சைவசமயத்தின் முழுமுதற் கடவுளாகவும், பிறப்பும், இறப்பும் இல்லாத பரம்பொருளாகவும் வணங்கப்படும் பரமசிவனை போற்றி வழிபட பல விழாக்கள், விரதங்கள் இருந்தாலும் மகா சிவராத்திரி விரத வழிபாடு மிகவும் சிறப்பு வாய்ந்தது. படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் எனும் ஐந்தொழில் புரியும் சிவபெருமானை இந்த விரதம் மூலம் மகிழ்வித்து நமக்கு வேண்டிய வரங்களைப் பெறலாம்.
சிவராத்திரி விரதம் ஐந்து வகைப்படும்.
-
நித்திய சிவராத்திரி
-
மாத சிவராத்திரி
-
பட்ச சிவராத்திரி
-
யோக சிவராத்திரி
-
மகா சிவராத்திரி
இதில் மகா சிவராத்திரி மிகவும் பிரசித்தி வாய்ந்தது. பல மகிமைகளை தன்னுள்ளே கொண்டது. மாதாந்திர சிவராத்திரி ஒவ்வொரு மாதமும் கிருஷ்ண பக்ஷத்தின் சதுர்த்தசி தேதியில் கொண்டாடப்படுகிறது, அதே சமயம் மாசி மாதம் வரும் கிருஷ்ணபட்ச சதுர்தசி திதியில் மகா சிவராத்திரி விரதம் அனுஷ்டிக்கப்படுகிறது. மகாசிவராத்திரி என்பது சிவன் மற்றும் சக்தியின் சங்கமத்தின் ஒரு மகத்தான திருவிழா. சிவபுராணத்தின் படி, மகாசிவராத்திரி நாளில் சிவபெருமானும் பார்வதியும் திருமணம் செய்து கொண்டதாக நாம் அறிகிறோம். சிவராத்திரி பற்றிய விளக்கம் கருட புராணம், ஸ்கந்த புராணம், பத்மபுராணம் மற்றும் அக்னிபுராணம் முதலியவற்றில் காணப்படுகிறது.
சாஸ்திரங்களின்படி, மகாசிவராத்திரி நாளில் இருந்து படைப்பு தொடங்கியது என்று நம்பப்படுகிறது. இவ்விரத்தைப் பற்றிய ஐதீகங்கள் பல உள்ளன. அவற்றுள் சிலவற்றைக் காண்போம்.
பிரளயத்துக்குப் பின் பிரபஞ்சம் தோன்றிய நாள்
முன்னொரு காலத்தில் மகா பிரளயம் ஏற்பட்டது. அந்த சமயத்தில் உலக உயிர்கள் அனைத்தும் சிவனுக்குள் ஒடுங்கிப் போயின, எனவே உலகின் இயக்கம் நின்று விட்டது. இதனைக் கண்ட சக்தி பிரபஞ்சம் இயங்க வேண்டும் அதற்கு தாங்கள் கருணை புரிய வேண்டும் என்று சிவனை நோக்கி பிரார்த்தித்துக் கொண்டாள். அப்போது சிவன் தன்னுள் ஒடுங்கி இருந்த உலகங்களை மீண்டும் உண்டாகச் செய்து உயிர்களையும் படைத்தருளினார். அப்பொழுது சக்தி சிவனை நோக்கி நான் என் மனதில் தங்களை தியானித்துப் போற்றிய காலம் "சிவராத்திரி" என்று பெயர் பெறவேண்டும் என்றும் அதனை மகா சிவராத்திரி விரதம் என்று யாவரும் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் கடைப்பிடிப்பவர்கள் எல்லா நலன்களும் பெற்று முக்தியடைய வேண்டும் என்றும் பிராத்தித்தார். இறைவனும் அவ்வாறே நடக்கட்டும் என்று அருள் புரிந்தார்.
நீலகண்டனாய் அருள் புரிந்த நாள்
அசுரர்களும் தேவர்களும் இணைந்து பாற்கடலைக் கடைந்த பொழுது விஷம் வெளியேறியது. அந்த விஷம் கடலில் கலந்து விட்டால் அது முழு உலகையும் அழிக்கக்கூடும் என்று தேவர்கள் நம்பியதால் பயந்துபோனார்கள். எனவே அவர்கள் சிவ பெருமானின் உதவியை நாடினார்கள். சிவனும் அந்த ஆலகால விஷத்தை அருந்தினார். சக்தி அவரது தொண்டையில் கை வைத்து அழுத்தவே விஷம் தொண்டையில் தங்கி விட்டது அதனால் நீல கண்டன் என்ற பெயர் பெற்றார். அவ்வாறு சிவன் விஷம் அருந்தி நீலகண்டன் என்ற பெயர் பெற்ற நாளே சிவராத்திரி என கொண்டாடப்படுவதாக அறியப்படுகிறது.
