Arupadai Veedu Muruga Program 2024: Invoke Muruga at His 6 Powerful Abodes During the 6th Moon Powertime Days JOIN NOW

ராமேஸ்வரம் கோயில் வரலாறு | Rameshwaram Temple History In Tamil

January 22, 2021 | Total Views : 10,173
Zoom In Zoom Out Print

அருள்மிகு இராமநாத சுவாமி கோயில் தல வரலாறு:

இலங்கைக்கு அருகில் அமைந்துள்ளது இராமேசுவரம். இங்கு தான் எம்பெருமான் ஈசன் இராமநாத சுவாமியாக கோயில் கொண்டு வீற்றிருக்கிறார். இந்துக்களின் புனித தலங்களில் மிக முக்கியமான தலமாக இது கருதப்படுகிறது. பல்வேறு சிறப்புக்களை கொண்டது இத்தலம். இந்தியாவில் உள்ள 12 ஜோதிர்லிங்கத் தலங்களில் தமிழ்நாட்டில் அமைந்துள்ள ஒரே தலம் இது. தேவாரப் பாடல் பெற்ற சிவத்தலங்களில் இதுவும் ஒன்று. இங்கு அன்னை பராசக்தி பர்வதவர்த்தினி என்ற திருநாமத்தோடு வீற்றிருந்து அருள்பாலிக்கிறாள். உலகிலேயே மிகப்பெரிய பிரகாரத்தை கொண்ட தலமாக இத்திருக்கோயில் சிறப்பு பெறுகிறது. அதுமட்டுமல்லாமல் சிறந்த பித்ரு தோஷ நிவர்த்தி தலமாகவும் விளங்குகிறது. இக்கோவிலின் மற்றொரு சிறப்பாக 22 தீர்த்தங்கள் இங்கு அமைந்துள்ளது. இங்குள்ள அக்னிதீர்த்தம் மிக விசேஷமானது. இந்தியாவில் உள்ள புனிதத் தலங்களில் மிக முக்கியமாக கருதப்படுவது நான்கு தலங்கள். அவை வடக்கே பத்ரிநாதம், கிழக்கே ஜகந்நாதம், மேற்கே துவாரகநாதம், தெற்கே ராமநாதம். இவற்றுள் மூன்று தலங்கள் வைணவத் தலங்களாக அமைந்துள்ளது. நான்காவது தலமான ராமநாதம் ஒன்றே சிவத்தலமாக அமைந்துள்ளது. பதஞ்சலி முனிவர் முக்தி பெற்ற தலமும் இதுவே. உங்கள் ராசி மற்றும் நட்சத்திரம் பற்றி அறிய எங்கள் இலவச ராசி கால்குலேட்டர் பயன்படுத்துங்கள்.

கோயில் தல வரலாறு:

இராமாயணத்தில் சீதையை கவர்ந்து சென்ற இராவணனுடன் போரிட்டு வெற்றி கண்டு அன்னை சீதாதேவியை மீட்டார் இராமபிரான். சிறந்த சிவபக்தனான இராவணனை போரில் கொன்றதன் விளைவாக ராமபிரானுக்கு பிரம்மஹத்தி தோஷம் பிடித்துக் கொண்டது. இதை நீக்குவதற்கு அகத்திய முனிவரிடம் யோசனை கேட்டார் ராமபிரான். அவரும் இராமேஸ்வரம் கடற்கரையில் சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து வழிபட்டால் தோஷம் நீங்கும் எனக் கூறினார். அதன்படியே தனது சிறந்த பக்தனான அனுமனிடம் கைலாச பர்வதத்திற்கு சென்று சிவலிங்கத்தை கொண்டு வர கட்டளையிட்டார். குறித்து நேரத்திற்குள் அனுமன் வர தாமதமானதால் அன்னை சீதா தேவி கடற்கரையில் உள்ள மணலில் ஒரு சிவலிங்கத்தை வடிவமைத்துக் கொடுத்தார். இராமபிரானும் குறித்த நேரத்தில் அந்த லிங்கத்தை பிரதிஷ்டை செய்து வழிபட்டார். இதனால் அவருக்கு ஏற்பட்ட பிரம்மஹத்தி தோஷம் விலகியது. இராமபிரான் பிரதிஷ்டை செய்த சிவலிங்கமே இன்று இராமநாத சுவாமியாக ராமேஸ்வரத்தில் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார் எம்பெருமான்.

