நாம் அனுஷ்டிக்கும் பல வகையான விரதங்களுள் ஏகாதசி விரதம் மிகச் சிறப்பானது. ஏகாதசி என்பது மாதத்தில் இரு முறை வளர்பிறை தேய்பிறை இரண்டிலும் 11 ஆம் திதியாக வருவது!
ஏகாதசி திருமாலுக்கு ப்ரீத்தியான திதி ஆகும். ஏகாதசி ஸ்ரீமன் நாராயணனுக்கு மிகவும் உகந்த நாளாக கருதப்படுகிறது! ஏகாதசி விரதம் இருப்பதன் மூலம் கர்ம வினைகளின் கடுமை குறையும் என்று புராணங்கள் மூலமாக நாம் அறிகிறோம்.
ஒரு வருடத்தில் மொத்தம் 24 ஏகாதசி வருகின்றது. ஒவ்வொரு ஏகாதசிக்கும் ஒவ்வொரு பெயர் உண்டு. அவைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
1. சித்திரை வளர்பிறை ஏகாதசி, காமதா ஏகாதசி.
2. சித்திரை தேய்பிறை ஏகாதசி, பாப மோசனிகா ஏகாதசி.
3. வைகாசி வளர்பிறை ஏகாதசி, மோகினி ஏகாதசி.
4. வைகாசி தேய்பிறை ஏகாதசி, வருதினி ஏகாதசி.
5. ஆனி வளர்பிறை ஏகாதசி, நிர்ஜல ஏகாதசி.
6. ஆனி தேய்பிறை ஏகாதசி, அபரா ஏகாதசி.
7. ஆடி வளர்பிறை ஏகாதசி, விஷ்ணு சயன ஏகாதசி. ‘
8. ஆடி தேய்பிறை ஏகாதசி, யோகினி ஏகாதசி.
9. ஆவணி வளர்பிறை ஏகாதசி, புத்திரத ஏகாதசி.
10. ஆவணி தேய்பிறை ஏகாதசி, காமிகா ஏகாதசி.
11. புரட்டாசி வளர்பிறை ஏகாதசி, பரிவர்த்தன ஏகாதசி.
12. புரட்டாசி தேய்பிறை ஏகாதசி, அஜ ஏகாதசி.
13. ஐப்பசி வளர்பிறை ஏகாதசி, பாபாங்குசா ஏகாதசி.
14. ஐப்பசி தேய்பிறை ஏகாதசி, இந்திரா ஏகாதசி.
15. கார்த்திகை வளர்பிறை ஏகாதசி, பிரபோதின ஏகாதசி.
16. கார்த்திகை தேய்பிறை ஏகாதசி, ரமா ஏகாதசி.
17. மார்கழி வளர்பிறை ஏகாதசி, வைகுண்ட ஏகாதசி.
18. மார்கழி தேய்பிறை ஏகாதசி, உற்பத்தி ஏகாதசி.
19. தை வளர்பிறை ஏகாதசி பீஷ்ம, புத்திர ஏகாதசி
20. தை தேய்பிறை ஏகாதசி, சபலா ஏகாதசி.
21. மாசி வளர்பிறை ஏகாதசி, ஜெய ஏகாதசி.
22. மாசி தேய்பிறை ஏகாதசி, ஷட்திலா ஏகாதசி.
23. பங்குனி வளர்பிறை ஏகாதசி, ஆமலகி ஏகாதசி.
24. பங்குனி தேய்பிறை ஏகாதசி, விஜயா ஏகாதசி.
இந்தக் கட்டுரையில் சித்திரை மாதம் தேய்பிறையில் வரும் பாபமோசனி விரதம் பற்றிக் காண்போம்.
பாபமோச்சனி ஏகாதசி விரதக் கதை!
இந்த விரதத்தின் பலனால் மனிதர்களின் பல பாவங்கள் அழிக்கப்படுகின்றன. இதன் மகிமை, இந்த விரதம் இருப்பதால் கிடைக்கும் பலன்கள் பற்றி ஒருமுறை மன்னர் யுதிஷ்டிரர், பகவான் கிருஷ்ணரிடம் கேட்டார். இதற்கு பதிலளித்த கிருஷ்ணர், "லோமஸ முனிவர் மான்தாதா மன்னருக்கு பாபமோசனி ஏகாதசி விரதம் மகிமை பற்றி கூறிய கதையை நான் உனக்கு கூறுகிறேன், கவனமாகக் கேள்" என்றார்.
