Vasavi Jayanthi: Invoke the Wish-Fulfilling Goddess of this Yuga For Protection, Divine Wisdom, Prosperity & Success JOIN NOW

ஸ்ரீ கிருஷ்ண பகவான்

March 6, 2023 | Total Views : 408
Zoom In Zoom Out Print

இந்து சமயத்தின் முக்கிய கடவுளாக வணங்கப்படுபவர் ஸ்ரீ கிருஷ்ணர். விஷ்ணுவின் 9வது அவதாரமாக கருதப்படுகிறார்.  வசுதேவருக்கும் தேவகிக்கும் குழந்தையாக மகாவிஷ்ணு எடுத்த அவதாரம் கிருஷ்ணாவதாரம். இந்த அவதாரத்தில் கண்டவர் தம் மனதை கவரும் அழகுடன் கோபியர் கொஞ்சும் ரமணனாக விளங்கினான். கம்சனைக் கொன்றும், பஞ்சபாண்டவரைக் காத்தும் தர்மத்தை நிலைநாட்டினார். வருடந்தோறும் ஆவணி மாதம் அஷ்டமி திதி, ரோகிணி நட்சத்திரம் சேர்ந்த நாள் கிருஷ்ண ஜெயந்தியாக கொண்டாடப்படுகிறது. கிருஷ்ணரைப் பற்றிய குறிப்புகள் மகாபாரதம், அரி வம்சம், பாகவத புராணம் மற்றும் விஷ்ணு புராணம் போன்ற நூல்களில் உள்ளன.

ஸ்ரீ கிருஷ்ணன் நாமங்கள்:

ஸ்ரீ கிருஷ்ணருக்கு பல்வேறு பெயர்கள்  ஒவ்வொரு பெயருக்கும் ஒரு காரணம் உண்டு. கிருஷ்ணர் என்ற தமிழ் சொல்லிற்கு கரிய மற்றும் அழகிய கண்களையுடையவன் என்று பொருள்படும். கிருஷ்ணன் கரிய நிறமுடையவன் என்பதால் இப்பெயரிட்டு அழைக்கப்படுகின்றார். வசுதேவர் – தேவகி மகன் என்பதால் வாசுதேவன் எனப் பெயர் பெற்றார்.  கோபியர்களை கவரும் தன்மை கொண்டதால் மோகனன் எனப் பெயர் பெற்றார்.  ஆநிரைகளை மேய்ப்பவன் என்பதால் கோபாலன் எனப் பெயர் பெற்றார். கோகுலத்தில் வளர்ந்ததால் கோகுலன் எனப் பெயர் பெற்றார். ஆயர்பாடி மக்கள் மற்றும் பசுக்களை காக்க கோவர்த்தன மலையைக் குடை போல பிடித்ததால் கோவர்த்தனன் எனப் பெயர் பெற்றார். இராதையின் காதலன் என்பதால் இராதா கிருஷ்ணன் எனப் பெயர் பெற்றார். இது மட்டும் இன்றி இவருக்கு கண்ணையா, ஷ்யாம். கேசவன், துவாரகேஷ் எனப் பல பெயர்கள். இவருக்கு ஆயிரத்து எட்டு நாமாவளிகளும் உள்ளன.  கிருஷ்ணர் பற்றிய பல கதைகள் நம்மிடையே காணப்படுகிறது. அந்தக் கதைகளில் அவரைப் பல்வேறு கோணங்களில் சித்தரித்திருப்பதை நாம் காணலாம். தெய்வக் குழந்தையாக கோபியர்களிடம் குறும்புகள் செய்பபவனாக, இராதையின் காதலனாக கிருஷ்ணரை நாம் காணலாம்.