அனுமன் கொண்டு வந்த சிவலிங்கம்:

இராமபிரான் கட்டளையை ஏற்ற அனுமான் கைலாச பர்வதத்திற்கு விரைந்து சென்றார். அங்கே சிவலிங்கத்தை எடுத்துக் கொண்டு இராமேஸ்வரம் கடற்கரையை வந்தடைந்தார். அங்கே ஏற்கனவே பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்த சிவலிங்கத்தை கண்டு கோபமுற்றார். தனது பலமிக்க வாலால் அடித்து அந்த சிவலிங்கத்தை பெயர்த்தெடுக்க முனைந்தார். ஆனால் அதை அசைக்கக் கூடி முடியவில்லை அனுமனால். இன்றளவும் எம்பெருமானின் சிவலிங்கத் திருமேனியில் அந்த வாலின் தடம் பதிந்திருப்பதை காணலாம். இதைக் கண்ட இராமபிரானும் அனுமானை சமாதானம் செய்து, தனது பக்தனுக்கு பெருமை சேர்க்கும் விதமாக அனுமன் கொண்டு வந்த சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து வழிபட்டார். அந்த சிவலிங்கமே இன்று விஸ்வநாதராக ராமநாதசுவாமி கோயிலில் காட்சி தருகிறது. அதோடு மட்டுமல்லாமல் அனுமன் கொண்டு வந்த சிவலிங்கத்திற்கே முதலில் பூஜை நடைபெற வேண்டும் என கட்டளையிட்டார் ராமபிரான். இன்றளவும் அதன்படியே முதலில் விஸ்வநாதருக்கு பூஜை செய்யப்பட்டு அதன் பின்பே இராமநாத சுவாமிக்கு பூஜைகள் நடைபெறுகிறது.

கோயில் அமைப்பு:

இராமநாதபுரம் மாவட்டம், இராமேஸ்வரத்தில் சுமார் 15 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது இத்திருக்கோயில். இராமநாத சுவாமி கோயில் 1212 தூண்கள், 690 அடி நீளம், 435 அடி அகலம் கொண்ட பிரகாரத்தைக் கொண்டுள்ளது.  இத்தலமானது மூர்த்தி, ஸ்தலம், தீர்த்தம் என்ற மூன்றுக்கும் கீர்த்தி பெற்றது. இத்தல இறைவனுக்கு ஆறு கால பூஜைகள் நடைபெறுகின்றன. இத்தலத்தில் வீற்றிருக்கும் எம்பெருமான் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். சுவாமியின் சன்னதி கிழக்கு நோக்கி அமைந்துள்ளது.

திருவிழாக்கள்:

ஆனி மாதம் இராமலிங்க பிரதிஷ்டை திருவிழா, ஆடி மாதம் திருக்கல்யாண உற்சவம், மாசி மாதம் மஹா சிவராத்திரி திருவிழா, ஆடி மாதம் ஆடி அமாவாசை, வைகுண்ட ஏகாதசி, ராம நவமி, தை அமாவாசை நாட்களில் கோதண்டராமர் கருட வாகனத்தில் அக்னி தீர்த்ததில் எழுந்தருளி தீர்த்தம் அளித்தல் போன்ற திருவிழாக்கள் இங்கு நடைபெறுகிறது. 