அண்ணாமலையாக சிவன் ஜோதியாக தோன்றிய நாள்
தங்களுக்குள் யார் பெரியவர் என்று பிரம்மனும், விஷ்ணுவும் வாதிட்டனர். அந்த வாதத்திற்கு பதில் தேடி சிவபெருமானிடம் வந்தனர். அவர்களில் யார் பெரியவர் என்பதை விளக்கிட சிவபெருமான் ஒரு சோதனையை நடத்தினார். தனது தலையையும், பாதத்தையும் காண்பவரே உங்களுள் பெரியவர் என்று கூறி வானத்திற்கும், பூமிக்குமாய் ஜோதியாய் எழுந்தருளினார்.அந்த சோதனையை ஏற்று வராக அவதாரம் எடுத்து சிவபெருமானின் காலடியைக் காண பூமியைத் தோண்டி சென்றார் விஷ்ணு. அன்னத்தின் வடிவத்தைப் பெற்ற பிரம்மன் சிவபெருமானின் உச்சியைக் காண வானத்திற்கு எழும்பினார். இருவரும் கடுமையாக முயற்சித்தும் சிவனின் தலையையோ, அடியையோ காண முடியவில்லை. தனது தோல்வியை ஒப்புக்கொண்டு விஷ்ணு திரும்பினார். உயர உயரப் பறந்து முயன்ற பிரம்மன் களைப்படைந்திருந்த நிலையில், வானத்தில் இருந்து பூமியை நோக்கி விழுந்துக் கொண்டிருந்த தாழம்பூவைக் கண்டார். எங்கிருந்து வருகிறாய் என்று பிரம்மன் கேட்க, நான் சிவனின் தலைமுடியில் இருந்து விழுந்து கொண்டிருக்கிறேன். யுகம், யுகமாய் பயணித்தும் பூமியை அடையவில்லை என்று கூறியது. தான் சிவனின் தலை முடியைக் கண்டதாக அவரிடம் சாட்சி கூறுமாறு பிரம்மன் கேட்க, தாழம்பூ அதற்கு ஒப்புக்கொண்டு அவ்வாறே சிவபெருமானிடமும் உரைத்தது. பிரம்மனுக்காக தாழம்பூ பொய் கூறியதைக் கேட்ட சிவபெருமான் கோபமுற்று அக்னிப் பிழம்பாக மாறினார். தேவர்கள் அவரை வேண்ட சிவபெருமான், ஓர் மலையாய் அடங்கி சிறிய ஜோதியாய் அதன் உச்சியில் தென்பட, அனைவரும் வணங்கினர். அந்த நாளே மகா சிவராத்திரியாக ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்படுகிறது என்றும் கூறப்படுகிறது.
வில்வ இலையும் சிவ பூஜையும்
காட்டில் ஒரு வேடன் பறவைகளை வேட்டையாடிக் கொண்டிருந்தான். அப்போது அவனை ஒரு சிங்கம் துரத்தியது. சிங்கத்திடம் இருந்து தப்பிக்க அந்த வேடன் ஒரு மரத்தின் மீது ஏறினான். அது வில்வ மரம். சிங்கம் அவனை எதிர் கொள்ள மரத்தடியில் நின்று கொண்டு இருந்தது. இரவாகி விட்டமையால் தூக்கம் வராமல் இருக்க வேடன் மரத்தின் இலைகளை பறித்து கீழே போட்டுக் கொண்டே இருந்தான். அது கீழே இருக்கும் சிவலிங்கத்தின் மீது விழுந்ததனால், அவனுக்கு சிவ தரிசனம் கிடைத்தது, அதுவே சிவராத்திரி எனக் கொண்டாடப்படுகிறது என்பதாகவும் ஒரு ஐதீகம்
மகாசிவராத்திரி வழிபாடு
மகா சிவராத்திரி வழிபாட்டின் சிறப்பம்சம் என்னவென்றால் அன்று ஒரு நாளில் செய்யும் வழிபாடு / விரதம்/ பூஜை/ தியானம்/ மந்திர பாராயணம் ஓர் ஆண்டிற்கான பலனை அளிக்கும். எனவே தான் சிவராத்திரி விரத அனுஷ்டானம் நமக்கு சிறந்த பலனைக் கொடுக்கின்றது. சைவ சமய ஆகமங்களில் சிவராத்திரி ஆகம வழிமுறைகள், கால வரையறை, பூஜை முறை என்று விரிவான விளக்கங்களை நாம் காணலாம். மகா சிவராத்திரி அன்று ஆலயங்களில் இறைவனுக்கு நான்கு ஜாம பூஜைகள் செய்யப்படும். ஒவ்வொரு ஜாமத்தின் போதும் அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். சிவ பெருமானுக்கு வில்வ அர்ச்சனை மிகவும் பிரியமானது.
