“போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து” என்னும் பழமொழியைப் புரிந்து கொண்டு நடந்தால் வாழ்க்கை இனிக்கும். அதற்காக சும்மா இருந்துவிட முடியாது. என்றாலும் இந்தப் பழமொழி இந்தக் காலத்திற்கும் பொருந்துமா என்றால் கண்டிப்பாகப் பொருந்தும் என்றே கூறலாம்.
முன்னோர்கள் கூறிய பழமொழிகள் யாவும் நமது நல்வாழ்க்கைக்கு அஸ்திவாரமாக அமைகின்றது. அதன் வழி நடப்பவர்கள். சிலர். சிலர் தமது அனுபவத்தில் இருந்து கற்றுக் கொள்வார்கள்.
ஒரு ஊரில் ஒரு பெரிய பணக்காரர் இருந்தார். அவரிடத்தில் நிறைய வேலைக்காரர்கள் இருந்தனர். அவர்கள் யாவரும் தங்களுக்கு அளிக்கும் வேலையை திறம்பட செய்பவர்களாகவே இருந்தனர். என்றாலும் அவருக்கு அதில் உடன்பாடும் இல்லை. திருப்தியும் இல்லை. அவர்கள் வேலையைப் பற்றி குறை கூறிக் கொண்டே இருப்பார். சில சமயங்களில் அவர்களின் கூலியை குறைத்து கொடுப்பார். சிலரை வேலையை விட்டே அனுப்பி விடுவார். இப்படியே காலம் சென்று கொண்டிருந்தது. வேலை செய்பவர்களும் வேறு வழியின்றி பணத்திற்காக அவரை பொறுத்துக் கொண்டு போயினர்.
அந்தப் பணக்காரனிடத்தில் இந்தக் குறை இருந்தாலும் அவர் சிறந்த கடவுள் பக்தர். அவர் பக்தியில் எவரும் குறை காண முடியாது. தனக்கு வேலைக்கரார்கள் சரியில்லை என்று கடவுளிடம் தொடர்ந்து முறையிட்டுக் கொண்டே இருந்தார். அவர் பக்திக்கு மெச்சிய கடவுளும் அவர் முன் தோன்றி உனக்கு நான் ஒரு சேவகனை அனுப்புகிறேன். நீ அவனை பயன்படுத்திக் கொள் என்று கூறி விட்டு மறைந்தார்.
கடவுள் சேவகனாய் அனுப்பிய பூதம் அந்தப் பணக்காரனை வணங்கி, “ஐயா, நான் விரைந்து வேலைகளை முடிப்பேன். எவ்வளவு வேலை கொடுத்தாலும் செய்வேன். எனக்கு எந்தக் கூலியும் வேண்டாம். ஆனால், எனக்கு வேலை கொடுக்காமல் நிறுத்தி விட்டால் நான் உங்களைத் தின்று விடுவேன்” என்று கூறியது.
அந்தப் பணக்காரனும் மிகவும் மகிழ்ந்து ஒவ்வொரு வேலையாக அந்த பூதத்திற்கு கொடுத்துக் கொண்டிருந்தான். அந்தப் பூதம் வேலை கொடுத்த நொடியிலேயே முடித்து விடும். இவ்வாறு அனைத்து வேலைகளையும் கொடுத்து விட்டான். அவனுக்கு கொடுக்க வேலையே இல்லை. பூதம் தின்று விடுமே என்று பயந்து கடவுளிடம் முறையிட்டுக் கொண்டே ஓடினான். அப்பொழுது தான் அவன் புரிந்து கொண்டான். போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து. நமது வேலைக்காரர்கள் நன்றாகத் தானே வேலை செய்கிறார்கள் என்பதை உணர்ந்து கொண்டான். அவனுக்கு பாடம் புகட்டிய கடவுளும் அவன் முன்னே ஒரு நாயை அனுப்பி வைத்தார். அந்தப் பணக்கரார் பூதத்திடம் நாயின் வாலை நிமிர்த்துமாறு கூறினான். முடியாத நிலையில் பூதம் அந்தப் பணக்காரனிடம் இருந்து விடை பெற்றுச் சென்று விட்டது.

Leave a Reply