AstroVed Menu
AstroVed
search
search

அஸ்தம் நட்சத்திரம் குணங்கள், Astham Natchathiram Characteristics in Tamil

dateMay 2, 2020

இந்த பூமியில் வாழ்க்கை என்னும் பாதையில் நாம் அனைவரும் பயணம் செய்தாலும் நமது இலக்கு, திசை, நோக்கம் வெவ்வேறாகத் தான் இருக்கின்றது. இதனை நாம் யாரும் மறுக்க இயலாது.  நமது உடல் இயக்கமும், நமது உள்ளம்,  உணர்வு சார்ந்த  அத்தனை இயக்கங்களும் இறையருளால் தான் நடக்கின்றது. நீங்கள் இறை நம்பிக்கை இல்லாதவர்கள் என்றால்,  அது உங்கள் சக்திக்கும் மீறிய ஒரு இயற்கை சக்தி என்று கூட நீங்கள் எடுத்துக் கொள்ளலாம். நமது முன்னோர்கள் வகுத்த பாதையில் நாம் நமது வசதிக்கென்று  காலத்திற்கு தக்கவாறு பல மாற்றங்களை செய்து கொண்டு வாழ்வில் முன்னேற நினைக்கிறோம். எது நம்மை வழி நடத்துகின்றது? எது நமது வாழ்க்கையை  தீர்மானிக்கின்றது?  இந்த பிரபஞ்சத்தில் ஒரு துளியாய் இருக்கும் நமது வாழ்வில் நமது அத்தனை இயக்கங்களும்  கிரகங்கள் மூலமாக,  நட்சத்திரங்கள் மூலமாக வழிநடத்தப்படுகின்றன என்று கூறினால் அது தான் நிதர்சனமான உண்மை. ஒருவருடைய ஜாதகப்படி, பிறக்கும் போது, சந்திரன் எந்த நட்சத்திரத்தின், எந்த பாதத்தில் நிற்கிறாரோ அதுவே அவருடைய ஜென்ம நட்சத்திரம் ஆகும். நமது முன்னோர்கள் ஜோதிட சாஸ்திரத்தில் 27 நட்சத்திரங்களை முக்கியமாகக் கருதினார்கள். அவற்றுள் பதிமூன்றாவதாக வரும் நட்சத்திரம் அஸ்தம் நட்சத்திரம் ஆகும். 

இது வான் மண்டலத்தில் 16௦ பாகை முதல் 173  பாகை 20 கலை  வரை வியாபித்து உள்ளது. இது ஐந்து நட்சத்திரங்களைக் கொண்டது. இந்த ஐந்து நட்சத்திரங்களை இணைத்தால் பார்ப்பதற்கு கை போன்ற தோற்றம் கொண்ட நட்சத்திரம் ஆகும். ஒவ்வொரு நட்சத்திரங்களும் நான்கு பாதங்கள் கொண்டது.  இதன் நான்கு பாதங்களும்  கன்னி ராசியில் அமைந்து  உள்ளது. இதன் அதிபதி சந்திரன் ஆகும். 

ஒரு மனிதனின் குண இயல்புகளைத் தீர்மானிக்கும் சக்தி அந்தந்த நட்சத்திரத்திற்கு இருக்கின்றது. அதே சமயம் அந்த நட்சத்திரத்தால் ஏற்படக் கூடிய பாதிப்புகளை தாங்கிக் கொள்ளும் சக்தி பெற அல்லது நிவர்த்தி செய்து கொள்ள இறையருளால் இயலும். 
அவரவர் பிறந்த நட்சத்திரத்திற்கென்று, தேவதை, உருவகம், பறவை, மிருகம், விருட்சம் என்று உள்ளது. அந்த வகையில் இந்த நட்சத்திரத்தின் தோற்றம் கை போன்றது. உடுக்கை இழந்தவன் கை போல என்பதற்கிணங்க இவர்கள் பிறருக்கு கை கொடுத்து காக்க வல்லவர்கள். 

இந்த நட்சத்திரம்  ஆண் பாலினத்தை சார்ந்தது.  இதன் நிறம் கருப்பு  ஆகும். இது தேவ  கணத்தைச் சார்ந்தது.  இதன் பறவை பருந்து (கிளி)  ஆகும். இதற்கு வணங்க வேண்டிய, வளர்க்க வேண்டிய, பராமரிக்க வேண்டிய  மரம் அத்தி  மரம் ஆகும். இந்த  நட்சத்திரத்தின் வேறு பெயர்கள் : களிறு, காமரம், அங்கி, விருக்கை, மீன், கவித்துவம், நவ்வி.

