Vasavi Jayanthi: Invoke the Wish-Fulfilling Goddess of this Yuga For Protection, Divine Wisdom, Prosperity & Success JOIN NOW

Kolaru Pathigam

June 25, 2021 | Total Views : 1,517
Zoom In Zoom Out Print

கோள் என்றால் கிரகம். அறு என்றால் விலக்குவது. நவகிரக தோஷங்களை நீக்க வல்லது கோளறு பதிகம் கர்ம வினையானது “சஞ்சித கர்மா” பிராரப்த கர்மா” ஆகாமிய கர்மா” என்று அழைக்கப்படுகின்றது. மனிதர்களாகப் பிறந்த ஒவ்வொருவரும் தத்தமது கர்ம வினைகளின் அடிப்பபடையில் தான் நன்மை தீமைகளை தத்தமது வாழ்வில் அனுபவிக்கிறார்கள்.  நமது நல்வினை மற்றும் தீவினைகளுக்கேற்ப நம்மை பலன் அனுபவிக்க வைப்பது நவகிரகங்கள் ஆகும்.  இந்த நவகிரகங்கள் தானாக நமக்கு இன்பங்கள் அல்லது துன்பங்களை வழங்குவது இல்லை.நமது கர்ம வினைப்பயன் அடிப்படையில் தான் அவற்றை நாம் அனுபவிக்கிறோம். 

மனித வாழ்வில்  இரவு-பகல்; நன்மை-தீமை; இன்பம்- துன்பம்  என்பது போல  இரண்டு பக்கங்கள் உள்ளன. நமக்கு எளிதாக இருக்கும் சந்தோசம், மகிழ்ச்சி, வெற்றி போன்றவற்றை நாம் தனியாக எதிர்கொள்கிறோம்; வரவேற்கிறோம்; மகிழ்ச்சி ஆராவாரம் செய்கிறோம். ஆனால் துன்பம் என்று வரும் போது  நாம் தனித்து செயல்பட முடியாது என்ற மன நிலையில் நாம் இறைவனின் பாதாரவிந்தங்களை நாடுகிறோம். நாம் இன்பமயமாய் வாழ நல்லவற்றையே என்ன வேண்டும். நல்லவற்றையே செய்ய வேண்டும். அவ்வாறு இருக்க இறைவழிபாடு செய்ய வேண்டும்.

 

எங்களின் சிவபெருமான் ஹோமத்தில் பங்குகொண்டு பயன்பெறுங்கள் 

அந்த வகையில் சிவபெருமானை குறித்து  பாடப்பட்ட இந்த பதிகத்தை நாம் மனமுருகப் பாடி இறைவனை வணங்கி வழிபட  வேண்டும் என்பது ஆன்றோர்களின் வழிகாட்டுதல் ஆகும். 

கோளறு பதிகங்களை பக்தி சிரத்தையுடன் ஆத்மார்த்தமாகப் பாடுங்கள். மனதாரப் பிரார்த்தனை செய்யுங்கள். கிரக தோஷங்கள் அனைத்தும் விலகும் என்பது உறுதி!

திருஞான சம்பந்தர் :

சைவநெறி தழைத்தோங்க பாடுபட்டவர்களில் தேவார மூவரின் பங்களிப்பு பெரிதாகும். இவர்கள் பாடிய தலங்கள் திருமுறைத் தலங்கள் என்று அழைக்கப்படுகின்றன. தேவார மூவர் திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் அழைக்கப்படுகின்றனர். தேவார மூவரில் இளம் வயதிலேயே தெய்வ அருள் பெற்று பாடல்களை இயற்றியவராகத் திருஞானசம்பந்தர் விளங்குகிறார்.

ஞானப் பால் உண்ட திருஞானசம்பந்தர்:

ஞானசம்பந்தர் மூன்று வயது குழந்தையாக இருக்கும் போது அவரது தந்தையார் சம்பந்தரைத் தோணியப்பர் ஆலயக்குளக்கரையில் அமரவைத்து விட்டுக் குளிக்கச் சென்றார். நீருக்குள் மூழ்கி தந்தை மந்திர உரு செய்தார். நெடுநேரமாகியும் தந்தை வராதலால் சம்பந்தர் அழுதார். அப்பொழுது திருத்தோணி நாதர் உமாதேவியுடன் காளை வாகனத்தில் எழுந்தருளினார். உமாதேவியார் தன் கையில் வைத்திருந்த அமுதப்பாலை ஞானசம்பந்தருக்குக் கொடுத்தார்