பித்ரு தோஷ நிவர்த்தி தலம்:

புரட்டாசி மாதத்தில வரும் மஹாளய பட்சத்தில் பித்ருக்கள் பூமிக்கு வருகிறார்கள். எமதர்ம ராஜா அவர்களை விடுவித்து அவரவரர் குடும்பத்தினரை  பார்த்து வர அன்று அனுமதியளிக்கிறார் என்பது ஐதீகம். ‘மஹாளயம்’ என்றால் கூட்டமாக பூமிக்கு வருதல் என்று அர்த்தமாகிறது. அன்றைய தினம் அவர்களை வரவேற்று தர்ப்பணம், ஸ்ரார்த்தம், பிண்டம் முதலான காரியங்களை செய்வதன் மூலம் பிதுர்க்களின் ஆசீர்வாதங்களைப் பெற்று குடும்பம் முன்னேற்றம் காணலாம். பிதுர் தொடர்பான காரியங்களைச் செய்வதற்கு இராமேஸ்வரம், இராமநாதசுவாமி கோயில் சிறந்த தலமாக அமைந்துள்ளது.

பாஸ்கர ராயரின் உப்பு லிங்கம்:

ஆன்மீகத்தில் பற்றுள்ளவர்கள் ஒரு புறம் இருப்பவர்கள் போல, அதை கேலி செய்தும், அவநம்பிக்கையை ஏற்படுத்தும் விதமாக செயல்படுகின்ற ஒரு கூட்டமும் எப்போதும் இருந்து கொண்டே தான் இருக்கும்.  ஒரு சமயம் இத்திருக்கோயிலில் அமைந்திருக்கும் சிவலிங்கம் மணலால் வடிவமைக்கப்பட்டது அல்ல, அப்படி செய்திருந்தால் அபிஷேகத்தின் போது அதை கரைந்திருக்கும் என்று ஒரு கூட்டம் வாதம் செய்தனர். அதைக் கேட்ட இங்கு வீற்றிருக்கும் அன்னை பர்வத வர்த்தினி தாயாரின் தீவிர பக்தரான பாஸ்கர ராயர் என்பவர் தண்ணீரில் எளிதில் கரையக் கூடிய உப்பினால் ஒரு லிங்கத்தை வடிவமைத்து அதற்கு அபிஷேகம் செய்தார். ஆனால் சிவலிங்கம் கரையவில்லை. இதைக் கண்ட அனைவரும் வாயடைத்துப் போயினர். சாதாரண பக்தனான தன்னால் செய்யப்பட்ட உப்பு லிங்கமே கரையாத போது, அன்னை சீதா தேவியால் மணலில் வடிவமைக்கப்பட்ட சிவலிங்கம் கரையாதது ஒன்றும் அதிசயமில்லை என நிரூபித்தார். இன்றளவும் அந்த உப்பு லிங்கத்தை ராமநாதர் சன்னதிக்கு பின்புறம் பக்தர்களால் காண முடியும். உப்பின் சொர சொரப்பு தன்மையை அந்த லிங்கத்தை காணும் போதே உணர முடியும்.

அக்னி தீர்த்தம்:

இராமேஸ்வரம் கடல் அக்னிதீர்த்தம் எனப்படுகிறது. தான் கற்புக்கரசி என்பதை நிரூபிப்பதற்காக அன்னை சீதா தேவி அக்னி பிரவேசம் மேற்கொண்டாள். சீதையை தொட்ட பாவத்திற்காக அக்னி பகவான் இத்தலம்  வந்து கடலில் நீராடி தோஷம் நீங்கி இராமநாதரை வழிபட்டார். எனவே இக்கடல் அக்னி தீர்த்தம் என பெயர் பெற்றது.

சங்கிலியுடன் காட்சியளிக்கும் சேதுமாதவர்:

பெருமாளின் தீவி பக்தரான சுந்தரபாண்டியன் எனும் மன்னன் குழந்தை பாக்கியம் இல்லாமல் அவதியுற்றான். அம்மன்னனின் குறையைப் போக்க தனது மனைவி மகாலட்சுமியையே அவனுக்கு மகளாகப் பிறக்கச் செய்தார். அவள் மணப்பருவத்தை அடைந்த போது ஒரு இளைஞன் அவளிடம் வம்பு செய்தான். மன்னன் அந்த இளைஞனை சிறை பிடித்து காலைச் சங்கிலியால் கட்டிப் போட்டான். இளைஞன் வடிவில் வந்த பெருமாளும் தனது பக்தனான சுந்தரபாண்டியன் மன்னனுக்கு இதைச் செய்ய அனுமதியளித்தார். அவ்வாறு காலில் சங்கிலியால் கட்டப்பட்ட பெருமாளே இங்கு சேதுமாதவராக காட்சியளித்து அருள்புரிகிறார். இப்போதும் அவரது கால் சங்கிலியால் கட்டப்பட்டிருக்கிறது.