இந்த வருட மகா சிவராத்திரியின் சிறப்பம்சம்
இந்த வருடம் மகா சிவராத்திரி சனிக்கிழமை அன்று வருகிறது. மேலும் ஒரு சிறப்பம்சம் என்னவென்றால் அன்றைய நாளில் சனி பிரதோஷமும் வருகிறது. இது ஒரு அரிதான நிகழ்வு. பிரதோஷம் மற்றும் சிவராத்திரி இணைந்து வரும் இந்த நாளில் சிவனை வழிபடுவதன் மூலம் இரட்டிப்பு பலன் நமக்கு கிட்டுகின்றது.
மகா சிவராத்திரி விரதம் மேற்கொள்வது எப்படி?
மகாசிவராத்திரி தினத்தில் காலையில் எழுந்து வீட்டை சுத்தம் செய்ய வேண்டும். குளித்து முடித்து தூய ஆடைகளை அணிய வேண்டும். வீட்டில் சிவனுக்கும் லிங்கத்திற்கும் பூஜை செய்ய வேண்டும். பூஜையில் வில்வ இலையை பயன்படுத்த வேண்டும். இதனால் முற்பிறவி பாவங்கள் நீங்கும். மூன்று வேளையும் உண்ணாமல் இருந்து சிவ பெருமானை வழிபட்டு நான்கு ஜாம பூஜைகள் செய்து வழிபட வேண்டும். உடல் நலப் பிரச்சினைகள் அல்லது வயது மூப்பு காரணமாக முழு நாளும் உணவு அருந்தாமல் இருக்க முடியாது என்பவர்கள் பழச்சாறு, பழங்களைச் சாப்பிட்டு விரதம் இருக்கலாம். தண்ணீர் அருந்தலாம். சிவாலங்களுக்கு சென்று அங்கு நடக்கும் நான்கு ஜாம பூஜைகள் தரிசித்து செய்து வழிபடலாம். இரவில் கண் விழிக்க வேண்டும். சிவ புராணம் திருவாசகம் பாராயணம் செய்யலாம்.
மகாசிவராத்திரி விரதத்தின் பலன்கள்
சிவராத்திரி நாளில் சிவபெருமானை வழிபடுவதால், சிவனின் அருளால் உங்கள் கவலைகள் யாவும் தீரும். நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். அனைத்து விருப்பங்களும் நிறைவேறும் என்பது ஐதீகம்.
சிவபெருமானுக்கு உரிய சில மந்திரங்கள்
சிவராத்திரி அன்று இரவில் கண்விழித்து மந்திரங்களை உச்சரிப்பவருக்கு சிவபெருமான் மகிழ்ச்சியையும் முக்தியையும் தருகிறார். 'சிவாய நம' என்று சிந்தித்திருந்தால் 'அபாயம்' நமக்கு ஏற்படாது,'உபாயம்' நமக்கு ஏற்படும் என்று முன்னோர்கள் கூறியுள்ளனர்.
ஓம் நமசிவாய
இந்த ஐந்தெழுத்து மந்திரம் சிவபெருமானை மகிழ்விக்கும் எளிய மந்திரமாக கருதப்படுகிறது. இந்த மந்திரத்தை உச்சரிப்பதால் அவர் மகிழ்ச்சி அடைகிறார். சிவபெருமானின் இந்த மந்திரத்தை 108 முறை ஜபிப்பது மிகவும் நல்ல பலன்களை அளிக்கும். பலன் தரும். சிவராத்திரியன்று பஞ்சாட்சர மந்திரம் உச்சரிப்பதால் மற்ற நாட்களில் நூறுகோடி முறை பஞ்சாட்சரம் ஜெபித்த பலன் கிட்டும் என்கிறது சாஸ்திரம்.
ம்ருத்யுஞ்சய மந்திரம்
ஓம் த்ரயம்பகம் யஜாமஹே. சுகந்திம் புஷ்டிவர்தனம். ஊர்வாருகமிவ பந்தணான். ம்ருத்யோர் முக்ஷீய மாம்ருதாத் ॥
அகால மரணத்தைத் தவிர்க்கவும், கடுமையான நோய்களின் பிடியில் இருந்து விடுபடவும் மகாமிருத்யுஞ்சய மந்திரத்தை உச்சரிப்பது மிகவும் பலனளிக்கிறது. சிவலிங்கத்திற்கு நீர் மற்றும் மலர்களை அர்ப்பணிக்கும் போது மஹாமிருத்யுஞ்சய மந்திரத்தை உச்சரிப்பது மிகவும் பலனளிக்கும்.

Leave a Reply