AstroVed Menu
AstroVed
search
search

புரட்டாசி மாதத்தில் ஏன் அசைவம் சாப்பிடக்கூடாது

dateOctober 16, 2020

புரட்டாசி மாதம் ஆரம்பமாயிற்று. அதோடு அசைவ பிரியர்களுக்கு கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டிய காலமும் ஆரம்பமாயிற்று. அசைவ சந்தை என்று சொல்லப்படுகின்ற இறைச்சி மார்க்கெட், பிராய்லர் கோழிக் கடைகள், மீன் மார்க்கெட்டுகள் என அனைத்து அசைவ கடைகளும் காற்று வாங்கும் காலமும் வந்துவிட்டது. பிரியாணிக் கடைகளும், ப்ரைடு ரைஸ் கடைகளும் கூட்டமின்றி பொலிவிழந்து காணப்படும். இந்த மாதம் முழுவதும் ஆன்லைன் அசைவ உணவு வர்த்தகத்திலும், அசைவ ஹோட்டல்களிலும் பல காம்போ ஆபர்கள், இலவச அறிவிப்புகள், ஒரு பிரியாணி வாங்கினால் மற்றொரு பிரியாணி இலவசம். பிரியாணியோடு சேர்த்து சிக்கன் 65 என்று அறிவித்தாலும் கூட அசைவ வர்த்தகம் மிக மந்தமாகத்தான் இருக்கும். ஏன் இந்த புரட்டாசி மாதம் மட்டும் இப்படி அசைவ உணவை தவிர்க்கிறார்கள்? இதற்கு ஆன்மீக ரீதியாகவும், அறிவியல் ரீதியாகவும் பல காரணங்கள் உண்டு. வாருங்கள் அதைப்பற்றி அறியலாம்.

ஆன்மீக காரணம்

ஜோதிடத்தில் 6வது ராசியாக அமைந்துள்ளது கன்னி ராசி. புதன் பகவான் இந்த கன்னி ராசியின் அதிபதியாக உள்ளார். மேலும் புதன் மகா விஷ்ணுவின் சொரூபம் என்பதால், புதன் பெருமாளுக்கு உரிய கிரகமாக பார்க்கப்படுகிறது. புதன் பகவான் சைவப் பிரியர். அதனால் அவர் ஆட்சி செய்யும்  கன்னி ராசிக்கான மாதம் புரட்டாசியில் அசைவ உணவுகளை தவிர்த்து, விரதம் மேற்கொண்டு, பெருமாள் கோயிலுக்கு சென்று வழிபாடு நடத்த வேண்டும் என்று முன்னோர்கள் கூறியிருக்கிறார்கள். இதன் மூலம் காக்கும் கடவுளான மகா விஷ்ணுவின் அருளாசிகளைப் பெற இயலும்.

அறிவியல் காரணம்

பொதுவாக புரட்டாசி மாதத்தில் வெயிலும், காற்றும் குறைந்து காணப்பட்டு மழை ஆரம்பமாகும். பல மாதங்களாக மழை இல்லாத காரணத்தால் பூமி வெயிலால் சூடாகியிருக்கும். புரட்டாசி மாதத்தில் பொழியும் மழையும் பூமியை முழுவதுமாக குளிர்விக்கும் அளவில் இருக்காது. லேசாக தூவுகின்ற மழை நீர் பூமியில் விழுந்ததும் அதை பூமி ஈர்த்துக் கொண்டு இவ்வளவு நாட்களும் தன்னுள் வைத்திருக்கின்ற வெப்பத்தை வெளியேற்றும்.

இதன் காரணமாக புரட்டாசி மாதம் சூட்டை கிளப்பி விடுகிற மாதமாக அமைகிறது. இது வெயில் காலத்தில் வெளிப்படும் வெப்பத்தை விட பல ஆரோக்கிய குறைபாடுகளை தரவல்லது. ஆக இந்த காலத்தில் அசைவ உணவை சாப்பிட்டால் அது மேலும் உடல் உஷ்ணத்தை அதிகரிக்கச் செய்து பல நோய்களுக்கு வழிவகுக்கும். ஆதலால் புரட்டாசி மாதம் முழுவதும் சைவ உணவுகளை மேற்கொள்வதே ஆரோக்கியத்திற்கு நல்லது.

