ஸ்ரீ துர்கா பரமேஸ்வரி அம்மன்குடி கைலாசநாதர் திருக்கோவில்
தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் தாலுக்காவில், கும்பகோணத்தின் அருகில் இருக்கும் அம்மன்குடியில் அமைந்திருக்கும் மகிஷாசுர மர்த்தினி ஆலயம் தேவி துர்க்கைக்கு அர்ப்பணிக்கப்பட்டது. அம்மன்குடி ராஜராஜேஸ்வரம் என்றும் தேவி தபோவனம் என்றும் அழைக்கப்படுகிறது.
தல வரலாறு :
மகிஷாசுரனை வதம் செய்த பிறகு அன்னை அவனது கழுத்தில் இருந்த லிங்கத்தை அம்மன்குடியில் பிரதிஷ்டை செய்து கைலாசநாதர் என்று பெயரிட்டாள். பிறகு மகிஷாசுரனைக் கொன்ற பாவம் தீர அம்மன்குடியில் 12 வருடங்கள் கடும் தவம் இருந்தாள். தனது தவத்திற்கு இடையூறு வராமல் இருக்க வினாயகரையும் பிரதிஷ்டை செய்தாள்.
பன்னிரண்டு ஆண்டுகள் தவம் முடிந்த பிறகு கைலாசநாதர் அவள் முன் தோன்றி மகிஷாசுரனைக் கொன்ற பாவம் கரைந்து விட்டது எனவும் அன்னையை அங்கேயே இருந்து பக்தர்களுக்கு அருள் புரியுமாறும் பணித்தார். அம்மன் தனது இடத்தை தானே தேர்ந்தெடுத்து தவம் செய்து அங்கு குடி கொண்டதால் அம்மன்குடி என்ற பெயர் ஏற்பட்டது.
ராஜராஜேஸ்வரம் :
சோழர் காலத்தில் இந்த இடம் அம்மன்குடி என்றும் ராஜ ராஜேஸ்வரம் என்றும் அழைக்கப்பட்டது.கல்வெட்டு ஆதாரங்களின் படி இந்த கோவில் கி.பி 944ல் கட்டப்பட்டது என அறியப்படுகிறது. ராஜ ராஜ சோழனின் சேனாதிபதியாக இருந்த கிருஷ்ணராம பிரம்மராயன் இங்கு தான் வாழ்ந்ததாக கருதப்படுகிறது. இந்த துர்க்கையை வணங்கி, அவர் பெற்ற சக்தி ஏராளம். அவரது அத்தனை வெற்றிக்கும், புகழுக்கும் இந்த அன்னையின் அருளாசிகள் தான் காரணம் என்று கூறப்படுகிறது. அன்னையின் சக்தி அறிந்து – ராஜ ராஜனும், அவனது பட்டமகிஷிகளும், ராஜேந்திர சோழனும் அன்னையை வணங்கி அன்னையின் அருள் பெற்று, மாபெரும் சாம்ராஜ்யத்தை ஸ்தாபித்தனர்.
பாப விமோசன தீர்த்தம் :
மகிஷாசுரனை கொன்ற பிறகு அன்னை துர்கை காவிரியில் புனித நீராடி அம்மன்குடியை வந்து அடைந்தார். மகிஷாசுரனைக் கொன்று ரத்தக் கறை படிந்த தனது திரிசூலத்தை அம்மன்குடியில் இருக்கும் புஷ்கரிணியில் சுத்தம் செய்தாள். எனவே இங்கு இருக்கும் தீர்த்தம் பாப விமோசன தீர்த்தம் என்று அழைக்கப்படுகிறது.
நாக தோஷம் நீக்கும் விநாயகர் :
இத்தலத்தில் உள்ள விநாயகரின் சிற்பம் சாளக்கிரமத்தால் ஆனது. காலையில் பச்சை, மதியம் நீல நிறம், மீண்டும் மாலையில் பச்சை நிறமாக மாறிவிடும் தன்மை கொண்டது. வழுவழுப்பான கல்லால் ஆனது. விநாயகரின் வயிற்றில் நாகம் உள்ளது. எனவே நாகதோஷம் உள்ளவர்கள் இந்த விநாயகரை வழிபடுகின்றனர். கையில் தவசுமாலை வைத்துள்ளார். இவருக்கு தபசு மரகத விநாயகர் என்ற பெயர் வழங்கப்படுகிறது. அந்த வினாயகர் வெளிச்சத்தில் ஒரு நிறமும், இருட்டில் ஒரு நிறமுமாக இருப்பார். வெளிச்சம் பட அந்த வினாயகரின் நிறம் வெள்ளையாக இருக்கும். சற்று மழைமேகம் திரண்டால் வினாயகரின் மேனி கருப்பாகி விடும். அந்தக்கல் நிறம் மாறுவதை கண்கூடாகப் பார்க்கலாம்.
திரு விழாக்கள் :
மகா சிவராத்திரி, மார்கழி திருவாதிரை, பங்குனி உத்திரம், கார்த்திகை, நவராத்திரி, துர்காஷ்டமி இங்கு கொண்டாடப்படுகிறது. நவராத்திரியின் எட்டாவது நாளான அஷ்டமி அன்று சூர சம்ஹாரம் கொண்டாடப்படுகிறது. செவ்வாய்க்கிழமை, அமாவாசை பௌர்ணமி நாட்களில் விசேஷ பூஜை நடை பெறுகின்றது. ராகு கேது தோஷம் நீங்க இங்கு செவ்வாய்க்கிழமை பூஜை மற்றும் அஷ்டமி பூஜை நடைபெறுகிறது.
வழிபாட்டுப் பலன்கள்:
நோய்கள் தீரவும் கோர்ட் கேஸ் வழக்குகளில் வெற்றி பெறவும். வேலை வாய்ப்பு பெறவும் பக்தர்கள் இங்கு செவ்வாய்க்கிழமை ராகுகால பூஜைகளில் கலந்து கொள்கிறார்கள். நீண்ட ஆயுளுக்கு இங்கு சனிக்கிழமை தோறும் நடக்கும் பூஜையில் கலந்து கொள்கின்றனர் குழந்தைப் பேறு, பாவங்கள் தீர இங்கு வழிபடுகின்றனர். தோஷங்கள் மற்றும் பாவங்களை நீக்கும் தலமாக இத்தலம் கருதப்படுகிறது. நாக தோஷம் நீங்க இங்கு இருக்கும் விநாயகரை மக்கள் வழிபடுகின்றனர்.
நேரம்: காலை 6 மணி முதல் 11 மணி வரை மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை











