Vasavi Jayanthi: Invoke the Wish-Fulfilling Goddess of this Yuga For Protection, Divine Wisdom, Prosperity & Success JOIN NOW

கேட்டை நட்சத்திரம் குணங்கள், Kettai Natchathiram Characteristics Tamil

May 2, 2020 | Total Views : 4,051
Zoom In Zoom Out Print

இந்த பூமியில் வாழ்க்கை என்னும் பாதையில் நாம் அனைவரும் பயணம் செய்தாலும் நமது இலக்கு, திசை, நோக்கம் வெவ்வேறாகத் தான் இருக்கின்றது. இதனை நாம் யாரும் மறுக்க இயலாது.  நமது உடல் இயக்கமும், நமது உள்ளம்,  உணர்வு சார்ந்த  அத்தனை இயக்கங்களும் இறையருளால் தான் நடக்கின்றது. நீங்கள் இறை நம்பிக்கை இல்லாதவர்கள் என்றால்,  அது உங்கள் சக்திக்கும் மீறிய ஒரு இயற்கை சக்தி என்று கூட நீங்கள் எடுத்துக் கொள்ளலாம். நமது முன்னோர்கள் வகுத்த பாதையில் நாம் நமது வசதிக்கென்று  காலத்திற்கு தக்கவாறு பல மாற்றங்களை செய்து கொண்டு வாழ்வில் முன்னேற நினைக்கிறோம். எது நம்மை வழி நடத்துகின்றது? எது நமது வாழ்க்கையை  தீர்மானிக்கின்றது?  இந்த பிரபஞ்சத்தில் ஒரு துளியாய் இருக்கும் நமது வாழ்வில் நமது அத்தனை இயக்கங்களும்  கிரகங்கள் மூலமாக,  நட்சத்திரங்கள் மூலமாக வழிநடத்தப்படுகின்றன என்று கூறினால் அது தான் நிதர்சனமான உண்மை. ஒருவருடைய ஜாதகப்படி, பிறக்கும் போது, சந்திரன் எந்த நட்சத்திரத்தின், எந்த பாதத்தில் நிற்கிறாரோ அதுவே அவருடைய ஜென்ம நட்சத்திரம் ஆகும். நமது முன்னோர்கள் ஜோதிட சாஸ்திரத்தில் 27 நட்சத்திரங்களை முக்கியமாகக் கருதினார்கள். அவற்றுள் பதினான்காவதாக வரும் நட்சத்திரம் கேட்டை நட்சத்திரம் ஆகும். 

இது வான் மண்டலத்தில் 226  பாகை 40 கலை முதல் 240 பாகைவரை வியாபித்து உள்ளது. இது மூன்று நட்சத்திரம் கொண்டது. இது பார்ப்பதற்கு குண்டல வடிவம்  போன்ற தோற்றம் கொண்ட நட்சத்திரம் ஆகும். ஒவ்வொரு நட்சத்திரங்களும் நான்கு பாதங்கள் கொண்டது.  இதன் நான்கு பாதங்களும் விருச்சிக ராசியில் உள்ளது. இதன் அதிபதி புதன் ஆகும். 

ஒரு மனிதனின் குண இயல்புகளைத் தீர்மானிக்கும் சக்தி அந்தந்த நட்சத்திரத்திற்கு இருக்கின்றது. அதே சமயம் அந்த நட்சத்திரத்தால் ஏற்படக் கூடிய பாதிப்புகளை தாங்கிக் கொள்ளும் சக்தி பெற அல்லது நிவர்த்தி செய்து கொள்ள இறையருளால் இயலும். 
அவரவர் பிறந்த நட்சத்திரத்திற்கென்று, தேவதை, உருவகம், பறவை, மிருகம், விருட்சம் என்று உள்ளது. அந்த வகையில் இந்த நட்சத்திரத்தின் தோற்றம் குண்டலம் போன்றது ஆகும். இதன் அதிபதி புதன் ஆகும்.  கேட்டை என்றால் மூத்தது என்று பொருள். உயர்வானது தலைமையாயது.

