அபூர்வ கோலத்தில் முருகன் காட்சி தரும் கோவில்கள்

குன்று இருக்கும் இடமெல்லாம் குமரன் குடியிருப்பான். தமிழ்க் கடவுள் என்று அழைக்கப்படும் முருகனின் அறுபடை வீடுகள் மிகவும் பிரசித்தி பெற்ற ஆலயங்கள் ஆகும். என்றாலும் முருகப் பெருமான் பல ஆலயங்களில் பல நாமங்களுடன் வெவ்வேறு கோலங்களில் குடி கொண்டு இருக்கிறார். அது மட்டும் இன்றி பல ஆலயங்களில் தனி சந்நிதியை அலங்கரிக்கிறார். மயில்வாகனமும், சேவல் கொடியும் வேலும் தரித்த முருகனை நாம் அறிவோம் என்றாலும் பல திருத்தலங்களில் பல்வேறு கோலங்களில் முருகன் காட்சி அளிக்கிறார். முருகன் ஆண்டியாகவும், தவக் கோலத்திலும், வேல் மயில் சேவலுடனும் காட்சி அளிப்பது நாம் அறிந்த ஒன்றாகும். இது மட்டும் இன்றி பல தலங்களில் பல கோலங்களில் காட்சி அளிப்பதைப் பற்றி இந்தப் பதிவில் காணலாம்.
அபூர்வ கோலத்தில் முருகன் காட்சி தரும் கோவில்கள் :
1.நாகப்பட்டினம் மாவட்டம் தரங்கம்பாடி வட்டத்தில் உள்ள திருவிடைக்கழி தெய்வானை சமேத முருகப்பெருமான் கோவில். இத்திருத்தலத்தில் ‘சர்வமும் சுப்ரமணியம்’ என்ற வகையில் பிரதோஷ நாயகர், சந்திரசேகரர், சோமாஸ்கந்தர் என அனைத்து மூர்த்திகளும், வலது திருக்கரத்தில் வஜ்ரவேலுடன் சுப்ரமணிய சுவாமி சொரூபமாகவே காட்சிஅளிக்கின்றனர். இங்குள்ள முருகப்பெருமானுக்கு மயிலுக்குப் பதிலாக யானை வாகனமாக உள்ளதும் குறிப்பிடத்தக்கது.
.2. திருநள்ளாறு : இது சனி பகவானுக்கு உரிய பரிகாரத் தலம் ஆகும்.தர்ப்பாரண்யேஸ்வரர் ஆலயம் என்று அழைக்கப்படும் இந்தக் கோவிலில் முருகப் பெருமான் கையில் மாம்பழத்துடன் காட்சி தருகிறார்.
3. ஈரோடு - சென்னிமலை : இரண்டு திருமுகங்கள், எட்டு திருக்கரங்களுடன் கந்தன் காட்சி தரும் தலம். இந்த கோவிலுக்கு மேல் காகங்கள் பறப்பதில்லை என்பது அதிசயமான ஒன்றாகும். இந்த கோவிலில் முருகனுக்கு அபிஷேகம் செய்தபின் தயிர் புளிப்பதில்லை என்பது ஐதீகம்.
4. நஞ்சன்கூடு நஞ்சுண்டேஸ்வரர் : இந்த ஆலயத்தில் முருகன் தலைக்கு மேல் ஐந்து தலை நாகர் குடைபிடித்திருக்கும் காட்சியை தரிசிக்கலாம். பன்னிரண்டு கரங்களுடன் காட்சி தருகிறார்.
5. கும்பகோணம் வியாழ சோமேஸ்வரர் ஆலயம் : இந்த தலத்தில் முருகப் பெருமான் காலில் பாதரட்சை அணிந்தபடி காட்சி தருகிறார்.
6. திருவையாறு ஐயாரப்பர் சன்னதி பிரகாரத்தில் ராமபிரானைப் போல கையில் வில், அம்புடன் இருக்கும் தனுசு சுப்ரமண்யராக முருகன் அருள் செய்கிறார்.
7. திருப்போரூரில் முத்துக்குமார சுவாமியாய் காட்சி தரும் முருகப் பெருமான், இடது காலை தரையில் ஊன்றி, வலது காலை மயில் மீது வைத்து இடது கையில் வில்லும், வலது கையில் அம்பும் ஏந்தியபடி போருக்கு தயாராகும் கோலத்தில் காட்சி தருகிறார்.
8. நாமக்கல் மாவட்டம் பேளுக்குறிச்சி என்னுமிடத்தில் முருகன் வேடன் வடிவில் காட்சி தருவது தனிச்சிறப்பாகும். இந்த முருகனின் சிலையில் வியர்வை துளிர்ப்பது விந்தையான ஒன்றாகும்.
9. மகாபலிபுரம் அருகே வளவன்தாங்கல் தலத்தில் முருகன், கையில் தண்டம் ஏந்திய கோலத்தில் தண்டாயுதபாணியாக காட்சி தருகிறார். அவர் கண்களில் நீர் வரும் காட்சி வியப்பான ஒன்றாகும்.
10. மயிலாடுதுறை - திருவாரூர் மலையில் உள்ள நெய்குப்பை என்ற ஊரில் அம்மன் கையில் கைக்குழந்தையாக அமர்ந்தபடி பாலமுருகனாக முருகப் பெருமான் காட்சி தருகிறார்.
11. திருநனிப்பள்ளி, திருக்குறுங்குடி என்னும் தலங்களில் முருகப் பெருமான் சிவ பெருமானைப் போல மூன்று கண்களுடனும், எட்டு திருக்கரங்களுடனும் காட்சி தருகிறார்.
