Vasavi Jayanthi: Invoke the Wish-Fulfilling Goddess of this Yuga For Protection, Divine Wisdom, Prosperity & Success JOIN NOW

மகாசிவராத்திரி – வீட்டில் விரதம் இருப்பது, கதை, மகாசிவராத்திரிக்கும் சிவராத்திரிக்கும் உள்ள வித்தியாசம்

February 16, 2023 | Total Views : 248
Zoom In Zoom Out Print

மகாசிவராத்திரி 2023

சிவனுக்கு உகந்த நாள் சிவராத்திரி. அதிலும் மகா சிவராத்திரி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த நாள். ஒவ்வொரு ஆண்டும் மகா சிவராத்திரி மாசி மாதம் கிருஷ்ணபட்சம் (தேய்பிறை) சதுர்த்தசி அன்று வரும். இந்த வருடம் மகா சிவராத்திரி பிப்ரவரி 18 அன்று வருகிறது. மேலும் இந்த ஆண்டின் சிறப்பம்சம் என்னவெனில் அன்று சனிக்கழமை மற்றும் பிரதோஷம் வருகிறது. பிரதோஷமும் சிவராத்திரியும் இணைந்த நாளில் சிவனை வணங்கி வழிபடுவதன் மூலம் இரட்டிப்பு நற்பலன்கள் கிட்டும்.சிவபெருமானுக்குரிய விரதங்களில் முக்கியமானது, பிரதோஷம். பொதுவாக பிரதோஷம் அன்று சிவபுராணம், சிவ நாமாவளிகளை படித்து, முடிந்தவரை மவுன விரதம் இருந்து, மாலையில் கோவில் சென்று, சிவதரிசனம் செய்யவேண்டும். சிவபெருமான் விஷம் அருந்திய தினம் சனிக்கிழமை என்று கூறப்படுகிறது.

அந்தக் கிழமையில் வரும் பிரதோஷம் மிகவும் சிறப்பானதாகும். இந்த வருடம் மகா சிவராத்திரியுடன் பிரதோஷம் மற்றும் சனிக்கிழமை இணைந்துள்ளது மிகச் சிறப்பான ஒன்றாகும். இது ஒரு அரிய நாளாகும். இன்று சிவனை வழிபட்டு  வேண்டிய வரங்களை பெற்றுக் கொள்ளலாம். 'சிவாய நம' என்று சிந்தித்திருந்தால் 'அபாயம்' நமக்கு ஏற்படாது,'உபாயம்' நமக்கு ஏற்படும் என்று முன்னோர்கள் கூறியுள்ளனர். மகா சிவராத்திரி அன்று சிவனை வழிபடுவதன் மூலம் பூர்வ ஜென்ம தீய கர்ம வினைகள் நீங்கும். கவலைகள் அகலும். எண்ணிய எண்ணங்கள் நிறைவேறும். பொருளாதாரத்தில் மேன்மை பெருகும்.

சிவராத்திரி அன்று வீட்டில் விரதம் இருத்தல்

மகா சிவராத்திரி அன்று விரதம் அனுஷ்டிப்பது சாலச் சிறந்தது. அன்று காலையில் எழுந்து நம்மை தூய்மை படுத்திக் கொள்ள வேண்டும். வீட்டையும் தூய்மையாக வைத்திருக்க வேண்டும். பூக்கள் மற்றும் வில்வ இலை கொண்டு வீட்டில் சிவபெருமான் மற்றும் லிங்கத்திற்கு பூஜை செய்ய வேண்டும். மூன்று வேளையும் உண்ணாமல் விரதம் இருக்க வேண்டும். அவ்வாறு விரதம் இருக்க முடியாதவர்கள் பழம் அல்லது பழச்சாறு எடுத்துக்கொள்ளலாம். தண்ணீர் அருந்தலாம். இரவு கண் தூங்காமல் விழித்திருக்க வேண்டும். அவ்வாறு விழித்திருக்கும் போது சிவனைக் குறித்த பாடல்கள் மற்றும் பஜனைகளை மேற்கொள்ளலாம்.

மகா சிவராத்திரி உருவான கதை

∙ பரா சக்தியான பார்வதிதேவி ஆடல் நாயகனாம் சிவபெருமானுடன் விளையாடச் சித்தம் கொண்டாள். ஒருமுறை, விளையாட்டாக அன்னை சிவபெருமானின் இரு கண்களையும் தனது இரு கரங்களால் மூடிக்கொண்டாள். சூரியனாகவும் சந்திரனாகவும் திகழும் சிவனின் இரு கண்களை மறைத்து விட்டால், உலகில் ஒளியேது ? பிரபஞ்சமே கணப்பொழுதில் இருளில் மூழ்கியது. நட்சத்திரங்களின் ஒளிகூட இல்லாமல், பிரபஞ்சத்தை இருள் சூழ்ந்து கொண்டது. அந்த நாளே ‘ சிவராத்திரி’ என அழைக்கப்படுகிறது.

