AstroVed Menu
AstroVed
search
search
x

பெரியாச்சி (அ) பேச்சி அம்மன் வரலாறு

dateJune 30, 2023

பெரியாச்சி (அ) பேச்சி அம்மன் தமிழக கிராம மக்களால் அதிக அளவில் வழிபடப்படும் தெய்வம். இவளை காவல் தெய்வம் என்றும் கூறலாம். குறிப்பாக பேச்சி அம்மன் கர்ப்பமாக இருக்கும் பெண்களின் காவல் தெய்வம் என்று கூறலாம். குழந்தை நன்கு வளரவும், சுகப் பிரசவம் நடக்கவும் இவளின் அருளை வேண்டி வணங்குகிறார்கள்.

உக்கிரமான உருவத்துடன் தன் கையில் ஒரு குழந்தையை ஏந்திக் கொண்டும், தொடையில் தனது கைகளினால் ஒரு பெண்மணி வயிற்றைக் கீறிய நிலையிலும் , கால் பாதத்தின் கீழ் ஒரு மனிதன் மிதிபட்டுக் கிடக்கவும் தோற்றம் தரும் பேச்சி அம்மன் பார்ப்பதற்குத்தான் உக்கிரமே தவிர அவளை வணங்கித் துதிப்போருக்கு அவள் கருணைக் கடலாகத் திகழ்கிறாள். இதன் பின்னணியில் ஒரு கிராமியக்  கதை உள்ளது. 

அந்தக் காலத்தில் இப்பொழுது இருப்பது போன்ற மருத்துவ மனைகளோ மருத்துவர்களோ இருந்தது கிடையாது. ஆனால் பிரசவம் பார்ப்பத்த்ற்கு திறமை வாய்ந்த மூதாட்டிகள் இருந்தார்கள். அவர்களை அனைவரும் ஆச்சி என்ற பொதுப் பெயரில் அழைப்பார்கள். அப்படி அம்மனே வயதான ஆச்சி வேடத்தில் வந்து பிரசவம் பார்த்து ஒரு கொடூரனை குடும்பத்தோடு அழித்த கதையின் நாயகி தான் பெரியாச்சி அல்லது பேச்சி அம்மன் ஆவாள். இப்பொழுது கதைக்கு வருவோம். 

பேச்சியம்மன் கதை:

முன்பொரு காலத்தில் பாண்டிய நாட்டை வல்லராசா என்னும் பெயர் கொண்ட ஒரு மன்னன் கொடுங்கோலாட்சி புரிந்து வந்தான். அவன் தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து வந்தான்.  தனது குடி மக்களுக்கு மட்டும் அன்றி ரிஷி முனிவர்களுக்கும்  பெரும் தொல்லைகளை கொடுத்து வந்தான். பல அசுரர்களும் அவனுக்கு பக்க பலமாக இருந்ததால் அவனை யாராலும் ஒன்றும் செய்ய முடியவில்லை. அவன் வாங்கி வந்த வரம் அவ்வாறு இருந்தது.

அவனது மரணம் அவனது குழந்தையால் தான் என்பது அவன் பெற்ற வரமாக இருந்தது. அதாவது அவனுக்கு பிறக்க இருந்தக் குழந்தை பிரசவம் ஆனதும் அந்தக் குழந்தையின் உடல் உடனே பூமியைத் தொட்டு விட்டால் அவன் அழிந்து விடுவான்.அவனது நாடும் அழிந்து விடும். மேலும் அவனது குழந்தையே அவனுக்கு மரணத்தை ஏற்படுத்தித் தரும். மாறாக அது பூமியைத் தொடாமல் ஒரு நாள் இருந்து விட்டால் அதற்குப் பிறகு ஒன்றும் ஆகாது. இது தான் அவன் வாங்கி வந்த வரம்.

ஆனால் அவனுக்கு வெகு காலம் வரை குழ்ந்தை பிறக்கவில்லை; பிறகு ஒரு முறை மனைவி கர்ப்பவதி ஆனாள். பிறக்கும் குழந்தை பூமியை உடனே தொட்டு விட்டால் தனக்கு மரணம் சம்பவிக்கும். என்றாலும், அந்த சாபம் தோல்வி அடைந்து விட்டால் அதற்குப் பிறகு தனக்கு ஆபத்து கிடையாது என்பதை தெரிந்து வைத்து இருந்தவன் என்ன செய்வது என தவித்தான்.

அம்மனின் திருவிளையாடல் இங்கு தான் ஆரம்பம் ஆகியது. அவன் அழிய வேண்டும் என்ற விதி இருந்ததினால்  பெரியாச்சி அம்மன் அவன் நாட்டில் ஒரு வயதோகிய பெண்மணி உருவில் வலம் வந்து கொண்டு இருந்தாள்.

ஏற்கனவே கூறியது போல பிரசவம் பார்க்க அந்தக் காலங்களில் வசதி கிடையாது. கட்டில்கள் கிடையாது. மெத்தை கிடையாது. . தரையில் பாயின் மீதுதான் இருந்து பிரசவிப்பார்கள். அதனால்தான் பிரசவம் பார்க்க என்றே அனுபவம் மிகுந்த வயதான ஆச்சிகளை கர்பிணிகளுக்குத் துணையாக இருக்க வைப்பார்கள்.

