தங்களை பாதுகாத்துக் கொள்ள அறிவியலுடன் ஆன்மீக ஒழுக்கத்தையும் இளைய தலைமுறையினர் வளர்த்துக் கொள்ள வேண்டும்.
ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது என்ற பழமொழிக்கேற்ப இளமையில் நாம் கற்கும் வாழ்க்கைக் கல்வி தான் வயது ஏற ஏற நமக்கு வழிகாட்டும். மற்றும் நம்மை செம்மைப்படுத்தும். இந்த வாழ்க்கை நெறிமுறையை கற்றுத் தர முற்காலத்தில் வயதில் மூத்தவர்கள் நம்முடன் இருந்தார்கள். கற்றுத் தந்தார்கள். இளையவர்களும் கற்றுக் கொண்டார்கள். விஞ்ஞானம் வளர வளர நவீன உலகத்தில் வாழும் இன்றைய இளம் தலை முறையினருக்கு கற்றுத் தர ஆளும் இல்லை. கற்பதற்கு அவர்கள் தயாராகவும் இல்லை என்பது தான் நிதர்சனமான உண்மை
ஆன்மீகம் என்றால் என்ன
ஆன்மீகம் என்பது நெற்றியில் பட்டையும் கழுத்தில் கொட்டையும் அணிந்து கொள்வதோ, கோவில் கோவிலாக செல்வதோ அல்லது சந்நியாசம் கொள்வதோ மட்டும் அல்ல. கட்டுப்பாடுகளுடன் கூடிய, ஒழுக்க நெறிகளுடன் கூடிய வாழ்க்கை வாழ்வதும், பிறரை மதிப்பதும், நல்ல எண்ணங்களுடன் வாழ்வதும் இப்படி ஓரு தனிப்பட்ட மனிதர் வாழ்வில் தன்னை நெறிபடுத்தி வாழ்வதும் ஒரு வகை ஆன்மீகம் என்று கூறலாம். இதற்கெல்லாம் தேவை ஒரு வைராக்கிய உணர்வு. இதற்கு உறு துணையாக இருக்க வேண்டித் தான் நாம் இறைவைனின் துணையை நாடுகிறோம். அவனன்றி ஒரு அணுவும் அசையாது என்பது அசைக்க முடியாத உண்மை.

ஆன்மீகம் வளர என்ன செய்ய வேண்டும்:
ஆன்மீகம் என்பது ஒரு வகையில் தூய்மையான வைராக்கியமான வாழ்க்கை என்று கூறலாம். அதற்காக இன்று வளர்ச்சி கண்டு கொண்டிருக்கும் விஞ்ஞானத்தை ஒதுக்க வேண்டும் என்பதில்லை. நல்ல பண்புகளை நமக்குள் வளர்த்துக் கொள்ள வேண்டும். வேதம் கூறும் சாஸ்திரங்களைத் தான் நமது முன்னோர்கள் நம்மை பின்பற்ற கூறிச் சென்றுள்ளார்கள். கால நேரம் பார்த்து நம் கடமைகளை செய்ய வேண்டும் என்பதும் அதில் ஒன்று. நல்ல நேரம் பார்த்து இறைவனை வேண்டி செய்யும் காரியங்கள் வெற்றியை அளிக்கும் என்பதை அவர்கள் கூறிச் சென்றுள்ளார்கள். மனம், வாக்கு செயல் இவை அனைத்தும் ஒன்றாக இருக்க வேண்டும். மூத்தோர் சொல் மதிக்க வேண்டும்.