ஒளி வேண்டி அனைத்து உயிர்களும் சிவனை வேண்ட, உலகுக்கு ஒளி கொடுப்பதற்காக சிவபெருமான் தன் நெற்றிக்கண்ணைத் திறந்தார். வெப்பக்கனலாக வீசிய நெற்றிக்கண்ணின் ஒளி கண்டு பார்வதி தேவியே நடுநடுங்கினாள். அம்பிகையைக் கருணையுடன் நோக்கிய சிவபெருமான் தன் நெற்றிக்கண்ணிலிருந்து கிளம்பிய வெப்ப ஒளியைக் குளிர்நிலவாக்கி, அன்னையையும், தம் அடியவர்களையும் ஆட்கொண்டார். உலகுக்கு ஒளியேற்றிய சிவனுக்கு, அந்த நன்னாளில் நெய் தீபமேற்றி வழிபட்டால் துன்பங்கள் நீங்கும் என்பது பெரியோர் வாக்கு.

∙ சிவபெருமான் அண்ணாமலையில் மலையாக மாறி ஜோதியாய் நின்ற நாளே சிவ ராத்திரி என்று ஓர் கூற்று உள்ளது.

∙ உலக இயக்கத்திற்காக சிவன் நடராஜராக ஆனந்த தாண்டவம் ஆடிய நாள் சிவராத்திரி என்பது ஒரு சாரரின் கருத்தாக உள்ளது.

∙ ஒரு சிலர் மகாசிவராத்திரியை சிவபெருமானும் பார்வதி தேவியும் திருமணம் செய்து கொண்ட நாளாகக் குறிப்பிடுகின்றனர் அதனால்தான் அந்த நாள் மங்களகரமானதாகக் கருதப்படுகிறது.

∙ முன்னொரு காலத்தில் மகா பிரளயம் ஏற்பட்டது. அந்த சமயத்தில் உலக உயிர்கள் அனைத்தும் சிவனுக்குள் ஒடுங்கிப் போயின, எனவே உலகின் இயக்கம் நின்று விட்டது.  இதனைக் கண்ட சக்தி பிரபஞ்சம் இயங்க வேண்டும் அதற்கு தாங்கள் கருணை புரிய வேண்டும் என்று சிவனை நோக்கி பிரார்த்தித்துக் கொண்டாள். அப்போது சிவன்  தன்னுள் ஒடுங்கி இருந்த உலகங்களை மீண்டும் உண்டாகச் செய்து உயிர்களையும் படைத்தருளினார். அப்பொழுது சக்தி சிவனை நோக்கி  நான் என் மனதில் தங்களை தியானித்துப் போற்றிய காலம் "சிவராத்திரி" என்று பெயர் பெறவேண்டும் என்றும் அதனை மகா சிவராத்திரி விரதம் என்று யாவரும் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் கடைப்பிடிப்பவர்கள் எல்லா நலன்களும் பெற்று முக்தியடைய வேண்டும் என்றும் பிராத்தித்தார். இறைவனும் அவ்வாறே நடக்கட்டும் என்று அருள் புரிந்தார்.

∙ அசுரர்களும் தேவர்களும் இணைந்து பாற்கடலைக் கடைந்த பொழுது விஷம் வெளியேறியது. அந்த விஷம் கடலில் கலந்து விட்டால் அது முழு உலகையும் அழிக்கக்கூடும் என்று தேவர்கள் நம்பியதால் பயந்துபோனார்கள். எனவே அவர்கள் சிவ பெருமானின் உதவியை நாடினார்கள். சிவனும் அந்த ஆலகால விஷத்தை அருந்தினார். சக்தி அவரது தொண்டையில் கை வைத்து அழுத்தவே விஷம் தொண்டையில் தங்கி விட்டது அதனால் நீல கண்டன் என்ற பெயர் பெற்றார். அவ்வாறு சிவன் விஷம் அருந்தி நீலகண்டன் என்ற பெயர் பெற்ற நாளே சிவராத்திரி என கொண்டாடப்படுவதாக அறியப்படுகிறது.

