ஆலயங்களில் பூஜைகளின் போதும் சரி, வீட்டில் பூஜை செய்தாலும் சரி சுவாமிக்கு நைவேத்தியம் வைத்து தான் வழிபட வேண்டும் என்கின்றன இந்து சாஸ்திரங்கள். நாம் என்ன உணவாக உண்கிறோமோ அதையே கடவுளுக்கும் படைப்பது பக்தி யோகத்தின் ஒரு அங்கமாக உள்ளது.
"நீ எதை உண்கிறாயோ, உண்பதற்கு முன், .அதனை எனக்கு நைவேத்தியமாக வழங்கப்பட வேண்டும், பின்பு அதனை பிரசாதமாக நீ ஏற்க வேண்டும் " என பகவத் கீதை சொல்கிறது. இதனாலேயே இலைகள், மலர்கள், பழங்கள், உணவு, தண்ணீர், பால் என அனைத்தையும் இறைவனுக்கு படைக்கிறோம். பிறகு பிரசாதமாக நாம் ஏற்றுக் கொள்கிறோம்.
இறைவனுக்கு படைக்கப்படும் நைவேத்தியம் நமக்கு எப்படி பிரசாதமாக மாறுகிறது என்பதனைப் பற்றி இந்தப் பதிவில் காண்போம் வாருங்கள்.
கண்ணன் துவாரகையை ஆண்ட காலம் அது. ஒரு நாள் கண்ணனைக் காண குசேலர் வந்தார். கண்ணனும் குசேலரும் ஒன்றாக சேர்ந்து குருகுலத்தில் படித்தவர்கள். குருகுல வாசம் முடிந்த பின் இருவரும் பிரிந்து விட்டார்கள். கண்ணன் செல்வச் செழிப்புடன் அரசராக இருந்தார். அதே நேரத்தில் குசேலர் மிகுந்த வறுமையில் இருந்தார். வறுமையை நீக்க வழி தெரியாமல் தவித்தார். அப்போது குசேலரின் மனைவி, உங்கள் நண்பர் கண்ணன் மிகவும் செல்வச் செழிப்புடன் அரசராக இருக்கிறாரே. அவரிடம் உதவி கேளுங்கள் என்று குசேலரிடம் கூற, அவரும் வேறு வழி தெரியாமல் கண்ணனின் அரண்மனை நோக்கி செல்லலாம் என்று முடிவெடுத்தார். நீண்ட நாட்கள் கழித்து சந்திக்கப் போகும் தனது நண்பனுக்கு என்ன கொண்டு செல்வது என்று குசேலர் யோசித்தார். வறுமையின் காரணமாக எதையும் கொண்டு செல்ல முடியாத நிலை. அப்பொழுது அவரது மனைவி சிறிது அவலை குசேலரிடம் தந்து அதனை நண்பருக்கு அளிக்குமாறு கூறினாள்.
குசேலரும் கண்ணனின் அரண்மனை நோக்கி சென்றார், அவரது வறிய நிலை கண்டு வாயில் காவலர்கள் அவரை உள்ளே அனுமதிக்க மறுத்தனர். அவர் கண்ணனின் நண்பர் என்று கூற வேறு வழியின்றி உள்ளே அனுமதித்தனர். குசேலரின் வருகை கண்டு, தனது இருக்கையை விட்டு எழுந்து வந்த கண்ணன் குசேலரை ஆரத் தழுவி வரவேற்றார். அவருக்கு வேண்டிய உபசாரம் செய்து உணவு அளித்து மரியாதை செய்தார் கண்ணன். பிறகு இருவரும் தமது உரையாடலை தொடர்ந்தனர். ருக்மிணி தேவியும் உடன் இருந்தாள். நீண்ட நாட்கள் கழித்து நண்பரைக் காண வந்துள்ளீரே, உங்கள் நண்பருக்கு ஏதும் எடுத்து வரவில்லையா என ருக்மிணி வினவ, குசேலர் மிகுந்த தயக்கத்துடன் தனது இடுப்பில் முடிந்து வைத்திருந்த அவலை கண்ணனுக்கு வழங்கினார். கண்ணனும் மிக்க மகிழ்ச்சியுடன் அவலை வாங்கி வாயில் போட்டுக் கொண்டார். முதல் கைப்பிடியில் குசேலரது இல்லம் மாளிகையாக மாறியது. இரண்டாவது பிடியில் வீட்டில் செல்வச் செழிப்பு கூடியது. அடுத்த ஒரு கைப்பிடி தான் இருந்தது. அதனை கண்ணன் உண்டால் அவர் குசேலரை ஆட்கொண்டு விடுவார் எனக் கருதி ருக்மிணி தேவி அதனை வாங்கி, தான் உண்டாள்.
இவ்வாறு கண்ணுக்கு பய பக்தியுடன் அளித்த பிரசாதம் பல மடங்கு பெருகி மீண்டும் குசேலருக்கு வந்து சேர்ந்தது. அதனைப் போல இறைவனுக்கு நாம் அளிக்கும் நைவேத்தியம் நமக்கு பிரசாதமாக மாறுகிறது. அதனை உண்பதன் மூலம் நோய் நொடிகளற்ற வாழ்வும், செல்வ வளமும் கிட்டும் என்பது ஐதீகம்.

Leave a Reply