இந்து என்பது தனிப்பட்ட மதமோ சமயமோ அல்ல. சனாதன தர்மம் என்பது இந்து சமயத்தை குறித்து வந்த பெயராகும். வாழ்க்கை முறையைப் பற்றிக் கூறும் தர்மம் ஆகும். தர்மம் என்றால் மதம் அல்ல.தர்மம் என்பது நாம் பின்பற்ற வேண்டிய விதி முறைகள். நமது வாழ்க்கை சிறந்த முறையில் நிகழ்வதற்கான அடிப்படை விதிமுறைகள் என்ன என்பதை மட்டுமே இந்து மதம் கூறுகிறது. இந்த விதிமுறைகள் ஒரு திணிப்பாக இல்லாமல், அடித்தளமாக இருக்கின்றன.
இந்து மத வழிபாடுகள்:
இந்து மதத்தில் சைவம், வைணவம், சாக்தம், காணாபத்தியம், கௌமாரம், சௌரம் என ஆறு பிரிவுகள் உள்ளன.
சைவம் என்பது சிவனை வழிபடும் சமயம் ஆகும். வைணவம் என்பது விஷ்ணுவை கடவுளாக வழிபடும் சமயம் ஆகும். சாக்தம் என்பது சிவசக்தியை வழிபடும் சமயம் ஆகும். காணாபத்தியம் என்பது கணபதியை வழிபடும் சமயம் ஆகும். கௌமாரம் என்பது முருகனை வழிபடும் சமயம். சௌரம் என்பது சூரியனை வழிபடும் சமயம் ஆகும்.
இறைவழிபாடும் சின்னங்களும்:
இந்து மதம் இறை வழிபாட்டை வலியுறுத்துகிறது. தூய பக்தி மற்றும் சரணாகதி தத்துவத்திற்கு முக்கியத்துவம் அளிக்கிறது. அதே போல நமது உள்ளம் மற்றும் உடலை தூய்மை படுத்தும் வகையில் நெற்றியில் சின்னங்களை இட்டுக் கொள்வது சிறப்பானதாக கருதப்படுகிறது. இது அறிவியல் ரீதியாக நன்மை பயக்கும். சனாதன தர்மம் அறிவியல் ஆன்மீகத்தின் அடித்தளத்தைக் கொண்டுள்ளது. பண்டைய இந்து இலக்கியங்களிலும் அறிவியலும் ஆன்மீகமும் ஒருங்கிணைக்கப்பட்டிருப்பதைக் காணலாம். ஈசாவாஸ்ய உபநிஷத் எனப்படும் யஜுர்வேதத்தின் 40வது அத்தியாயத்தில் அறிவியல் அறிவைப் பயன்படுத்தி நம் வாழ்வில் ஏற்படும் பிரச்சினைகளைத் தீர்க்கவும், ஆன்மீக அறிவை தத்துவக் கண்ணோட்டத்தின் மூலம் அழியாத நிலையை அடையவும் பயன்படுத்துவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
வாழ்வின் பிரிவுகள்:
இந்து மதம் வாழ்க்கையை நான்காகப் பிரிக்கின்றது. இவை ஆசிரமம் என்று அழைகப்பெறுகின்றன. அவையாவன.
1.பிரம்மச்சர்யம்- இளமை நோன்பு
2. கிரகஸ்தம்- இல்லறம்
3 வானப் பிரஸ்தம்- அகத்தவம்
4. சந்நியாசம் - முழுமைப்பேறு
இந்து மத நம்பிக்கைகள் :
நாம் செய்யும் செயல்கள் பிறரை துன்புறுத்தாமல் இருக்க வேண்டும் என்பதை இந்து மதம் வலியுறுத்துகிறது. நமது நல்ல செயல்கள் புண்ணியக் கணக்கிலும், தீய செயல்கள் பாவ கணக்கிலும் சேரும் என்ற நம்பிக்கை இந்து மதத்தில் உள்ளது. அதற்கேற்ப நமது வாழ்வில் இன்ப துன்பங்களை நாம் அனுபவிப்போம் என கூறுகிறது. அதே போல முற்பிறவி மற்றும் மறுபிறவியை இந்து மதம் நம்புகிறது. மேலும் நமது பாவ புண்ணிய செயல்களின் அடிப்படையில் தான் பிறவிகள் அமைகிறது. சம்சாரம் என்பது மீண்டும் மீண்டும் பிறப்பு மற்றும் இறப்பு (மறுபிறவி) சுழற்சியைக் கடந்து செல்வதாகும். இந்த சுழற்சியின் இருப்பு கர்மாவால் நிர்வகிக்கப்படுகிறது என்று இந்துக்கள் நம்புகிறார்கள். உடல் அழியக் கூடியது. ஆன்மா அழியாதது. ஆன்மா மீண்டும் மீண்டும் வெவ்வேறு உடலெடுத்து பல பிறவிகளைக் கடைந்து இறுதியில் இன்றைவனடியை சேரும் என்ற நம்பிக்கையும் உள்ளது.
இந்து மதமும் ஆன்மீகமும்
இந்து மதம் நித்திய கர்ம அனுஷ்டாங்களை சரிவர கடைபிடிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறது. இவை யாவும் ஆன்மீக ரீதியாகவும் விஞ்ஞான ரீதியாகவும் மனதிற்கும் உடலுக்கும் நன்மை அளிப்பவையாக உள்ளன.ஒவ்வொரு ஆசாரத்திலும் ஆன்மீகத்தின் ஒரு கூறு இருக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். ஆன்மீகம் இல்லாமல், சனாதன தர்மத்தில் எதுவும் இல்லை. பொதுவாக எல்லோரும் இந்த ஆன்மிகம்தான் மதம் என்று தவறான எண்ணம் கொண்டுள்ளனர். இந்து தர்மத்தில் ஆன்மீகம் வேறு. இங்கு மதம் பற்றிய கேள்வியே இல்லை, ஏனென்றால் இந்து தர்மம் ஒரு தனிநபரோ, தீர்க்கதரிசியோ அல்லது அவதாரமோ உருவாக்கப்படவில்லை. ஒரு இந்துவின் சாதாரண வாழ்வில் ஒவ்வொரு இந்து வழக்கத்திலும் ஆன்மீகம் ஒரு பகுதியாகும்.
தான தருமங்கள்:
இந்து மதம் தான தருமங்களை வலியுறுத்துகிறது வருமானத்தின் குறிப்பிட்ட ஒரு பகுதியை தான தருமங்களுக்காக பயன்படுத்த வேண்டும். ஏழை எளியோருக்கும் தேவைப்படுவோருக்கும் தக்க நேரத்தில் உதவுதன் மூலம் வாழ்வு வளமாகும். நாம் செய்யும் தான தருமங்கள் நம்மைக் காக்கும் என்பதை இந்து மதம் மூலம் அறியலாம்.

Leave a Reply