அர்ச்சனை என்பது கோவிலில் மற்றும் வீட்டில் ஆண்டவனுக்கு செய்யப்படும் ஒரு ஆன்மீக நிகழ்வு. கோவில் என்று எடுத்துக்கொண்டால், அங்கே வேதம் பயின்ற ஒரு நபர், பக்தர்களின் சார்பில் பக்தர்களுக்காக அவர்களின் வேண்டுதலை கடவுளிடம் எடுத்துரைப்பது ஆகும். பொதுவாக இம்முறை இந்து சமயக் கோயில்களில் பரவலாகக் காணப்படுகிறது. ஆண்டவனுக்கு செய்யப்படும் ஆறு வகை உபசாரங்களுள், அர்ச்சனையே முக்கியத்துவம் பெறுவதாக இந்து சமயம் சொல்கிறது. அர்ச்சனை செய்பவர் பக்தர்களின் பெயர், ராசி, நட்சத்திரம் போன்றவற்றை விசாரித்து அதை சொல்லி அர்ச்சனை செய்வார். அர்ச்சனை செய்பவர், அர்ச்சகர் அல்லது பூசாரி எனப்படுகிறார். வீட்டிலும் பூக்கள், குங்குமம் மற்றும் அட்சதை கொண்டு அர்ச்சனை செய்யலாம். ஆனால் அதற்கு உரிய மந்திரங்கள் தெரிந்திருக்க வேண்டும். ஒரு சிலர் போற்றி மந்திரத்தைக் கூறி அர்ச்சனை செய்வார்கள். எந்த அர்ச்சனை என்றாலும் அர்ச்சனைத் தட்டு என்ற ஒன்றை நாம் தயார் செய்து கொள்ள வேண்டும். பல கோவில் வாசல்களில் அர்ச்சனைத் தட்டு என்றே விற்பனை செய்வார்கள். அதில் தேங்காய், பூ, பழம் போன்ற அத்தியாவசியப் பொருட்கள் இடம் பெற்றிருக்கும்.
வீட்டில் அல்லது கோவிலில் தெய்வத்திற்கு அர்ச்சனை செய்யும் போது, என்னென்ன பூஜை பொருட்களை அர்ச்சனை தட்டில் வைத்து பூஜையை மேற்கொள்ளலாம் என்பதைப் பற்றி இந்த பதிவில் காணலாம் வாருங்கள.
அர்ச்சனை தட்டில் இடம் பெற வேண்டிய பொருட்கள்
1. விளக்கு
அர்ச்சனை செய்வதற்கு முன் நாம் ஆண்டவனுக்கு நல்லெண்ணெய் அல்லது நெய் கொண்டு குறைந்தபட்சம் இரண்டு தீபங்களாவது ஏற்ற வேண்டும்.
2. குங்குமம்
அம்மன் மற்றும் பல்வேறு ரூபத்தில் இருக்கும் பெண் தெய்வங்களுக்கு அர்ச்சனை செய்ய குங்குமத்தைப் பயன்படுத்த வேண்டும்.
3. திருநீறு
சைவக் கோவிலுக்கு செல்லும் போது திருநீறு அல்லது விபூதியை அர்ச்சனைத் தட்டில் வைக்க வேண்டும். வைணவக் கோவில்களில் விபூதி இடம் பெறாது.
4. சந்தனம்
வாசனை மற்றும் குளுமை நிறைந்த பொருட்களில் ஒன்று சந்தனம் ஆகும். இதனை தெய்வத்திற்கு சமர்ப்பிப்தன் மூலம் மன அமைதி கிட்டும்.
5. பழங்கள் மற்றும் தேங்காய்
தேங்காய் மற்றும் பழங்கள், தெய்வத்திற்கு நிவேதனமாகப் படைக்கப்படுகிறது. இது தெய்வத்தின் அருளைப் பெற உதவும்.
6. ஊதுபத்தி
நறுமணம் மிக்க ஊதுபத்தியை அர்ச்சனைத் தட்டில் வைத்து பக்தியுடன் அதனை இறைவனுக்கு சமர்ப்பிக்க வேண்டும்.
7. பூ மாலைகள்
தெய்வத்திற்கு அலங்காரம் செய்ய பூ மாலையை பயன்படுத்தலாம். வாசனை மிக்க மலர்களால் தொடுக்கப்பட்ட பூ மாலை கொண்டு தெய்வத்தை அழகுபடுத்தி ஆராதனை செய்வதன் மூலம் நன்மை பலவும் பெருகும்.
8. துளசி மாலை
வைணவக் கோவில் என்றால் அர்ச்சனைத் தட்டில் கண்டிப்பாக துளசி மாலை இடம் பெற்றிருக்க வேண்டும். சைவக் கோவிலுக்கு இதை அளிக்கக் கூடாது
9. கற்பூரம்
கற்பூரம், தெய்வத்திற்கு தீபாராதனை செய்ய பயன்படுத்தப்படுகிறது. இது வாசனை மற்றும் ஆன்மீக சக்தியை அதிகரிக்கின்றது.
10. வஸ்திரம்
தெய்வத்திற்கு அணிவிக்கப்படும் வஸ்திரத்தை வாங்கி அளிப்பது தெய்வத்தின் புனிதத்தையும், அழகையும் அதிகரிக்கிறது. இறை அருளையும் நமக்குப் பெற்றுத் தருகிறது.

Leave a Reply