இந்த நட்சத்திரம் பெண் பாலினத்தை சார்ந்தது.  இதன் நிறம் வெண்மை  ஆகும். இராட்சஸ கணத்தைச் சார்ந்தது.  இதன் பறவை  சாதக பட்சி   ஆகும். இதற்கு வணங்க வேண்டிய, வளர்க்க வேண்டிய, பராமரிக்க வேண்டிய  மரம் பராய்  மரம் ஆகும். இந்த  நட்சத்திரத்தின் வேறு பெயர்கள் : சேட்டை, எரிதழல்,வேதி, சித்திரை நாள், கேட்டை

கேட்டை நட்சத்திரம் குணங்கள்:

கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பெரும் சாதனைகளை செய்து பெயரும் புகழும் அடைவார்கள். இவர்கள் செல்வந்தர்கள்.  மிகவும் தைரியம் உடையவர்கள். தர்ம குணம் கொண்டவர்கள். அதே சமயம் தந்திரசாலியாகவும் இருப்பார்கள். அடிக்கடி கோபம் கொள்வார்கள். சிந்தித்து எழுதக் கூடியவர்கள். இசைப் பிரியர்கள்.

குடும்ப பாரம்பரியத்தில் பெருமை கொள்பவர்கள். உடன் பிறந்தவர்களை ஆதரிப்பார்கள். மின்னணுவியல் வல்லுனர்களாக இருப்பார்கள். கூர்மையான பார்வை உடையவர்கள். எளிதாக சுடு சொற்களைப் பேசி விடுவார்கள். பிறகு  அதற்காக வருந்தி மன்னிப்பும் கேட்டுக் கொள்வார்கள்.  ஆனால் பழகுவதற்கு இவர்களைச் சுற்றி நண்பர்கள் கூட்டம் எப்போதும் இருந்து கொண்டே இருக்கும். 

இவர்கள் கடின நெஞ்சம் உடையவர்கள். அனைத்து விஷயங்களையும் அறிந்து வைத்திருப்பார்கள்.  நியாயத்திற்காகப் போராடுவார்கள்.எதையாவது நினைத்து  ஏங்கிக் கொண்டே இருப்பார்கள். தைரியமான பேச்சாளர்கள்.இவர்கள் புகழ் மிக்க பேச்சாளர்களாக ஆவார்கள்.  ஒருங்கிணைப்பதில் வல்லவர்கள். 

கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம்

உங்கள் நட்சத்திரக் குறியீடும் உங்கள் குணங்களும்:

ஒரு நபரின் வாழ்க்கை ரகசியம் அவர் பிறந்த நட்சத்திரம் மற்றும் அதனுடன் தொடர்புடைய அனைத்து அம்ஸங்களையும் பொறுத்து  அமையும். கேட்டை என்றால் சமஸ்கிருதத்தில் ஜேஷ்டா என்று கூறுவார்கள். ஜேஷ்டா என்றால் மூத்தது, தலையாயது என்று பொருள். இந்த நட்சத்திரத்தின் பெயருக்கு ஏற்ப இவர்கள் தலைமைப் பண்பு உடையவர்களாக இருப்பார்கள். இதன் தோற்றம் குண்டலம் போன்றதாகும் இவர்கள்  ஒருங்கிணைக்கும் ஆற்றல் உடையவர்களாக இருப்பார்கள். தங்கள் கட்டுக்குள் வளையத்திற்குள் ஒருங்கிணைத்து செயல்படுத்தும் ஆற்றல் பெற்றவர்கள். 

உங்கள் நட்சத்திர விருட்சமும் உங்கள் குணங்களும்:

கேட்டை நட்சத்திர விருட்சம் பராய்  மரம் ஆகும். பராய் மரங்கள் இடி, மின்னல் போன்ற இயற்கை தாக்குதல்களை தாங்கும் தனித்தன்மை படைத்த மரங்கள் ஆகும்.  இந்த மரத்தைப் போல கேட்டை நட்சத்திரக் காரர்களிடம் மறைமுக சக்தி இருக்கும். வாழ்க்கை இன்பமாக இல்லாவிட்டாலும் தனது வயது மற்றும் அனுபவத்தின் காரணமாக மேலான நிலை அடைவார்கள். 

கேட்டை சித்திரை நட்சத்திரத்தின் அடையாளங்கள் :

குடை, குண்டலம், ஈட்டி

தொழில் ஆர்வங்கள்:பத்திரிகைத்துறை, ராணுவம், இன்சூரன்ஸ் போன்ற துறைகளில் இவர்களுக்கு முன்னேற்றம் இருக்கும். மனோதத்துவம், அழகுக்கலை, நடிப்பு, புகைப்படத் துறை கம்ப்யூட்டர் துறை, எல்.ஐ.சி, அரசு வங்கி , தனியார் நிதி நிறுவனம் போன்றவற்றிலும் பணிபுரிவார்கள்.இவர்கள் சிறந்த ஆலோசகராக செயல்படுவார்கள். கடலில் மூழ்கி முத்தெடுப்பதிலும் ஆர்வம் இருக்கும். பல இடங்களில் சிறந்த ஆலோசகர்களாகவும் இருப்பார்கள்.

