அவன் அன்றி ஒரு அணுவும் அசையாது என்பார்கள். “நீ அசைந்தால் அசையும் அகிலம் எல்லாம்” என்று நாம் கடவுளைப் போற்றுகிறோம். இந்த பிரபஞ்சம் தோன்றக் காரணமாக இருப்பது கடவுள் தான் என்ற நம்பிக்கை நமது மனதில் வேரூன்றி உள்ளது எனலாம். அது மட்டும் அன்று, நாம் வாழ்வில் பெற்ற, பெறுகின்ற, பெறப்போகும் அனைத்தும் அவன் அருளால் கிடைப்பவையே ஆகும். அப்படிப்பட்ட இறைவனுக்கு நாம் வாழும் வீட்டிலும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும். இதனை கருத்தில் கொண்டு தான் நாம் நமது வீட்டில் கடவுளுக்கு என்று தனி அறை அல்லது தனி இடம் அமைத்து வணங்கி வழிபட்டு வருகிறோம். அது மட்டும் அன்றி அதனை சுத்தமாக வைத்துக் கொள்ளவும் நாம் விழைகிறோம். இது கடவுள் நம்முடன் இருப்பது போன்ற ஒரு உணர்வை ஏற்படுத்துகிறது. நமக்கு ஒரு துன்பம் என்றால் கடவுள் முன் நின்று கஷ்டம் தீர பிரார்த்தனைகளை மேற்கொள்கிறோம். இதனால் இறை தொடர்பு நமக்கு கிடைக்கிறது. இது நமக்குள் ஒரு நேர்மறை ஆற்றலை கொண்டு சேர்க்கிறது.
பூஜை அறையின் சிறப்பம்சம்:
ஒரு வீடு என்றால் வரவேற்பறை, படுக்கை அறை, சமையல் அறை, கழிப்பறை என்று தனித்தனியாக அறைகளை அமைத்துக் கொள்கிறோம். அது போல பெரும்பாலான வீடுகளில் கடவுளுக்கென்று பூஜை அறை இருப்பது பொதுவான விஷயம் ஆகும். அவ்வாறு பூஜை அறை வைத்து இருப்பவர்கள் தினமும் கடவுளுக்கு விளக்கேற்றி வழிபடுவது வழக்கம். பண்டிகை நாட்களில் சிறப்பு வழிபாடுகளையும் மேற்கொள்ளும் பழக்கம் இன்றும் நம்மிடையே உள்ளது. பூஜை அறையை சுத்தமாக வைத்துக் கொண்டு தினமும் விளக்கேற்றி பூஜை செய்து, வாசனை மிக்க தூப தீபங்கள் காட்டி வழிபடும் போது வீட்டில் நேர்மறை ஆற்றல் பெருகுவதை நாம் கண்கூடாகக் காணலாம்.
பூஜை அறை இருக்க வேண்டிய திசை:
நாம் வாழும் வீடு தனி வீடாக இருந்தாலும் சரி அடுக்கு மாடி குடியிருப்பு என்றாலும் சரி பூஜை அறையை தனியாக வைத்துக் கொள்வது சிறப்பு இடப் பற்றாக்குறை இருந்தால் தனி அலமாரி வைத்து அதில் கடவுளின் படங்கள் அல்லது விக்கிரகங்களை வைத்து வழிபட வேண்டும்.பூஜை நேரம் தவிர மற்ற நேரங்களில் திரை போட்டு மறைத்து வைப்பது நல்லது.
பூஜை அறையை எந்த திசையில் எப்படி வைக்க வேண்டும் என்று காணலாம் வாருங்கள். பூஜை அறை வைக்க சரியான திசை வடகிழக்கு மூலை ஆகும். இது ஈசான்ய மூலை என்று கூறுவார்கள். இதற்கு காரணம் பூமியின் மொத்த சாய்மானமும் வடகிழக்காக சாயந்துள்ளது. தெற்கு அல்லது மேற்கு சுவர் ஒட்டி படங்கள் மற்றும் விக்கிரகங்களை வைக்க வேண்டும். இடப்பற்றாக்குறை மற்றும் வீட்டின் அமைப்பு காரணமாக வடகிழக்கு திசையில் பூஜையறை வைக்க முடியாவிடில் கன்னி மூலை எனப்படும் தென்மேற்கு மூலையில் பூஜை அறைவைக்கலாம். பூஜை அறை அல்லது பூஜை அலமாரியை படுக்கை அறையில் வைக்கக் கூடாது. பூஜை அறையை மாடிக்கு கீழ் வைக்கக் கூடாது. பெரிய வீடாக இருந்தால் வீட்டின் மையப் பகுதியில் பூஜை அறை வருமாறு வைத்துக் கொள்வது சிறப்பு. ஒரே வெட்டில் கீழ்த்தளம் மற்றும் மேல் தளம் இருக்குமாயின் கீழ் தளத்தில் தான் பூஜை அறையை அமைக்க வேண்டும்.

Leave a Reply