குளித்துவிட்டு வந்த சிவபாதர் தன் குழந்தையின் வாயில் பால் ஒழுகுவதைப் பார்த்த போது, யார் கொடுத்தது என்று வினவினார். ஞானசம்பந்தர் தோணியப்பரைக் காட்டினார். உமையம்மை அளித்த ஞானப்பாலை உண்ட பிறகு சம்பந்தர் இறைவன் மீது தலந்தோறும் சென்று பதிகங்களைப் பாடிட புறப்பட்டார். மூன்று வயதில் பாடத்தொடங்கி 16 வயது வரை தலங்கள் தோறும் சென்று திருநெறியத் தமிழ் பாடினார். தோடுடைய செவியன் எனத் தொடங்கும் நட்டபாடைப் பண்ணில் பாடத் தொடங்கி கல்லூர்ப் பெருமணம் எனத்தொடங்கும் அந்தாளிக்குறிஞ்சி பண் பதிகம் வரை பாடியுள்ளர். இவர் பாடியவற்றுள் இன்று வரை 386 பதிகங்கள் கிடைத்துள்ளன. இவை மூன்று திருமுறைகளாகப் பகுக்கப் பெற்றுள்ளன. இவை பண்கள் அடிப்படையில் அமைக்கப்பட்டுள்ளன.

அஞ்சேல் அஞ்சேல் என்று அபயம் தந்த பதிகம்:

சைவத் திருமுறைகள் பன்னிரண்டு. இவற்றுள் திருஞான சம்பந்தர் பாடிய தேவாரப் பாடல்கள்  முதல், இரண்டாம் மற்றும் மூன்றாம்  திருமுறைகளாக உள்ளன. இவற்றுள் இரண்டாம் திருமுறையில் உள்ள பதிகங்களில் ஒன்று கோளறு பதிகம் என்று அழைக்கப்படுகின்றது. 

1962 வது வருடம் பிப்ரவரி மாதம் 5 ஆம் தேதி  எட்டு கிரகங்கள் ஒரே ராசியில் கூடின. அப்பொழுது பிரளயம் ஏற்பட்டு உலகமே அழிந்து விடும் என்று எல்லாரும் நடுங்கினர். அந்த சமயத்தின் நடமாடும் தெய்வமாக விளங்கிய ஸ்ரீமத் பரமஹம்ச பரிவ்ராஜகாசார்யா  ஸ்ரீமத் சங்கர பகவத் பாத பிரதிஷ்டித  ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு ஸ்ரீமத் சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்ரீ பாதர்கள் “அஞ்சேல் அஞ்சேல் “ என்று அபயம் தந்தார்கள். “மங்கை: பாகனை மனத்துள் வைத்துச் சைவ நாயன்மாரில் முதல்வரான  திருஞான சம்பந்தமூர்த்தி  நாயனார் திருவாய் மலர்ந்தருளிய கோளாறு பதிகத்தைப்  பாராயணம் செய்யுங்கள். எந்தக் கிரகமும்                           ஒரு துன்பமும்  செய்யாது. எட்டுக் கிரகங்கள் அல்ல; இது போல எண்ணாயிரம் கிரகங்களே சேர்ந்தாலும் அவை நல்லனவாய் நல்வையே செய்யும் ஒருவருக்கும் ஒரு துன்பமும் உண்டாகாது என்று திருவாய் மலர்ந்ந்தருளினார்.  ஆகையால் இந்தப் பதிகத்த்தைப் பாராயாணம் செய்வதால் ஏற்படும் நல்ல பலன்களைப் பற்றி கூறவும் வேண்டுமா? 

ஞானசம்பந்தர் பரம கருணையோடு அருளியுள்ள சக்தி வாய்ந்த கோளறு பதிகத்தை அனுதினமும் பாராயணம் புரிவதன் மூலம் கர்ம வினையின் வேகத்தை சர்வ நிச்சயமாய் குறைத்துக் கொள்ள முடியும்.

