Vasavi Jayanthi: Invoke the Wish-Fulfilling Goddess of this Yuga For Protection, Divine Wisdom, Prosperity & Success JOIN NOW

பிரதோஷம் உருவான வரலாறு | Pradosham History In Tamil

December 29, 2020 | Total Views : 2,424
Zoom In Zoom Out Print

இந்திரலோகத்தில் தேவந்திரன் (இந்திரன்) தனது வாகனமான ஐராவதத்தின் (வெள்ளை யானை) மீது அமர்ந்து மகிழ்ச்சியுடன் வலம் வந்து கொண்டிருந்தான். அப்போது அவன் எதிரே துர்வாச முனிவர் வந்து கொண்டிருந்தார். எப்போதும் சாபத்தையே வழங்குகின்ற துர்வாசர் தன் கையில் இருந்த மலர் மாலையை தேவேந்திரனை வாழ்த்தும் விதமாக அவனிடம் கொடுத்தார்.

தேவேந்திரன் அதை வாங்கி மிகவும் அலட்சியத்துடன் யானையின் தலை மீது வைத்தான். இதைக் கண்டதும் துர்வாசரிகன் கண்கள் சிவந்தன. யானையோ அந்த மாலையை எடுத்து தனது காலடியில் போட்டு மிதித்தது. ஏற்கனவே தேவேந்திரனின் செயலால் கோபமுற்ற துர்வாசர் இதைக் கண்டதும், “தேவேந்திரா! அவ்வளவு ஆணவமா உனக்கு? வெறுக்கை (செல்வத்தின்) மீது வெறுக்கை கொண்டவர்கள் நாங்கள். லட்சுமி தேவியின் அருள் கடாட்சம் பரிபூரணமாக உனக்கு கிடைக்கட்டும் என்று அந்த அன்னையின் பிரசாதத்தை உனக்கு அளித்தேன். ஆனால் செல்வச் செருக்கில் ஆணவத்துடன் உலா வரும் நீயோ அதை அலட்சியப்படுத்திவிட்டாய். உன்னுடைய ஆணவத்திற்கு காரணமான செல்வங்கள் அனைத்தையும் நீ இழக்கக் கடவாய்” என சாபமிட்டார். ஆன்மிகம் குறித்து மேலும் அறிய எங்கள் வலைத்தளம் வாருங்கள்.

சாபம் பலித்தது:

துர்வாசரின் சாபம் உடனே பலித்துவிட்டது. தேவேந்திரனின் அனைத்து செல்வங்களும் அவனை விட்டு நீங்கின. அன்னை லட்சுமி தேவி பாற்கடலுக்கு சென்று மறைந்துவிட்டாள்.  இப்போது பாற்கடலை கடைந்தால் தான் இழந்த செல்வங்களை பெற முடியும் என்ற நிலை தேவேந்திரனுக்கு. தேவர்களும், அசுரர்களும் பாற்கடலை கடைவது என முடிவாயிற்று.

மந்திரகிரி மலையை மத்தாக்கி, வாசுகி என்ற பாம்பை கயிறாக்கி பாற்கடலை கடையத் தொடங்கினர். வாசுகியின் தலைப்பக்கத்தை அசுரர்களும், வால் பக்கத்தை தேவர்களும் பிடித்துக் கொண்டனர். பணிகள் வேகமாக நடைபெற்றது. சோதனையாக மத்தான மந்திரகிரி மலை கடலுக்குள் அமிழத் துவங்கியது. உடனே மகா விஷ்ணு கூர்ம அவதாரம் எடுத்து அதை தாங்கி மூழ்காதபடி தடுத்தார். மீண்டும் பாற்கடலை கடைய ஆரம்பித்தார்கள். அப்போது வேறு ஒரு விபரீதம் நடந்தது. ஆலகால விஷம் வெளிப்பட்டது. அதன் கடுமையை தாங்க முடியாமல் அனைவரும் துடித்தனர்.

சிவபெருமானிடம் வேண்டினர்:

விஷத்தின் வீரியம் தாங்க முடியாமல் அவதியுற்ற தேவர்கள் கைலாயத்தில் நந்தி தேவரிடம் அனுமதி பெற்று சிவபெருமானை சரணடைந்தனர். “கருணைக் கடலே, ஆபத்பாந்தவா, ஆதியும் அந்தமுமாய் இருப்பவரே கடுமையான இந்த விஷத்தில் இருந்து எங்களை நீங்கள் தான் காப்பாற்ற வேண்டும்” என சிவபெருமான் காலடியில் முறையிட்டு வேண்டினர். 