∙ காட்டில் ஒரு வேடன் பறவைகளை வேட்டையாடிக் கொண்டிருந்தான். அப்போது அவனை ஒரு சிங்கம் துரத்தியது. சிங்கத்திடம் இருந்து தப்பிக்க அந்த வேடன் ஒரு மரத்தின் மீது ஏறினான்.  அது வில்வ மரம். சிங்கம் அவனை எதிர் கொள்ள மரத்தடியில் நின்று கொண்டு இருந்தது. இரவாகி விட்டமையால் தூக்கம் வராமல் இருக்க வேடன் மரத்தின் இலைகளை பறித்து கீழே போட்டுக் கொண்டே இருந்தான். அது கீழே இருக்கும் சிவலிங்கத்தின் மீது விழுந்ததனால், அவனுக்கு சிவ தரிசனம் கிடைத்தது, அதுவே சிவராத்திரி எனக் கொண்டாடப்படுகிறது என்பதாகவும் ஒரு ஐதீகம்

மகா சிவராத்திரிக்கும் சிவ ராத்திரிக்கும் உள்ள வித்தியாசம்

 சிவராத்திரி விரதம் ஐந்து வகைப்படும்.

  1. நித்திய சிவராத்திரி

  2. பட்ச சிவராத்திரி

  3. மாத சிவராத்திரி

  4. யோக சிவராத்திரி

  5. மகா சிவராத்திரி

நித்திய சிவராத்திரி : ஒவ்வொரு சதுர்த்தசியிலும் சிவபூஜை செய்வது, நித்திய சிவராத்திரி பூஜை ஆகும். மாதம் இரண்டு சதுர்த்தசி வீதம்  ஒரு வருடத்தில் இருபத்திநான்கு சிவராத்திரி பூஜை புரிவது நித்திய சிவராத்திரி.

பட்ச சிவராத்திரி : தை மாத தேய்பிறை சதுர்த்தசியில் வருவது பட்ச சிவராத்திரி. தை மாதம் கிருஷ்ண பிரதமை முதல் பதின்மூன்று நாட்கள் தினமும் ஒருவேளை உணவு உட்கொண்டு, சதுர்த்தசியில் பூஜை செய்வது பட்ச சிவராத்திரி.

மாத சிவராத்திரி : சிவராத்திரி என்பதற்கு “சிவனுக்கு உகந்த இரவு” என்பது பொருள். ஒவ்வொரு மாதமும் தேய்பிறை சதுர்த்தசி இரவு, மாத சிவராத்திரியாக போற்றப்படுகிறது. 

யோக சிவராத்திரி : சோம வாரத்தன்று அறுபது நாழிகையும் அமாவாசை இருந்தால் அது யோக சிவராத்திரி.

மகா சிவராத்திரி : மாசி மாதம் கிருஷ்ணபட்சம் சதுர்த்தசி இரவு மகா சிவராத்திரி புண்ணிய காலமாகும். அன்றைய தினம் இரவு கடைசி பதினான்கு நாழிகை ( ஐந்து மணி முப்பத்தாறு நிமிடங்கள் ) லிங்கோத்பவ காலம் எனப்படும்.

இதில் மகா சிவராத்திரி மிகவும் பிரசித்தி வாய்ந்தது. பல மகிமைகளை தன்னுள்ளே கொண்டது. மாதாந்திர சிவராத்திரி ஒவ்வொரு மாதமும் கிருஷ்ண பக்ஷத்தின் சதுர்த்தசி தேதியில் கொண்டாடப்படுகிறது, அதே சமயம் மாசி மாதம்  வரும் கிருஷ்ணபட்ச சதுர்தசி திதியில் மகா சிவராத்திரி விரதம் அனுஷ்டிக்கப்படுகிறது. மகாசிவராத்திரி என்பது சிவன் மற்றும் சக்தியின் சங்கமத்தின் ஒரு மகத்தான திருவிழா. சிவபுராணத்தின் படி, மகாசிவராத்திரி நாளில் சிவபெருமானும் பார்வதியும் திருமணம் செய்து கொண்டதாக நாம் அறிகிறோம்.

அம்பிகைக்கு நவராத்திரி என்றால் சிவனுக்கு சிவராத்திரி. ஒவ்வொரு சிவராத்திரியும் சிவனை வழிபடுவது சாலச் சிறந்தது. என்றாலும் மகா சிவராத்திரி வழிபாடு விரைவில் பலன் தரக் கூடியது.

மகா சிவராத்திரி வழிபாட்டின் சிறப்பம்சம் என்னவென்றால் அன்று ஒரு நாளில் செய்யும் வழிபாடு / விரதம்/ பூஜை/ தியானம்/ மந்திர பாராயணம்  ஓர் ஆண்டிற்கான பலனை அளிக்கும். எனவே தான் சிவராத்திரி விரத அனுஷ்டானம் நமக்கு சிறந்த பலனைக் கொடுக்கின்றது. சைவ சமய ஆகமங்களில் சிவராத்திரி ஆகம வழிமுறைகள், கால வரையறை, பூஜை முறை என்று விரிவான விளக்கங்களை நாம் காணலாம். மகா சிவராத்திரி அன்று ஆலயங்களில்  இறைவனுக்கு நான்கு ஜாம பூஜைகள் செய்யப்படும்.

banner

Leave a Reply

Submit Comment