 

கிருஷ்ணரின் உருவம்

கிருஷ்ணர் பல்வேறு வடிவங்களில் சித்தரிக்கப்படுகிறார். அவர் ஒரு குழந்தையாக சித்தரிக்கப்படுகிறார், ஆனால் பெரும்பாலும் அவரது படங்கள் அவரது கையில்  புல்லாங்குழலுடன் காட்டப்படுகின்றன. சில சந்தர்ப்பங்களில், அவர் பசுவுடனும் மற்றும் மயில் இறகுகளுடனும் காணப்படுகிறார். கிருஷ்ணர் அணியும் கிரீடம், ஒருவர் பின்பற்றும் பாரம்பரியத்தைப் பொறுத்து பரவலாக மாறுபடும். பொதுவாக கையில் புல்லாங்குழல், கழுத்தில் மாலை, நெற்றியில் சந்தானம் தலையில் கிரீடம் மற்றும் மயில் இறகுகளுடன் பீதாம்பர உடையில் சித்தரிக்கப்படுகிறார். 

குழந்தையாக கிருஷ்ணன் லீலை

பூதகி என்ற அரக்கி கிருஷ்ணருக்கு விஷப் பாலை ஊட்ட வந்தபோது அந்த பூதகியை கிருஷ்ணர் கொன்றார். சிறு வயதில் ஆயர் பாடியில் உள்ள மகளிர் வீட்டில் கிருஷ்ணன் வெண்ணெய் திருடி தின்பது வழக்கம். ஆயர்பாடி பெண்கள் கிருஷ்ணரைப் பற்றி யசோதையிடம் புகார் அளித்தால் அவர்களை மாட்டி விட்டு ஓடி விடுவார்.  அவனது குறும்பு தாங்காமல் உரலில் கட்டி வைத்து உதைப்பது போல பாவனை செய்தால் உரலுடன் நகர்ந்து ஓடுவான் கிருஷ்ணன். மண்ணை எடுத்துத் திருடித் தின்பான் கண்ணன். வாயை திறந்து காட்டு என்று கூறிய யசோதையிடம் வாயினுள்  அண்ட சராசரத்தையும் காட்டி மயக்கினான் கிருஷ்ணன். கோபியர்கள் ஆற்றில் குளிக்கச் செல்கையில் அவர்களது ஆடைகளை திருடிச் செல்வது கிருஷ்ணனின் விளையாட்டுகளில் ஒன்றாக இருந்தது. இவ்வாறாக குழல் ஊதி, மாடு மேய்த்து, நண்பர்களுடன் விளையாடி, வெண்ணெய் திருடி குறும்புத்தனம் செய்து காலத்தைக் கழித்த கிருஷ்ணன் கோகுலத்தின் செல்லப் பிள்ளையானார். இந்திரன் கோகுலத்தை அழிக்க பெரும் மழையை உண்டாக்கிய போது கோவர்த்தன மலையை குடையாக பிடித்து அவர்களை காப்பாற்றினார் எனவும் மேலும் யமுனை நதிக்கரையில் இருந்த காளிங்கன் என்ற பாம்பையும் அடக்கினார் என்று கூறப்படுகிறது .

மணிவண்ணன் என்னும் கண்ணன்

பெரியாழ்வாரின் மூலம் கண்ணனின் வரலாறு தெரிந்து கண்ணனையே தன் கணவனாக எண்ணம் கொண்டவர் ஆண்டாள். திருவரங்கத்தில் கண்ணனுடன் வானுலகம் சென்றவர்.ஆண்டாள் தன்னை ஆயர் குலப்பெண்ணாகவே திருப்பாவையில் உருவகித்துக் கொள்கிறாள். ஆழ்வார்கள் கண்ணனை மணிவண்ணன் என்றும் அழைக்கின்றார்கள்.

கிருஷ்ணரும்  16,008 மனைவிகளும்: 

பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் மொத்தம் 16,008 மனைவிகளை கொண்டிருந்தார். அவற்றுள் எண்மனையாட்டி என அழைக்கப்பட்ட எட்டு மனைவிகள் முதன்மையானவர். அவர்கள் " ருக்மணி, ச‌‌த்‌தியபாமா‌, ஜாம்பவதி,நக்னசித்தி, காளிந்தி, மித்திரவிந்தை, இலக்குமணை, பத்திரை " ஆவர். மேலும் இள வயதில் பிருந்தாவனத்தில் இருந்த பெண்களின் மனதில் இடம் பிடித்தார். இவர்களுள் ஒருவரான ராதையுடன் காதல் புரிந்தார். பௌமாசுரன் என்ற ஒரு அசுரன் மூவுலகையும் ஆளும் வரம் பெற்றான். அவன் தான் தோற்கடித்த இடங்களில் இருந்து 16,000 இளவரசிகளை சிறை பிடித்தான். இந்திரன் போன்ற தேவர்களையும் வென்றான், அவர்களையும் கொடுமைப்படுத்தினான். அவனது ஏகாதிபத்தியக் கொடுமைகளைத் தாள முடியாமல் தேவர்கள் அவனின் கொடுங்கோலில் இருந்து தங்களை விடுவிக்குமாறு ஸ்ரீ கிருஷ்ணபரமாத்வை நாடினர். பௌமாசுரன் தனது தாயால் மட்டுமே தான் கொல்லப்பட வேண்டும் என்ற வரத்தைப் பெற்றிருந்தான். தேவர்களின் வேண்டுகளை ஏற்றுக் கொண்டு கிருஷ்ணர் அந்த அசுரனுக்கு எதிராக சத்தியபாமாவுடன் போரில் ஈடுபட்டார். பூமித்தாயின் அவதாரமான சத்யபாமாவால் நரகாசுரன் கொல்லப்பட்டார். பௌமாசுரனைக் கொன்ற பிறகு, அவனால் சிறைப்பிடிக்கப்பட்டிருந்த 16,000 பெண்களை கிருஷ்ணர் விடுவித்தார். கிருஷ்ணர் அவர்களை தங்கள் வீடுகளுக்குத் திரும்பச் சொன்னபோது, அவர்கள் மறுத்துவிட்டனர். பிறிதொரு மனிதனால் அழைத்துச் செல்லப்பட்டவர்களை அந்தக் கால சமுதாயம் திரும்பப் பெறாது என்பதை அவர்கள் உணர்ந்திருந்தனர். அதனால் எங்கும் செல்ல முடியாமல் தவித்தனர். நீங்கள் என்ன செய்ய விரும்புகிறீர்கள் என்று கிருஷ்ணர் அவர்களிடம் கேட்டபோது, அவர்கள் அனைவரும் கிருஷ்ணரை திருமணம் செய்து கொள்ள விரும்பினர். 16,000 பெண்களும் மீண்டும் சமுதாயத்தில் மரியாதையுடன் வாழ முடியும் என்று கருதி கிருஷ்ணர் பல உருவங்களாக பிரிந்து அவர்கள் அனைவரையும் ஒரே நேரத்தில் திருமணம் செய்து கொண்டார் என்பதாக புராண கதைகள் வாயிலாக நாம் அறியலாம்..

கிருஷ்ணரின் கீதைகள்

குருக்ஷேத்திரப் போரில் தங்கள் குரு மற்றும் உறவினர்களை எதிர்த்து போரிட அர்ஜுனன் தயங்கினான். கண்கள் கலங்கி செய்வதறியாது திகைத்தான். அப்போது கிருஷ்ணர் அர்ஜுனருக்கு எடுத்து உரைத்த வாசகங்கள் தான் கீதோபதேசம் ஆகும். கிருஷ்ண அவதார நோக்கம் முடிவடைந்த நிலையில் பகவான் ஸ்ரீகிருஷ்ணரை வைகுண்டத்திற்கு எழுந்தருள வேண்டும் என்று தேவர்கள் வேண்டி நின்றனர். தேவர்களின் வேண்டுதலுக்கு ஏற்ப, கிருஷ்ணர் வைகுண்டம் புறப்படும் போது அவரது பக்தரான உத்தவரின் வேண்டுதலுக்காக அவருக்கு ஆத்ம உபதேசம் செய்தார். இதனை உத்தவ கீதை என்பர்.

கிருஷ்ண அவதாரத்தின்  முடிவு

கிருஷ்ணர் ஒரு முறை  காட்டில் அமர்ந்திருந்த போது, ஒரு வேடனின் அம்பு, கிருஷ்ணரின் காலில் தாக்கப்பட்டதால் உடலை பூவுலகில் வைத்து வைகுந்தம் எழுந்தருளினார்.

banner

Leave a Reply

Submit Comment