இறைவழிபாட்டில் பூக்களின் முக்கியத்துவம்

நமது இந்து மதத்தில் இறை வழிபாட்டில் பூக்கள் முக்கியத்துவம் பெறுகின்றன. பூக்கள் இல்லாமல் வழிபாடு நிறைவேறுவதில்லை. வித வடிதமான மலர்களை இறைவனுக்கு சார்த்தி நாம் அழகு பார்க்கிறோம்.
பூக்களில் தான் எத்தனை வகைகள். ஒவ்வொரு இறைவனுக்கும் வெவ்வேறு மலர்களை அர்ப்பணித்து வணங்க வேண்டும் என்பது மரபு. வாசனை இல்லாத மலர்களை இறைவனுக்கு சார்த்துவது கிடையாது. அவ்வாறு செய்வது பாவத்தை ஏற்படுத்தும் என்று சாஸ்திரம் கூறுகிறது.
பூக்களின் முக்கியத்துவம்:
சாஸ்திரங்களின் படி, கடவுளின் பாதத்தில் மலர்களை அர்ப்பணிப்பதன் மூலம், புண்ணியங்கள் பெருகும், பாவங்கள் அழிந்து பல நன்மைகள் உண்டாகும்.
இறைவனுக்கு தலை முதல் கால் வரை மாலைகளை அணிவித்து அழகு பார்த்த நமது முன்னோர்கள், ஆலய வளாகத்திலேயே பூச்செடிகளை வளர்த்தும் வரலாயினர். இதனால் அன்றலர்ந்த மலர்களை கொய்து இறைவனுக்கு சூட்டி அழகு பார்க்க ஏதுவாக இருந்தது. அது இன்றும் சில ஆலயங்களில் தொடர்க்கிறது. ஆலயத்திலே நந்தவனம் அமைத்து பூக்களை கொய்து கட்டி இறைவனுக்கு சூட்டி வழிபடுகின்றனர்.
பூக்களை மாலையாக அணிவிப்பது மட்டும் இன்றி அர்ச்சனை செய்வதற்கும் நாம் பூக்களை பயன்படுத்துகிறோம். பொதுவாக அன்றலர்ந்த மலர்களைத் தான் பூஜைக்கு பயன்படுத்த வேண்டும். என்றாலும் சில மலர்களை இரண்டு நாள் மூன்று நாள் வரை பயன்படுத்தலாம்.
விநாயகருக்கு எருக்கம் பூ மற்றும் சிவபெருமானுக்கு தும்பைப்பூ பிடித்தமானவை, துர்க்கைக்கு அரளிப் பூ மற்றும் லட்சுமி தேவிக்கு செம்பருத்தி, வெள்ளைத் தாமரை, மற்றும் அனைத்து சிவப்பு மலர்களும் தேவிக்கு மிகவும் பிடிக்கும்.
பூக்கள் மட்டுமின்றி துளசி, மகிழம், செண்பகம், தாமரை, வில்வம், மருக்கொழுந்து, மருதாணி, அருகு, நாயுருவி, விஷ்ணுக்ராந்தி, நெல்லி ஆகியவற்றின் இலைகள் பூஜைக்கு உரியவை.
ஆபரணங்கள் ஏதும் இன்றி முழுவதும் பூக்களால் அலங்கரிக்கும் சேவையை பூலங்கி சேவை என்று கூறுவார்கள்.
பழைய புஷ்பங்கள், மலராத மொட்டுக்கள், தூய்மை இல்லாத பூக்களைக் கொண்டு இறைவனுக்கு அர்ச்சனை செய்யக்கூடாது என்றும் முன்னோர்கள் கூறியுள்ளனர். இறைவனுக்கு சூட்டிய மலர்களை கால்கள் படும்படி போடக் கூடாது. அதே போல அர்ச்சனை செய்த மலர்களையும் கால்கள் படாத வகையில் அப்புறப்படுத்த வேண்டும்.