பதஞ்சலி முனிவர் முக்தி பெற்ற தலம்:

இத்திருக்கோயிலில் அமைந்திருக்கும் நடராஜர் சன்னதியின் பின்புறம் ஒரு கரம் மட்டும் உள்ளது. இதற்கு தினமும் பூஜை நடைபெறுகிறது. யோகக் கலையில் தேர்ச்சி பெறவும், நாக தோஷ நிவர்த்திக்காகவும் இச்சன்னதியில் நமது கண்களுக்குத் தெரியாமல் நாக வடிவில் அமர்ந்திருக்கும் பதஞ்சலி முனிவரிடம் வேண்டிக் கொள்ளலாம். ஏனென்றால் பதஞ்சலி முனிவர் முக்தியடைந்த தலம் இது. இதனால் அவர் நமது கண்களுக்குத் தெரியமாட்டார்.

ஸ்டிபக லிங்க பூஜை:

ஆதிசங்கரர் பிரதிஷ்டை செய்த ஸ்படிக லிங்கமானது இராமநாத சுவாமி மூலஸ்தானத்தில் அமைந்துள்ளது. நாள்தோறும் இந்த ஸ்படிக லிங்கத்திற்கு பாலாபிஷேகம் செய்து வருகின்றனர். பர்வதவர்த்தினி அன்னையின் பீடத்திற்கு கீழே ஆதிசங்கரர் ஸ்தாபித்த ஸ்ரீசக்கரம் இருக்கிறது. 51 சக்தி பீடங்களில் இது இத்தலம் சேது பீடம் என அழைக்கப்படுகிறது. சித்திரை பிறப்பன்று மட்டும் அம்பிகைக்கு சந்தனக்காப்பு அலங்காரம் செய்யப்படுகின்றது.

பிரார்த்தனை:

சகல பாவங்களையும் போக்குகின்ற தலம் இராமேஸ்வரம் இராமநாத சுவாமி திருக்கோயில். இருப்பினும் இங்குள்ள இரட்டை விநாயகரை வணங்கி குழந்தை பாக்கியமும், செல்வச் செழிப்பையும் பெறுகின்றனர் பக்தர்கள். நாக தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் அக்னி தீர்த்தக் கரையில் நாகரை பிரதிஷ்டை செய்து வேண்டிக் கொள்கிறார்கள். வேண்டுதல் நிறைவேறியதும் பக்தர்கள் இத்தல இறைவனுக்கும், இறைவிக்கும் வஸ்திரம் அணிவித்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்துகின்றனர்.

காசி, இராமேஸ்வரம் யாத்திரை செல்பவர்கள் முதலில் இராமேஸ்வரத்தில் உள்ள அக்னி தீர்த்தத்தில் (கடல்) நீராடி, மணல் மற்றும் தீர்த்தம் எடுத்துக் கொண்டு காசி செல்ல வேண்டும். பின்பு காசி சென்று அங்குள்ள கங்கை தீர்த்தத்தில் மணலைப் போட வேண்டும். அக்னி தீர்த்தத்தால் காசி விஸ்வநாதருக்கு அபிஷேகம் செய்ய வேண்டும். அங்கிருந்து கங்கை தீர்த்தம் கொண்டு வந்து ராமதநாத சுவாமிக்கு அபிஷேகம் செய்ய வேண்டும். இவ்வாறு இராமேஸ்வரத்தில் துவங்கிய புனித யாத்திரையை இராமஸ்வரத்தில் தான் முடிக்க வேண்டும் என்பது ஐதீகம்.

