Kumbam Rasi Guru Peyarchi Palangal 2020 to 2021 - கும்பம் குரு பெயர்ச்சி பலன்கள்

கிரகங்களுள் சுப கிரகம் என்று கூறப்படும் குரு பகவான் 2020 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 20 ஆம் தேதி வெள்ளிக்கிழமை தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார். மகர ராசி சனியின் ஆட்சி வீடு ஆகும். இங்கு குரு பகவான் நீசம் அடைகிறார். என்றாலும் சனியின் ஆட்சி வீட்டில் சனியுடன் இணைந்து இருப்பதால் குரு பகவான் நீச பங்கம் அடைகிறார். உங்கள் ராசிக்கு பன்னிரண்டாம் வீட்டில் சஞ்சாரம் செய்யும் குரு பகவான் பார்வை உங்கள் ராசியின் 4ஆம் வீடு, 6ஆம் வீடு, மற்றும் 8ஆம் வீடுகளின் மீது விழுகிறது. 4ஆம் வீடு என்பது, தாய், சொத்துக்கள், வசதிகள் போன்றவற்றையும், 6ஆம் வீடு என்பது, வெற்றி, சேவை, எதிரிகள், வியாதிகள் ஆகியவற்றையும், 8ஆம் வீடு என்பது, எதிர்பாராத ஆதாயங்கள், மாற்றம் போன்றவற்றையும் குறிக்கிறது.
இந்த குரு பெயர்ச்சியின் காலக் கட்டத்தில் கும்ப ராசி அன்பர்கள் இரண்டும் கலந்த பலன்களை அனுபவிப்பார்கள். உங்கள் குழப்பமான பேச்சு மற்றவர்களால் தவறாகப் புரிந்து கொள்ளப்படும். எனவே நீங்கள் கவனமாகப் பேசுவது நல்லது. குடும்ப உறுப்பினர்களிடம் நீங்கள் உங்கள் பொன்னான நேரத்தை செலவு செய்வதன் மூலம் நீங்கள் அவர்களிடம் நல்லுறவை வளர்த்துக் கொள்ள அனைவரிடமும் நல்லிணக்க உறவு மேற்கொள்வது உங்கள் கையில் தான் உள்ளது. இதன் மூலம் குடும்பத்தில் சலசலப்பு மற்றும் சச்சரவுகளை நீங்கள் தவிர்க்க இயலும். உங்கள் கடந்த கால சேமிப்புகளின் மூலம் நீங்கள் நிகழ்காலத் தேவைகளை நிறைவேற்றிக் கொள்வீர்கள். பணியிடத்தில் நீங்கள் கவனமுடன் செயலாற்ற வேண்டும். நீங்கள் கடினமான முயற்சிகளை மேற்கொள்வதன் மூலம் உங்கள் வாழ்வில் ஏற்றம் காண்பீர்கள். நீங்கள் செலவுகளில் கவனம் செலுத்த வேண்டும். வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்க உங்கள் மனம் விழையும். அதற்காக நீங்கள் அதிகம் செலவு செய்ய வேண்டியிருக்கும். உங்கள் மனதில் பொழுது போக்கு விஷயங்கள் மீதான நாட்டம் அதிகரிக்கும்.
வேலை, தொழில்
நீங்கள் தன்னம்பிக்கையுடன் உங்கள் பணிகளை மேற்கொள்வீர்கள். உங்கள் முயற்சிகளின் மூலம் நீங்கள் பதவி உயர்வு மற்றும் ஊதிய உயர்வு பெறும் வாய்ப்பு உள்ளது. சக பணியாளர்களுடன் நல்லுறவு மேம்படும். அவர்களின் ஒத்துழைப்பு உங்களுக்கு கை கொடுக்கும். நீங்கள் மேலதிகாரிகளின் பாராட்டைப் பெறுவீர்கள். திறம்பட செயலாற்றி மதிப்பும் மரியாதையும் பெறுவீர்கள். புதிய முதலீடுகள் செய்வதன் மூலம் நீங்கள் லாபங்களைப் பெறலாம். புதிய தொழில் வாய்ப்புகளும் உங்களைத் தேடி வரும்.
