மந்திரவாதிகள் செய்வினை வைப்பதற்கு எலுமிச்சையை பயன்படுத்துவதற்கு என்ன காரணம் தெரியுமா?

மாந்திரீகம் என்றால் என்ன ?
மாந்திரீகம் அல்லது செய்வினை என்பது ஒரு தீய சக்தியை பயன்படுத்த செய்யும் வழிபாடு ஆகும். நமக்கு வேண்டாதவர்களை அல்லது எதிரிகளை உடல் ரீதியாக, மன ரீதியாக பாதிப்படையச் செய்யவும் பொருளாதார ரீதியாக அவர்களை வீழ்ச்சியடையச் செய்யவும் அவர்கள் நோயய்வாய்ப்படவும் பயன்படுத்தப்படும் ஒரு முறை ஆகும். முற்காலத்தில் சித்தர்கள் இந்த மாதிரீகத்தை நல்ல காரியத்திற்காக பயன்படுத்தினார்கள். இந்தக் கலியுகத்தில் சிலர் இதனை தீய செயல்களுக்காக பயன்படுத்துகின்றனர்.
எலுமிச்சையின் மகத்துவம்:
எலுமிச்சை தேவகனி, ராஜ கனி, வெற்றிக் கனி என்றெல்லாம் அழைக்கப்படுகிறது. ஏராளமான கனி வகைககள் இருந்தாலும் பிற கனிகளுக்கு இல்லாத மரியாதையும் மகத்துவமும் இந்த கனிக்கு உண்டு. மஞ்சள் நிறத்தில் இருப்பதினால் இது மங்களகரமானதாக கருதப்படுகிறது. இந்தக் கனி குரு பகவானின் அனுக்கிரகம் பெற்ற கனி ஆகும். இதனால் தான் இதனை பூஜைகளில் பயன்படுத்துகிறார்கள். இது குளிர்ச்சியை அளிக்க வல்லது. அக்கினி தத்துவமுள்ள ஆண் தெய்வங்களுக்கும், பெண் தெய்வங்களுக்கும் எலுமிச்சம் மாலை போட்டுக் குளிர்விக்கின்றனா்.
சித்தர்கள் எதற்கு உபயோகப்படுத்தினார்கள்?
அஷ்ட கா்மம் என்பது எண்வகைத் தொழில்கள். மோகனம், வசியம், ஆகா்ஷணம், ஸ்தம்பலம், உச்சாடனம், பேதனம், வித்வேடணம், மாரணம் ஆகியவை.மேற்படி எட்டுத் தொழிலுக்கும் சித்தா்கள் எலுமிச்சம் பழத்தை உபயோகித்ததாகத் தெரிகிறது. நம் வலது கையில் ஒரு எலுமிச்சம்பழம் வைத்து நாம் ஒருவரை எண்ணினால் நம் எண்ணம் நாம் எண்ணியவரிடம் போய் அலைஅலையாய்த் தாக்கும். அக்காலத் டெலிப்பதி முறை இதுதான்.
எலுமிச்சையும் ஆன்மீகமும்
எலுமிச்சை என்பது தெய்வ சக்தி நிறைந்த பழம் என்பது நாம் அறிந்த ஒன்று. எனவே தான் அனைத்து தெய்வங்களுக்கும் எலுமிச்சையை படைத்து வழிபடுவார்கள். இதற்கு மந்திரசக்திகளை ஈர்க்கும் தன்மை உண்டு. அதே போல் எலுமிச்சை பழமானது காய்ந்தாலும், அழுகினாலும் என்ன நிலைக்கு மாறினாலும் அதன் புளிப்பு தன்மை மட்டும் எப்போதும் மாறாமல் இருக்கும். இறைவன் நிலையான குணம் கொண்டவன் என்பதை உணர்த்துவதற்காக எலுமிச்சை அனைத்து தெய்வங்களுக்கும் பயன்படுத்தப்படுகிறது. ஆன்மிகத்திற்கு எலுமிச்சம்பழம் ஒரு சிறந்த துணை என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை.
எலுமிச்சையின் அறிவியல் மகத்துவம்:
அறிவியல் படி எலுமிச்சையில் சிட்ரிக் அமிலம் உள்ளது. இந்த சிட்ரிக் அமிலம் கிருமி நாசினியாக செயல்படுகிறது. பித்தம், கபம் போன்றவற்றையெல்லாம் நீக்கக் கூடியது. இந்தப் பழத்தில் இருந்து வரும் வாசம் நம்மைச் சுற்றி ஒரு குதூகலமான சூழலை உருவாக்கக் கூடியது. எலுமிச்சைச் சாற்றுக்குப் பயங்கர சக்தி உள்ளது. அனேக சித்த ஆயுா்வேத மருந்துகளை எலுமிச்சைச் சாற்றில் சுத்தி செய்கின்றனா்.
மாந்திரீகமும் எலுமிச்சையும் :
மாந்திரீகா்கட்கு முக்கியமான பொருள் எலுமிச்சம்பழம். அது இல்லாவிட்டால் மாந்திரீகம் கிடையாது.எலுமிச்சையில் ஒரு வசிய சக்தி உள்ளது. அது சக்திகளை ஈர்த்து பிரதிபலிக்கக் கூடியது நல்ல சக்தி தீய சக்தி எதுவாக இருந்தாலும் அதனை ஈர்த்து பிரதிபலிக்கும் தன்மை வாய்ந்தது. இதனால் தான் எலுமிச்சை பழத்தை தேவதா பூஜைக்கும் பயன்படுத்துகிறார்கள். மந்திர பிரயோகங்களுக்கும் பயன்படுத்துகிறார்கள். எலுமிச்சை வசியத்திற்கு பயன்படும். வசிய தியானம் செய்து பழம் கொடுத்தால் நினைத்தது நடக்கும். எலுமிச்சை பழத்தை வைத்து எந்த தேவதைகளையும் அழைக்கலாம். மந்திரவாதிகள் உரு ஏற்றிக் கொடுக்கும் பழம், நம் குடும்ப நிகழ்ச்சிகளை அவருக்கு அறிவித்துக் கொண்டேஇருக்கும். அதன் மூலம் அவா் ஒரு நபரை ஆட்டுவிப்பார்.
தெய்வ பூஜைகள் செய்வதற்கு மட்டுமல்ல மந்திரீகம் செய்பவர்களும் தங்களின் பூஜைக்கு எலுமிச்சையை தான் பிரதானமான பொருளாக பயன்படுத்துகிறார்கள். தெய்வ சக்தி உள்ள பழமான எலுமிச்சையை எதற்காக மாந்திரீகம் செய்வதற்கு பயன்படுத்துகிறார்கள்? எலுமிச்சையில் ஈர்க்கும் சக்தி இருப்பதால் அது உயிரோட்டம் உள்ளதாக கருதப்படுகிறது. எலுமிச்சை பயன்படுத்தும் போது தீய சக்தி அந்த இடத்திற்கு வந்து வறுமை மற்றும் துரதிஷ்டத்தை தருகிறது. இந்த எலுமிச்சையை யாராவது சாப்பிட்டாலோ அல்லது மிதித்தாலோ அவர்களை துரதிர்ஷ்டமும், துன்பமும் வந்து தொற்றிக் கொள்ளும் என சொல்லப்படுகிறது. எனவே தான் செய்வினை செய்வதற்கு மந்திரவாதிகள் எலுமிச்சை பழத்தை பயன்படுத்துகிறார்கள்.