ஆன்மீகமும் அறிவியலும் :
அறிவியல் விதிகளை நம்பும் இன்றைய தலை முறையினர் நமது ஆன்மீக விதிகளை நம்புவதற்கு தயாராக இல்லை என்றே கூற வேண்டும். ஆலயம் செல்வதை நமது முன்னோர்கள் வலியுறுத்தி இருந்தார்கள். இளம் வயதில் இருந்தே இந்த பழக்கத்தை மேற்கொள்ள வேண்டியது அவசியம் ஆகும். எதற்கு ஆலயம் செல்ல வேண்டும்? கோயில்களில் மூல விக்ரகம் அமைந்துள்ள கருவறை, ஒலி அலைகளை வெளிப்படுத்துகின்றன. மூல விக்கிரகத்திற்கு செய்யப்படும் அபிஷேக ஆராதனைகள், மந்திர உச்சரிப்புகள் விக்ரகத்தில் பட்டு
அதிர்வடைகின்றன. இது பக்தர்களின் உடல் மற்றும் , உள்ளத்தில் அமைதியை தருகிறது. மேலும் அபிஷேகத்தின் போது எதிர்
மின்னோட்டமுடைய காற்றும், ஈரப்பதமுள்ள காற்றும் வெளிவருகின்றன.
இது இன்றைய விஞ்ஞானம் கூறும் உயிர்வாழ தேவைப்படும் மின்னலைகளாகும். கோவிலில் து’ளசி தீர்த்தம் வழங்கப்படுகிறது. இதில் அதிக மின்னூட்டம் மற்றும் பலவித நோய்களை கட்டுப்படுத்தும் ஆற்றல் உள்ளது. மாவிலையும் வேப்பிலையும் இதே தன்மையைக் கொண்டவை தான். அது போல எலுமிச்சையும். மாவிலை தோரணம் காற்றில் உள்ள கிருமிகளை அழிக்கின்றது. நீரினை துாய்மைப்படுத்துகின்றது. அரச மரக் காற்று பெண்களின் கர்ப்பப்பையை வலுப்பெறச் செய்கிறது. இதனால் அந்தக் காலத்தில் அரச மரத்தை சுற்றி வரச் செய்தார்கள். இது போல எத்தனையோ கூறிச் சென்றுள்ளார்கள். பொதுவாக நாம் கூற வருவது என்ன வென்றால் நமது உடலையும் மனதையும் தூய்மை செய்து கொள்ள நமது முன்னோர் வகுத்த வழிகளை இன்றைய இளம் தலைமுறையினர் பின்பற்றுவதன் மூலம் செழிப்பான வாழ்வை வாழலாம்.
யோகா, தியானம் :
யோகா மற்றும் தியானப் பயிற்சிகள் நமது உடலையும் மனதையும் புத்துணர்ச்சியுடன் வைத்துக் கொள்ள உதவுபவை. ஆரோக்கியத்தை மேம்படுத்தி அளிக்கக் கூடியவை உடலும் மனமும் ஆரோக்கியமாக இருந்தால் நமது சிந்தனையில் தெளிவு இருக்கும். எது சரி எது சரியல்ல என்பதை நாம் சரியாக உணர்ந்து செயல்பட முடியும். பிறரது எண்ணங்களை உணர்ந்து கொள்ளும் ஆற்றல் கிட்டும். பிறர் உணர்வுகளை மதிக்கவும் நமது உணர்வுகளை சீர்படுத்தவும் உதவும். செல்வத்தை மட்டும் தேடிச் செல்லாமல், சுயநலமாக இன்றி பிறர் நலனுக்காகவும் வாழும் நல்ல வாழ்க்கையை இன்றைய இளம் தலைமுறையினர் அமைத்துக் கொள்ள இயலும்.
முற்காலத்தில் பெரியவர்களை பார்த்து வாழ்க்கைப் பாடங்களைக் கற்றது போல இன்றைய இளம் தலைமுறையினர் youtube, facebook என பார்த்து வாழ்க்கையை அமைத்துக் கொள்ளும் சூழ்நிலை உள்ளது என்பது எமது கருத்து. எனவே ஆன்மீக வழியிலும் மனதை செலுத்தி வாழ்க்கை வாழ்வதன் மூலம் வீடும், நாடும் செழிக்கும்.











