AstroVed Menu
AstroVed
search
search

முத்தைத்தரு பத்தித் திருநகை பாடல் வரிகள் | Muthai tharu pathi song lyrics

dateJune 25, 2021

திருப்புகழை பாடப்பாட வாய் மணக்கும் – இதிலிருந்து நாம் திருப்புகழின் பெருமையை உள்ளங்கை நெல்லிக்கனி போல உணரலாம். திருப்புகழ் என்றால் தெய்வத்தின் புகழ் என்று பொருள்படும். திருப்புகழ் என்பது முருகக் கடவுள் மீது அருணகிரிநாதர் இயற்றிய ஒரு பக்தி நூல். திருப்புகழை தேவாரம், திருவாசகம் போல் மந்திர நூலாகவும், நாள்தோறும் இறைவனைப் போற்றிப் புகழ்பாடும் நூலாகவும், முருகன் மீது பக்தி கொண்டோர் பின்பற்றும் நூலாகவும் கொள்கின்றனர். அருணகிரிநாதர் கி.பி. 15 ஆம் நூற்றாண்டில் திருவண்ணாமலையில் பிறந்து வாழ்ந்தவர். திருப்புகழில் 1307 இசைப்பாடல்கள் உள்ளன. இவற்றுள் 1088க்கும் மேற்பட்ட சந்த வேறுபாடுகள் உள்ளன என்று கணித்து இருக்கிறார்கள். லயம் என்னும் தாள வகை நிறைந்த களஞ்சியமாக இது விளங்குகின்றது. சந்த வகை நிறைந்த இசைப்பாடல்கள் திருப்புகழ்  தவிர வேறு எங்கும் காணப்படுவதில்லை. திருப்புகழில் உள்ள இசைத்தாளங்கள், இசை நூல்கள் எதிலும் அடங்காத தனித்தன்மை பெற்றவை. இதற்கு உரை எழுதியவர் ஸ்ரீ கோபால சுந்தரம் அவர்கள் ஆவார். 

திருப்புகழின் பெருமை

திருப்புகழுக்கு ஒரு பெருமை உண்டு. “உலகெலாம்” என்று இறைவன் அடி எடுத்துக் கொடுக்க, சேக்கிழார், உலகெலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன் எனப் பெரிய புராணத்தைத் தொடங்கினார். திருவண்ணாமலை கோயில் கோபுரத்தில் இருந்து வீழ்ந்து தம் உயிரை மாய்த்துக் கொள்ள முனைந்த அருணகிரி நாதர் முருகப்பெருமானை  தடுத்துக் காத்தார் என்றும்  நமது பத மலரைப் பாடுக என்று பணித்தார் என்றும் ஏடும் எழுத அறியாத ஏழை எவ்வாறு பாடுவேன் என அருணகிரிநாதர் இரு கரம் கூப்பி வினவ -  “முத்தைத்தரு என்று அடியெடுத்துக் கொடுத்தார் என்றும் கூறுவார்.

அருணகிரி நாதர் முத்தைத்தரு பாடல் எழுதிய வரலாறு  :

இனியும் வாழ்வானென்? என்ற வேகத்தில் ஆலய கோபுரத்தின் மீதேறி கீழே விழுந்து தன உயிரை மாய்த்துக் கொள்ள விழைந்த அருணகிரி நாதரை  தனது திருக்கரத்தால் தாங்கி காத்து முக்தியெனும் திருவடியால் தீண்டி முருகன் என்றும் மீளா அடிமை கொண்டான். அவர் நாவில் அயனும் அறியா பெருமையுடைய இசைப்பயில் ஷடாக்ஷரத்தை, தன் திருக்கை வேலால் தீட்டினான். தானே காக்கும் தமிழால் தன்னை பாடும்படியும் பணித்தான். தமிழோடு இசைப்பாடல் பாடியறியாதவரான நம் ஸ்வாமி, செய்வதறியாது திகைக்க,”முத்தைதரு பத்தி..” எனத்தொடங்கும் முதலடியை முற்கண் எடுத்துக் கொடுத்தளவில் முருகப் பெருமானின் அருள் அவர் உள்ளத்தில் பாய்ந்தது. பாடல் மடை வெள்ளமென அவர் வாயில் இருந்து பாய்ந்தது. அருளாளர் தம் எழுத்து என்றும் மறையாமல் இருப்பதற்கு காரணம் அவையெல்லாம் ஆண்டவனே அடியெடுத்து கொடுத்ததாலன்றி மற்றில்லை. காலத்தால் அழியாமல் என்றும் நிலைத்து இருக்கும் தன்மை கொண்ட பாடலாய் இது அமைந்துள்ளது. 