அரசன் தன்னுடைய படையினரை அனைத்து இடத்துக்கும் அனுப்பி மனைவிக்கு பிரசவம் பார்க்க தக்க துணையைத் தேடினான். ஆனால் அவனுக்கு பயந்து யாரும் அதற்கு முன் வரவில்லை. ராணிக்கு பிரசவ வலி வந்து விட்டது.பிறக்கும் குழந்தையும் நலமாக இருக்க வேண்டும். அதே நேரத்தில் தானும் அழியாமல் இருக்க வேண்டும் எனக் கவலை அடைந்த மன்னன் உடனடியாகக் கிளம்பி தானே ஊருக்குள் சென்று நல்ல ஆச்சியை பிரசவத்திற்காக தேடிக் கொண்டு இருந்த போது மன்னனின் முன்னால் ஒரு வயதான பெண்மணியின் உருவில் இருந்த பெரியாச்சி அம்மன் தென்பட்டாள்.

வயதான பெண்மணி ஒரு தெய்வப் பிறவி என்பதை அறியாமல் அவளது உதவியை மன்னன் நாடினான்.முதியவள் வடிவில் இருந்த பெரியாச்சி அம்மனும் அவனது மனைவிக்கு பிரசவம் பார்த்து அவன் குழந்தையின் உடல் முதலில் பூமியில் படாமல் பார்த்துக் கொள்வதாக உறுதி கூறினாள். கூடவே அவனிடம் ஒரு நிபந்தனையையும் வைத்தாள். அந்த நிபந்தனையின்படி அவள் அவனுக்குப் பிறக்கும் குழந்தையின் உடல் பூமியில் படாமல் வைத்துக் கொண்டு இருந்து விட்டால் அவளுக்கு ஏராளமான பொருட்களைத் தர வேண்டும் என்பது. மன்னனும் தருவதாக உறுதி அளித்தான்.

குழந்தைப் பிறந்தது. மன்னனின் மனைவியின் அருகிலேயே அமர்ந்து கொண்டு இருந்த பெரியாச்சி அம்மனும் குழந்தையை தன்னுடைய கையில் ஏந்திக் கொண்டு அமர்ந்து இருந்தாள். காலக்கெடு முடிந்ததும், அரசன் வந்து அந்தக் குழந்தையை தன் மனைவியிடம் தருமாறு கேட்டான்.  அவனது மனைவியும் ஆச்சியிடம் சண்டையிட்டாள்.

ஆனால் பெரியாச்சி அம்மனோ குழந்தையை தன் கையிலேயே வைத்துக் கொண்டு முதலில் தனக்குத் தர வேண்டிய பொருட்களைக் கொண்டு வருமாறு கூறினாள். 

ஆணவம் பிடித்த மன்னனோ, தன்னை இனி யாராலும் ஒன்றும் செய்ய முடியாது. அப்படியிருக்க   ஒரு வயதான பெண்மணியினால் தன்னை என்ன செய்ய முடியும் என இறுமாப்புக் கொண்டான். கூறியபடி ஒன்றும் தர முடியாது எனவும், குழந்தையைக் கொடுக்காவிடில் உன்னைக் கொன்று விடுவேன் என கோபமாகக் கூறிய வண்ணம் உருவிய வாளுடன் பெரியாச்சியின் அருகில் சென்றான்.

அவ்வளவுதான், அவனது முடிவு நெருங்கிவிட்டதை அறிந்த பெரியாச்சி நான்கு கைகளுடன், உக்கிரமான கோரமான உருவைக் கொண்டு பயங்கரமான கண்களுடன் தன் சுய உருவைக் காட்டியபடி அங்கு அமர்ந்தாள். 

ஒரு கையில் குழந்தையை உயர்த்திப் பிடித்தாள். இன்னொரு கையினால் மன்னனின் மனைவியின் குடலை உருவி மாலையாக போட்டுக் கொண்டு அவள் உடலின் உட் பாகங்களைக் கடித்துத் தின்றாள்.  தன் அருகில் உருவிய வாளுடன் வந்த மன்னனை தன் காலடியில் தள்ளி அழுத்திக் கொன்றாள். அவன் படையினரை அவளது அடிமைகளான அசுரர்கள் துரத்திக் கொன்றார்கள்.

காவல் தெய்வமாக பேச்சி அம்மன்:

இப்படியாக கொடுங்கோல் மன்னனின் கதையை அவன் வம்சத்தோடு முடித்ததும் ஆக்ரோஷமாக நின்றாள். அவளை நோக்கி கை கூப்பி நின்ற மக்கள் அனைவரும் அம்மனிடம் கோபத்தை தனித்துக் கொள்ளுமாறு வேண்டினர். தங்களை காத்தருள வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டனர்.அம்மனும் கோபம் தணிந்து தன்னைப் பற்றிய உண்மையைக் கூறினாள். 

தான் காளியின் அவதாரம் எனவும், தன்னைத் துதித்து வணங்கி வந்தால் தான் குடிகொள்ளும் ஊரைக் காப்பேன் எனவும், கர்பிணிகளுக்கு சுகப் பிரசவம் ஆகவும், அவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகள் நன்கு வளரவும் தான் உதவுவேன் என்றும், அவர்களுடைய குழந்தைகளுக்கு தானே பாதுகாவலராக இருப்பேன் எனவும் உறுதி தந்தாள்.

இப்படியாக தன்னை அடையாளாம் காட்டிக் கொண்டவள் பல கிராமங்களில் கிராம தேவதையாகவும், நகரங்களில் நகர மக்கள் வணங்கும் பேச்சி அல்லது பெரியாச்சி அம்மனாகவும் விளங்கி வருகிறாள். 


banner

Leave a Reply