22 தீர்த்தங்களும் அதன் பலன்களும்:

பக்தர்கள் முதலில் கடலில் தான் நீராட வேண்டும். அதன் பின் கோயில் உள்ளே அமைந்துள்ள 22 தீர்த்தங்களிலும் பின் வரும் வரிசையில் நீராட வேண்டும்.

1. மகாலட்சுமி தீர்த்தம் - செல்வ வளம் பெறலாம்.
2. சாவித்திரி தீர்த்தம் - பேச்சாற்றலைப் பெறலாம்.
3. காயத்ரி தீர்த்தம் - உலக நன்மைகள் உண்டாகும்.
4. சரஸ்வதி தீர்த்தம் - கல்வியில் சிறந்து விளங்கலாம்.
5. சங்கு தீர்த்தம் - வசதிகள் நிறைந்த வாழ்க்கை அமையும்.
6. சக்கர தீர்த்தம் - மனோதிடம் பெறலாம்.
7. சேது மாதவ தீர்த்தம் - காரியத் தடைகளை கடந்து வெற்றி பெறலாம்.
8. நள தீர்த்தம் - அனைத்து தடைகளும் அகலும்.
9. நீல தீர்த்தம் - எதிரிகள் தொல்லைகள் நீங்கும்.
10. கவய தீர்த்தம் - பகை மறையும்.
11. கவாட்ச தீர்த்தம் - கவலைகள் நீங்கும்.
12. கந்தமாதன தீர்த்தம் - எந்தத் துறையிலும் வல்லுனர் ஆகலாம்.
13. பிரம்மஹத்தி விமோசன தீர்த்தம் - பிரம்மஹத்தி தோஷம் நீங்கும்.
14. கங்கா தீர்த்தம் - பாவங்கள் அனைத்தும் நீங்கும்.
15. யமுனை தீர்த்தம் - உயர் பதவிகள் வந்து சேரும்.
16. கயா தீர்த்தம் - முன்னோர்களின் ஆசிகள் கிடைக்கும்.
17. சர்வ தீர்த்தம் - எந்தப் பிறவியிலும் செய்திருந்த பாவங்கள் அகலும்.
18. சிவ தீர்த்தம் - எல்லாவிதமான பிணிகளும் நீங்கும்.
19. சத்யாமிர்த தீர்த்தம் - ஆயுள் விருத்தி பெறலாம்.
20. சந்திர தீர்த்தம் - கலைகளில் ஆர்வம் உண்டாகும்.
21. சூரிய தீர்த்தம் - எதிலும் முதன்மை ஸ்தானத்தை அடையலாம்.
22. கோடி தீர்த்தம் - முக்தியை வழங்குகிறது.

கடலுக்குள் நவகிரகங்கள்:

இராமேஸ்வரத்தில் அமைந்துள்ள கடல் அலைகள் இல்லாதது, ஆரவாரமில்லாதது. இராமபிரான் தனது  கையால் ஒன்பது பிடி மணலைக் கொண்டு பிரதிஷ்டை செய்த நவகிரக ஸ்தலம் இது. பக்தர்கள் இங்குள்ள நவகிரங்களை தொட்டு அவர்களது கைகளாலேயே அபிஷேகம், அர்ச்சனை செய்து கொள்ளலாம். புராண காலம் முதலே கடல் நடுவே 9 கல் சிலைகளாக நவகிரகங்கள் அமைந்துள்ள அற்புதமான காட்சி அனைவரும் வியக்கும் வண்ணம் உள்ளது.

கோயில் நடை திறந்திருக்கும் நேரம்:

காலை 4 மணி முதல் மதியம் 1 மணி வரையும், பிற்பகல் 3 மணி முதல் 8.30 மணி வரையும் கோயில் நடை திறந்திருக்கிறது.
தென்னாடுடைய சிவனே போற்றி! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!!

banner

Leave a Reply

Submit Comment