பைரவர் மந்திரம் | Bairava Manthra to Remove Dhosam
பக்தி வழிபாட்டில் மந்திரங்கள் பெரும் பங்கு வகிக்கின்றன. மந்திரங்கள் நம்மை ஆன்மீகப் பாதையில் இட்டுச் செல்லும். மந்திரங்கள் ஒலி அதிர்வுகளை ஏற்படுத்துகின்றன. இவை நம்மை நல்வழிப் பாதையில் கொண்டு செல்கின்றன. நம்மைச் சுற்றி நேர்மறை ஆற்றலை உருவாக்குகின்றன. மந்திரங்களுள் சிறந்தது காயத்ரி மந்திரம்.காயத்ரி மந்திரம் ஜபிக்கப்பட்ட பின்னரே மற்ற மந்திரங்கள் ஜபிக்கப்படுகின்றன. மந்திர வழிபாட்டில் காயத்ரிக்குத் தான் முதல் இடம். காயத்ரி ஜபம் செய்யாத எந்த ஜபமும், ஆராதனையும் பயனற்றது.
எல்லாக் கடவுளுக்கும் தனித்தனியே காயத்ரி மந்திரம் உண்டு. இந்தப் பதிவில் நாம் பைரவர் காயத்ரி மந்திரம் பற்றிக் காணப் போகிறோம்.

பைரவர் தோற்றம்:
பைரவர் காவல் தெய்வம். எனவே தான் அவர் காவலுக்கு உகந்த நாயை வாகனமாக வைத்திருக்கிறார். அறுபத்தி நான்கு வகை பைரவர்கள் இருப்பதாக சிவாகமங்கள் மூலம் அறிகிறோம். அவற்றில் எட்டு பைரவர்கள் சிறப்பு வாய்ந்தவர்களாக போற்றப்படுகிறார்கள்.
அந்தகாசுரன் எனும் அசுரன் சிவபெருமானிடம் பெற்ற வரத்தால் ஆணவம் கொண்டு, தேவ முனிகளை வதைத்தான். தேவர்களைப் பெண் வேடமிட்டு சாமரம் வீசும் ஏவலைச் செய்யும்படி பணித்தான். அந்தகாசுரன் சிவனிடமிருந்து பெரும் சக்தியைப் பெற்றமையால், உலகை இருள்மயமாக்கி ஆட்சி செய்தான். தேவர்களும், முனிவர்களும் அவனை அழிக்க சிவனிடம் வேண்டினார்கள். தேவர்களின் மீது கருணை கூர்ந்த எம்பெருமான், தனது நெற்றிக்கண்ணில் இருந்து காலபைரவரை தோற்றுவித்தார். அவரிடமிருந்து அஷ்டபைரவர்களும், 64 பைரவர்களும் தோன்றி அந்தகாசுரனை அழித்தனர். அந்தகன் உயிர் பிரியும்போது பசியால் துடித்தான். உடனே பைரவர் அங்கு விளைந்திருந்த பூசணிக்காயை பறித்து அவனுக்கு உணவாக கொடுத்தார்
தேவர்களின் துன்பங்களை நீக்கிய பைரவர் தன்னை வணங்கும் பக்தர்களின் துயர்களையும் துடைப்பவர். தினமும் பைரவரை வழிபடலாம் என்றாலும் தேய்பிறை அஷ்டமி அன்று பைரவரை மந்திரம் கூறி வழிபடுவதன் மூலம் வாழ்வில் அனைத்து நலன்களையும் பெறலாம்.
பைரவர் காயத்ரி மந்திரம் :
ஓம் கால காலாய வித்மஹே!
காலஹஸ்தாய தீமஹி
தன்னோ கால பைரவ ப்ரசோதயாத்
பைரவர் வழிபாடு கைமேற்பலன் என்பார்கள். பைரவரை வணங்குவதன் மூலம் கடுமையான தோஷங்கள் நீங்கும். எனவே இந்த மந்திரத்தை தினமும் காலையில் எழுந்து குளித்து முடித்து சுத்தமாக 108 முறை ஜெபிப்பதன் மூலம் துன்பங்கள் விலகும். நினைத்த காரியங்கள் கை கூடும். தினமும் கூற இயலாதவர்கள் தேய்பிறை அஷ்டமி அன்று கூறலாம். மேலும் அன்று மாலை சிவாலயத்தில் இருக்கும் பைரவருக்கு செவ்வரளி மலர்கள் சமர்ப்பித்து, சிவப்பு நிற வஸ்திரம் அணிவித்து, செவ்வாழைப் பழம் நைவேத்தியம் வைத்து, தேங்காய் அல்லது பூசணிக்காயில் நெய் ஊற்றி, தீபமேற்றி வழிபாடு செய்வதன் மூலம் வாழ்வில் துன்பங்கள் அனைத்தும் நீங்கி இன்பங்கள் பெருகும்.











