AstroVed Menu
AstroVed
search
search

கந்த சஷ்டி விரதம் இருப்பது எப்படி?

dateOctober 11, 2019

“அகரமும் ஆகி அதிபனும் ஆகி அதிகமும் ஆகி அகமாகி
அயன் எனவாகி அரி எனவாகி அரன் எனவாகி அவர் மேலாய்
இகரமும் ஆகி எவைகளும் ஆகி இனிமையும் ஆகி வருவோனே
திருமலிவான பழமுதிர்சோலை மலை மிசை மேவு பெருமாளே.”

கந்தன் எனக் கூற வந்த வினை தீரும்.  எந்த வினையானாலும் கந்தன் எனக் கூற அது தான் வந்த வழி ஓடும்.  கந்த சஷ்டி விரதம் இருந்தால் சங்கடங்கள் மற்றும் துன்பங்கள் யாவும் அகலும்.

வேல் கொண்டு சூரனை வதம் செய்து தேவர்களை காத்திட்ட  வீரனாய் விளங்கும் முருகப் பெருமானை வழிபட நாம் மேற்கொள்ளும் முக்கிய விரதம் கந்த சஷ்டி விரதம் ஆகும். கந்தபுராணத்தில் வரும் சூரபத்மன், சிங்கமுகன், தாரகாசுரன் ஆகியோர் முறையே சைவ சித்தாந்தத்தில் பேசப்படும் ஆணவம், கன்மம், மாயை என்னும் மும்மலங்களைக் குறிப்பதாகக் கருதப்படுகின்றது. நம் மனதில் குடி கொண்டிருக்கும் இந்த மும்மல அல்லது அசுர குணங்களை சம்ஹாரம் செய்து நல் வழி காட்டும் நாயகனை வேண்டி வழிபட வாழ்வில் நலம் பல பெருகும். நம் மனதில் உள்ள காமம், குரோதம், மோகம் நீங்கி தெய்வீக நிலை அடைய முருகனின் அருள் துணை நிற்கும் என்பதை உணர்த்துவதே கந்த சஷ்டி விரதத்தின்  பொருள் ஆகும்.

தீபாவளி சமயத்தில் வரும் அமாவாசைக்கு அடுத்து வரும் பிரதமை முதல் இந்த கந்த சஷ்டி விரதம் மேற்கொள்ளப்படுகின்றது. ஷஷ்டி என்றால் ஆறு என்று பொருள், ஆறு நாட்கள் முருகப் பெருமானுக்கு விரதம் மேற்கொள்வது சிறப்பு ஆகும். ஆறு நாட்களும் காலையில் எழுந்து நீராடி , தூய ஆடைகளை அணிந்து, இல்லத்தை தூய்மையாக வைத்துக் கொண்டு ஒரு வேளை மட்டும் உணவு உண்டு விரதம் இருத்தல் வேண்டும். மாலையிலும் இறை வழிபாடு மேற்கொள்ள வேண்டும்.

இல்லத்தில் முருகன் சம்பந்தமான பாடல்களை இசைக்கச் செய்வதும், ஆறு நாட்களிலும் கந்தபுராணம், கந்தர் அனுபூதி, கந்தர் அலங்காரம் ஆகிய நூல்களைப் படிப்பதும், கந்த சஷ்டி கவசம் பாராயணம் செய்வதும் மிகவும் சிறப்பான ஒன்றாகும். இதனால் மனம் மற்றும் இல்லத்தில் இருக்கும் எதிர்மறை ஆற்றல்கள் நீங்கும். நமது தீவினைகள் அகலும். வாழ்வில் வசந்தம் பெருகும்.

ஆறாம் நாள் கந்தசஷ்டியன்று முழு உபவாசமிருந்து, பூஜைகள் செய்து, ஏழாம் நாள் காலை அன்னதானம் செய்து, விரதத்தை முடிக்க வேண்டும்.


banner

Leave a Reply