முன்னோர் ஆசி பெற எளிய வழிபாடு!

வாழ்வில் நாம் எதை மறந்தாலும் முன்னோர்களை வழிபடுவதை மறக்கலாகாது. முன்னோர்களில் மூன்று தலைமுறையினரையாவது நாம் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டியது அவசியம். முன்னோர்களின் ஆசி கிட்ட தர்ப்பணம் கொடுத்தல், திதி அளித்தல் போன்றவற்றை நாம் அவசியம் செய்ய வேண்டும். தினமும் முன்னோர்களை வணங்குவது நல்லது. அவ்வாறு இல்லாவிட்டால் அமாவாசை அன்றாவது அவர்களை நினைத்து வழிபட வேண்டும். நாம் அளிக்கும் திதி அல்லது தர்ப்பணம் நம்மை காப்பது மட்டும் இன்றி நமது சந்ததியினரையும் காத்து நிற்கும். அவ்வாறு அளிக்கத் தவறினால் அவர்களது சாபத்திற்கு நாம் ஆளாக நேரலாம்.
மறைந்த முன்னோர்களை பித்ருக்கள் என்று கூறலாம். பித்ருக்களை நாம் சாந்திபடுத்தாவிடில் அவர்களது சாபம் நம்மை வந்து தாக்கும். அது நமக்கு பித்ரு தோஷமாக மாறி விடும். பித்ரு தோஷம் ஏற்பட்டால் நம் மேற்கொள்ளும் காரியங்களில் தடைகள் மற்றும் தடங்கல்க்கள், நமது முன்னேற்றத்தில் தடைகள், திருமண தாமதங்கள், வீட்டில் சண்டை சச்சரவுகள், அடிக்கடி நோய்வாய்ப்படுதல் போன்றவற்றை அனுபவிக்க நேரும். இதில் இருந்து விடுபடும் ஒரு எளிய பரிகாரத்தைப் பற்றிக் காண்போம்.
முதலில் உங்கள் முன்னோர் படங்களை உங்கள் கண்ணில் படுமாறு வைக்க வேண்டும். மேலும் அப்படங்களை தெற்கு நோக்கி இருக்குமாறு வைக்க வேண்டும். உங்கள் தினசரி பூஜைகளை செய்து முடித்து விட்டு உங்களின் முன்னோர் படத்திற்கு தினமும் மல்லிகைப் பூவை சாற்றி வர வேண்டும். தினமும் சாற்ற இயலாதாவர்கள் வியாழக்கிழமை அன்று சாற்றலாம். பிறகு ஒரு சொம்பில் தூய நீரை பிடித்து அவர்களின் படத்திற்கு முன் வைக்க வேண்டும். இந்த தினசரி வழிபாட்டில் நமது முன்னோர்கள் மகிழ்ச்சி அடைவார்கள் இதனால் அவர்கள் உயர் நிலை அடைவார்கள் மற்றும் அவர்களின் அருளாசிகளை உங்களுக்கு வழங்குவார்கள்.
மூதாதையர் கடன் நீக்க அவர்களுக்குரிய கடமையை நாம் சரியாகச் செய்தால் இனிமையான நல்வாழ்வு கிட்டும்.