இந்தப் பாடலை மக்கள் மனதில் நிலைநிறுத்த முயன்றவர் :

திருமுருக கிருபானந்த வாரியார்  சிறந்த முருக பக்தராக விளங்கியவர். ஆன்மீக சொற்பொழிவுகள் ஆற்றுவதை இவர் தவமாகவே மேற்கொண்டார் என்று கூறலாம். கடவுள் மீதான பக்தி சிரத்தை, சமயப் பற்று, இலக்கிய அறிவு, பேச்சுத் திறமை, எழுத்துத் திறமை என இவர் எல்லாவற்றிலும் பரிமளித்தார். இசையில் வல்லவராகவும் விளங்கினார். இந்தப் பாடல் பல துறைகளிலும் ஆழ்ந்த புலமை பெற்று. "அருள்மொழி அரசு", என்றும் "திருப்புகழ் ஜோதி" என்றும் அனைவராலும் பாராட்டப்பட்ட இவர், தனது இனிமையான  குரலில் இந்தப் பாடலை எங்கும் இசைத்துத் தவழ விட்டதை  நாம் என்றும் மறக்க இயலாது. 

பாடலின் பொருள்:

முத்து போன்ற வெண்மையும் நேர்த்தியும் கொண்ட பல்வரிசையும், அழகிய சிரிப்பும் உடைய தெய்வயானையின்  தலைவனே, சக்தி வேல் தாங்கிய சரவணப்பெருமாளே.முத்தி தரவல்ல ஒரு தனி வித்து இவனே குருபரனென விளங்குபவன்.  ஸ்ருதி அநாதியானது.  ப்ரணவத்தின் விரிவே ஸ்ருதிகள். ஆனபடியால் அது ஸ்ருதிக்கு முற்பட்டதாகிறது. இதையெல்லாம் வகுத்தவனுக்கே பொருள்விளங்கா நிலையில்,  அரிக்கும், அயனுக்கும் சேர்த்தே தொடங்கி  முப்பத்தி முக்கோடி அமரர் கூட்டத்திற்கும் அடிபணிய உபதேஸித்து அருளினான் முருகன் . 

இந்தப் பாடலில் முக்தி அருள்வதில்  முதன்மையானவர் முருகன் என்பதைப் புலப்படுத்துவதொடு திருமாலின் அவதாரங்களான  இராம, கூர்ம, கிருஷ்ண அவதாரங்கள் பற்றிக் கூறப்ப்பட்டுள்ளன ;இராவணனது பத்துத் தலைகளும் சிதறுமாறு கணை தொடுத்த இராமனது வீரம்; மந்தர மலையினை மத்தாக்கி அசுரரும் தேவரும் பாற்கடலைக் கடைந்த போது கூர்ம அவதாரமெடுத்த சிறப்பு; பாண்டவர்க்கும் கௌரவர்களுக்கும் இடையே நடைபெற்ற மகாபாரதப் போரில் தனது  சக்கர ஆயுதத்தால் பகலை இரவாக்கியும், பக்தனாகிய அருச்சுனனுக்கு தேரை ஒட்டியும் நடத்திய கண்ணனின் பெருமை; ஆகியவற்றை எடுத்துக் காட்டி அத்தகைய திருமால் மெச்சிய பரம்பொருளே  என்கிறார் அருணகிரி நாதர்

இப்படி அடியவருக்காய் எளிமையும், அவர் தம் எதிரிகளுக்காய் வீரமும் பொங்கும் குணக்குன்றான கந்தன், துன்பமெனின் கடிதில் வந்து அருள்வதில் கார்மேகமொக்கும் கண்ணனே மெச்சும்படி பக்தரை பரிபாலனம் செய்து அருளுபவன்  என்கிறார்.இதனால் அடியவருக்கு துயர்வருங்கால், அவர் முன் உடனே வந்து காக்கும் குணம் பெருக்க உடையவன் கந்தன் என்கிறார் அருணகிரிநாதர். 

என்னையும் தாங்கி, பரிவு கொண்டருளும் நாள் என்றோ? என்று கேட்கிறார் நம் ஸ்வாமி.பாடலின் அடுத்த பாதியில், அடியார் வாழவும், அவர் தம் எதிரியார்  மாளவும் வேண்டி ஆறுமுகன் நிகழ்த்திய யுத்தம் வெகு விமர்சையாக பாடப்படுகிறது. குருவருளால் கிடைத்த ஞான வாள் கொண்டு சூரனை எதிர்த்து ஸுப்ரஹ்மண்யன் செய்த யுத்தம் பற்றி சந்தம் நிறைந்த சொற்கட்டோடு அருணகிரி நாதர் பாடியிருக்கிறார்.

