்வோம் வாருங்கள்.
வாரத்தின் நாட்கள் ஏழு ஆகும். இந்த ஏழு நாட்களில் ஒவ்வொரு நாளிலும் ஒவ்வொரு கிரகம் தனது ஆதிக்கத்தை செலுத்துகிறது. அந்த வகையில் ஞாயிற்றுக்கிழமையில் சூரிய பகவானின் ஆதிக்கம் இருக்கும். எனவே அன்று சூரியனுக்கு உகந்த செயலை செய்வது சிறப்பு. சூரியனுக்கு ஏற்பில்லாத செயல்களை செய்வது கூடாது.
சூரியன் நவகிரகங்களின் நாயகனாக திகழ்கிறார். அவரை ஜோதிடத்தில் தந்தைகாரகர் என்றும் ஆத்ம காரகர் என்றும் அழைக்கிறோம். சூரியனே ஞாயிற்றுக்கிழமையை ஆளுகிறார்.
ஞாயிற்றுக்கிழமைகளில் செய்யக் கூடியவை:
பதவி ஏற்றல், மங்களகரமான காரியங்கள், பிறருக்கு சேவகம் செய்தல், மருந்து தயாரித்தல், மருந்து உட்கொள்ளுதல், வாகனங்கள் வாங்குதல், வாகனங்களை சரி செய்தல், போர் புரிதல், தானியங்களை வாங்குதல், தானியங்களை சேமித்தல், தானியங்களை விற்றல், வீடு கட்டுதல் முதலிய காரியங்களை செய்யலாம். மேலும் தந்தை மற்றும் தந்தை வயதை ஒத்தவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தல், அரசாங்க அதிகாரிகளை சந்தித்தல், உயர் பதவியில் இருப்பவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தல், அரசாங்க வேலைக்கு முயற்சி செய்தல் போன்ற காரியங்களைச் செய்யலாம்.
ஞாயிற்றுக்கிழமை செய்யக் கூடாதவை :
ஞாயிற்றுக் கிழமை அன்று எண்ணெய் தேய்த்து குளித்தல் கூடாது.
கருப்பு நிற ஆடைகளை அணிவதைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில் கருப்பு நிறம் சனி பகவானுக்கு உரியது. சூரியனுக்கும் சனிக்கும் பகை என்பதால் ஞாயிற்றுக்கிழமை கருப்பு நிற ஆடை அணிவதைத் தவிர்க்க வேண்டும். அவ்வாறு அணிவதன் மூலம் அன்று சூரிய பகவானின் அருள் நமக்குக் கிட்டாது.
இரும்பு தொடர்பான பொருட்களை வாங்கக்கூடாது. ஈயம், பித்தளை, கருங்கல், விஷம், சாராயம் சம்பத்தப்பட்ட பொருட்களை வாங்குதல் கூடாது. அவ்வாறு வாங்கினால், பண பிரச்சனைகள் மற்றும் பண இழப்பை சந்திக்க நேரிடும்.
சூரியனுக்கு எதிர் திசையான மேற்கு திசையில் பயணிக்கக்கூடாது ஜோதிடத்தின் படி, ஞாயிற்றுக்கிழமைகளில் மேற்கு திசையில் பயணத்தை மேற்கொள்ளக்கூடாது. ஒருவேளை மேற்கு திசையில் பயணிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால், நெய் அல்லது வெற்றிலையை சாப்பிட்டு, முதலில் 5 அடி கிழக்கு திசையை நோக்கி சென்றுவிட்டு, பின் பயணத்தை மேற்கொள்ள வேண்டும்.
ஞாயிற்றுக்கிழமை அன்று வீடு வாங்குதல் கூடாது.