12. புதுக்கோட்டைக்கு அருகில் உள்ள ஒற்றைக் கண்ணனூர் திருத்தலம் பழமையான கோயில் ஆகும். இந்த தலத்தில் முருகன், ஒரு கையில் ஜப மாலையுடனும், மறு கையில் சின் முத்திரையுடனும் காட்சி தருகிறார்.
13. கருவறையில் ஏழு தலை நாகம் கொண்ட கார்த்திகேயரின் சிலையானது ஒரே கல்லில் செய்யப்பட்டதாக உள்ளது. முருகன் பாம்பு வடிவில் காட்சி தரும் ஒரே திருத்தலம் காட்டி சுப்ரமணியர் கோவிலாகும்.
14.கனககிரி தலத்தில் முருகன் பெருமான் கையில் கிளியை ஏந்தி காட்சி தருகிறார்.
15. செம்பனார்கோவில் திருத்தலத்தில் முருகப் பெருமான் ஜடாமகுடம் தாங்கி, இரண்டு கைகளிலும் அக்கமாலை ஏந்தி, தவக்கோலத்தில் காட்சி தருவது தனிச்சிறப்பாகும்.
16. கும்பகோணம் அருகில் அழகாபுத்தூர் என்ற ஊரில் முருகன் சங்கு சக்கரத்துடன் காட்சியளிக்கிறார்.
17. பூம்புகார் அகே உள்ள மேலையூரில் திருச்சாய்க்காடு சாயாவனேஸ்வரர் கோவிலில் முருகப் பெருமான் வில், அம்புடன் பஞ்சலோக சிலை வடிவில் காட்சி தருகிறார்.
18. ஜோலார்பேட்டை ஏலகிரி மையில் ஜலகாம்பாறை என்னும் இடத்தில் உள்ள முருகன் கோவிலில் விக்ரஹம் கிடையாது. ஏழு அடி உயர வேல் மட்டுமே காட்சி தருகிறது. வேல் வடிவில் வேலவன் காட்சி தரும் வித்தியாசமான ஆலயம் இது.
19. பெரம்பலூர் அருகில் உள்ள செட்டிகுளம் தண்டாயுதபாணி கோவிலில் பகவான் தலையில் முடியுடன் இங்கே அருள்பாலிக்கிறார். 4 அடி உயரத்தில் உள்ள "கனுக்கள்" எனப்படும் 11 கோடுகள் கொண்ட கரும்பை கையில் ஏந்தியவாறு காட்சி அளிக்கிறார். இது வேறு எந்த முருகன் கோவில்களிலிலும் காணப்படுவதில்லை.
20. நாகப்பட்டினம் மாவட்டம் விளத்தொட்டி என்ற தலத்தில் உள்ள பிரம்மபுரீஸ்வரர் ஆலயத்தில் மூலவர் சன்னதிக்கு நேர் பின்புறம் பால முருகன் தனிச் சன்னதியில் உள்ளார். பாலமுருகன் தொட்டியில் தவழ்ந்து உறங்கிய தலம் என்ற பெருமையுடையது
21. திருவண்ணாமலை - வேலூர் சாலையில் உள்ள வில்வாரணி என்னும் ஊரில் அமைந்துள்ள நட்சத்திர கிரி மலையில் சுயம்பு வடிவ லிங்க திருமேனியாக, நாகாபரணத்துடன் முருகன் காட்சி தருகிறார். முருகனும், சிவனும் ஒரே வடிவமாக அமைந்திருக்கும் கோலத்தை இங்கு மட்டுமே தரிசிக்க முடியும்.
22. சிவகங்கை மாவட்டம் திருமலையில் அமைந்துள்ள மலைக்கொழுந்தீஸ்வரர் ஆலயத்தில் முருகப் பெருமான் சற்று சாய்ந்த நிலையில் காட்சி தருகிறார். அருகில் சேவல் கொடியும், ஆடு, மயில் வாகனங்களும் உள்ளன. முருகனுக்கு குண்டோதரன் குடைப்பிடித்தபடி இருக்கிறான்.
23. ஈரோடு மாவட்டம் காங்கேயம்பாளையம் தலத்தில் உள்ள நட்டாற்றீஸ்வரர் ஆலயத்தில் முருகன் வலது காலை முன் வைத்து இடது காலை பின் வைத்து நடப்பது போன்ற பாவனையில் உள்ளார். அகத்தியர் இவரைக் காண வந்த போது அவரை வரவேற்க முன்னோக்கி வந்த திருக்கோலம். இவர் இடது கையில் கிளியை வைத்து வித்தியாசமாகக் காட்சி தருகிறார்.
24. நாகப்பட்டினம் மாவட்டம் திருவிடைச்சுழி என்னும் ஊரில் உள்ள சுப்ரமணிய சுவாமி கோவில் முருகப் பெருமான் தவக்கோலத்தில் காட்சி தருகிறார். முருகனுக்கும், தெய்வானைக்கும் நிச்சயதார்த்தம் நடந்த தலமாக இது கருதப்படுகிறது.
25. நாகப்பட்டினம் பொரவாச்சேரி முருகன் :- ஆறுமுகங்களும், பன்னிரண்டு திருக்கரங்களும் கொண்டு மயில் மீது அமர்ந்திருக்கும் முருகனின் இந்த விக்கிரகம் ஒரே கல்லால் செதுக்கப்பட்டது. முருகனின் மொத்தை எடையையும் அந்த மயிலின் கால்கள் தாங்கி உள்ளன என்பது வியப்பான விஷயம். இங்கு ஆறுமுகப் பெருமானின் உடலில் நரம்புகள் தெரிகின்றன. முருகனின் ஒருபுறம் வள்ளி அன்னையும் மறுபுறம் செய்வானை அன்னையும் காட்சி தருகின்றனர்.