பழங்காலத்தில் சைத்ரத் என்ற ஒரு வனம் இருந்தது. அப்சரஸ்கள் கின்னரர்கள் மற்றும் தேவர்கள் அங்கு விளையாடுவார்கள். அந்த இடம் எப்பொழுதும் வசந்த காலமாக இருக்கும், அதாவது அந்த இடத்தில் எப்பொழுதும் விதவிதமான பூக்கள் பூத்துக் கொண்டிருந்தன. சில சமயம் கந்தர்வப் பெண்கள் விளையாடுவார்கள், சில சமயம் தேவேந்திரனும் மற்ற தேவர்க்ளும் விளையாடுவார்கள்.
அதே காட்டில் மேதாவி என்ற முனிவர் தவத்தில் மூழ்கி வாழ்ந்து வந்தார். அவர் சிறந்த சிவ பக்தர். ஒரு நாள் மஞ்சுகோஷா என்ற அப்சரஸ் அவரது தவத்தை கலைக்க முயற்சி செய்தாள் .அவள் சிறிது தூரத்தில் அமர்ந்து வீணை வாசித்து மெல்லிசை பாட ஆரம்பித்தாள்.
அதே நேரத்தில் காமதேவனும் சிவ பக்தரான மேதாவியை வெல்லும் முயற்சியை தொடங்கினார். அந்த அழகிய மஞ்சுகோஷாவின் புருவத்தை வில்லாகவும் கண்களை அம்பாகவும் ஆக்கி மேதாவியின் தவத்தைக் கலைத்தார்.
மகரிஷி மேதாவி மஞ்சுகோஷாவின் மெல்லிசைப் பாடலிலும், அவளது அழகிலும் மயங்கினார். அவள் அழகில் மயங்கிய மகரிஷி மேதாவி, சிவபெருமான் குறித்த தவத்தை மறந்து, காம மயக்கத்தில் அவளை ரசிக்கத் தொடங்கினார்.
இருவரும் இரவு பகல் தெரியாமல் நீண்ட நேரம் மகிழ்ச்சியில் இருந்தனர். அதன் பிறகு மஞ்சுகோஷா அந்த முனிவரிடம்: ஓ முனிவரே! நான் உம்மிடம் வந்து நீண்ட காலமாகிவிட்டது, எனவே என்னை சொர்க்கத்திற்கு செல்ல அனுமதியுங்கள் என்று கேட்டாள்..
அப்சராவின் பேச்சைக் கேட்ட முனிவர் கூறினார். ஓ மோகினி! நீ மாலையில் தானே வந்தாய். காலையில் கிளம்பு என்றார்.
முனிவரின் இத்தகைய வார்த்தைகளைக் கேட்ட அப்சராவும் மகிழ்ந்தாள். அதேபோல இருவரும் சேர்ந்து அதிக நேரம் செலவழித்தனர்.
மீண்டும் ஒரு நாள் மஞ்சுகோஷா முனிவரிடம் கூறினாள். இப்போது நீங்கள் என்னை சொர்க்கத்திற்கு செல்ல அனுமதியுங்கள். முனிவர் இந்த முறையும் அதையே சொன்னார் இன்னும் சிறிது காலம் கழித்துச் செல் என்றார். முனிவரின் பேச்சைக் கேட்ட அப்சரா சொன்னாள்: ரிஷிவரே! நான் உங்களிடம் வந்து ரொம்ப நாளாகிவிட்டது நீண்ட காலம் தங்குவது மதிப்புக்குரியதா? என்று கேட்டாள்.
மஞ்சுகோஷவின் பேச்சைக் கேட்ட முனி நேரத்தை உணர்ந்து தீவிரமாக சிந்திக்கத் தொடங்கினார். அவளை ரசித்துக்கொண்டே ஐம்பத்தேழு வருடங்கள் கடந்துவிட்டதை அறிந்ததும், அப்சராவை காமத்தின் வடிவமாக எண்ணத் தொடங்கினார்.