சைவ உணவின் மகத்துவம்

சைவ உணவு வகைகளில் சுரைக்காய், பூசணி, பசலைக்கீரை மற்றும் முட்டைகோஸ் நார்ச்சத்து மிகுந்தவை. உடலில் சேர்கின்ற நச்சுக்களை அகற்றும் தன்மை இந்த காய்கறிகளுக்கு உண்டு. இறைச்சி உடலில் புரதத்தை அதிகமாக்கி, கொழுப்பை கூட்ட வழி வகுக்கக் கூடியது. மேலும் நமது சிறுநீரகத்திற்கு அதிக வேலைப்பளுவை தரக்கூடியது. எலும்பிலுள்ள கால்சியத்தையும் உறிஞ்சக் கூடியது. ஆனால் சைவ உணவில் இந்த பிரச்னை இல்லை. இதனால் எலும்புகள் வலுவடைகிறது.

சைவ உணவுகள் மூலமாக கிடைக்கும் ஹார்போஹைட்ரேட் படிப்படியாக ஜீரணமாக உடலுக்குத் தேவையான குளுக்கோஸ் சத்தை சீராக அளிக்கும். அதே சமயம் கொழுப்பும், புரதமும் நிறைந்த அசைவ உணவு ஜீரணமாவற்கு அதிக நேரம் எடுத்துக் கொள்ளும். ஆனால் சைவ உணவு எளிதில் ஜீரணமாகும்.

பீட்ரூட், தக்காளி, பூசணி, பாகற்காய் போன்ற சைவ உணவுகள் ரத்தத்தை நன்கு சுத்திகரிப்பதோடு, தோலுக்கு மினுமினுப்பையும் தருகிறது. அத்துடன் கொய்யா, ஆப்பிள், பேரிக்காய் போன்ற பழங்களை உண்பதும் மேனிக்கு மினுமினுப்பைக் கூட்டுகிறது.

சைவ உணவுகளை எடுத்துக் கொள்வதன் மூலம் சர்க்கரை நோய், புற்று நோய், சிறுநீரகக் கோளாறுகள், ஸ்ட்ரோக் மற்றும் எலும்பு தேய்மானம் போன்றவை ஏற்படாமல் தடுப்பதில் சைவ உணவுகள் பெரும்பாங்காற்றுகின்றன. அசைவ உணவுப் பிரியர்கள் இதை இழக்கிறார்கள்.

முன்னோர்களின் ஆன்மீக அறிவியல்

புரட்டாசி மாதத்தில் ஏற்படும் திடீர் வெப்ப மாறுதல் காரணமாக பல உபாதைகள் ஏற்படும்.  நோய்க்கிருமிகளையும் உருவாக்கிவிடும். இதனால் காய்ச்சல், சளி காரணமாக ஜுரம் போன்ற தொந்தரவுகள் ஏற்படும். துளசிக்கு இதைக் கட்டுப்படுத்தும் ஆற்றல் உள்ளது.

எனவே தான், புரட்டாசி மாதத்தில் அசைவம் ஒதுக்கி விரதம் இருந்து பெருமாள் கோயிலுக்கு சென்று வழிபடவும், அங்கு பிரசாதமாக அளிக்கப்படும் துளசி தீர்த்தத்தை பருகும் வழக்கத்தை நமது முன்னோர்கள் ஏற்படுத்தி வைத்தனர். இதன் வாயிலாக இரட்டைப் பலன்களை நாம் பெறலாம். காக்கும் கடவுளான பகவான் விஷ்ணுவின் அருளாசிகளை பெற இயலும். ஆரோக்கியத்தையும் பாதுகாத்துக் கொள்ள முடியும்.


banner

Leave a Reply