அஸ்தம்நட்சத்திரம் குணங்கள்:

இவர்கள் வாழ்வின் முன் பகுதியை விட பின் பகுதியில் செல்வந்தராக விளங்குவார்கள். படிப்பில் சிறப்புடையவர்கள். ஊக்கமும் உயர்வான குணமும் படைத்தவர்களாக இருபார்கள். மகான்களை வணங்குவார்கள். தல யாத்திரை மேற்கொள்வதில் ஆர்வம் மிக்கவர்கள். அரிய செயல்களைச் செய்து புகழ் பெறுவார்கள். பெருந்தன்மையும் மகிழ்ச்சியான சுபாவமும் உடையவர்களாக இருப்பார்கள். தாய் சொல்லை மதித்து நடப்பவர்கள். ஆழ்ந்த யோசனை உள்ளவர்கள். தன்னை அண்டியவர்களை காப்பாற்றுவார்கள்.

இரக்க சுபாவம் உடையவர்கள்.  பாவ புண்ணியம் பார்த்து காரியங்களைச் செய்பவர்கள். மக்கட்பேறு நிறைந்தவர்கள். பெண்களிடம் பழகுவதிலும் பேசுவதிலும் தேர்ந்தவர்களாக இருப்பார்கள். எதிரிகளை தோல்வியுறச் செய்வதில் வல்லவர்கள். எடுத்த காரியத்தை முடித்தே தீர வேண்டும் என்ற   விடா முயற்சியுடன் எந்த வித இடையூறையும் பொருட்படுத்தாமல் உழைப்பவர்கள். ஓரளவு தாராள குணம் கொண்டவர்கள். பசி உணர்வு அதிகம் இல்லாதவர்களாக இருப்பார்கள்.

இவர்கள் நல்ல நகைச்சுவை உணர்வு மிக்கவர்கள். கைவினைக் கலைகளில் தேர்ந்தவர்கள். நல்ல பேச்சாளர்கள். அனைவரையும் மகிழ்விப்பார்கள். கைகள் என்பது ஒரு எண்ணத்தை பற்றி இருப்பதைக் குறிக்கின்றது. ஆன்மீக வாழ்வில் ஈடுபடாவிட்டால் இதே கைகள் இவர்களை திருடர்களாக ஆக்கும். பிறரை அழுத்தி தன்னை உயர்வு படுத்திக் கொள்ள தயங்க மாட்டார்கள். தந்தையாரின் கவனிப்பு இவர்களுக்கு சரிவர கிடைப்பது அரிது.

அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம்

உங்கள் நட்சத்திரக் குறியீடும் உங்கள் குணங்களும்:

ஒரு நபரின் வாழ்க்கை ரகசியம் அவர் பிறந்த நட்சத்திரம் மற்றும் அதனுடன் தொடர்புடைய அனைத்து அம்ஸங்களையும் பொரறுத்து  அமையும். அஸ்தம் என்ற சமஸ்கிருதச் சொல்லுக்கு உள்ளங்கை என்று பொருள். எனவே இவர்கள் உதவிக் கரம் நீட்டும் கருணைக் குணம் கொண்டவர்கள் ஆவார்கள். இவர்கள் குடும்பத்தை அணுசரனையோடு அரவனைத்துச் செல்வார்கள்.  சிவ பெருமானின் கண்களை ஒரு தடவை பார்வதி விளையாட்டாக மூடிவிடபிரபஞ்ச இயக்கம்நின்றுவிட மீண்டும்  ஹஸ்த ஒளியாய் சிவன் தோன்றியதால் இவர்கள் பிறருக்கு வழிகாட்டும் ஒளியாக விளங்குவார்கள். அதாவது வழிகாட்டியாக இருப்பார்கள். 

உங்கள் நட்சத்திர விருட்சமும் உங்கள் குணங்களும்:

அஸ்தம் நட்சத்திரத்தின் விருட்சம் அத்தி  மரம் ஆகும். அத்தியின் அனைத்துப் பகுதியும் மருத்துவ குணம் வாய்ந்தது.அது போல இவர்கள் சிறந்த மருத்துவர்களாக விளங்குவார்கள். உடலை இதமாகப் பிடித்து விடும் (மசாஜ்) கலைஞராக இருந்து இதமளிப்பார்கள்.

அஸ்தம் நட்சத்திரத்தின் அடையாளங்கள் :

கை அல்லது உள்ளங்கை 

தொழில் ஆர்வங்கள்:அறிவியல் அறிஞர், வரலாற்று பேராசிரியர், கல்வெட்டு ஆய்வாளர் போன்ற துறைகள், கமிஷன் கட்டிட காண்டிராக்ட், ஏஜென்ஸி, வண்டி வாகனம் மற்றும் உணவு வகை போன்ற துறைகள்,தங்க நகை செய்பவர், கலைஞர் மற்றும் தொழிலதிபர், சாகசம் செய்பவர், ஜிம்னாஸ்ட் அல்லது சர்கஸ் கலைஞர், வணிகவியல் துறை பேப்பர் உற்பத்தி தொடர்பான தொழில், பிரிண்டிங், பதிப்பகம், ஷேர் மார்கெட், பேக்கேஜிங், பொம்மை செய்தல், கடை நடத்துதுதல், கிளார்க், பேங்க், டைப்பிஸ்ட், பிசியோதெரபிஸ்ட், அழகு பொருட்கள் தொடர்பான பிசினஸ், மருத்துவம், சைக்காலஜிஸ்ட், ஜோதிடர், துணி தொடர்பான தொழில், விவசாயம், தோட்டக்கலை தொடர்பு பணிகள், ரேடியோ மற்றும் தொலைக்காட்சி, செய்தி வாசிப்பு, பத்திரிகை, களிமண் மற்றும் செராமிக் தொடர்பான துறைகள் ஆகியவை.