கோளறு பதிகம் (திருஞானசம்பந்தர் அருளியது) | Kolaru Pathigam Lyrics in Tamil:

கோளறு பதிகம் முதல் பாடல்:

வேயுறு தோளிபங்கன் விடமுண்ட கண்டன்
மிகநல்ல வீணை தடவி
மாசறு திங்கள்கங்கை முடிமேல் அணிந்தென்
உளமே புகுந்த அதனால்
ஞாயிறு திங்கள்செவ்வாய் புதன்வியாழன் வெள்ளி
சனிபாம்பு இரண்டும் உடனே
ஆசறு நல்லநல்ல அவைநல்ல நல்ல
அடியார் அவர்க்கு மிகவே.

பொருள்:

1. மூங்கில் போன்ற நளினமான தோளினை உடைய உமையவளுக்கு தன் உடம்பினில் சரி பாகம் கொடுத்தவன். உயிர்களைக் காக்கும் பொருட்டு ஆலகால விடத்தை அருந்தி திருநீலகண்டனாய்த் திகழ்பவன் இனிமையான இசையை எழுப்பும் வீணையை இசைப்பவன்;  களங்கமில்லாத பிறை சந்திரனையும் கங்கையையும் தன் திருமுடி மேல் அணிந்து கொண்டு, என் உளம் முழுவதும் நிறைந்து காணப்படுபவன். இத்துனை அற்புதங்கள் நிறைந்த சிவனை நமது சிந்தையில் நிறுத்தினால் சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி, மற்றும் பாம்பாகிய ராகு- கேது என்னும் ஒன்பது கோள்களும்  குற்றமற்ற நன்மையே புரியும். இடர்கள் ஏதும் புரியாது.

கோளறு பதிகம் இரண்டாவது பாடல்:

என்பொடு கொம்பொடாமை இவைமார்பு இலங்க
எருதேறி ஏழை உடனே
பொன்பொதி மத்தமாலை புனல்சூடி வந்தென்
உளமே புகுந்த அதனால்
ஒன்பது ஒன்றொடுஏழு பதினெட்டொடு ஆறும்
உடனாய நாள்கள் அவைதாம்
அன்பொடு நல்லநல்ல அவைநல்ல நல்ல
அடியார் அவர்க்கு மிகவே.

பொருள்:

எலும்பு, கொம்பு, ஆமை ஓடு முதலானவை தன் திருமார்பில் விளங்க, உமையவளுடன் எருதின் மேல் ஏறி, தங்கம் போல மின்னும்  ஊமத்தை மலர்களாலான மாலை தரித்து, தலையில் கங்கையணிந்து என் மனதுள்  நிறைந்து இருப்பவன். இத்துனை அற்புதங்கள் நிறைந்த சிவனை நமது சிந்தையில் நிறுத்தினால் அனைத்து நட்சத்திரங்களும், நாள்களும் இப்பதிகத்தை ஓதும் சிவபெருமானின் அடியவருக்கு எவ்வித இடரும் புரியாது. மாறாக நன்மையே விளைவிக்கும்.
(ஒன்பதாம் நட்சத்திரம் -ஆயில்யம்; பத்தாம் நட்சத்திரம் -மகம்; பதினாறாம் நட்சத்திரம் -விசாகம்; பதினெட்டாம் நட்சத்திரம் - கேட்டை; ஆறாவது நட்சத்திரம் - திருவாதிரை; முதலான பயணத்திற்கு விலக்கப்பட்ட நட்சத்திர நாட்கள் எல்லாமும், சிவனடியார் தமக்கு நல்லதையே செய்யும்!)

கோளறு பதிகம் மூன்றாம் பாடல்:

உருவளர் பவளமேனி ஒளி நீறணிந்து
உமையோடும் வெள்ளை விடைமேல்
முருகலர் கொன்றைதிங்கள் முடிமேல் அணிந்தென்
உளமே புகுந்த அதனால்
திருமகள் கலையதூர்தி செயமாது பூமி
திசை தெய்வமான பலவும்
அருநெதி நல்லநல்ல அவைநல்ல நல்ல
அடியார் அவர்க்கு மிகவே.

பொருள்:

பவளம் போன்ற சிவந்த திருமேனியில் ஒளிபொருந்திய வெண்ணீற்றை அணிந்து, சிவபெருமான்  உமை அம்மையாரோடு  வெள்ளை எருதின்மீது ஏறி வந்து, அழகு பொருந்திய கொன்றையையும் திங்கள் எனப்படும் சந்திரனையும் தன் முடிமேல் அணிந்து வந்து என் உள்ளத்துள் புகுந்து தங்கியுள்ளான். இத்துனை அற்புதங்கள் நிறைந்த சிவனை நமது சிந்தையில் நிறுத்தினால் திருமகள், துர்க்கை, அஷ்ட திக்குப் பாலகர்கள், பூமியை இயக்கும் அதி தேவதை ஆகியோர் இப்பதிகத்தை ஓதும் சிவபெருமானின் அடியவருக்கு நன்மையே புரிவர். குற்றமற்ற செல்வமும் வந்து எய்தும்.