விருப்பமான  செயல்கள் : சாதனை புரிதல், பேசுதல்,கலை ஆர்வம். கைத்தொழில்.

நோய் : மூல நோய், சதைப் புண்கள், நோய் கட்டிகள், புஜம் மற்றும் தோள்களில் வலி அதிக ரத்தப் போக்கு, பெண்களுக்கு மாதவிடாய்ப் பிரச்சினை, நரம்பு சம்பந்தப்பட்ட பிரச்சினை 

ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் நான்கு பாதங்கள் உண்டு. கேட்டை  நட்சத்திரத்தின் நான்கு பாதங்களும் விருச்சிக  ராசியில் அமைகின்றது. ஒவ்வொரு பாதத்தில் பிறந்தவர்களுக்கும் வெவ்வேறு குணநலன்கள் காணப்படும்.  அதனை இப்பொழுது காண்போம்.

கேட்டை 1 ஆம் பாதம் 

இவர்கள் கலைகளில் தேர்ச்சி பெற்றவர்கள். எழுத்துத் திறமை இருக்கும். இவர்கள் புகழ் பெற விரும்புவார்கள். தன்னைப் பற்றி பெருமையாக பேசிக் கொள்வார்கள். தர்மம் செய்யும் குணம் கொண்டவர்கள். இவர்கள் தைரியம் மிக்கவர்களாகவும் இருப்பார்கள். 

கேட்டை 2 ஆம் பாதம்

இவர்களிடம் முன் கோபம் இருக்கும், மிகவும் குறும்புத் தனம் செய்பவர்கள். இவர்கள் அடிக்கடி நோயவாய்ப்படுவார்கள். சங்கீதம் மற்றும் கலைகளில் ஆர்வம் மற்றும் ஈடுபாடு உடையவர்கள். அழகாகப் பேசும் திறன் கொண்டவர்கள். 

கேட்டை 3 ஆம் பாதம்

இவர்கள் கால்நடைகளைவளர்ப்பதில் ஆர்வம் உடையவர்கள். இவர்கள் பிறரின் காரியங்களில் தலையிடுவார்கள். அதாவது அடுத்தவர் காரியங்களை தான் முன் நின்று நடத்தி தருபவர்கள். அதே சமயம் தாழ்மையான புத்தியும்கலகம் செய்யும் இயல்பும் உடையவர்களாக இருப்பார்கள்.

கேட்டை 4ஆம் பாதம்

இவர்கள் நல்ல உடற்கட்டு உடையவர்கள். கலகம் செய்யும் மற்றும் வஞ்சனை குணம் உடையவர்கள். தாய் வீட்டின் பெருமைகளைக் கூறுபவர்கள். இவர்களுக்கு சுகபோகங்களில் பிரியம் இருக்கும். இவர்களது வாழ்வில் ரகசியம் மிகுந்திருக்கும். சாஸ்திர ஈடுபாடு, தெய்வபக்தி, பேச்சுத்திறன், எழுத்துத் திறமை எல்லாம் இருக்கும். பிறரை ஏமாற்றும் குணமும் இருக்கும்.

காயத்திரி மந்திரம்

ஓம் ஜயேஷ்டாயை வித்மஹே 
மகா ஜய்ஷ்ட்யாயை தீமஹி 
தன்னோ ஜ்யேஷ்டா ப்ரசோதயாத்

இந்த நட்சத்திரத்தில் செய்யும் சுப காரியங்கள்:

மாடு வாங்குதல், மந்திரம் ஜெபித்தல், ஆட்களை நீக்குதல், கடன் தீர்த்தல், வாஸ்து சாந்தி செய்தல்,குளம் கிணறு வெட்டுதல், வியாதிஸ்தர் குளித்தல் 

இந்த  நட்சத்திரத்தில் செய்யக் கூடாதவைகள்:

கடன் கொடுக்கவோ வாங்கவோ கூடாது, பிரயாணம் செய்தல் கூடாது. ஆபரேஷன் செய்வது கூடாது

இந்த நட்சத்திரத்தின் எழுத்துக்கள் : 

முதல் பாதம் தோ
இரண்டாம் பாதம் ய
மூன்றாம் பாதம் யி
நான்காம் பாதம் யு

banner

Leave a Reply

Submit Comment