சிவபெருமானும் அவர்களது நிலையை கண்டு மனமிரங்கி, அவரின் மறுவடிவமான சுந்தரரிடம் “கடும் விஷத்தை கைகளில் எடுத்துக் கொண்டு வா” என்றார்.  விஷத்தைக் கொண்டு வந்தார் சுந்தரர். ஆலகால விஷத்தை கொண்டு வந்ததால் சுந்தரர் ‘ஆலகால சுந்தரர்’ எனப் பெயர் பெற்றார். விஷத்தை வாங்கிய சிவபெருமான் அதை உண்டார். இதைக் கண்ட அன்னை பார்வதி அனைத்து உலகங்களும் அய்யனுள் இருக்கின்றனவே, அதில் உள்ள ஜீவராசிகள் அனைத்தும் துன்பத்திற்குள்ளாகுமே என நினைத்து அம்பிகை கருணையோடு சிவபெருமானின் கழுத்தை தடவினார். அவ்வளவு தான் விஷம் அவரது கழுத்திலேயே தங்கிவிட்டது. இதன் காரணமாக சிவபெருமானுக்கு நீலகண்டர் என்ற திருநாமம் உண்டாயிற்று.

சிவபெருமானின் ஆனந்தத் தாண்டவம்:

தேவர்கள் அனைவருக்கும் கலக்கம் தீர்ந்தது. அவர்கள் மகிழ்ச்சியடையும் பொருட்டு ரிஷபத்தின் பிரணவ வடிவமான கொம்புகளின் நடுவில் சிவபெருமான் ஆனந்தத் தாண்டவமாடினார். மற்ற தெய்வங்களும், மகா முனிவர்களும், ஆனந்தத் தாண்டவத்தை கண்டு தரிசித்தனர். இவ்வாறு சிவபெருமான் அருள்புரிந்து அவர்களை காப்பாற்றிய காலமே ‘பிரதோஷ வேளை’யாக கடைப்பிடிக்கப்படுகிறது.

பிரதோஷ வேளை:

பிரதோஷத்துக்கு 'ரஜனீ முகம்’ என்ற பெயர் உண்டு. சம்ஸ்கிருதத்தில் 'ரஜனீ’ என்றால் இரவு என்று பொருள். 'ரஜனீ முகம்’ என்பது இரவின் முன்பகுதியான சாயங்காலத்தைக் குறிக்கிறது.

மாதந்தோறும் இருமுறை - வளர்பிறை, தேய் பிறை திரயோதசி ( 13 ம் நாள் ) நாட்கள் பிரதோஷ தினங்களாகும். இந்நாட்களில் மாலை 4.30 மணி முதல் 6.00 மணி வரையிலான நேரம் பிரதோஷ காலமாகும். தேவர்களுக்கும் மற்றவர்களுக்கும் சிவபெருமான் அருள் புரிந்தது ஒரு சனிக்கிழமையன்று என்பதால், சனிக்கிழமை அன்று வரும் பிரதோஷம் மிகவும் சிறப்பானதாகக் கருதப்படுகிறது. ஆக பிரதோஷ வேளையில் சிவபெருமானை வணங்கி வழிபட்டால் வாழ்வில் ஏற்படும் துன்பங்கள் நீங்கி இன்பம் பெறலாம் என்பது நம்பிக்கை. 

20 வகையான பிரதோஷங்கள்:

மொத்தம் 20 வகையான பிரதோஷங்கள் உள்ளதாக சொல்லப்படுகிறது. அவற்றில் முக்கியமான ஐந்து பிரதோஷங்கள் நித்தியப் பிரதோஷம், பக்ஷப் பிரதோஷம், மாதப் பிரதோஷம், மகா பிரதோஷம், பிரளயப் பிரதோஷம் ஆகும்.

நித்தியப் பிரதோஷம்:

தினமும் சூரியன் மறைவதற்கு முன்னால் இருக்கும் ஒன்றரை மணி நேரத்தில் இருந்து (சுமாராக மாலை 4.30 மணியிலிருந்து) நட்சத்திரங்கள் தோன்றக்கூடிய காலம் வரை உள்ள மாலை நேரம் நித்தியப் பிரதோஷம் எனப்படுகிறது.

பக்ஷப் பிரதோஷம்:

வளர்பிறை திரயோதசி திதியில் வரும் பிரதோஷம் 'பக்ஷப் பிரதோஷம்’ எனப்படும்.

மாதப் பிரதோஷம் :

தேய்பிறை திரயோதசி திதியில் வரும் பிரதோஷம் 'மாதப் பிரதோஷம்’ எனப்படும்.

மகா பிரதோஷம்:

சிவ பெருமான் விஷம் அருந்தி, துயர் தீர்த்த (பிரதோஷம்) காலம் ஒரு சனிக்கிழமையன்று என்பதால், சனிக்கிழமையில் வரும் பிரதோஷம் 'மகா பிரதோஷம்’ எனப்படும்.

பிரளய பிரதோஷம்:

பிரளய காலத்தில் எல்லா ஜீவராசிகளும் சிவபெருமானிடம் ஐக்கியம் ஆகும். உலக முடிவில் உண்டாகும் அந்தக் காலமே பிரளய பிரதோஷம் என அழைக்கப்படுகிறது.