விருப்பமான செயல்கள்: இசை, கலை, தோட்டம் , ஜோதிடம், வாசித்தல், அறிவியல், கலைத்துறை, கை வேலைப்பாடுகள், பிரயாணங்கள், வண்டி, வாகனம் ஓட்டுதல், பேச்சுக் கலை 

நோய் :ஜல சம்மந்தப்பட்ட பாதிப்புகள், தோல் வியாதி, கண்கள் மற்றும் மூக்கில் பிரச்சனைகள், உடலில் கெட்ட நீர் சேரக் கூடிய சூழ்நிலை போன்றவற்றால் மருத்துவ செலவுகள் உண்டாகும்..

ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் நான்கு பாதங்கள் உண்டு. அஸ்தம்  நட்சத்திரத்தின் நான்கு பாதங்களும் கன்னி ராசியில் அமைகின்றது. ஒவ்வொரு பாதத்தில் பிறந்தவர்களுக்கும் வெவ்வேறு குணநலன்கள் காணப்படும்.  அதனை இப்பொழுது காண்போம்.

அஸ்தம் 1 ஆம் பாதம்

இவர்கள் தற்பெருமை பேசுபவர்கள்.  உண்மையைப் பேச மாட்டார்கள். பொன் மற்றும் ஆபரணங்களில் பிரியம் உள்ளவர்கள். நகைகள் இவர்களுக்கு பிடிக்கும். நல்ல  காரியங்கள் செய்வதில் அதிக ஆர்வம் உடையவர்கள். இவர்கள் படித்தவர்களாக இருப்பார்கள்.

அஸ்தம் 2 ஆம் பாதம்

இவர்கள் இளம் வயதில் தாயாரை இழப்பவர்களாக இருப்பவர்கள். நாடகம், நாட்டியம் கலை மற்றும் சங்கீதங்களில் பிரியம் உள்ளவர்கள். அகங்காரம் மிக்கவர்கள். இவர்களை வாயாடி என்றும் கூறலாம் தேக ஆரோக்கியம் இவர்களுக்கு சிறப்பாக இருக்கும்.

அஸ்தம் 3 ஆம் பாதம்

இவர்களிடம் தெய்வ பக்தி இருக்கும். அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் உள்ளவர்கள். வியாபாரத்தில் கை தேர்ந்தவர்கள். மென்மையான மனம் உடையவர்கள். கலைத் துறையில் இவர்களுக்கு ஈடுபாடு இருக்கும். இவர்கள் அடிக்கடி நோயவாய்ப்படுவார்கள்.

அஸ்தம்  4ஆம் பாதம்

இவர்கள் உயர்ந்த நோக்கம் உடையவர்கள். எல்லாரிடமும் சகஜமாகப் பேசிப் பழகுவார்கள். தாயாரிடம் மிகுந்த பற்றுதல் உடையவர்கள். நல்ல குணங்களைக் கொண்டவர்கள். நல்ல செயல்களைச் செய்பவர்கள். இவர்கள் எப்பொழுதும் மகிழ்ச்சியாக இருப்பார்கள்.

காயத்திரி மந்திரம் 

ஓம் ப்ரயச்சதாயை வித்மஹே 
ப்ரக்ருப்ணீதாயை தீமஹி 
தன்னோ ஹஸ்தா ப்ரசோதயாத்

இந்த நட்சத்திரத்தில் செய்யும் சுப காரியங்கள்

அஸ்த நட்சத்திரத்தில் உபநயனம், தாலிக்கு பெண் உருக்குதல், மஞ்சள் நீராட்டுதல், சீமந்தம், காதணி விழா, கல்வி கற்க தொடங்குதல், யாத்திரை செல்லுதல் ஆடை ஆபரணம், வண்டி வாகனம் வாங்குதல், புது மனை புகுதல் கடற் பயணம் மேற்கொள்ளுதல், விதைவிதைத்தல், களஞ்சியத்தில் தானியம் சேர்த்தல் மந்திரம் கற்றல், நோய்க்கு மருந்துண்ணுதல் புதிய வேலைக்கு விண்ணப்பித்தல் வியாபாரம் தொடங்குதல், கிணறு வெட்டுதல் போன்றவற்றை மேற்கொள்ளலாம்.

இந்த நட்சத்திரத்தின் எழுத்துக்கள் : 

முதல் பாதம் பு
இரண்டாம் பாதம் ஷ
மூன்றாம் பாதம் நா
நான்காம் பாதம் டா


banner

Leave a Reply