குல தெய்வத்தின் அருளும் ஆசியும் உங்களுக்கு நிரந்தரமாக கிடைக்க இதை செய்யுங்கள்
தெய்வத்தின் அருள் இருந்தால் நமது வாழ்க்கை தெளிந்த நீரோட்டம் போல சுமுகமாக ஓடிக் கொண்டே இருக்கும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. அதிலும் குல தெய்வத்தின் அருளும் ஆசியும் இருந்தால் நமது வம்சமே தழைத்து ஓங்கும். ஆனால் எல்லோருக்கும் எல்லா சமயத்திலும் தெய்வத்தின் அருள் கிடைக்கிறதா என்றால் பலரும் இல்லை என்று தான் கூறுவார்கள். இதற்கு நமது கர்ம வினை தான் காரணம். இதனை பிரார்த்தனை மூலம் நாம் மாற்றி அமைத்துக் கொள்ளலாம்.
குல தெய்வம் அறிதல் மற்றும் வழிபாடு:
குல தெய்வத்தின் அருள் இல்லாமல் பிற தெய்வங்களின் அருள் கிட்டுவது கடினம். எனவே குல தெய்வத்தை நாம் நாள் தோறும் வழிபட வேண்டும். குல தெய்வம் என்பது நமது மூதாதையர்கள் காலம் காலமாக வழிபட்டு வந்த தெய்வம் ஆகும். ஒவ்வொரு சந்ததியினரும் குல தெய்வத்தை தொடர்ந்து வழிபட்டு வந்தால் அவர்கள் மிகவும் திருப்தி அடைந்து அருள் புரிவார்கள். சிலருக்கு குல தெய்வமே தெரியாமல் இருக்கும். இதனை பிரசன்ன ஜோதிடம் மூலம் அறியலாம். ஒரு சிலருக்கு அவர்கள் தங்கள் இஷ்ட தெய்வத்தை வணங்கி வர வர குல தெய்வத்தை அடையாளம் காணலாம்.
குல தெய்வ அருள் கிட்ட எளிய பரிகாரம்:
உங்களுக்கு உரிய குல தெய்வத்தின் அருளும் ஆசியும் கிடைக்க எளிய வழி உள்ளது. பொதுவாக குல தெய்வத்தை தினமும் வணங்கி வர வேண்டும். செவ்வாய் வெள்ளிக்கிழமைகளில் வணங்குவது சிறப்பானது.
உங்கள் குல தெய்வம் ஆண் தெய்வமாக இருந்தால் அமாவாசை அன்று குல தெய்வ கோவிலுக்கு சென்று ஒன்பது நெய் விளக்கு ஏற்றுங்கள். செல்ல இயலாதவர்கள் நேர்ந்து கொண்டு வீட்டிலேயே வழிபாட்டை மேற்கொள்ளலாம். காமாட்சி விளக்கில் இலுப்ப எண்ணெய் அல்லது நெய் ஊற்றி விளக்கு ஏற்ற வேண்டும். பின்னர் பிற்பகல் பன்னிரண்டு மணி அளவில் குல தெய்வத்திற்கும், முன்னோர்களுக்கும். படையல் இட்டு வழிபட்டு வர வர உங்கள் குல தெய்வத்தின் அருளாசிகள் நிரந்தரமாக உங்களுக்கு கிட்டும்.
உங்கள் குல தெய்வம் பெண் தெய்வமாக இருந்தால் பௌர்ணமி அன்று மேலே கூறிய வகையில் வழிபாடு செய்ய வேண்டும்.
குல தெய்வ வழிபாட்டின் பலன்:
இவ்வாறு தொடர்ந்து செய்து வர வர குல தெய்வத்தின் அருளும் ஆசியும் உங்களுக்கு நிரந்தரமாகக் கிட்டும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் ஒற்றுமையும் பெருகும். நீங்கள் மேற்கொள்ளும் காரியங்களில் வெற்றி கிட்டும். திருமணம், குழந்தைப்பேறு போன்றவற்றில் இருக்கும் தடைகள் நீங்கும். நோய் நொடிகள் நீங்கி ஆரோக்கியமான வாழ்வு கிட்டும். குல தெய்வம் கூடவே இருந்து உங்களை காக்கும். குலம் தழைத்து ஓங்கும்.