கோளறு பதிகம் நான்காம் பாடல்:

மதிநுதல் மங்கையோடு வடபால் இருந்து
மறையோதும் எங்கள் பரமன்
நதியொடு கொன்றைமாலை முடிமேல் அணிந்தென்
உளமே புகுந்த அதனால்
கொதியுறு காலன்அங்கி நமனோடு தூதர்
கொடு நோய்களான பலவும்
அதிகுணம் நல்லநல்ல அவைநல்ல நல்ல
அடியார் அவர்க்கு மிகவே

பொருள்:

பிறைபோன்ற நெற்றியை உடைய உமை அம்மையோடு ஆலமரத்தின்கீழ் இருந்து  வேதங்களை அருளிய எங்கள் பரமன், கங்கை நதியையும் கொன்றை மாலையையும் முடிமேல் அணிந்து என் உள்ளத்துள் புகுந்து தங்கியுள்ளான். இத்துனை அற்புதங்கள் நிறைந்த சிவனை நமது சிந்தையில் நிறுத்தினால் சினம் மிகுந்த கூற்றுவன், அக்னி, காலனின் தூதுவர்கள் ஆகியோர் இடர் புரியாமல் இப்பதிகத்தை ஓதும் சிவபெருமானின் அடியவருக்கு நன்மையே புரிவர். கொடிய நோய்கள் வருத்தாது.

கோளறு பதிகம் ஐந்தாம் பாடல்:

நஞ்சணி கண்டன்எந்தை மடவாள் தனோடும்
விடையேறு நங்கள் பரமன்
துஞ்சிருள் வன்னிகொன்றை முடிமேல் அணிந்தென்
உளமே புகுந்த அதனால்
வெஞ்சின அவுணரோடு உருமிடியும் மின்னும்
மிகையான பூதம் அவையும்
அஞ்சிடு நல்லநல்ல அவைநல்ல நல்ல
அடியார் அவர்க்கு மிகவே

பொருள்:

ஆலகால விஷத்தை தனது  கழுத்தில் அணிந்த நீலகண்டனாம் எனது தந்தையாகிய    உமையம்மையாரோடு இடபத்தின் மேல் ஏறி வரும் நம் பரம்பொருள் ஆகிய சிவபெருமான், அடர்ந்து கறுத்த வன்னிமலரையும், கொன்றை மலரையும் தன் திரு முடிமேல் தரித்து  என் உள்ளத்துள் புகுந்து தங்கியுள்ளான். இத்துனை அற்புதங்கள் நிறைந்த சிவனை நமது சிந்தையில் நிறுத்தினால் கொடிய சினத்தை உடைய அரக்கர்களாலும், பஞ்ச பூதங்களாலும் இப்பதிகத்தை ஓதும் சிவபெருமானின் அடியவருக்கு இடர் நேராது. மாறாக நன்மையே விளையும். இல்லாமையாகிய வறுமை வந்து எய்தாது.

கோளறு பதிகம் ஆறாம் பாடல்:

வாள்வரிய தளதாடை வரி கோவணத்தர்
மடவாள் தனோடு உடனாய்
நாள்மலர் வன்னிகொன்றை நதிசூடி வந்தென்
உளமே புகுந்த அதனால்
கோளரி உழுவையோடு கொலையானை கேழல்
கொடு நாகமோடு கரடி
ஆளரி நல்லநல்ல அவைநல்ல நல்ல
அடியார் அவர்க்கு மிகவே

பொருள்:

வரி வரியாக ஒளிமிகுந்து காணப்படும் புலித்தோல் ஆடையும், வரிந்து கட்டிய கோவணமும் அணியும் சிவபெருமான் அன்றலர்ந்த மலர்கள், வன்னி இலை, கொன்றைப்பூ, கங்கை நதி ஆகியவற்றைத் தன் முடிமேல் சூடி, உமையம்மையாரோடும் வந்து என் உள்ளத்துள் புகுந்து தங்கியுள்ளான். இத்துனை அற்புதங்கள் நிறைந்த சிவனை நமது சிந்தையில் நிறுத்தினால் சிங்கம், புலி, கொல்லும் தன்மை கொண்ட யானை, பன்றி, கொடிய நாகம், கரடி ஆகியவைகளால் இப்பதிகத்தை ஓதும் சிவபெருமானின் அடியவருக்கு இடர் நேராது. மாறாக நன்மையே விளையும்.

