சுத்தம் சோறு போடும் என்பார்கள். நம்மை நாம் எப்பொழுதும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். நமது சுற்றுப்புறத்தையும் நாம் சுத்தமாக வைத்திருக்க வேண்டியது அவசியம். அப்பொழுது தான் நம்மைச் சுற்றி நேர்மறை ஆற்றல் மற்றும் அதிர்வலைகள் இருக்கும். இது நமக்கு செல்வ வளத்தையும் வளமான வாழ்வையும் அளிக்கும்.
நமது உடம்பில் கைகள் பிரதான வேலைகளை செய்கின்றன. குறிப்பாக பிரார்த்தனை செய்யவும், உணவு தயாரிக்கவும், உணவு உண்ணவும் கைகள் பயன்படுகின்றன அந்த கைகளை நாம் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். கைகளில் நகங்களை நன்கு பராமரிக்க வேண்டும். அதிக நீளமாக கை விரல் நகங்களை வளர்த்தல் கூடாது. அப்பொழுது தான் லட்சுமி கடாட்சம் வீட்டில் தங்கும். கை விரல் நகங்களுக்கும் லட்சுமி கடாட்சத்திற்கும் என்ன சம்பந்தம் என்று குழப்பமாக உள்ளதா? வாருங்கள் அதனைப் பற்றிக் காண்போம்.
ஏழ்மை நீங்க என்ன செய்ய வேண்டும்?
ஏழ்மை நீங்க நம்மை சுத்தமாக வைத்திருப்பதன் பங்கு என்ன? நாம் நமது கைகளால் தான் உண்கிறோம். அந்த கைகள் சுத்தமாக இருக்க வேண்டும். கைகளின் நகங்கள் வளர்த்தல் கூடாது. நகங்கள் வளர்ப்பதன் மூலம் அதன் இடுக்குகளில் அழுக்குகள் சேரும். நாம் உணவு உண்ணும் போது அந்த அழுக்குகள் நமது உடலில் செல்லும். இது நோய்களை உருவாக்கும். நோய் காரணமாக நம்மால் எதிலும் சரிவர இயங்க முடியாத நிலை வரும். இப்படி சங்கிலி தொடர் போல நிகழ்ந்து நம்மால் பணம் சம்பாதிக்க இயலாத நிலை உருவாகும். கையிருப்பு பணம் மருத்துவ செலவிற்கு போகும். இதனால் நாம் ஏழ்மை அல்லது வறுமை நிலைக்குத் தள்ளப்படலாம்.எனவே நாம் கைகளின் நகங்களை வளர்த்தல் கூடாது.நக இடுக்குகளில் அழுக்கு தங்க விடக் கூடாது.
எப்பொழுது நகங்களை வெட்டுதல் கூடாது?
நகங்களை நடு வீட்டில் வெட்டுவது, இரவு நேரங்களில் வெட்டுவது போன்ற செயல்களை செய்தல் கூடாது. வெட்டிய இடத்திலேயே அவற்றை போடாமல் தனியாக எடுத்து குப்பை கூடையில் போட்டு அப்புறப்படுத்த வேண்டும். இதனால் நகத் துண்டுகள் உண்ணும் உணவுத் தட்டில் விழாமல் காத்துக் கொள்ள முடியும்.
மேலும் செவ்வாய், வெள்ளிக் கிழமைகளில் நகங்களை வெட்டுதல் கூடாது. செவ்வாய்க்கிழமை செவ்வாய் கிரகத்தின் ஆதிக்கம் நிறைந்து இருக்கும். செவ்வாய் இரத்தத்தைக் குறிக்கும் என்பதால் அடிபட வாய்ப்புள்ளது. சுக்கிர வாரம் எனப்படும் வெள்ளிக்கிழமையில் சுக்கிரன் ஆதிக்கம் நிறைந்து இருக்கும். சுக்கிரன் கிரகத்தின் அதிபதியாக லட்சுமி தேவி விளங்குகிறாள். எனவே லட்சுமி கடாட்சம் நிறைந்த நாளில் நகங்களை வெட்டுதல் கூடாது.

Leave a Reply