நிதி
நீங்கள் கடினமான முயற்சிகளை மேற்கொண்டால் பொருளாதாரத்தில் முன்னேற்றம் காணலாம். விரும்பியவற்றை அடையலாம். பணம் கொடுக்கல் வாங்கல் விஷயங்களில் நீங்கள் கவனமுடன் செயல்பட வேண்டும். புதிய முதலீடுகளில் லாபம் வரும் என்ற போதிலும் நீங்கள் கவனமுடன் செயல்பட வேண்டும். செலவுகளிக் குறைத்து சேமிப்பை உயர்த்திக் கொள்ள நீங்கள் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். ஸ்திரமான நிதிநிலை அமைத்துக் கொள்ள இந்த பெயர்ச்சி உங்களுக்கு ஏற்றதொரு காலக் கட்டமாக அமையும்.
குடும்பம்
அனுசரித்துச் செல்வதன் மூலம் கருத்து வேறுபாடுகளைக் களைந்து நீங்கள் குடும்ப உறவுகளை மேம்படுத்திக் கொள்ள இயலும். குடும்ப உறுப்பினர்களுடன் பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புள்ளது என்பதால் நீங்கள் விட்டுக் கொடுத்து செல்வதும், தவறுகளை மன்னிப்பதும் பிரச்சினைகளின் தீவிரத்தைக் குறைக்கும். புரிந்துணர்வுடன் நீங்கள் செயல்படுவதன் மூலம் குடும்பத்தில் நீங்கள் நிம்மதியும் நல்ல பெயரும் எடுக்கலாம்.
கல்வி
விடா முயற்சி விஸ்வரூப வெற்றி என்பதற்கிணங்க நீங்கள் மேற்கொள்ளும் விடா முயற்சி மூலம் கல்வியில் நீங்கள் சிறந்து விளங்க இயலும். மனதில் சில சமயங்கள் இருக்கும் குழப்பங்கள் காரணமாக நீங்கள் படிப்பில் கவனம் செலுத்த இயலாமல் போகலாம். உங்கள் திறமைகளை சரியான வகையில் பயன்படுத்திக் கொள்ள இயலாமல் போகலாம். மனதை ஒருமுகப்படுத்த தியானம் மேற்கொள்வதன் மூலம் நீங்கள் மேற்கண்ட எதிர்மறை விஷயங்களை வெற்றி கொள்ள இயலும்.
காதலும், திருமண வாழ்க்கையும்
கும்ப ராசிக் காதலர்கள் பொறுமையாக இருக்க வேண்டிய காலக் கட்டம். உண்மையான அன்பும் அனுசரணையும் தான் உங்களுக்கு கை கொடுக்கும். விட்டுக் கொடுத்துச் செல்வதன் மூலம் உறவை தக்க வைத்துக் கொள்ள இயலும். திருமணத்திற்குக் காத்திருப்பவர்களுக்கு மிகுந்த முயற்சிக்கு பின் திருமண பாக்கியம் அமையும். திருமணமான தம்பதிகள் பரஸ்பரம் சந்தேகத்திற்கு இடமளிக்காத வகையில் நடந்து கொள்ள வேண்டும். மனம் விட்டுப் பேசுவதன் மூலம் கருத்து வேறுபாடுகளைக் களைந்து நல்லுறவை தக்க வைத்துக் கொள்ள இயலும்.
ஆரோக்கியம்
சுவர் இருந்தால் தான் சித்திரம். உங்கள் ஆரோக்கியம் சிறப்பாக இருந்தால் தான் வாழ்வில் பிரகாசிக்க இயலும். தூசியால் பிரச்சினை, ஜீரணப் பிரச்சினை போன்ற உபாதைகள் ஏற்பட வாய்ப்புள்ளது என்பதால் பயணத்தின் பொழுதும், உணவிலும் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். மனதை இலேசாக வைத்துக் கொள்வதன் மூலம் நீங்கள் உங்கள் ஆரோக்கியத்தை தக்க வைத்துக் கொள்ள இயலும். பொதுவாக உங்கள் ஆரோக்கியம் சாதாரணமாக இருக்கும்.
எளிய பரிகாரங்கள்
- தினமும் ‘தட்சிணாமூர்த்தி ஸ்லோகம்’ ஜபம் செய்யவும்
- வியாழக்கிழமைகளில், ஏழைகளுக்கோ, மாற்றுத் திறனாளிகளுக்கோ அன்ன தானம் செய்யவும்.
- உணவுக் கட்டுப்பாட்டை அனுசரித்து, உடல் எடையை சரியாகப் பராமரிக்கவும்
- தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்ளவும்
- உங்கள் நடவடிக்கைகளில் எச்சரிக்கையுடன் இருக்கவும்