கோளறு பதிகம் ஏழாம் பாடல்:

செப்பிள முலைநல்மங்கை ஒரு பாகமாக
விடையேறு செல்வன் அடைவார்
ஒப்பிள மதியும்அப்பும் முடிமேல் அணிந்தென்
உளமே புகுந்த அதனால்
வெப்பொடு குளிரும்வாத மிகையான பித்தும்
வினையான வந்து நலியா
அப்படி நல்லநல்ல அவைநல்ல நல்ல
அடியார் அவர்க்கு மிகவே

பொருள்:

செம்பு போன்ற இளந்தனங்களை உடைய உமையவளைத் தன் திருமேனியில் ஒரு பாகமாகக் கொண்டு, இடப வாகனத்தின் மீது வளம் வரும் செல்வனாகிய சிவபெருமான் தன்னை அடைந்த அழகிய பிறைச்சந்திரனையும், கங்கையையும் தன் முடிமேல் அணிந்தவனாய், என் உள்ளத்துள் புகுந்து தங்கியுள்ளான். இத்துனை அற்புதங்கள் நிறைந்த சிவனை நமது சிந்தையில் நிறுத்தினால் வெப்பம், குளிர், வாதம்; பித்தம் முதலான நாடிகள் ஆகிவைகளும் தம் இயல்பில் இருந்து நீங்காமல் இப்பதிகத்தை ஓதும் சிவபெருமானின் அடியவருக்கு நன்மையே விளைவிக்கும்.

கோளறு பதிகம் எட்டாம் பாடல்:

வேள்பட விழிசெய்துஅன்று விடைமேல் இருந்து
மடவாள் தனோடும் உடனாய்
வாள்மதி வன்னிகொன்றை மலர்சூடி வந்தென்
உளமே புகுந்த அதனால்
ஏழ்கடல் சூழ்இலங்கை அரையன் தனோடும்
இடரான வந்து நலியா
ஆழ்கடல் நல்லநல்ல அவைநல்ல நல்ல
அடியார் அவர்க்கு மிகவே

பொருள்:

அன்று மன்மதன் அழியும்படி நெற்றிக்கண்ணைத் திறந்து எரித்த சிவபெருமான், இடபத்தின் மேல் உமையம்மையாரோடு உடனாய் இருந்து, தன் முடிமேல் ஒளி பொருந்திய பிறைச்சந்திரன், வன்னி இலை, கொன்றை மலர் ஆகியனவற்றைச் சூடி வந்து என் உள்ளத்துள் புகுந்து தங்கியுள்ளான். அதனால், ஏழ் கடல்களால் சூழப்பட்ட இலங்கையின் மன்னன் ஆன இராவணன்  சந்தித்தது போன்ற இடர்கள் வந்து நம்மைத் துன்புறுத்தா. ஆழமான கடலும் நமக்கு நல்லனவே செய்யும். இத்துனை அற்புதங்கள் நிறைந்த சிவனை நமது சிந்தையில் நிறுத்தினால் மலையை பெயர்க்க முற்பட்ட இராவணனை பெரும் இடர் எய்தியது. அது போன்று இடர்கள் இப்பதிகத்தை ஓதும் சிவபெருமானின் அடியவருக்கு நேராது. ஆழ்கடலும் நன்மையே செய்யும்.

கோளறு பதிகம் ஒன்பதாம் பாடல்:

பலபல வேடமாகும் பரனாரி பாகன்
பசுவேறும் எங்கள் பரமன்
சலமகளோடு எருக்கு முடிமேல் அணிந்தென்
உளமே புகுந்த அதனால்
மலர்மிசையோன் மால் மறையோடு தேவர்
வரு காலமான பலவும்
அலைகடல் மேருநல்ல அவைநல்ல நல்ல
அடியார் அவர்க்கு மிகவே

பொருள்:

பல்வேறு வடிவங்கள் கொள்ளும்  பரம்பொருளானவனும், உமையொருபாகனும், எருதின் மேல் ஏறிவரும் எங்கள் பரமனுமாகிய சிவபெருமான், தன் முடிமேல் கங்கை, எருக்கமலர் ஆகியவற்றை அணிந்து வந்து என் உள்ளத்துள் புகுந்து தங்கியுள்ளான். இத்துனை அற்புதங்கள் நிறைந்த சிவனை நமது சிந்தையில் நிறுத்தினால் நான்முகன், ஸ்ரீமன் நாராயண மூர்த்தி, மறைகள், தேவர்கள் ஆகியோர் அனைவரும் இப்பதிகத்தை ஓதும் சிவபெருமானின் அடியவருக்கு நன்மையே புரிவர். மேலும் வரும் காலங்கள் ஆன பலவும், கடலும், மேரு மலையும் நன்மையே விளைவிக்கும்.

கோளறு பதிகம் பத்தாம் பாடல்:

கொத்தலர் குழலியோடு விசையற்கு நல்கு
குணமாய வேட விகிர்தன்
மத்தமும் மதியும் நாகம் முடிமேல் அணிந்தென்
உளமே புகுந்த அதனால்
புத்தரோடு அமணைவாதில் அழிவிக்கும் அண்ணல்
திருநீறு செம்மை திடமே
அத்தகு நல்லநல்ல அவைநல்ல நல்ல
அடியார் அவர்க்கு மிகவே

பொருள்:

கூந்தலில் மலர்க்கொத்துகள் அணிந்த உமையம்மையாரோடு வேட வடிவில் சென்று அருச்சுனனுக்கு அருள்புரிந்த தன்மை கொண்ட சிவபெருமான், தன் முடி மேல் ஊமத்தை மலர், பிறைச்சந்திரன், பாம்பு ஆகியவற்றை அணிந்து வந்து என் உள்ளத்துள் புகுந்து தங்கியுள்ளான். இத்துனை அற்புதங்கள் நிறைந்த சிவனை நமது சிந்தையில் நிறுத்தினால் புத்தரையும் சமணரையும் வாதில் வெல்லும் நிலையான வெற்றியை உடையது சிவபெருமானின் திருநீறு. இப்பதிகத்தை ஓதும் சிவபெருமானின் அடியவருக்கு எவ்வித இடரும் நேராத வண்ணம் காத்து நிற்கும் பெருமானின் திருநீறு.

கோளறு பதிகம் பதினோறாம் பாடல்:

தேனமர் பொழில்கொள்ஆலை விளைசெந்நெல் துன்னி
வளர்செம்பொன் எங்கும் நிகழ
நான்முகன் ஆதியாய பிரமா புரத்து
மறைஞான ஞான முனிவன்
தானுறு கோளுநாளும் அடியாரை வந்து
நலியாத வண்ணம் உரைசெய்
ஆனசொல் மாலையோதும் அடியார்கள் வானில்
அரசாள்வர் ஆணை நமதே!!

பொருள்:

தேன் நிறைந்த பூங்காக்களைக் கொண்டதும், கரும்பும் (ஆலை), விளைகிற செந்நெல்லும் நிறைந்துள்ளதும், பொன் போல் ஒளிர்வதும், நான்முகன் (வழிபட்ட) காரணத்தால் பிரமாபுரம் என்ற ஊரில் தோன்றி அபரஞானம் பரஞானம் ஆகிய இரு வகை ஞானங்களையும் உணர்ந்த ஞானசம்பந்தனாகிய யான், தாமே வந்து சம்பவிக்கும் நவக்கிரகங்கள், நாள் நட்சத்திரம், போன்றன எல்லாம் அடியவரை வந்து வருத்தாதவாறு பாடிய இப்பதிகத்தை ஓதும் அடியவர்கள் வானுலகில் அரசு புரிவர். இது நமது ஆணை.

இப்பதிகத்தை ஓதும் சிவபெருமானின் அடியவருக்கு நாள்களும், கோள்களும், நட்சத்திரங்களும் நன்மையே புரியும். இது நம் ஆணை.
கோளறு பதிகம்:

பயன்கள்:

கிரக தோஷம், கிரக நிலையால் நாள் சரியில்லை என தோன்றும் போது இந்த பாடல்களை பாடினால் கிரக தோஷத்திலிருந்து விடுபட முடியும் என்பதே அதன் பொருள்.
ஓம் நமச்சிவாய…ॐ

ஓம் திருச்சிற்றம்பலம்

banner

Leave a Reply

Submit Comment