நித்தியகல்யாணி செடி பயன்கள்
பொதுவாக பெரும்பாலான செடிகள் நல்ல பலன்களை அளிக்க வல்லவை. நல்ல ஆற்றலும் மருத்துவ குணங்களும் கொண்ட செடிகள் ஏராளம் உள்ளன. அவற்றுள் சிறப்பு வாய்ந்த ஒரு செடியாக இருப்பது நித்திய கல்யாணி ஒன்றாகும். இந்த சொல் மங்களத்தைக் குறிக்கும். இதற்கு நயனதாரா, பட்டிப்பூ, சுடுகாட்டுமல்லி என்று வேறு பெயர்களும் உண்டும். இறந்த மனித உடலை புதைத்த பின்பு அவர்கள் மேல் இந்த செடியை நட்டு வைப்பது வழக்கம்.அதனால் தான் இதனை சுடுகாட்டு மல்லி என்று கூறுவார்கள்.
மற்ற வகையான செடிகளை போல் அல்லாமல் 12 மாதங்களும் பூக்களைக் கொடுக்கும் அபூர்வ வகையான நித்திய கல்யாணி செடி எங்கும், எளிதில் வளரக் கூடியவை ஆகும்.

நித்திய கல்யாணி செடியின் தன்மை :
இச்செடியின் பூ வெள்ளை நிறத்திலோ, இளஞ்சிவப்பு நிறத்திலோ காணப்படும். பூவிதழ்கள் கூடும் நடுப்பகுதியில் அடர்ந்த சிவப்பு நிறமாகக் காணப்படும். நித்தியகல்யாணி முழுத் தாவரமும் மருத்துவப் பயன் கொண்டது. நித்திய கல்யாணியின் இலை முதல் வேர் வரை அனைத்தும் மருத்துவ குணம் கொண்டதாகும். இந்த செடியின் பூ, வேர் அதிக அளவில் மருத்துவ பயன்கள் நிறைந்தது. இம்மருந்துச்செடி ஏறத்தாழ ஒரு மீட்டர் உயரம் வளரும். இரு மாதங்களில் 60 முதல் 80 சென்டி மீட்டர் உயரம் வளரும் செடியாகும். இதன் இலைகள் நீள்வட்ட வடிவில் 2.5 – 9 செ.மீ நீளமும் 1 – 3.5 செ.மீ அகலமும் கொண்டதாக இருக்கும்.
நித்தய கல்யாணி செடியின் மருத்துவ பயன்:
இப்பூச்செடியில் இருந்து இரத்தப் புற்றுநோய் (லூக்கேமியா), சர்க்கரை நோய் போன்ற நோய்களுக்கான மருந்துகள் பிரித்தெடுக்கப்படுவதால் அதிகம் அறியப்படுகின்றது. மருத்துவ குணங்கள் நிறைந்த செடி என்றாலும் இந்த செடியின் பாகங்களை நாம் நேரடியாக பயன்படுத்த இயலாது. நித்ய கல்யாணி செடியினை நேரடியாக உட்கொள்வது தீவிர நச்சுத்தன்மையை உடலில் உண்டாக்கும்.
வீட்டில் வளர்க்கலாமா?
இது தானாகவே சில இடங்களில் வளரும். இதனை வீட்டில் கூட வளர்க்கலாம். நித்திய கல்யாணி என்றால் தினமும் மங்களகரம் என்று பொருள். இந்தப் பூவை பூஜைக்கு பயன்படுத்த இயலாது என்றாலும் மருந்து தயாரிக்க பயன்படுவதால் நன்மை தரும் செடியாக கருதப்படுகிறது. இது அதிக அளவு பிராண வாயுவை வெளிப்படுத்தக் கூடியது என்பதால் இது நமக்கு அதிக அளவில் நன்மை அளிக்க வல்லது.