யுத்த பூமியின் கோரத்தை ரசித்த படி பைரவி தேவி ஆடுகிறாள். தன் கருத்த மேனியில், சூரியன் நிறம் மின்ன, காலில் கட்டிய சிலம்பின் மணிகள் தித், தித், தை!! தித், தித், தை!!  என்று ஜதியெழுப்ப, அந்த ஜதிக்கேற்ப தன் பாதங்களால் அடவெடுத்து ஆடிக் களிக்கிறாள். அவள் ஆட்டத்தால் திசைகள் நடுங்குகின்றன. அதனைக் கண்டு  வானில் பறந்து களித்தபடி, பிணம் கொத்தும் கழுகுகளும் , பேய்களும்  அவளோடு சேர்ந்து குதித்து மகிழ்ந்தன. எட்டு திசைகளைக் காக்கும் அஷ்ட பைரவர்களும் பைரவியோடு இணைந்து ஜதிக்கு தகுந்தவாறு தாங்களும் தாளமெழுப்ப. தொக்கு தொகு வென்றும், த்ரிகடக என்றும் பைரவி அழகாக கூத்தாடினாள்.

அந்த போர்க்களத்தில் கிடைத்த ரத்த மாம்ஸ வாசனையால் ஈர்க்கப்பட்டு வயதான ஆந்தைகள்  ‘குக்குக்குகு குக்குக்’ என்று சப்தமெழுப்பின. ஆரவாரத்தோடு அவையெழுப்பிய ஓசை “ஓடும் எதிரிகளை ஓடிப்பிடி, குத்தி புதைத்துவிடு” என்பது போலிருந்தது. 

வீரபாகுத்தேவரை விட்டு சமாதானம் செய்ய முயன்றும்,  சூரபன்மனிடம் எவ்வித மாற்றமும் இல்லை. இப்படி ஸ்நேஹம் பாராட்டாத அசுரர்களை சம்ஹரித்து, யுத்த காலத்தில் ஆடிய பைரவிக்கும், அவள் பண்டு பரிவாரங்களும் பலியிட்டான் ஸ்கந்தன்.இந்த பலி போர்க்களம் புகும் முன்பே, கிரௌஞ்ச மலையை பொடிபொடியாய் வீழ்த்தியதிலே தொடங்கியது. அம்மலையை அஞ்சாமல் தகர்த்தான் என்றபோதே, அம்மலை விழுந்தது போலவே, பலம் பொருந்திய தாரகன், சிம்ஹமுகன், சூரபத்மன் என்று எல்லோரும் மாள வேல் தொடுத்து போர் செய்யவல்ல பெருமாள் என்கிறார்.

ஞானஸ்கந்தனின் கரத்தை அலங்கரிக்கும் வேல் நம்முள் தினமும் போர் தொடுக்கட்டும். நம்மை ஆட்டுவிக்கும் மும்மலங்களைக கொன்று பலியிட்டு, நம்முள் போற்றத்தக்க ஞானம் பெருகும்படி  செய்யட்டும். எனும் வகையில் பாடுகிறார் அருணகிரிநாதர்.

இந்தப் பாடலை எந்த நேரத்திலும் எந்த காலத்திலும் பாடலாம். பக்தி சிரத்தையுடன் இந்தப் பாடலைப் பாடுவதன் மூலம் நாம் எண்ணிய யாவும் நிறைவேறும் என்பது திண்ணம். 

முத்தைத்தரு பத்தித் திருநகை பாடல் வரிகள்:

முத்தைத்தரு பத்தித் திருநகை
அத்திக்கிறை சத்திச் சரவண
முத்திக்கொரு வித்துக் குருபர எனவோதும்

முக்கட்பர மற்குச் சுருதியின்
முற்பட்டது கற்பித் திருவரும்
முப்பத்துமு வர்க்கத் தமரரும் அடிபேணப்

பத்துத்தலை தத்தக் கணைதொடு
ஒற்றைக்கிரி மத்தைப் பொருதொரு
பட்டப்பகல் வட்டத் திகிரியில் இரவாகப்

பத்தற்கிர தத்தைக் கடவிய
பச்சைப்புயல் மெச்சத் தகுபொருள்
பட்சத்தொடு ரட்சித் தருள்வதும் ஒருநாளே

தித்தித்தெய ஒத்தப் பரிபுர
நிர்த்தப்பதம் வைத்துப் பயிரவி
திக்கொட்கந டிக்கக் கழுகொடு கழுதாடத்

திக்குப்பரி அட்டப் பயிரவர்
தொக்குத்தொகு தொக்குத் தொகுதொகு
சித்ரப்பவு ரிக்குத் த்ரிகடக எனவோதக்

கொத்துப்பறை கொட்டக் களமிசை
குக்குக்குகு குக்குக் குகுகுகு
குத்திப்புதை புக்குப் பிடியென முதுகூகை

கொட்புற்றெழ நட்பற் றவுணரை
வெட்டிப்பலி யிட்டுக் குலகிரி
குத்துப்பட ஒத்துப் பொரவல பெருமாளே !!


banner

Leave a Reply