இவ்வளவு நேரத்தை வீணடித்து விட்டோமே என்று மிகவும் கோபமடைந்தார். இப்போது கடுமையான கோபத்தில் எரித்து விடுவது போல மஞ்சுகோஷாவைப் பார்த்தார். அவரது அடிவயிறு கோபத்தால் நடுங்கத் தொடங்கியது. கோபத்தால் நடுங்கும் குரலில், என் தவத்தை அழித்த தீயவளே! நீ ஒரு பெரிய பாவி மற்றும் மிகவும் கொடியவள், இப்போது நீ என் சாபத்தால் மாயாவியாக மாறுவாய் என்று சபித்து விட்டார்.
முனியின் கோப சாபத்தால் அப்சரா பிஷாசினி ஆனாள். அதைக் கண்டு அவள் தவிப்புடன் சொன்னாள்: ரிஷிவரே! இப்போது இந்த சாபம் எப்படி நிவர்த்தியாகும் என்று தயவுசெய்து சொல்லுங்கள்? என்று கேட்டாள்.
மஞ்சுகோஷாவின் வார்த்தைகளைக் கேட்ட முனி தனது கோபத்திற்கு மிகவும் வருந்தினார். பிறகு மஞ்சுகோஷாவிடம். இந்த சாபத்தை போக்க நான் ஒரு வழி கூறுகிறேன் என்றார். சித்திரை மாதத்தின் கிருஷ்ண பக்ஷ (தேய்பிறை) ஏகாதசிக்கு பாபமோசினி ஏகாதசி என்று பெயர். அந்த ஏகாதசியில் விரதம் இருப்பதன் மூலம் உனக்கு சாப விமோசனம் கிட்டும் என்று கூறினார்.
இவ்வாறு கூறிய முனிவர் அவளுக்கு விரத விதிகள் அனைத்தையும் விளக்கினார். பின்னர் அவர் தனது பாவங்களுக்குப் பரிகாரம் செய்ய தனது தந்தை சியவன ரிஷியிடம் சென்றார். தந்தையே! நான் ஒரு அப்சராவுடன் உறவாடி பெரும் பாவம் செய்துவிட்டேன். இந்தப் பாவத்தினால், அநேகமாக என் பிரகாசமும், என் தவம் அனைத்தும் அழிந்துவிட்டன. இந்தப் பாவத்தைப் போக்க வழி சொல்லுங்கள் என்று கேட்டார்.
சியவன முனிவர் கூறினார்: மகனே! சித்திரை மாத கிருஷ்ண பக்ஷத்தின் பாபமோசினி ஏகாதசியில் பக்தியுடனும் முறையுடனும் விரதம் இருந்தால் உன் பாவங்கள் அனைத்தும் அழிந்துவிடும் என்றார். .
தன் தந்தை சியவன் ரிஷியின் வார்த்தைகளைக் கேட்டு, பாபமோசினி ஏகாதசி விரதத்தை முறையாகக் கடைப்பிடித்தார். அவருடைய பாவங்கள் அனைத்தும் நீங்கப் பெற்றன.
மஞ்சுகோஷா அப்சராவும் பாபமோசினி ஏகாதசி அன்று விரதம் இருந்து மாயாவி உடலை நீத்து மீண்டும் தனது அழகிய வடிவத்தை ஏற்று சொர்க்கத்திற்கு சென்றாள்.
விரத பலன்
இந்த பாபமோசினி ஏகாதசி விரதம் இருப்பதன் பலனால் அனைத்து பாவங்களும் அழிகின்றன. இந்த ஏகாதசியின் கதையைக் கேட்பதும் படிப்பதும் ஆயிரம் பசுக்களை தானம் செய்த பலனைத் தரும். இந்த விரதத்தைக் கடைப்பிடிப்பதன் மூலம் பிரம்ம ஹத்யா செய்தவன், கொலைகாரன், பொன் அபகரிப்பவன், குடிகாரன், சம்சார சாகரத்தை கடக்க முடியாத பயணி போன்றவர்களின் கொடூரமான பாவங்களும் அழிந்து இறுதியில் அவர்கள் சொர்க்கத்தை அடைகின்றனர் என்பதாக ஐதீகம்.

Leave a Reply