பிரதோஷத்தின்போது வலம் வரும் முறை:

மற்ற நாட்களில் சிவன் கோயிலில் வலம் வருவதற்கும் பிரதோஷத்தின்போது வலம் வருவதற்கும் வித்தியாசம் உண்டு. பிரதோஷத்தன்று வலம் வரும் முறையை, 'சோமசூக்தப் பிரதட்சிணம்’ அல்லது சோமசூத்ரப் பிரதட்சிணம் என்று சொல்வார்கள்.

சோமசூக்தப் பிரதட்சிணம் செய்யும் முறை:

முதலில் நந்தியை வணங்கி, பிறகு அதன் பிரணவ வடிவமான கொம்புகளின் நடுவே சிவபெருமானை தரிசனம் செய்ய வேண்டும். அதன் பிறகு வழக்கமாக வலம் வருவதற்கு மாறாக, அப்பிரதட்சிணமாக (எதிர் வலமாக) சண்டிகேஸ்வரர் சந்நிதி வரை போய்த் திரும்ப வேண்டும். அபிஷேகத் தீர்த்தம் வரும் வழியைத் தாண்டக் கூடாது!

இதன்பின் போன வழியே திரும்ப வேண்டும். நந்தியை தரிசித்து, தினந்தோறும் செய்யும் வழக்கப்படி வலம் வர வேண்டும். அப்போதும், அபிஷேகத் தீர்த்தம் வரும் வழியைத் தாண்டாமல் அப்படியே திரும்பி, நந்தி வரை வர வேண்டும். இந்த முறைப்படி மூன்று தடவை செய்ய வேண்டும். இதுவே 'சோமசூக்தப் பிரதட்சிணம்’.

ஆலகால விஷம் வெளிப்பட்டபோது, பயத்துடன் அனைவரும் கயிலையை நோக்கி ஓடினர். அப்போது விஷம் அப்பிரதட்சிணமாக - அவர்களுக்கு எதிராக வந்து விரட்டியது. எனவே, அவர்கள் வந்த வழியே திரும்பி ஓடினர். அங்கும் அவர்களுக்கு எதிராக விஷம் வந்து துன்புறுத்தியது. இப்படி இட-வலமாக அவர்கள் வலம் வந்த முறைதான் 'சோமசூக்தப் பிரதட்சிணம்’ என்று கடைப்பிடிக்கப்படுகிறது.

பிரதோஷ விரதம்:

பிரதோஷ விரதம் மேற்கொள்ள எண்ணுபவர்கள், வளர்பிறை, தேய்பிறை என இரு பிரதோஷ தினங்களிலும் கடைப்பிடிக்கலாம். விரதம் இருப்பவர்கள் காலையில் எழுந்து குளித்துவிட்டு  அந்த நாள் முழுவதும் சிவ நாமத்தையோ, ஓம் நமசிவாய என்னும் மந்திரத்தையோ ஜெபிக்கலாம். சிவபுராணத்தைப் படித்தால் இன்னும் சிறப்பு.

மாலை பிரதோஷ வேளையில் சிவன் கோயிலுக்கு சென்று, நந்தி தேவருக்கு அருகம்புல் மாலை சார்த்தி, நெய் தீபம் ஏற்றி வழிபட வேண்டும். சிவனுக்கு வில்வத்தால் அர்ச்சனை செய்வது சிறப்பு.  நந்தி தேவரிடமும், சிவபெருமானிடமும் நமது பிரார்த்தனைகளை நிறைவேற்றி வைக்குமாறு வேண்டி ஆலயத்தை வலம் வரலாம். பிரதோஷ தரிசனத்தை முடித்து பிரசாதம் உண்டு விரதத்தை முடிக்கலாம். இதில் இன்னொரு சிறப்பு என்னவென்றால் பிரதோஷ வேளையில் அனைத்து தெய்வங்களும், மகா முனிவர்களும், சித்தர்களும் சிவபெருமானை வணங்கி வழிபடுவார்கள். அந்த நேரத்தில் நாம் சிவபெருமானை தரிசிக்கும் போது அவரது அருள் கடாட்சமும், அனைத்து தெய்வங்களின் அருளாசிகளும் கிடைக்கப் பெறலாம்.

பிரதோஷ விரதத்தின் பலன்கள்:

சிவபெருமான் அபிஷேகப் பிரியர் என்பதால் ஒவ்வொரு அபிஷேகத்திற்கும் ஒவ்வொரு விதமான பலன்கள் உண்டு. பிரதோஷ விரதம் மேற்கொள்பவர்களுக்கு பாவங்கள் விலகும், திருமணம் கைகூடும், குழந்தைப் பேறு கிடைக்கும், வறுமை விலகும், தீராத நோய்களும் நீங்கும், சகல காரியங்களிலும் வெற்றி கிடைக்கும். சகல சௌபாக்கியங்களையும் தரக்கூடியது பிரதோஷ விரதம்.

banner

Leave a Reply

Submit Comment